சத்குரு எக்ஸ்குளுசிவ்

உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட சக்திகள், உங்களது ஆன்மீக வளர்ச்சியை சீர்குலைக்க முயன்றால் என்ன செய்வது?

ஆன்மீகப் பாதையில் தடைபட்டதாக உணர்கிறீர்களா? வழக்கமாக, இதற்குக் காரணம் உங்களது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்தி என்று தான் சந்தேகிக்கக்கூடும். ஆனால் அதற்கும் மேல், அறியப்படாத சில சக்திகள் உங்களுக்கு கூடுதல் தடை உருவாக்க முடியுமா? நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட இந்தப் பரிமாணம் பற்றியும், அது குறித்து ஒரு குரு என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் சத்குரு வெளிப்படுத்துகிறார்.

சத்குரு: நீங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கடந்து, வாழ்க்கையின் மற்றொரு பகுதிக்குள் செல்லும்பொழுது, உங்களது வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கும் வேறு வகையான சக்திகள் இருக்கின்றன. கௌதம புத்தர் அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி விரிவாகப் பேசினார். உங்களைத் தடுக்க முயற்சிக்கும் ராட்சசர்கள் மற்றும் வேறுவிதமான சக்திகள் பற்றி யோகக் கலாச்சாரத்தில் பேசுகின்றனர்.

ஒரு குருவின் உண்மையான பணி

தற்போது, உங்களுக்குப் புலப்படாத சக்திகள், பரிமாணங்கள் மற்றும் தடைக்கற்கள் இருக்கின்றன. அவை உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி சார்ந்தவை அல்ல. ஒரு ராக்கெட் போல் நீங்கள் சக்தியூட்டப்பட்டாலும், அப்போதும் உங்கள் பாதையில் குறுக்கிடும் சக்திகள் இருக்கின்றன. அந்த விஷயங்களை எல்லாம் சமாளிப்பதற்கு உங்களை நான் விடுவதில்லை. அது என் வேலை; அதை என்னிடமே விட்டுவிடுங்கள். உங்கள் உடலை வளைப்பது, உங்கள் மனதை வளைப்பது, உங்கள் உணர்ச்சியை வளைப்பது, உங்கள் சக்திகளை வளர்ப்பது இதெல்லாம் தான் உங்கள் வேலை. நீங்கள் மேலெழும்ப விரும்பும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்பொழுது, அப்போது கையாள்வதற்கென வேறு சக்திகள் இருக்கின்றன. அதனை நீங்கள் சமாளிக்க முடியாது, ஏனெனில் அது என்னவென்பதே உங்களுக்கு தெரியாது. அவை யாவும்தான் குருவின் பணிகள். மற்ற அனைத்தும் உங்கள் வேலை.

தற்போது, உங்களுக்குப் புலப்படாத சக்திகள், பரிமாணங்கள் மற்றும் தடைக்கற்கள் இருக்கின்றன. அவை உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி சார்ந்தவை அல்ல.

உங்கள் உடல், மனம் இவற்றுடனான பிரச்சனைகள், உங்களைச் சுற்றிலும் நிகழ்பவை. உங்கள் நண்பர், உங்கள் எதிரி, உங்கள் வீடு - இவையெல்லாம் நீங்கள் கையாளவேண்டிய விஷயங்கள். மற்ற அம்சங்களைப் பற்றி உங்களுக்கு ஒரு இம்மியளவும் தெரியாது என்பதுடன் அதைப்பற்றி பேசுவதிலும் பயனில்லை, ஏனென்றால் அவற்றை நீங்கள் சமாளிக்க முடியாது. நீங்களாகவே செல்லவேண்டியிருந்தால், அப்போது விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கே நீண்ட காலம் தேவைப்படும். அதனால்தான் இந்தியாவில், ஆன்மீக செயல்முறையை எப்போதும் நாம் சர்ப்பங்கள் மற்றும் ஏணிகள் கொண்ட பரமபத விளையாட்டுடன் ஒப்பிட்டோம். நீங்கள் ஒரு ஏணியில் மேலே ஏறினால், மிகவும் அகமகிழ்கிறீர்கள்; பிறகு திடீரென்று, ஒரு சர்ப்பம் உங்களை இழுத்துக் கீழே தள்ளுகிறது.

முதலில் உங்கள் முட்டாள்தனத்தைக் கையாளுங்கள்

ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் விழிப்புணர்வில் இல்லாத உங்களுடைய சில குறிப்பிட்ட கர்ம அம்சங்கள் இருக்கின்றன. மற்றொரு விஷயம், படைப்பின் மற்ற பரிமாணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நெடுங்காலமாக, நுண்ணுயிர்களைப் பற்றி மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, வைரஸ் இருந்த ஒரு பழத்தை யாரோ ஒருவர் சாப்பிட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அது என்னவென்றே தெரியாமல், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டால், அப்போது மக்கள் “இதெல்லாம் கடவுள் விருப்பம்”, என்று கூறினார்கள். இன்று, உங்களை நோய்வாய்ப்படச் செய்யும் நுண்ணுயிரிகள் அதில் இருக்கக்கூடும் என்பது நமக்கு தெரிந்திருக்கிறது. அவற்றை உங்களால் பார்க்கமுடியாது என்றாலும், அதைப் பார்க்கமுடிந்த ஒருவர் உங்களுக்குக் கூறியிருப்பதால் அது உங்களுக்குத் தெரியும்.

ஒரு நுண்ணுயிரியை நீங்கள் பார்க்கமுடியவில்லை என்பதால் அதை நீங்கள் தவிர்த்துவிட முடியாது. அதைப்போலவே, பிற உலக சக்திகளை உங்களால் பார்க்கமுடியாத காரணத்தால், அவற்றை நீங்கள் தவிர்க்க முடியாது. நாம் அவற்றை வேறு ஒரு வழியில் கையாள்வோம். நீங்கள் உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திகளை கையாளுங்கள். உங்களால் கையாளமுடியாத மற்ற பரிமாணங்கள் உள்ளன - அது என் வேலை. அந்த சூழலுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிக நேரத்தை வீணாக்காதீர்கள்.

நீங்கள் உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திகளை கையாளுங்கள். உங்களால் கையாளமுடியாத மற்ற பரிமாணங்கள் உள்ளன - அது என் வேலை

உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளை எப்படிக் கையாள்வது என்று யாரையாவது கேட்பதில் உங்கள் வாழ்க்கை வீணாகிவிடக்கூடும். அவற்றைக் கையாள்வதற்கு தற்போது உங்களிடம் எல்லாக் கருவிகளும் உள்ளன. நீங்கள் உண்மையாகவே உட்கார்ந்து சம்யமா செய்தால், உங்களது மனம் உங்கள் அருகில் இருப்பவர் போலாகிறது. நீங்கள் விரும்பினால், அவரை நீங்கள் நேசிக்கலாம்; இல்லையென்றால், அவரைத் தனியாக விட்டுவிடலாம். சம்யமா ஒரு தடுப்பூசி போன்றது. நீங்கள் வைரஸை எதிர்த்துப் போராட வேண்டியதில்லை - நீங்கள் ஒருமுறை எடுத்துக்கொண்டாலே, அத்துடன் முடிந்துவிட்டது.

குரு உங்களது அறியாமையாகிய இருளை அகற்றுபவர். அவர் உங்களை வளைத்து தரை தொடவும், உங்கள் மனரீதியான பிரச்சனைகள் தீரவும், அல்லது சிறிது கூடுதலான அமைதியுடன் இருப்பதற்கும் உதவி செய்கிறார் என்பதால் அவர் குருவாக இல்லை. இன்னமும் உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்களின் மீது அவர் ஒளி வீச இயலும் என்ற காரணத்தினாலேயே அவர் ஒரு குருவாக இருக்கிறார். அவர் இங்கு இருப்பதன் நோக்கமே அதுதான். ஆகவே, கூடிய அளவு விரைவாக உங்கள் முட்டாள்தனங்களைக் கையாளுங்கள். அதற்கான எல்லாக் கருவிகளும் உங்கள் வசம் இருக்கிறது.

ஈஷா சம்யமா வகுப்பில் வழங்கப்படும் உயர்நிலை தியானப் பயிற்சி