75 ஆண்டுகால சுதந்திரம்

இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் 5 பேரின் கதைகள்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை இந்தியா கொண்டாடிவரும் நிலையில், அதிகம் அறியப்படாத சிலரை உள்ளிட்ட 5 சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை, அவர்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற தியாகத்தின் மூலம் இந்தியா சுதந்திர தேசமாக மாற வழிவகுத்ததைப் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார்.

சத்குரு: India@75 "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்", சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த புரட்சியாளர்களை மீண்டும் மனதுக்கு நினைவுபடுத்த விரும்பினேன். இன்று, இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாக உள்ளது. ஆனால் இது நிகழ்வதற்காக, கடந்த மூன்று, நான்கு தலைமுறை மக்கள் தொடர்ந்து போராடினர். துரதிருஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோரின் பெயர்களைக்கூட நாம் கேள்விப்பட்டிருக்கவில்லை; அவர்கள் கௌரவிக்கப்படவில்லை; அவர்களின் குடும்பங்கள் கௌரவிக்கப்படவில்லை; அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் இல்லை.

அவற்றை மக்களின் நினைவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இந்தியாவை இன்றைய நிலைக்கு உருவாக்குவதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களையும், தங்கள் இளமைப்பருவத்தைத் தியாகம் செய்தவர்களையும், மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நினைவுகூர்ந்து, தங்கள் நன்றியைத் தெரிவிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நன்றியுணர்வு இல்லாமல் வாழும் தேசம் வெகுதூரம் செல்லாது. முந்தைய தலைமுறையினர் நமக்காக செய்த செயல்களை நாம் மதிப்பதும், அதற்காக நன்றியுணர்வோடு இருப்பதும் மிக முக்கியமானது.

கொமரம் பீம் - ஒரு பழங்குடி வீரர்

கொமரம் பீம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒரு மாவீரர்; அவர் கோண்ட் சமூகத்தைச் சேர்ந்தவர். அக்காலப் பழங்குடியினருக்கு பாரம்பரிய உரிமைகள் இருந்ததுடன் இயல்பாகவே, அவர்கள் காடுகளில் வாழ்ந்து தங்கள் உரிமைகளைச் செயல்படுத்தி வந்தனர். பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளைப் பயன்படுத்துவதை சில ஆங்கிலேய வன அதிகாரிகள் தடுக்க விரும்பியபோது, அவர்களுக்கிடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதிருந்து, பல பழங்குடியினரின் விரல்கள் மற்றும் கைகள் துண்டிக்கப்படும் அளவுக்கு அது கொடூரத்தின் உச்சத்துக்குச் சென்றது.

கொமரம் பீம் தனது பழங்குடியினருக்காக துணிந்து எழுந்து, ஒரு கொரில்லா இராணுவத்தை உருவாக்கி, பல ஆண்டுகளாக ஆங்கிலேயருக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார். ஒரு கொரில்லா போராளியாக அவரது வீரமும் துணிச்சலும் அப்பகுதியில் ஒரு சரித்திரமாக மாறியது. 1940ஆம் ஆண்டில், உளவாளியின் குறிப்புகளின் உதவியுடன் போலீசார் அவரைப் பிடித்து சுட்டுக் கொன்றனர். தேசத்துக்காகவும், இனத்துக்காகவும் அவர் தன் உயிரைக் கொடுத்தார். அவரது தியாகம், அவரது வீரம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய மக்களின் நல்வாழ்வுக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு - போற்றத்தக்க புரட்சியாளர்கள்

ஷஹீத் திவஸ் அல்லது தியாகிகள் தினம் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூவர், லாகூர் மத்தியச் சிறையில் தூக்கிலிடப்பட்ட நாள். அப்போது, பகத்சிங் மற்றும் சுக்தேவ் தாப்பர் இவர்களுக்கு வெறும் 23 வயதும் மற்றும் சிவராம் ராஜ்குருவுக்கு 22 வயதாகவும் இருந்தது.

சுக்தேவ் மற்றும் பகத்சிங், ஆகியோர் கல்லூரியில் படிக்கும்போதே இந்திய விடுதலைக்கான அவர்களது போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அவர்கள் நௌஜவான் பாரத் சபா என்று ஒரு மன்றத்தை நிறுவி, சகமாணவர்களும் மற்ற இளைஞர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட ஊக்குவித்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் புனேவைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞரும், மல்யுத்த வீரருமான ராஜ்குருவை சந்தித்தனர். இவர் சந்திரசேகர் ஆசாத் அவர்களால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1927ஆம் ஆண்டில், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் இந்திய சுயாட்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அமைப்பதற்காக சைமன் கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால், கமிஷனில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.

இந்த விஷயம், லாலா லஜபதி ராய் உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. அவர் 1928-ல் லாகூரில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். இதனால் லாலா லஜபதி ராய், காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டால் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சில நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார். இந்தப் போராட்டம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இளம்புரட்சியாளர்கள், லாலாவின் மரணத்திற்காகவும், அந்தப் போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்த மற்ற பலருக்காகவும் பழிவாங்க விரும்பினர்.

லாலாவை இறக்குமளவுக்கு அடித்த ஜேம்ஸ் ஸ்காட்டை, படுகொலை செய்யத் திட்டமிட்டனர். இறுதியில், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் உதவி கண்காணிப்பாளர், ஜான் சாண்டர்ஸை படுகொலை செய்தனர். இந்த சம்பவம், ஒரு பெரிய போலீஸ் தேடுதல் நடவடிக்கையைத் தூண்டியது, ஆனால் அவர்கள் ஒருவாறு தப்பிவிட்டனர். அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கு, காவல்துறை பெருமுயற்சி செய்தபோதிலும், இந்த இளைஞர்கள் அடிபணியவோ அல்லது சுதந்திரத்திற்கான தங்கள் போராட்டத்தைக் கைவிடவோ மறுத்துவிட்டனர்.

1929ஆம் ஆண்டில், இந்தியப் பொதுமக்களின் உரிமைகளை மேலும் ஒடுக்கும் மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டது. அப்போதுதான், டெல்லியில் உள்ள மத்திய சட்டப் பேரவை மீது குண்டு வீசுவதற்கு இந்த இளைஞர்கள் முடிவுசெய்தனர். புகைக்குண்டுகளை வீசியது கொலை செய்யும் நோக்கத்தினால் அல்ல, மாறாக அவர்களின் குரல்களை ஒலிக்கச் செய்வதற்காகவும், சக இந்தியர்களை ஊக்கப்படுத்தித் தூண்டிவிடுவதற்காகவும் அவர்கள் குண்டுகளை வீசினர்.

தாய்நாட்டைக் காக்க, மகிழ்ச்சியுடன் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த இளைஞர்களின் தேசபக்தி அத்தகையதாக இருந்தது.

குண்டு வீசிய பகத்சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகிய இருவரும், அந்த நேரத்தில், அங்கு நிலவிய குழப்பம் மற்றும் கலவரத்திற்கிடையே தப்பித்திருக்கலாம் என்றாலும், அவர்கள் அங்கிருந்து நகர மறுத்து, “இன்குலாப் ஜிந்தாபாத்” அதாவது “புரட்சி வாழ்க” என்று உரக்கக் கூறியபடி அங்கேயே நின்றனர். தாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இதைச் செய்தனர். சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகிய இருவரும் லாகூரில் இருந்த அவர்களின் வெடிகுண்டு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டனர். உண்மையில், இந்த வழக்கில், சுக்தேவ் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கு "மகுடத்துக்கு எதிரான சுக்தேவ் மற்றும் பலர்" என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டது. சுக்தேவ், இந்த புரட்சிகர நடவடிக்கைகளைத் திட்டமிடுபவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோது சிறையிலும்கூட, அவர்கள் மௌனமாக இருக்கவில்லை. ஆங்கிலேய சிறைவாசிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய சிறைவாசிகள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதை எதிர்த்து, பகத்சிங்கும், அவரது நண்பர்களும் புகழ்பெற்ற, சிறைப் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினர். புரட்சியாளர்கள், அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இறுதியில், ஆங்கிலேயர்கள் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், அதற்கு இணங்கி, போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் பகத்சிங்கிற்கு இது போதுமானதாக இல்லை. அவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், "அரசியல் கைதிகளாக" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் தனது தந்தையின் நேரடியான வேண்டுகோளைத் தொடர்ந்து 116 நாட்களுக்குப் பிறகுதான் தனது போராட்டத்தை முடித்தார். மார்ச் 23, 1931 அன்று, இந்த துணிச்சலான மனிதர்கள் உதடுகளில் புன்னகையுடன் தூக்கு மேடைக்குச் சென்றனர். முகத்தை மறைக்கும் கருப்பு துணியை மறுத்துவிட்டு, தங்கள் கைகளாலேயே தமது கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டனர். பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் மரணதண்டனையை குறைப்பதற்கு மகாத்மா காந்தி முயன்றார்.

ஆனால் சுக்தேவ், தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர், “தண்டனைக் குறைப்பைக் காட்டிலும், நாங்கள் தூக்கிலிடப்பட்டால் பாரதம் அதிகமாக பலனடையும்," என்று அதில் கூறினார். தாய்நாட்டைக் காப்பதற்காக, மகிழ்ச்சியுடன் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த இளைஞர்களின் தேசபக்தி அத்தகையதாக இருந்தது. இந்தத் தலைமுறையில் நம் அனைவருக்கும், மற்றும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கும் ஒரு சுதந்திரமான தேசத்தை, எப்படி அவர்களது உயிர்த்தியாகம் உருவாக்கியுள்ளது என்பதை இந்த நாளில் நாம் நினைவுகூர்கிறோம்.

ஜல்காரி பாய் - ஜான்சியின் பெண்புலி

ஜான்சியில் ஜல்காரி பாய் என்ற பெண் ஒருவர் இருந்தார். இவர், 1830-ல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். அந்த நாட்களில் பெண்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதில், அவருடைய தந்தை மகளுக்குக் குதிரையேற்றமும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சியும் அளித்தார். உள்ளூரின் வாய்மொழிக் கதையின்படி, ஜல்காரிபாய் ஒருமுறை கிராம மக்களைத் தாக்க வந்த ஒரு புலியைக் கொன்றார் என்று குறிப்பிடுகிறார்கள். அவர், ஜான்சி ராணுவத்தில் இருந்த ஒரு சிப்பாயை மணந்தார். ராணி லட்சுமிபாய் அவரது துணிச்சலையும் திறமையையும் கவனித்தார். அரசர் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களுடன் நிகழ்ந்த ஜான்சி போரின்போது, அவர்களின் பாதுகாப்பிற்காக ராணி லட்சுமிபாயை குழந்தை இளவரசருடன் தப்பிக்கச் சொன்னது ஜல்காரி பாய்தான் என்று வதந்திகள் கூறுகின்றன.

ராணி, குழந்தை இளவரசருடன் தப்பிச் சென்றதும், வீரமிக்க ஒரு செயலாக, ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாய் போல் வேடமிட்டு, போருக்குத் தலைமை தாங்கினார். ஜல்காரி பாய் ஒரு புலியைப் போல போரிட்டார், பல ஆங்கிலேய வீரர்களைக் கொன்றார், இறுதியாக போரிடுகையில் இறந்தார் என்று இன்றைக்கும் மக்கள் கூறுகிறார்கள். புந்தேல்கண்டில் உள்ள பல தலித் சமூகங்கள் இன்றும் அவரை ஒரு தெய்வமாகப் பார்த்து, ஒவ்வொரு ஆண்டும், ஜல்காரிபாய் ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். இப்படிப்பட்ட போற்றப்படாத மாவீரர்கள் எத்தனைபேர், இந்தியாவின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை.

ஜல்காரி பாய் அரச வம்சத்தில் பிறந்தவர் அல்ல; அவர் சமுதாய அடுக்கில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் ஆங்கிலேயர்களுடன் போரிடும்போது வீரத்தின் உச்சத்துக்கு உயர்ந்தார், மேலும் அவர் அந்த பிராந்தியத்தில் அழியாத புகழைப் பெற்றார். ராணி லட்சுமிபாயை வாழவும், பின்னொரு நாளில் போரிடவும் வழிசெய்த ஜல்காரி பாயின் வீரச்செயல்கள், அவரது தீரம், போரில் அவர் வெளிப்படுத்திய திறமைகளை தேசம் நினைவு கூர்ந்து கொண்டாடவேண்டிய நேரம் இது. இந்தியாவின் இந்த வீரமங்கைக்கு நாம் தலைவணங்குகிறோம்.

ஹைப்பூ ஜடோனாங் - நாகா வீரர்

ஹைப்பூ ஜடோனாங் இன்றைய மணிப்பூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் ஒரு நாகா ஆன்மீகத் தலைவர். அவர் ஆங்கிலேயர்கள் தனது மக்கள் மீது விதித்த கடுமையான வரிகளைக் கண்டார். முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் நாகா ஆண்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். அந்நிய மண்ணில், பழக்கமில்லாத கலாச்சாரங்கள் மற்றும் நிலப்பரப்புக்கு நடுவே, வெவ்வேறு நாகா பழங்குடியினர் தங்களுக்குள் இருந்த பொதுவான தன்மையைக் கண்டறியத் தொடங்கியதுடன், அவர்கள் ஒருங்கிணைந்து, நாகா சங்கத்தை உருவாக்கினர். அவர்கள் நாடு திரும்பியதும், இந்த சங்கமானது, சுதந்திரப் போராட்டத்தின் போது நாகா சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.

ஜடோனாங், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மக்களை ஒன்றிணைத்து, சில நூறு ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கத் தொடங்கினார்.

ஜடோனாங், ஹெராகா இயக்கத்தைத் தொடங்குவதன் மூலம் பழங்குடியினரை ஒன்றிணைக்கும் செயலிலும் ஈடுபட்டார். ஆங்கிலேயர்களுடன் போரிடுவதற்கு, நாகா மக்களை ஊக்குவிக்க "நாகா ராஜ்ஜியத்தை" ஆதரித்தார். இதன்பொருட்டு மக்களின் ஆதரவைத் திரட்ட, அவர் அப்பகுதி முழுவதும் குதிரையில் பயணம் செய்தார். சிறிதுகாலத்திற்கு, அவர் ஆங்கிலேயரால் கவனிக்கப்படாமல் இருந்தார், ஆனால் ஒருநாள் அவர் பிடிபட்டு, சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜடோனாங், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, மக்களை ஒன்றிணைத்து, சில நூறு ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட இராணுவத்தை உருவாக்கத் தொடங்கினார். அவர்களுக்கு அவர், போர்ப் பயிற்சி அளித்ததோடு, விவசாயம் மற்றும் மேய்ச்சல் போன்ற வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் உதவி செய்தார். இதனால், ஆங்கிலேயர்களுக்கு பதிலாக மக்கள் அவருக்கு வரி மற்றும் காணிக்கை செலுத்தும் அளவுக்கு மிகவும் பிரபலம் அடையத் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் அவரது செயல்பாடுகளை அறிந்ததுடன், தங்களது வரி வருவாயில் ஒரு பகுதியை அவர் எடுத்துக்கொண்டார் என்பதால் கோபமடைந்தனர்.

அவர்கள் அவரையும், அவரது 600 ஆதரவாளர்களையும் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் தனது 26வது வயதில் தூக்கிலிடப்பட்டார். ஹைப்பூ ஜடோனாங் நாகர்களின் "இறைதூதர்" என்று குறிப்பிடப்பட்டு, மணிப்பூரில் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவின் பிற பகுதிகள் அவரது பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மாவீரர்கள் நமது சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களுக்காக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட வேண்டிய நேரம் இது.

சபேக்கர் சகோதரர்கள் - கனல் தெறிக்கும் மூவர்

சகோதரர்கள் தாமோதர ஹரி சபேகர், பாலகிருஷ்ண ஹரி சபேகர் மற்றும் வாசுதேயோ ஹரி சபேகர் ஆகியோர் புனேவில் உள்ள சின்ச்வாட்டைச் சேர்ந்த மூன்று புரட்சியாளர்கள். பாலகங்காதர திலகரின் தாக்கத்தால், மூத்தவரான தாமோதரன், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க “சபேக்கர் கிளப்” என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த கிளப், பல இளைஞர்களை அவர்களை நோக்கி ஈர்த்தது. 1896ஆம் ஆண்டில், புனேவை ஒரு கொடூரமான பிளேக் நோய் தாக்கியது, அதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். ஏறக்குறைய பாதி மக்கள்தொகையினர் நகரத்தைவிட்டு வெளியேறிய நிலையில், ஆங்கிலேய அரசாங்கம், தொற்றுநோயைக் கையாள ஒரு சிறப்பு பிளேக் குழுவை நியமித்தது.

கமிட்டியின் ஆணையர் பொறுப்பேற்றதும், மக்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்கு பதிலாக, படைகளை நியமித்து, ஒவ்வொரு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களின் உடைமைகள் மற்றும் சொத்துக்களை - வழிபாட்டுச் சிலைகள் உட்பட - அழிக்க அனுப்பினார். சோதனை என்ற பெயரில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொது இடங்களில் ஆடைகளைக் களைவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். தமது மக்கள் துன்புறுத்தப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் கண்ட சபேக்கர் கிளப் உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து, அதற்குக் காரணமான ஆணையரை படுகொலை செய்ய முடிவு செய்தனர்.

சபேக்கர் சகோதரர்கள் போன்ற புரட்சியாளர்களின் வீரம் இல்லையென்றால், இந்த ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கமாட்டோம்.

ஜூன் 22, 1897 அன்று, விக்டோரியா மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதற்குப் பிறகு, ஆணையர் தனது குதிரை வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மூன்று சகோதரர்களும் சரியான தருணம் பார்த்துக் காத்திருந்து, ஆணையரைக் கொன்றுவிட்டனர். பிறகு மிக விரைவில், தாமோதர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு சகோதரர்களும் தப்பிவிட்டனர். இருப்பினும், சபேக்கர் கிளப்பின் மற்ற உறுப்பினர்கள் அவர்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்தியதால் அவர்கள் இருவரும்கூட கைது செய்யப்பட்டனர். சகோதரர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாமோதர் ஏப்ரல் 1898-ல் தூக்கிலிடப்பட்டார், இளைய சகோதரர்கள் மே 1899-ல் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் பழிதீர்க்கும் செயல் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. செப்டம்பர் 1898-ல், பிளேக் நோயைக் கையாள்வதில் மிகவும் மனிதாபிமான முறைகளைப் பின்பற்றுமாறு பம்பாய் ஆளுநர் நிர்ப்பந்திக்கப்பட்டார். மேலும் மகாராஷ்டிராவில் உள்ள பல ஆங்கிலேய எதிர்ப்புக் குழுக்களுக்கு, இந்த சம்பவம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சபேக்கர் சகோதரர்கள் போன்ற புரட்சியாளர்களின் வீரம் இல்லையென்றால், இந்த ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கமாட்டோம்.