சிறப்புக் கட்டுரை

குண்டலினி: இந்த மறைஞான ஆற்றல் என்ன செய்யமுடியும்? அது ஏன் கவனமாக கையாளப்பட வேண்டும்?

உண்மையில் குண்டலினி என்ன? எல்லையில்லாத சக்தியின் பிறப்பிடமாகத் தோன்றும் இதன் உள்நிலை செயல்பாட்டு முறை, படிப்படியான விளைவுகள் மற்றும் இதைத் தட்டி எழுப்புவதற்கு முன்னால் தேவைப்படும் முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை சத்குரு வெளிப்படுத்துகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, என்னுடைய கேள்வி குண்டலினியைப் பற்றியது. குண்டலினி என்பது என்ன, அது எப்படி மேலெழும்புகிறது, மேலும் அது சக்கரங்களின் வழியாக செல்லும்போது என்ன நிகழ்கிறது?

சத்குரு: குண்டலினி என்பது என்ன? இப்போது நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் - இது குண்டலினி. உங்களால் கேட்க முடிகிறது - அதுவும் குண்டலினிதான். பூச்சிகள் ரீங்கரிக்கின்றன - அதுகூட குண்டலினிதான். ஒரு நாய் குரைத்துக்கொண்டு இருக்கிறது - அதுவும் குண்டலினிதான். புல் வளர்கிறது - அதுகூட குண்டலினிதான். எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருந்துகொண்டு பொருள்தன்மையாக வெளிப்படும் சக்தி, குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, நாம் குண்டலினி பற்றி பேசும்பொழுது, நமக்குள் இருந்து வெளிப்படாமல், ஆனால் மறைந்திருக்கும் சக்தியின் அந்தப் பரிமாணத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

உங்களை சூப்பர்மனிதராக தோன்றச் செய்யக்கூடிய மறைசக்தி

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்களது குண்டலினியின் எட்டு முதல் பத்து சதவிகிதம் வரை வெளிப்படுத்தினால், நீங்கள் ஒரு அசாதாரணமான மனிதர் என்று உங்களைச் சுற்றியுள்ள மக்கள் நினைப்பார்கள். சராசரி மனிதர்கள் தங்கள் குண்டலினியின் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதத்தைக்கூட வெளிப்படுத்துவதில்லை. எட்டிலிருந்து பத்து சதவிகிதம் வரை வெளிப்படுத்தினால், நீங்கள் அசாதாரணமானவர் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஏறக்குறைய இருபது சதவிகிதத்துக்கு அதிகமாக நீங்கள் வெளிப்படுத்தினால், உங்களை சூப்பர்மனிதர் என்றே அவர்கள் அழைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

உங்களுக்குள் இருக்கும் சக்தியின் வெவ்வேறு மற்றும் பெரிய பரிமாணங்களை எடுத்து, கையாள்வதற்கு ஏற்றவாறு உடலை இலகுவாகவும், தகுதியாகவும் உருவாக்குவதற்கு, யோகாவில் நாம் முயற்சிக்கிறோம். மறைந்தும், உறைந்தும் இருக்கும் சக்தியைத் தூண்டிவிட்டு, அதே சமயம் நிலைதடுமாறாமல் இருப்பதற்கு போதுமான தகுநிலையில் உங்கள் உடலை உருவாக்குவதே நோக்கம். உங்களுக்குள் இருக்கும் எல்லா சக்தியையும் கையாள்வதற்கு, இந்த மனித இயக்கவியல் போதுமான தகுதியுடன் இருக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு சிறிதளவு குண்டலினி எழுச்சியடைந்தாலே, மக்கள் நிலைதடுமாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

சராசரி மனிதர்கள் தங்கள் குண்டலினியின் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதத்தைக்கூட வெளிப்படுத்துவதில்லை.

நீங்கள் நிலைதடுமாறாமல் அதைக் கையாளமுடிந்தால், அப்போது அது பலவிதமான செயல் வடிவங்களில் வெளிப்படும். பல்வேறு விஷயங்களையும் செய்வதற்கு முடிவற்ற சக்தி இருப்பதாக உங்களுக்குத் தோன்றும், ஏனெனில் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கும் சக்தியின் பொக்கிஷத்திலிருந்து நீங்கள் சற்று ஆழமாக உறிஞ்சி எடுக்கமுடிகிறது. வெளிப்படுதல் மட்டும்தான் கேள்விக்குரியது. எல்லாவற்றிலும் சக்தி இருக்கிறது. சூரிய ஒளியில் சக்தி இருக்கிறது - அதைப் பிடித்து, இயக்க நமக்குத் திறன் இருக்கவேண்டும். அதைப்போன்று, ஒவ்வொருவரிலும் சக்தி இருக்கிறது. அதற்குள் மூழ்கிநனைய உங்களுக்கு திறன் இருக்கிறதா அல்லது நீங்கள் மேற்பரப்பிலேயே இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

பொதுவாக குண்டலினி என்ற சொல், மறைந்திருக்கும் சக்தியைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் பொருள் அதுவல்ல. அனைத்துமே, வெளிப்படுவது மற்றும் வெளிப்படாதது எல்லாமே குண்டலினிதான். சக்தியின் உயர்ந்த பரிமாணங்களுக்காக உடலை தயார்செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட யோகப்பயிற்சிகள் உள்ளன. மேலும், சக்தியைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட பயிற்சிகளும் இருக்கின்றன. சில பயிற்சிகள் சக்தியை பலமாகத் தூண்டிவிடும்; சில பயிற்சிகள் மூடியை மட்டும் திறந்த நிலையிலேயே விட்டுவிடும், அதனால் சக்தியானது மெல்ல வெளிப்படும்.

உண்மையில், நீங்கள் ஏற்கனவே அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கலாம்

ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற எளிமையான யோகப்பயிற்சியை செய்துவரும் ஒவ்வொருவரிடமும், மெல்ல குண்டலினி வெளிப்படும். உங்களது தூக்கத்தின் அளவு குறையும். நீங்கள் சாப்பிடவேண்டிய உணவின் அளவு குறையும். நீங்கள் சிறிது அதிகமான சக்தியுடன் இருப்பீர்கள். ஏனென்றால், குண்டலினி அல்லது உங்களது மறைசக்தியில் இருந்து நீங்கள் சிறிது அதிகமாக எடுத்துக்கொள்வீர்கள். அதை நீங்கள் தொடுவதற்கு ஆரம்பித்துவிட்டால், சக்தியின் உயர்ந்த வெளிப்பாடும், அதிக படைப்பாற்றலும் தென்படும். உங்களால் செய்ய முடியும் என்று நீங்களே அதற்கு முன்னர் ஒருபோதும் நினைத்தும் பார்த்திராத விஷயங்களை உங்களால் செய்யமுடியும். நீங்கள் முன்பைவிட தைரியமாக, விநோதமானவராக அப்படி ஏதோ ஒன்றாக மாறுவீர்கள். நீங்கள் அதிக துணிச்சல் கொண்டவராக மாறும்பொழுது, உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களை பித்தன் என்று நினைக்கின்றனர் - அது ஒரு பொருட்டில்லை.

மெல்ல மெல்ல குண்டலினி வெளிப்படுவதே இந்த மாற்றங்களுக்கான காரணமாக இருக்கிறது, ஏனெனில் மூடியைத் திறப்பதற்கு நாம் கற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் அதைப் பிரவாகமாக மேலேற்றுவதற்கு நாம் கற்றிருக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் அப்படி மேலேற்றினால், அந்த நிலையில் நீங்கள் எந்நேரமும் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு இடத்தில் இருக்கத் தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட வகுப்புகளில், நாம் பெருமளவுக்கு சக்தியை மேலெழுப்புகிறோம். கடந்த காலங்களில் இன்னர் எஞ்சினியரிங் அல்லது ஈஷா யோகா வகுப்பின் தீட்சை அளிப்பது போன்ற முதல்நிலை வகுப்புகளில்கூட, 80 சதவிகித மக்களை நாங்கள் ஹாலுக்கு வெளியில் தூக்கிச்செல்ல நேர்ந்த தருணங்கள் இருந்தன. வகுப்பில் நூறு பங்கேற்பாளர்கள் இருந்தால், எங்களுக்கு நூறு தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர், ஏனெனில் அங்கு பங்கேற்பாளர்களுக்கு சிசுருக்ஷைகள் செய்யவேண்டியிருந்தன.

அதற்கு ஒரு பொருத்தமான சூழல் ஏன் தேவைப்படுகிறது

அந்த விஷயங்களை நாங்கள் சற்றுக் குறைத்துக்கொண்டோம். ஏனென்றால், இன்றைய உலகில், மாற்றத்தைக் குறித்து மக்கள் எப்போதும் பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் உண்டாகும் எந்த மாற்றத்தையும் அவர்களால் கையாள முடியவில்லை - உலகம் மாறுவதை மட்டும் அவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்குள் ஏதாவது மாறினால், அவர்கள் பித்து நிலைக்குச் செல்வார்கள். ஆகவே நாம் சிறிது மெதுவாக செல்கிறோம். ஆனால் அப்போதும், பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமாவில், வெறுமனே அங்கு அமர்ந்திருப்பதிலேயே, சக்தியானது மேலெழுப்பப்படுகிறது. ஆனால் இவைகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகள், ஆகவே நமக்கு ஐயமேதும் இல்லை. மக்களை வெகுதொலைவுக்குத் தள்ளிவிட்டு, இங்கிருந்து செல்லும் முன் மீண்டும் நம்மால் அவர்களை இயல்புக்குக் கொண்டுவர முடியும்

ஒரு சமநிலையான தன்மையில், உயர்ந்த வோல்டேஜ் மற்றும் குறைந்த வோல்டேஜ் இரண்டையும் உங்கள் உடலமைப்புக்குக் கையாளும் திறன் தேவை.

ஆனால் ஒருவேளை அந்த திசையில் செல்லும் பயிற்சிகளை, வீட்டில் செய்வதற்கு நாங்கள் உங்களுக்கு கற்பித்தால், அப்போது உங்கள் வீடும், பணிச்சூழலும் பொருத்தமானதாக இருக்கவேண்டும். உங்கள் வேலை, குடும்பம், மற்ற சூழ்நிலைகள் குறித்த குறிப்பிட்ட கட்டாயங்கள் இல்லாதவாறு உங்கள் வாழ்க்கை நிர்வகிக்கப்பட வேண்டும். அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் விரும்பும்படியான எந்த நிலையிலும் உங்களால் இருக்கமுடியும் என்ற அளவில், அதிகமான புரிதல் கொண்ட ஒரு குடும்பம் உங்களுக்கு இருந்தால், அது நலமாக இருக்கும். ஆனால் இப்போது, ஒரு குறிப்பிட்ட நிலையில் நீங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்; வேறு எந்த நிலையும் அவர்களுக்கு ஏற்புடையது இல்லை.

பெரும்பாலான மக்களுக்கு இத்தனை விஷயங்களும் சாத்தியமில்லை என்ற காரணத்தால், இத்தகைய பயிற்சிகள் பிரம்மச்சாரிகளுக்கும், ஒரு குடும்ப அமைப்பு இல்லாத குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சிறந்தது. அவர்களது சக்தியை நாம் அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும் என்பதால் அவர்களுடைய உடலமைப்பு எந்தவிதமான சக்திநிலைக்கும் பழக்கப்பட்டுவிடுகிறது. சக்தி குறைந்தாலும், அதையும் கையாளும் திறன் வேண்டும்; இல்லையென்றால், மக்கள் மனதளவில் அழுத்தம் கொள்வார்கள். ஒரு சமநிலையான தன்மையில், உயர்ந்த வோல்டேஜ் மற்றும் குறைந்த வோல்டேஜ் இரண்டையும் கையாளும் திறன் உங்கள் உடலமைப்புக்கு தேவை. இந்த சுதந்திரம் வந்துவிட்டால், உங்களது ஒட்டுமொத்த உடலியக்க நுட்பமும் சாதகமாக இருப்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அதன் பிறகு, நம்மால் வேறொரு திசையில் செல்லமுடியும்.

வெவ்வேறு சக்கரங்களில் குண்டலினி எப்படி வெளிப்பாடு காண்கிறது

சக்கரங்களைப் பற்றி நீங்கள் கேட்டிருந்த காரணத்தால், குண்டலினி ஒரு சக்கரத்தில் நுழைந்தால் என்ன நிகழும், மற்றும் அடுத்த சக்கரத்தில் நுழைந்தால் என்ன நிகழும் என்பதை உங்களுக்கு நாம் கூறமுடியும். ஆனால் படிப்படியாக செல்லும் மக்களிடத்தில் எனக்கு ஆர்வமில்லை. ஆன்மீக செயல்முறையில் இருக்கும் அவர்களது கவனம் இழக்காமல், சிறிது காலத்திற்கு அவர்கள் நன்றாக வாழட்டும். அவர்களது நேரம் வந்தவுடன், நாம் அவர்களை எளிதாக வென்றுவிடுவோம். ஒரு பிறவியில் ஒரு படி என்று மெதுவாக சென்று, நீங்கள் பதினாறு பிறவிகள் திரும்பி வருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை என்பதுடன், அவ்வளவு நீண்ட காலம் நான் இங்கு இருக்கப்போவதும் இல்லை.

மூலாதாரத்தில் குண்டலினி அல்லது சக்திகள் ஆதிக்கம் செலுத்தினால், உணவும் உறக்கமும் உங்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும். உங்களது சக்திகள் ஸ்வாதிஷ்டானத்துக்கு நகர்ந்தால், நீங்கள் சற்று அதிகமான படைப்பூக்கத்துடனும், உணர்வுபூர்வமாகவும் இருப்பீர்கள்; உலக விஷயங்களை உணரும் உங்கள் திறன் மேம்படும். உங்களது சக்திகள் மணிபூரகத்துக்குள் நகர்ந்தால், உலகத்தில் நீங்கள் பலம்பொருந்தியவராக இருக்கிறீர்கள்; நீங்கள் பல விஷயங்களைச் செய்ய விரும்புகிறீர்கள்; உலகத்தில் நீங்கள் பலவற்றையும் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்.

உங்கள் சக்திகள் சஹஸ்ராரத்தை அடைந்திருந்தால், அப்போது நீங்கள் அனுபவபூர்வமாக எப்போதும் பரவசத்துடனும், ஆனந்தத்துடனும் இருப்பீர்கள்.

உங்களது சக்திகள் அனாகதாவுக்குள் நகர்ந்தால், உங்களுக்குள் அது மிக இனிமையான உணர்ச்சிகளாக உருவெடுக்கமுடியும், அல்லது அது படைப்பூக்கமாக மற்றும் ஒருவிதமான அழகியலின் புரிதலாக மாறமுடியும். நீங்கள் படைப்புத்தன்மையுடன் இருக்க விரும்பினால், அதாவது ஒரு குறிப்பிட்ட இலையின் பென்சில் வரைபடத்தை நீங்கள் உருவாக்க விரும்பினால், புரிதலுணர்வின் ஒரு குறிப்பிட்ட உணர்திறன் தேவை. அந்த இலையின் ஒவ்வொரு அம்சத்தையும் கிரகிக்கும் திறன் உங்களுக்கு வேண்டும். பெரும்பாலான கண்கள் அதை கிரகிக்காது என்பதுடன், ஒரு இலையை அது எப்படி உள்ளதோ அப்படியே ஒருபோதும் பார்த்திருக்காது. அந்த விஷயங்களுக்கு அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்தியதில்லை.

உங்களது சக்திகள் விஷுக்திக்குள் நகர்ந்தால், உங்கள் வாழ்க்கை ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். யாரோ ஒருவர் மீது ஆட்சி செலுத்துவது அல்ல - உங்கள் இயல்பில் வெறுமனே ஆற்றலுடன் இருப்பது. உங்கள் சக்திகள் ஆக்ஞாவுக்குள் நகர்ந்தால், நீங்கள் ஒருவிதத்தில் அறிவுபூர்வமாக ஞானமடைந்திருப்பீர்கள். அதாவது, புரிதலிலும், அறிதலிலும் பிரபஞ்சத்தின் இயல்பை கிரகித்தவராக, ஆனால் அனுபவபூர்வமாக இன்னமும் அந்த நிலையை எட்டாமல் இருப்பீர்கள். உங்கள் சக்திகள் சஹஸ்ராரத்தை அடைந்திருந்தால், அப்போது நீங்கள் அனுபவபூர்வமாக எப்போதும் பரவசத்துடனும், ஆனந்தத்துடனும் இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஆனந்தம் நிலையாக இருக்கும்வகையில், அதிலேயே நீங்கள் நீண்ட காலம் நிலையாக இருப்பது முக்கியம்; இல்லையென்றால், நீங்கள் நாள் முழுதும் கெக்கலித்தவாறு இருப்பீர்கள்.

உடலுக்கும், மனதுக்கும் தேவையான முன்னேற்பாடு ஏன் முக்கியமாக இருக்கிறது

உடலின் கட்டமைப்பின் வெவ்வேறு கட்டங்களுக்குள் உங்கள் சக்திகள் நகரும்போது, அதற்கேற்றவாறு, அவைகள் வெளிப்பாடு காணலாம். மக்கள் குறிப்பிட்ட சில அனுபவ நிலைகளுக்குள் செல்லக்கூடும், ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவர்களது உடல், குறிப்பாக அவர்களது மனம் தயார்நிலையில் இல்லாமல் இருக்கக்கூடும். உங்களுக்குள் சிறிதளவு பித்துத்தன்மை இருக்கும்பட்சத்தில், உங்கள் சக்தி எழும்பினால், அது பெரும் பித்துத்தன்மைக்கு இட்டுச் செல்கிறது. உங்கள் உடலமைப்புக்குள் சக்திகள் வெள்ளமாகப் பாயும்போது, உங்கள் தன்மை என்னவாக இருந்தாலும் அது மேம்படுத்தப்படும்.

ஏதோ ஒரு செயல்பாட்டின் மூலம் குண்டலினியை எழுப்புவதற்கு முன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், ஒரு குறிப்பிட்ட சமத்தன்மைக்கும், சமநிலைக்கும் நம்மை நாமே உறுதிப்படுத்துவது முக்கியமானது.

நீங்கள் ஆனந்தமாக இருக்கும் நிலையில், உங்களது சக்தி மேலெழும்பினால், அது ஆனந்தத்தை அதிகரிக்கும். நீங்கள் துன்பமாக உணரும் நிலையில், உங்களது சக்தி எழும்பினால், அது துன்பத்தை அதிகரிக்கும். நீங்கள் மன அழுத்தமாக உணர்ந்தால், அப்போது உங்கள் சக்தி மேலெழும்பினால், நீங்கள் அதிகமான அழுத்தத்தை உணர்வீர்கள். ஆகவே, ஏதோ ஒரு செயல்பாட்டின் மூலம் குண்டலினியை எழுப்புவதற்கு முன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், ஒரு குறிப்பிட்ட சமத்தன்மைக்கும், சமநிலைக்கும் நம்மை நாமே உறுதிப்படுத்துவது முக்கியமானது. அதனால், சக்திகள் உயர்ந்தால், அதன் விளைவாக எதுவும் எல்லா இடங்களிலும் கசிந்து சிதறுவதில்லை.

நீங்கள் செய்யும் யோகப் பயிற்சி என்னவாக இருப்பினும், அது ஒரு உயர்ந்த சக்தி பரிமாணத்துக்காக, அல்லது இலேசான சக்தி எழுதலுக்கான, அல்லது சற்றே வேகத்துடன் மேலெழும்புவதற்கான முன்னேற்பாடாக, உடலியக்கத்தை தயார் செய்வதாக இருக்கிறது. வேகத்துடன் கூடிய மேலெழுப்புதலில், நீங்கள் ஓரளவுக்கு நிர்வகிக்கவேண்டிய சூழல்களுக்கு அது இட்டுச் செல்லும். அது புதிதாக இருக்கும்போது, உங்களுக்கு நீங்களே நிர்வகித்துக்கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கலாம். மேலும் அந்தப் பயிற்சியை நீங்கள் தவறாமல் தினமும் முறையாக செய்கிறீர்கள் என்றால், அவை உங்களுக்கு முற்றிலும் புதிது என்பதால், உங்களுக்கு எப்படிக் கையாள்வது என்று அறியாத சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்படும். ஆகவே, அப்படிப்பட்ட பயிற்சிகள் முறையான வழிகாட்டுதல் மற்றும் கவனிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.