நடப்புகள்

சத்குருவைத் தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் முக்கிய நிகழ்வுகள்...

Sonic Seekers: இத்தாலிய இசைக் கலைஞர்களுடன் ஞானத்தைப் பகிர்ந்த சத்குரு

அக்டோபர் 2

மிலன் நகரில் DJ மற்றும் தயாரிப்பாளர் ஷாப்லோ தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்வில், இத்தாலிய இசைக் கலைஞர்களான Alessandra Amoroso, Irama, Rkomi, Roshelle, Venerus, Mace மற்றும் Ghali ஆகியோருடனும் பலதரப்பட்ட பார்வையாளர்களுடனும் சத்குரு பேசினார். வாழ்க்கையின் அர்த்தம், மகிழ்ச்சி, மதம், நம்பிக்கை மற்றும் ஆன்மீகம் தொடர்பான கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறிவது குறித்த Ghaliன் கேள்விக்கு பதிலளித்த சத்குரு, நமது உள்நிலையின் இரசாயனத்தை நம் ஆளுமையில் எடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை அடையமுடியும் என்று குறிப்பிட்டார். பலர் தங்கள் சொந்த மனதையும், பகுத்தறிவின் பரிணாமத் திறனையும் முழுமையாக புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.

மதம் மற்றும் நம்பிக்கையைப் பற்றி பேசும்போது, இவை பெரும்பாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களுக்கு மாற்றாகச் செயல்படும் என்று சத்குரு குறிப்பிட்டார். நம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் நமது புத்திசாலித்தனம், ஆர்வம் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும் அபாயம் உள்ளது. விழிப்புடன் இருக்கவும், கேள்வி கேட்கவும், பதில்களைத் தேடவும் அறியாமை நம்மை ஊக்கப்படுத்தும். எனவே ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளை அப்படியே பின்பற்றுவதற்கு மாறாக, உண்மையான ஆன்மீகத்தை நாம் பின்பற்ற வேண்டும். பொதுவான சித்தாந்தங்களுக்கு எதிராக, நமது தனித்துவத்தைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், உண்மையைத் தேடுபவராக மாறுவதன் முக்கியத்துவம், மனித இருப்பை நிலைநிறுத்துவதில் அனைத்து உயிர்களின் பங்களிப்பு மற்றும் ஆன்மீகப் பயணத்தில் பொருள்நிலையிலான இருப்பிடத்திற்கு மதிப்பில்லாதது பற்றியும் அவர் பேசினார்.

மேலும் விழிப்புணர்வின் உலகளாவிய தன்மை மற்றும் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் மனித ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய தேவை ஆகியவற்றைப் பற்றி சத்குரு எடுத்துரைத்தார்.

கால்பந்தாட்டத்தில் சத்குரு: அட்லெடிகோ மட்ரி்டில் ஒரு உற்சாகமான அனுபவம்

அக்டோபர் 4

ஸ்பெயினின் மட்ரிடில் உள்ள Cívitas Metropolitano ஸ்டேடியத்தில், அட்லெடிகோ மாட்ரிட்டின் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஃபெயனூர்ட் ரோட்டர்டாமுக்கு எதிரான போட்டியைக் காண சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உள்ளூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்திற்குப் பிறகு, அட்லெடிகோ மட்ரிட் மற்றும் 2018 ஃபிரெஞ்ச் உலகக் கோப்பையை வென்ற அன்டோயின் கிரீஸ்மன், மேலாளர் டியாகோ சிமியோன் ஆகியோர் சத்குருவுடன் இதயப்பூர்வமான ஒரு சந்திப்பில் ஈடுபட்டனர். சத்குருவுக்காக க்ரீஸ்மன் ஆச்சரியமூட்டும் ஒரு நினைவுப்பரிசை வைத்திருந்தார்: 9 மற்றும் “சத்குரு” என்று அச்சிடப்பட்டிருந்த அட்லெட்டிகோ சட்டை.

சத்குரு நிகழ்ச்சி குறித்த தனது அனுபவத்தை பதிவுசெய்தபோது “அரங்கம் அருமையாக இருந்தது. பார்வையாளர் கூட்டம் முழுவதும் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. இது ஒரு சிறந்த போட்டி; 5 கோல்கள் அடிப்பதைப் பார்க்கமுடிந்தது. நாம் நீண்ட காலமாக கிரீஸ்மனை follow செய்துவருகிறோம். அவர் விளையாடுவதைப் பார்ப்பதும், அவரை இங்கு சந்திப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கிருப்பது ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது."

விளையாட்டின் போட்டி மனப்பான்மை பற்றி சத்குரு கூறியபோது, “யாரும் விளையாட்டை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒரு விளையாட்டை வெல்வதில்லை. எல்லோரும் வெற்றி பெறத்தான் விரும்புகிறார்கள்; அதுபற்றி எந்த கேள்வியும் இல்லை. நன்றாக விளையாடினால் தான் வெற்றி கிடைக்கும். உங்கள் கவனம் பந்தில் மட்டுமே இருக்க வேண்டும். பந்தை நன்றாக உதையுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதிரணிக்கு எதிராக வெற்றிபெற நினைக்கக்கூடாது. இல்லை, உங்கள் வேலை பந்தை அவர்களின் goalக்கு அனுப்புவது மட்டுமே - அவ்வளவுதான். Goalகளின் எண்ணிக்கையை வேறு யாராவது எண்ணிக்கொள்வார்கள்."

நல்வாழ்வு எனும் செல்வம் - சத்குருவுடன் டாக்டர். மரியோ அலோன்சோ புய்க்

அக்டோபர் 6

ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் அறுவை சிகிச்சை மருத்துவராகவும், மனித நுண்ணறிவுக்கான முன்னணி ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் டாக்டர். மரியோ அலோன்சோ புய்க் அவர்கள் சத்குருவுடன் "The Wealth of Wellbeing" என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்ய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்நிகழ்வை Spanish magazine Cambio என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் நேரி பொனில்லா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

மனித மனம், விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் இயல்பைப் பற்றி பேசிய சத்குரு, எண்ணங்கள் நம் வாழ்வின் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், பொதுவாக சக்தியை வீணடிப்பதாகவும், அவை பெரும்பாலும் சித்தாந்தங்களாலும் நம்பிக்கைகளாலும் தாக்கம் பெறுவதாகவும் சத்குரு எடுத்துரைத்தார். ஒரு முழுமையான, விழிப்புணர்வான வாழ்க்கைமுறையை நோக்கிய கல்விமுறைக்கான மாற்றத்தின் அவசியத்தையும், ஒருவரையொருவர் சமமாகப் பார்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

மேலும், யோக அறிவியலில் 16 அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்படும் மனதின் தன்மை பற்றி விவாதித்த சத்குரு, மனம் என்பது பொருள்நிலை வெற்றிக்குத் தேவையான ஒன்று மட்டுமே என்றார். நமது தனிப்பட்ட வளர்ச்சிக்காக 'சித்தம்' எனப்படும் மனதின் அம்சத்துடன் நாம் தொடர்புகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கேள்வி-பதில் நேரத்தில், ஒருவரின் மனம் மற்றும் உடலின் இரசாயனத்தை மாற்றி அமைப்பதற்கு ஈஷா யோகா என்பது ஒரு சிறந்த வழிமுறை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் பதிவுசெய்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த மனிதகுலத்தின் அச்சங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நேர்மறையான மாற்றம் சாத்தியம் என்று அவர் உறுதியளித்தார். மேலும், கான்சியஸ் பிளானட் இயக்கம் தொடங்கப்படுவது குறித்தும் அவர் அறிவித்தார்.

வாழ்க்கையிலும் கால்பந்தாட்டத்திலும் வெற்றி இலக்குகள்: சத்குருவுடன் உலகக் கோப்பையை வென்ற இவானா ஆண்ட்ரஸ்

அக்டோபர் 6

உலகக் கோப்பையை வென்ற ஸ்பானிய கால்பந்து வீராங்கனையான இவானா ஆன்ட்ரஸுடனான ஒரு இதயப்பூர்வமான கலந்துரையாடலில், சத்குரு, தான் சமீபத்தில் கண்டுகளித்த சிறப்பான பெண்கள் கால்பந்து போட்டிகளுக்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்திய இளம் பெண்களை கால்பந்தாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக, இந்தியாவுக்கு வருவதற்கான அழைப்பை ஆண்ட்ரெஸ் ஏற்றுக்கொண்டதாகத் தெரிந்தது. சத்குரு, ஆன்ட்ரஸ், ராதே மற்றும் மற்ற பங்கேற்பாளர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த கலந்துரையாடல், நடனம் மற்றும் விளையாட்டு உத்திகள் பற்றிய உற்சாகமான ஒரு உரையாடலுடன் நிறைவடைந்தது.

விழிப்புணர்வை வரையறுப்பது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் ஆன்மீகம் பற்றிய மாநாடு

அக்டோபர் 26-27

கான்சியஸ் ப்ளானட்டிற்கான சத்குரு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "Consciousness - Science, Spirituality and Social Impact" என்ற மாநாட்டின் ஒரு பகுதியாக, "Unraveling the Nature of Consciousness" என்ற தலைப்பில் முதல் நாள் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சத்குருவுடன் அறிவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த குழுவின் பெர்னார்ட் கார், PhD, கிறிஸ்டோஃப் கோச், PhD, ருடால்ப் டான்சி, PhD, தீபக் சோப்ரா, MD ஆகியோர் நவீன அறிவியலையும் ஆன்மீகத்தையும் பகுத்தாராய்ந்து கலந்துரையாடினர்.

விழிப்புணர்வான உலகத்திற்கான சத்குரு மையம் 2020ம் ஆண்டில் பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையத்தில் (BIDMC) மயக்கிவியல், விபத்துக்கால மருத்துவம் மற்றும் வலிக்கான மருத்துவம் ஆகிய துறைகளால் நிறுவப்பட்டது. அதன் பல்வேறு ஆராய்ச்சியானது நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான மருத்துவ அறிவியலையும் சிந்தனையையும் ஒருங்கிணைக்கிறது. BIDMC என்பது ஹார்வர்டு மருத்துவப் பள்ளியுடன் இணைந்த ஒரு மதிப்புமிக்க மருத்துவப்பள்ளி மருத்துவமனையாகும்.

மாலையில் Harvard Sanders Theatreல், "விழிப்புணர்வு என்பது ஓர் அதிசயமா?" என்ற தலைப்பில் புகழ்பெற்ற உளவியலாளரும் எழுத்தாளருமான ஸ்டீவன் பிங்கர் அவர்களும் சத்குருவும் நிகழ்த்திய ஒரு கலந்துரையாடலில், விழிப்புணர்வின் பல்வேறு சூட்சும அம்சங்கள் ஆராயப்பட்டன.

மாநாட்டின் 2ம் நாளில், விழிப்புணர்வான தலைமைப்பண்பை மையக்கருவாகக் கொண்டு ஒரு சுவாரஸ்ய குழு-விவாதம் நடைபெற்றது. மதிப்புமிக்க இந்த குழுவிலுள்ள நிபுன் மேத்தா, BA, சூசன் பாயர்-வு, PhD, RN, FAAN, ஹெலன் லாங்கேவின், MD மற்றும் ரஞ்சய் குலாட்டி, MBA ஆகியோர் சத்குருவுடன் ஆழமிக்க ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

"Consciousness - Science, Spirituality and Social Impact" என்ற தலைப்பிலான ஆழமிக்க ஒரு குழுவிவாதத்தில் சத்குருவுடன் ஹெலீன் லாங்கேவின், MD., எமரான் மேயர், MD., அடேரா நஸ்ரத், MSc, DIC உள்ளிட்ட பிரபலங்கள் அறிவியல், ஆன்மீகம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கும் விதம்குறித்து கலந்துரையாடினர். சிந்தனையைத் தூண்டும் இந்த கலந்துரையாடல் அதன் ஆழமிக்க தரிசனங்களால் பார்வையாளர்களை வளப்படுத்துவதாக அமைந்தது.

புகழ்பெற்ற செரிமான மண்டல நிபுணரும் நரம்பியல் விஞ்ஞானியும், UCLAல் உள்ள செரிமான நோய்கள் குறித்த ஆராய்ச்சி மையமான CUREன் இணை இயக்குனருமான டாக்டர்.எமரன் மேயர் அவர்கள் சத்குருவுடன் ஓர் ஆழமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குடல்வாழ் நுண்ணுயிரிகளுக்கும் மனநலத்திற்கும் இடையிலான நுட்பமான தொடர்பை இந்த கலந்துரையாடலில் இருவரும் ஆராய்ந்தனர். டாக்டர். எமரான் மேயர் UCLAல் உள்ள டேவிட் ஜெஃபென் மருத்துவப் பள்ளியில் மருத்துவம், உடலியல் மற்றும் உளவியல் துறைகளில் ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சிப் பேராசிரியராக உள்ளார். மேலும், G.Oppenheimer மையத்தின் செயல் இயக்குநராகவும், UCLA மூளை குடல் நுண்ணுயிர் மையத்தின் நிறுவன இயக்குனராகவும் உள்ளார்.

ஈஷா காட்டுப்பூ இதழில் அடுத்து வரவிருக்கும் பதிப்பில், இவற்றுடன் இன்னும் பிற ஆழமான கட்டுரைகளுக்கு காத்திருங்கள்.