கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் நம்மை எப்படி உயிரோட்டத்துடன் வைத்துள்ளன
நேர்காணலாளர்: நுண்ணுயிர் என்றால் என்ன, மற்றும் அது மண்ணுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் ஏன் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்வதற்கு உங்களால் உதவமுடியுமா?
டாக்டர்.மெகன் ரோசி: நமது செரிமானப் பாதையெங்கும் வாழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியாவை நமது குடல் ஆரோக்கியம் சார்ந்திருக்கிறது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும், அவைகள் நம்பமுடியாத அளவுக்கு முக்கியமாக உள்ளன. உண்மையில், அவைகள் இல்லாமல் நம்மால் பிழைத்திருக்க முடியாது. ஆனால், கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் திரளாக இருக்கின்ற மற்றொரு சூழலியல் அமைப்பாகிய மண் இல்லாமல் நம்மால் உயிர் பிழைத்திருக்க முடியாது. உண்மையில், பருவநிலை மாறுபாடு மற்றும் ஊட்டச்சத்து சுழற்சி போன்ற விஷயங்களுக்கு மண் அதிமுக்கியமானது, ஆனால் அது நமது குடல் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியம். ஏனெனில், மண் இல்லாமல் நமது குடல் பாக்டீரியாவின் விருப்பமான உணவாகிய தாவரங்களை, நம்மால் நிச்சயமாக உற்பத்தி செய்யமுடியாது.
அதை இந்த மாதிரி சிந்தியுங்கள்: மண் இல்லை, தாவரங்கள் இல்லை; தாவரங்கள் இல்லையெனில், சந்தோஷமற்ற குடல் பாக்டீரியா மற்றும் மோசமான ஆரோக்கியமற்ற விளைவுகள் உருவாகும்.
உங்களது இரண்டாவது மூளையாக இருக்கும் குடல்
நேர்காணலாளர்: குடல் “இரண்டாவது மூளை” என்று மக்கள் கூறுகின்றனர், ஏன் என்று எங்களுக்கு கூறமுடியுமா?
டாக்டர்.மெகன் ரோசி: நமது குடலுக்கும், மூளைக்கும் இடையே இந்த இரு வழித்தொடர்பு இருப்பதை நூறு வருடங்களுக்கும் மேலாக நாம் அறிந்துள்ளோம். உண்மையில், நமது குடல் தனித்தன்மை வாய்ந்தது. அது ‘என்ன செய்யவேண்டும்’ என்று நமது மூளை சொல்லாமலேயே செயல்படும் காரணத்தால், அதை இரண்டாவது மூளை என்று அழைத்தோம். அதுதான் குடல் நரம்பு மண்டலத்தையும் குறிக்கிறது. அதாவது செரிமானம் நடைபெறுவதற்காக கோடிக்கணக்கான நரம்புகள் உணவூட்டி, தகவல் பரிமாறி, குடலை செயல்படுத்துகிறது. இருப்பினும், மிகவும் சமீபத்தில்தான், இந்த குடல் மூளை செயல்பாட்டில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், அதாவது குடல் நுண்ணுயிர்கள் முக்கியமான பங்கெடுப்பதை நாம் பார்த்துக்கொண்டுள்ளோம்.
அதிகமான தாவர உணவுகளை உண்பது நமது குடல் பாக்டீரியாவுக்கு மட்டுமல்லாமல் நமது மன ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது.
மேலும் இந்த நுண்ணுயிர்கள் நமது மூளைக்கு தகவல் அனுப்புவதைப் போன்ற விஷயங்களைச் செய்வதாக காணப்பட்டுள்ளது. நமது உணவில் அதிகமான தாவர உணவுகளை எடுத்துக்கொள்வது, அதாவது குடல் பாக்டீரியாவுக்கு ஊட்டம் கொடுப்பது, நமது மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை மருத்துவப் பரிசோதனைகள் காட்டியுள்ளன. ஆகவே, தாவரங்களை அதிகமாக உட்கொள்வது, நமது குடல் பாக்டீரியாவுக்கு மட்டுமல்லாமல் நமது மன ஆரோக்கியத்துக்கும்கூட மிக முக்கியமானது.
நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது ஏன் முக்கியமாக இருக்கிறது
நேர்காணலாளர்: ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு ஊட்டச்சத்தான உணவின் தேவை குறித்து நீங்கள் கூறமுடியுமா?
டாக்டர்.மெகன் ரோசி: நமது குடலின் ஆரோக்கியத்துக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் ஊட்டச்சத்து அதிமுக்கியமானது, ஏனெனில் நீண்ட ஆயுள், இருதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதைமாற்ற விகிதத்துடன், உணவுகளின் ஊட்டச்சத்து அடர்த்தியானது பரஸ்பரம் தொடர்புடையது. தாவரங்கள் நமது குடல் பாக்டீரியாவின் விருப்பமான உணவு. அதற்கான காரணம் என்னவென்றால், நார்ச்சத்து தாவரங்களின் முதுகெலும்பாக இருக்கிறது. நம்மில் பலருக்கும் உணவில் அதிகமான நார்ச்சத்து தேவை என்பதை அறிந்திருக்கிறோம், ஆனால் நார்ச்சத்து உணவு நமக்கு ஏன் அதிமுக்கியமானது என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை.
நீண்ட ஆயுள், இருதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதைமாற்ற விகிதத்துடன், உணவுகளின் ஊட்டச்சத்து அடர்த்தியானது பரஸ்பரம் தொடர்புடையது.
மனித செல்களால் உண்மையில் நார்ப்பொருளை செரிக்கமுடியாது. நாம் நார்ப்பொருளை உண்ணும்போது, அதில் பெரும்பாலானவை செரிக்கப்படாமலேயே நமது செரிமானப் பாதைக்குள் இறுதிப் பகுதிவரை பயணிக்கிறது. அதன்பிறகே, குடலின் இறுதிப் பகுதியில் இருக்கும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் அதை சாப்பிடத் தொடங்கி, நார்ப்பொருளை புளிக்கச் செய்கிறது. நார்ப்பொருளுடன் இணையும் பாக்டீரியாவானது, பலவிதமான நன்மை தரும் இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. அவைகள் நமது குடல் சுவர்களை வலிமைப்படுத்தி, நமது பசியை சீராக்க உதவி செய்வதுடன், நமது மூளைக்கும் செய்தியை அனுப்புவதாக எண்ணப்படுகிறது.
நமது செரிமானம் எப்படி செயல்படுகிறது என்பதன் படிப்படியான விளக்கம்
நேர்காணலாளர்: நமது உடல், உணவை எப்படிப் பிரிக்கிறது என்று எங்களுக்கு கூறமுடியுமா?
டாக்டர்.மெகன் ரோசி: நமது செரிமானப் பகுதி நான்கு பகுதிகளுடன், ஒன்பது மீட்டர் நீளமான குழாயினுள் உணவை வாங்கி, வெளியிடுகிறது. செரிமானம் வாயிலிருந்து தொடங்குகிறது. அங்கு நாம் உணவை மெல்லுவதன் மூலம் அதை உடைக்கத் தொடங்குவது மட்டுமல்லாமல், நமது உமிழ் நீரில் இருக்கும் நொதிப்பொருள்களுடன், அதை இரசாயனமயமாக்கி, உடைக்கத் தொடங்குகிறோம்.
நாம் உணவை விழுங்கும்போது, அது நமது உணவுக்குழாயினுள் இறங்கிச்சென்று, வயிற்றுப் பகுதியைச் சென்றடைகிறது. இது ஒரு துணி துவைக்கும் இயந்திரம் சலவைத் தூளுடன் செயல்படுவதைப் போல், உணவைச் சுழற்றி வீசுவது மட்டுமின்றி, அங்கிருக்கும் நொதிகளுடன் இணைந்து உணவை இரசாயனங்களாக உடைக்கிறது.
உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு நீங்கள் உண்மையில் உறுதுணை செய்ய விரும்பினால், உங்களால் முடிந்தவரை வெவ்வேறு விதமான தாவரங்களை சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறேன்.
உணவானது கூழ் பதத்துக்கு வந்துவிட்டால், பிறகு அது சிறு குடலைச் சென்றடைகிறது. இது சுமார் ஆறு மீட்டர் நீளத்துடன், குடலின் மிக சுவாரஸ்யமான ஒரு பாகமாக இருக்கிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் குடலிலிருந்து, நமது இரத்த ஓட்டத்திற்குள் கலந்து, இதயம், தோல் போன்ற நமது உடலின் வெவ்வேறு பாகங்களுக்கும் செல்கிறது. பெரும்பாலான நமது கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் இங்கேதான் செரிமானமாகின்றன.
ஆனால், நார்ச்சத்து உணவுகளைப் போன்று நமது தாவர அடிப்படை உணவுகளின் முதுகெலும்பாகிய சில விஷயங்கள், சிறு குடலில் செரிக்கப்பட முடிவதில்லை, ஏனென்றால் மனித செல்களுக்கு தேவையான நொதிகள் இல்லை. நார்ச்சத்து உணவானது, செரிமானக் குழாயின் இறுதிப் பகுதியாகிய பெருங்குடலுக்குள் வந்தடைகிறது. இங்குதான் பெரும்பாலான நமது குடல் பாக்டீரியாக்கள், நார்ச்சத்துள்ள உணவை இரசாயனரீதியாக உடைக்கிறது.
நல்ல குடல் ஆரோக்கியம், ஆரோக்கியமான மண்ணைச் சார்ந்திருப்பது ஏன்?
நேர்காணலாளர்: குடல் நுண்ணுயிருக்கும், மண்ணின் பல்லுயிர் பெருக்கத்துக்கும் இடையில் இருக்கும் தொடர்பை தயவுசெய்து விளக்கமுடியுமா?
டாக்டர்.மெகன் ரோசி: ஆராய்ச்சிகள் கூறும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நமது குடல் நுண்ணுயிர், நமக்குள் வாழும் கோடிக்கணக்கான பாக்டீரியாவின் எண்ணிக்கையானது, கடந்த பத்தாண்டுகள் அல்லது அதற்கும் முன்பிருந்து குறையத் தொடங்கியுள்ளது. மண்ணின் பன்முகத்தன்மையையும், நமது குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையையும் முன்னிலைப்படுத்தும் சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. குடல்-மண் தொடர்பு குறித்த ஆராய்ச்சி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தாலும், அவைகளுக்கிடையே தொடர்பு இருப்பதாக சில முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான், நமது குடல் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்த விரும்பினால், நமது மண் ஆரோக்கியம் குறித்த விஷயங்களை ஆதரிப்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.
நேர்காணலாளர்: கடந்த வருடங்களில், நமது உணவு உற்பத்தி செய்யப்படும் முறையினால் ஆரோக்கியத்தில் வீழ்ச்சியை நீங்கள் கண்டுள்ளீர்களா?
டாக்டர்.மெகன் ரோசி: மண் ஆரோக்கியம் தவிர்த்து, எளிதில் அணுகக்கூடிய உணவு என்பதைப் போன்ற மற்ற பல அம்சங்களும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்றொரு அம்சம், பயிர்களை விரும்பித் தேர்வு செய்வது. உற்பத்தி செலவினங்கள் மற்றும் பல அம்சங்களின் காரணமாக, குறிப்பிட்ட பயிர் வகைகளை வளர்க்கவேண்டாம் என்று விவசாயிகள் முடிவு செய்வது மேன்மேலும் பல்லுயிர் பெருக்கத்தைக் குறைக்கிறது. இது பெரிய பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கிறது.
பரவலாக வெவ்வேறு தாவரங்களை உண்பது, நமது குடல் ஆரோக்கியத்தின் முக்கியமான முன்னறிவிப்பாளர்களுள் ஒன்றாக உள்ளது. உண்மையில், ஒரேவிதமான 10 தாவர வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடுபவர்களின் குடல் ஆரோக்கியத்தைவிட, வாராந்திர உணவில் 30 வெவ்வேறு விதமான தாவரங்களை பகுதிகளாக உண்பவர்களின் குடல் ஆரோக்கியம் மேலானதாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு நீங்கள் உண்மையில் உறுதுணை செய்ய விரும்பினால், உங்களால் முடிந்தவரை வெவ்வேறு விதமான தாவரங்களை சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறேன்.
வண்ணமயமாக உண்டு, மண்ணைக் காத்திடுங்கள்
நேர்காணலாளர்: மாத்திரைகள் மற்றும் எதிர்கால உணவுகள் போன்ற மாற்று ஊட்டச்சத்துக்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
டாக்டர்.மெகன் ரோசி: இது மாபெரும், சிக்கலான விஷயமாக இருந்தாலும், இயற்கை அன்னை நமக்கு வழங்கியிருக்கும் தாவர ஊட்டச்சத்துக்கள் என்ற ஊட்டச்சத்து வகைகளுள் ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். அவைகள் நன்மை பயக்கும் தாவர இரசாயனங்கள் என்பதுடன் அவை எண்ணற்ற வகைகளில் இருக்கின்றன. இவற்றை சோதனைச் சாலைகளில் உற்பத்தி செய்வது எப்படி என்பது நமக்குத் தெரியாது. அதனால்தான், மாத்திரைகளை சார்ந்திருப்பதைக் காட்டிலும், தாவரங்களிலிருந்து நாம் ஊட்டச்சத்துக்கள் பெறுவதை நான் பரிந்துரைக்கிறேன்.
நல்ல குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் பலமான எதிர்ப்பு சக்தியும் கொண்டிருக்கின்றனர்.
தாவரங்களில் இருக்கும் பாலிபினால்கள் எனப்படும் இரசாயனங்கள், மற்றொரு சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது. சிவப்பு ஒயின் மற்றும் டார்க் சாக்லேட்டை, ஆரோக்கியத்துடன் மக்கள் தொடர்புபடுத்தியுள்ளனர், ஏனெனில் அவைகள் பாலிபினால்களின் ஆதார வளங்களாக உள்ளன. பெரும்பாலான பாலிபினால்கள் குடல் பாக்டீரியாவால் செரிக்கப்பட்டு, நமது உடலானது அவற்றை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இதுதான் உண்மையில் பாலிபினால்கள் குறித்த முக்கியமான விஷயம், அதாவது 90% பாலிபினால்கள், குடல் பாக்டீரியாவினால் செரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆகவே, பாக்டீரியா இல்லாமற்போனால், பாலிபினால்களின் ஆரோக்கிய பலன்கள் நமக்கு கிடைக்காது.
நேர்காணலாளர்: நாம் உண்ணும் உணவின் விதத்தினால்தான் நமது எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுநோய்களுக்கு ஆளாக நேர்வதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?
டாக்டர்.மெகன் ரோசி: நமது 70% எதிர்ப்பு மண்டலமும், நம்முடைய ஒன்பது மீட்டர் செரிமானப் பாதை நெடுகிலும் வாழ்ந்திருப்பது நமக்குத் தெரிந்ததே. மேலும், நல்ல குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் பலமான எதிர்ப்பு மண்டலமும் கொண்டிருப்பதை பரிசோதனை முறைகள் முன்னிறுத்துவதை நிச்சயம் நாம் காண்கிறோம்.
நேர்காணலாளர்: மண் ஆரோக்கியத்துக்கும், நமது குடல் நுண்ணுயிருக்கும் இடையே உள்ள தொடர்பை சுருக்கமாக எப்படி கூறுவீர்கள்?
டாக்டர்.மெகன் ரோசி: உங்களது குடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக்கொள்ள விரும்பினால், மண் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கத் தொடங்குவதை பரிந்துரைக்கிறேன், ஏனெனில் நமது குடல் பாக்டீரியாவின் விருப்பமான உணவு மண்ணில் விளைவிக்கப்படுகிறது. முக்கியமாக தாவரங்கள், நமது குடல் பாக்டீரியாவுக்கு உணவளிக்கிறது. அதனால்தான், மண் ஆரோக்கியத்துக்கும், தாவர ஆரோக்கியத்துக்கும், குடல் ஆரோக்கியத்துக்கும் இடையில் பலமான தொடர்பு இருக்கிறது.