தேவையானப் பொருட்கள்
(10-12 லட்டுகளுக்கு)
¼ கப் முந்திரி
¼ கப் பாதாம்
¼ கப் பிஸ்தா
1 கப் பேரீட்சை
½ கப் அத்திப்பழம்
¼ கப் உலர் திராட்சை
1 மேஜைக்கரண்டி வெள்ளை எள்
1 மேஜைக்கரண்டி கசகசா
1 மேஜைக்கரண்டி நெய்
½ தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
செய்முறை
- 1. பாதாம் மற்றும் முந்திரியை மூன்று நான்கு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். பிஸ்தாவை இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
- 2. அடுப்பை மிதமானத் தீயில் வைத்து, வாணலியில் நெய்யினை ஊற்றவும், அதில் உடைத்த பாதாம் மற்றும் முந்திரியினை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
- 3. பிறகு அதில் பிஸ்தாவையும் சேர்த்து பொன்னிறமாகி வாசம் வரும்வரை வறுக்கவும்.
- 4. பின்னர் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி அவற்றை வேறு காய்ந்த பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- 5. எள் மற்றும் கசகசாவை வாசம் வரும் வரை வறுக்கவும். பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
- 6. பேரீட்சைகளின் விதைகளை நீக்கிய பின், பேரீட்சை, அத்தி மற்றும் திராட்சைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இந்த உலர்பழங்களை லேசாக வதக்கிக்கொள்ளவும்; கடைசியாக ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.
- 7. அனைத்தையும் 1-2 இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் ஆறவிடவும். இலட்டினைப் பிடிக்கும்போது அனைத்துப் பொருட்களும் சிறிது சூடாக இருக்கவேண்டும்.
- 8. கவனமாக அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும். முதலில் உலர்பழங்களிலிருந்து துவங்கவும்; அவற்றை நன்றாகப் பிசையவும், பிறகு எள் கசகசாவை சேர்க்கவும், கடைசியாக முந்திரி பாதம் பிஸ்தாவை சேர்க்கவும் நன்றாக பிசையவும்.
- 9. இதனை சமமான அளவுகளாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- 10. காற்றுப்புகாத டப்பாக்களில் இவற்றினை சேமித்து வைக்கலாம்.
-
- குறிப்பு:
- இந்த லட்டுகளில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாமில் ஆரோக்கியமானக் கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் தாது உப்புகள் மட்டுமில்லாமல், ஆரோக்கியமான தோல் மற்றும் கண்ணைப் பராமரித்து பேணுவதற்குத் தேவையான வைட்டமின் E சத்தும் நிறைந்துள்ளது. பிஸ்தா அலர்ஜி நீக்கிகள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக்கூட மேம்படுத்தலாம். முந்திரிப் பருப்புகள் இதயத்திற்கு உகந்த கொழுப்புகளையும், புரோட்டீனையும், பலன் தரும் தாவரச் சத்துக்களையும் வழங்குகின்றன.
- பேரீட்சையில் செலினியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற நுண்சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்திப்பழம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவல்ல கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளது. கசகசா ஜீரண மண்டலத்தை மேம்படுத்தி பலப்படுத்த உதவும் அத்தியாவசியமான கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எள் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன், வைட்டமின் B, கனிமங்கள், நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இதர பலன் தரும் தாவரச்சத்துக்களைக் கொண்டுள்ளது. நெய்யில் ஆரோக்கியமான இதயம் மற்றும் இருதய குழாய்களுக்கு உதவும் ஓமேகா-3 ஒற்றை நிறைவுறாக் கொழுப்புகள் மிகுந்துள்ளது.