பெருமை வாய்ந்த மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்(IIT) நிகழ்ந்த ஒரு அமர்வில், இந்திய இளைய சமுதாயம் வெளிநாடுகளில் வாழ்ந்து, பணி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதைக் குறித்த ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். இது தொடர்பாக, நம் நாடு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், வாழக்கூடியதாகவும் உருவாக இங்கு மாறவேண்டிய முக்கிய பிரச்சனைகளை சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.
கேள்வியாளர்: சத்குரு, நான் பஞ்சாபிலிருந்து வருகிறேன். நான் அங்கு காணும் ஒவ்வொரு திறமையான நபரும் கனடா செல்லும் கனவுடன் இருக்கின்றனர். அவர்களது ஒரே குறிக்கோள், “நாம் அங்கு செல்வோம்; நாம் டாலர்களில் பணம் சம்பாதிப்போம், பணத்தை இங்கு அனுப்புவோம், மேலும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கட்டமைப்போம்.” அதே சமயம் இராணுவத்தினர், விவசாயிகள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்று அடிமட்ட நிலையில் பணிபுரிபவர்களையும் நான் காண்கிறேன். நான் எந்தப் பாதையைத் தேர்வுசெய்ய வேண்டும்?
சத்குரு: நீங்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று நான் கூறவில்லை. அங்கு சென்று மேற்கொண்டு படிக்கப்போகிறீர்கள் என்றால், இங்கு கிடைப்பதைவிட அதிகமான திறமைகளை வளர்த்துக்கொள்ள எண்ணுகிறீர்கள் என்றால், அல்லது அங்கு வேலைக்காக செல்லப்போகிறீர்கள் என்றாலும்கூட, அது நல்லதுதான். ஆனால் டாலர்களைச் சம்பாதித்து, இங்கு திரும்பி வந்து, உங்கள் கிராமத்தைக் கட்டமைப்பது என்ற ரீதியில் எண்ணாதீர்கள். அது சந்தேகத்துக்குரிய ஒரு நீண்டகால கடும்முயற்சி. இந்த தேசத்தில், முக்கியமாக நமக்கு தேவையானது டாலர்கள் அல்ல. இந்த தேசத்தில் முக்கியமாக நமக்கு தேவையானது, லஞ்சம் இல்லாத, தெளிவான, முனைப்பான, அர்ப்பணிப்பான மக்கள். அதுதான் இப்போது நம்மிடம் காணப்படவில்லை.
ஒருவரோடு மற்றவர் சண்டையிடுவதில் சக்தியை வீணாக்குவதை நிறுத்துங்கள்
நமக்கு உண்மையிலேயே வெளியிலிருந்து பணம் அவசியமில்லை. அது என்னவென்றால், பல நிலைகளிலும் நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பாக செயல்படுவதிலேயே மும்முரமாக இருக்கிறோம். எல்லா நேரங்களிலும் ஒருவரை ஒருவர் சாடுவதிலேயே நமது சக்திகள் செலவழிக்கப்படுகிறது. மாலை நேரங்களில், ஆங்கிலசெய்தி சேனல்களைப் பார்த்தால், ஒருவரை எதிர்த்து மற்றவர் முடிவில்லாமல் பேசுவதில் எவ்வளவு சக்தி வீணாக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், இத்தகைய விவாதங்களில் நாகரீகத்தின் உணர்வுகளை நாம் மெல்ல இழந்துகொண்டிருக்கிறோம்.
ஒருவருக்கொருவர் தகாத சொற்களை வீசிக்கொள்வது விவாதமல்ல. ஒரு விவாதம் என்றால், ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு மூளைக்கு பதில் இரண்டு மூளைகளை உபயோகிப்பது.
அனைத்து மட்டங்களிலும் நேர்மையை உறுதி செய்வது
இந்த அளவற்ற சக்தி விரயத்தைத் தவிர, ஒரு பெருந்திரளான மக்களுக்கு நேர்மை என்றால் என்ன என்பதே தெரியவில்லை. இதற்குக் காரணம், நாம் எந்த ஒழுக்கக் கோட்பாடுகளாலும் கட்டுப்படுத்தப்படாத ஒரு தேசமாக இருக்கிறோம். “இதைச் செய், அதைச் செய், செய்யாதிரு” என்று நம்மிடத்தில் ஒருவரும் கூறவில்லை. இந்தக் கலாச்சாரத்தில், ஒவ்வொரு தலைமுறையிலும் மனித விழிப்புணர்வை இடையறாமல் தட்டியெழுப்புவதால் மட்டுமே நம்மை நாம் வழிநடத்தினோம்.
எவர் ஒருவராலும் நல்லொழுக்கங்கள் தலைகீழாக கவிழ்க்கப்படலாம், ஆனால் உங்களுக்குள் விழிப்புணர்வு எழும்போது, நீங்கள் யார் என்பது ஒரு இயல்பான வெளிப்பாடாக இருக்கிறது. இது நம் கலாச்சாரத்தின் செயல்முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில், மனித விழிப்புணர்வைத் தூண்டிவிடும் இந்த அமைப்பு பெருமளவு குலைந்துவிட்டது.
நீங்கள் ஏதாவது ஒருவகையான திறனை வளர்த்துக்கொள்ளவும், கல்வி, அறிவுத் தேடலில் அல்லது இங்கு கிடைக்காத ஒரு வேலையின் பொருட்டு வெளிநாடு செல்கிறீர்கள் என்றால், அது நல்லது. ஆனால் டாலர்களைச் சம்பாதித்து, இங்கு அனுப்புவதற்காக நீங்கள் செல்கிறீர்கள் என்றால், தயவுசெய்து அந்த மாதிரி உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். உங்களிடம் நேர்மை இருந்தால், இங்கு செய்வதற்கு நிறைய உள்ளது. நாம் நேர்மையைக் குறிப்பிடுவது ஏனென்றால், இந்தியாவில் இது மிக அரிதாக இருக்கிறது.
ஆன்மீகம் அடங்கலாக, அது அரசியலாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தொழிலாக இருந்தாலும், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் தற்போது உண்மையிலேயே மிகவும் அரிதாக இருப்பது நேர்மைதான். உங்களிடம் நேர்மை இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து இந்தியாவில் தங்கியிருங்கள்; மேலும் ஒருவர் தப்பித்துச்செல்வதை நாங்கள் விரும்பவில்லை.