சிறப்புக் கட்டுரை

வெறுமே ஒரு உணர்ச்சி என்பதைத் தாண்டி, அன்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

ஒரு ஆன்மீக சாதகரை உச்சபட்ச சாத்தியத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் அன்புக்கு இருக்கிறதா? சிக்கிப்போகாமல் நாம் எப்படி நேசிப்பது? ஆன்மீகத் தன்மையில் இருப்பதற்கு ஒருவர் கடவுளை நேசிப்பது அவசியமா? அன்பு குறித்த இந்தக் கேள்விகளுக்கும், இன்னும் பலவற்றுக்கும் பதிலளிக்கும் விதமாக விரிவாகப் பேசுகிறார் சத்குரு.

சத்குரு: உணர்ச்சி என்பது எப்பொழுதும் ஏதோ ஒரு விஷயம் அல்லது யாரோ ஒருவரைப் பற்றியதாக இருக்கிறது. ஏதோ ஒரு பொருள்தன்மையான இருப்பு இல்லாமல் உணர்ச்சி எழுவதில்லை. உங்கள் உணர்ச்சிக்கான பொருள்தன்மையான இருப்பு, உங்களது கணவராக, மனைவியாக, மகனாக, மகளாக, வீடாக, தொழிலாக அல்லது பெற்றோராக இருக்கலாம். இது பிணைப்புகளுக்கு இட்டுச் செல்லும். நீங்கள் ஒரு நபரை நேசித்தால், நீங்கள் அதில் சிக்கிப் போய்விடுவீர்கள். நீங்கள் வளர்ந்து அதிலிருந்து வெளிவந்தாலும், அந்த மற்றொரு நபர் அதன் வழியாக வளர்ச்சி அடையாமல் போகக்கூடும். இரண்டு நபர்களும் இணைந்து வளர்ச்சி காண்பது என்பது அதிஅற்புதமானதாக இருக்கும், ஆனால் அது அரிதாகவே நிகழ்கிறது. எனவே மக்கள் எடுக்கும் அடுத்தபடி, நாம் கடவுள் என்று அழைப்பதை நேசிப்பதாக இருக்கிறது.

நீங்கள் கடவுளை நேசிக்கும்பொழுது, அதனால் ஒரு நன்மை என்னவென்றால், கடவுளால் எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்த முடியாது, நீங்கள் விரும்பும்பொழுது கடவுளை விட்டு விலகிவிடவும் முடியும். கடவுள் மீது நேசத்தை திருப்புவது பல பிணைப்புகளையும் உடைக்கிறது, ஏனென்றால், கடவுள் என்ற அந்த மற்றொரு தரப்பு உங்களை விடுவிப்பதற்கு எப்பொழுதும் விருப்பத்துடன் இருக்கிறது. இதன் பாதகமான அம்சம் என்னவென்றால், கடவுளின் தரப்பிலிருந்து எந்த கோரிக்கைகளோ, வேண்டுகோள்களோ வருவதில்லை - உங்கள் வசதிக்கேற்ப அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அது நேசத்தை வளர்க்காது.

ஒரு குரு என்பவர் நீங்கள் ஆழமாக ஈடுபாடு கொள்ளக்கூடிய ஒருவராகவும், ஆனால் தேவைப்படும்பொழுது உங்களை விடுவிக்க விரும்புபவராகவும் இருக்கிறார்.

கடவுளை நேசிப்பதில் இருக்கும் சாதகம் என்னவென்றால், கடவுள் உங்களை விடுவிப்பதற்கு விருப்பத்துடன் இருக்கிறார், ஆனால் அவர் உங்களிடம் எதையுமே கோராமல் இருப்பது பாதகமான ஒன்று. இந்த சூழலில், குரு-சிஷ்ய உறவானது முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு குரு என்பவர் நீங்கள் ஆழமாக ஈடுபாடு கொள்ளக்கூடிய ஒருவராகவும், ஆனால் தேவைப்படும்பொழுது உங்களை விடுவிக்க விரும்புபவராகவும் இருக்கிறார். ஆனால் கடவுள் போல அல்லாமல், ஒரு குரு உங்களை சிலவற்றை செய்ய வைக்கிறார்.

தெய்வீகத்தின் பிரதிபலிப்பாக மனதை உருவாக்குதல்

கடவுளுக்கு அல்லது நம் மனங்களில் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஏதோ ஒன்றுக்கு, நமது அன்பை ஏன் நாம் மடைமாற்றம் செய்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மனம் என்பது நீர்மத்தன்மை உடையது. நாம் விரும்பும் எதையும் நம்மால் நினைத்துக்கொள்ள முடியும். நம்முடைய மனதை ஒரு புலியாகவோ அல்லது ஒரு யோகியாகவோ நம்மால் உருவாக்கமுடியும். மனதை நாம் அமைதிப்படுத்த முடியும் அல்லது ஆக்ரோஷப்படுத்த முடியும். எந்த விதமாக எண்ணுகிறோமோ, அந்த விதமாக மனமானது மாறுகிறது. நீர்ம நிலையில் இருப்பதால், எந்த வடிவமான பாத்திரத்திற்குள்ளும் மனமானது பொருந்திப்போக முடியும். நமது வாழ்வில் நாம் சுமந்திருக்கும் உயரிய மதிப்பீடுகளை, நாம் கடவுள் என்று அழைக்கும் தன்மையில் புனிதப்படுத்தி வைத்திருக்கிறோம். நீங்கள் கடவுளை நினைக்கத் தொடங்கி, நேசிக்கும்பொழுது, பிறகு மெல்லமெல்ல உங்கள் மனம் அதைப்போன்றே ஆகிறது.

உங்கள் மனம் தெய்வீகம் ஆகும்பொழுது, அதுவே இறைமை அல்ல - இறைமையின் ஒரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் பிரதிபலிப்பு நல்லது. கடவுளை உங்களால் கண்ணாடியில் பார்க்கமுடிந்தால், அது அவரைக் கண் முன் பார்ப்பதற்கு இணையானதுதான். சூரியக்கதிர்கள் உங்களிடம் நேரடியாக வரமுடியும், அல்லது ஒரு பிரதிபலிப்பாக சந்திரனின் வழியாக உங்களிடம் வரமுடியும். அது சூரியனிடமிருந்து வருவதைப்போல அதே தன்மையில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்குரிய வழியில் அது அழகானது. சூரியனைப்போல் சந்திரன் உயிர் ஊட்டுவதாக இல்லாமல் இருக்கலாம், சூரியனைப்போல் பூமி மீதான சூழலை அது மாற்றமடையச் செய்யாமல் இருக்கலாம், ஆனால் சந்திரனில் ஒரு வசீகரம் இருக்கிறது. மனம் தெய்வீகமானால், அதனை இறைத்தன்மை என்று நாம் அழைக்க முடியாது என்றாலும், பல விஷயங்கள் மாறத் தொடங்கும். உங்கள் மனம் அதைபோல் ஆனாலே தவிர, உங்கள் இரசாயனம் அதைப்போல் ஆவதற்கு சாத்தியம் இல்லை.

உங்கள் மனம் தெய்வீகம் ஆகும்பொழுது, அதுவே இறைமை அல்ல - இறைமையின் ஒரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் பிரதிபலிப்பு நல்லது. கடவுளை உங்களால் கண்ணாடியில் பார்க்கமுடிந்தால், அது அவரைக் கண் முன் பார்ப்பதற்கு இணையானதுதான்

சரியான விதத்தில் சாதனாவில் ஈடுபடும்பொழுது, உங்களது உடலின் அடிப்படையான இரசாயனத்தை நீங்கள் மாற்றமுடியும். ஆனால் உங்கள் சாதனா இங்கேயும், உங்கள் மனம் வேறெங்கேயும் இருந்தால், நீங்கள் துன்பமடைவீர்கள், ஏனெனில் நீங்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லை. இதனாலேயே ஆன்மீக தேடுதலில் இருப்பவர்கள் அதிகமாக துன்புறுகிறார்கள். உங்களது எண்ணங்களும், மனோபாவங்களும் உங்களை ஒரு திசையில் இழுக்க, ஆனால் உங்களது இரசாயனம் உங்களை வேறொரு திசையில் இழுத்தால், அது மிக அதிகமான துன்பத்தைக் கொண்டுவரும். மனமும், சாதனாவும் ஒரே திசையில் இருக்கும்பொழுதுதான், அது ஒரு அழகான அனுபவமாக இருக்கும்; இல்லையென்றால் அது ஒரு போராட்டமாகிறது.

நமது ஒட்டுமொத்த கவனமும் அந்த திசை நோக்கிக் குவிந்திருந்தால், ஒருவர் எளிதில் கடவுள்தன்மையை அடையமுடியும். கடவுள் போன்ற மனம் இல்லாத நிலையில், இறைத்தன்மையை அடைவது வெகு தொலைவில் இருக்கிறது, மிக அரிதாக இடியைப் போன்ற ஏதோ ஒன்று உங்களைத் தாக்கினால் தவிர - கடந்தகால கர்மா அல்லது கடந்தகால சாதனா இருந்தாலேயன்றி அது நிகழாது.

காதலாகிக் கசிந்து

நீங்கள் உங்கள் துணையை நேசித்தாலும் அல்லது உங்கள் கடவுளை நேசித்தாலும், அப்போதும் அது ஒரு உணர்ச்சியாகத்தான் இருக்கிறது. உணர்ச்சியானது பொருள்தன்மையான இருப்பை கடக்கும்பொழுது, அதற்குமேலும் அங்கே உணர்ச்சி இருப்பதில்லை - வெறும் அன்பு மட்டுமே இருக்கிறது. சாதாரணமாக, இரண்டு உயிர்கள் இணைந்து வருவதற்கான ஒரு உந்துதல், காதல் எனப்படுகிறது. அது காதலை நோக்கிய ஒரு படி. ஏதோ ஒன்றைச் செய்வதற்கான ஒரு உந்துதல் உங்களுக்கு இருந்தால், அந்த உந்துதல் இருப்பதாலேயே நீங்கள் செய்ய விரும்பியதை செய்து முடித்துவிட்டீர்கள் என்று அர்த்தமாகாது. அதேவிதமாக, நீங்கள் காதலில் கசிந்து முழுமையடைய விரும்புகிறீர்கள், ஆனால் அது இன்னமும் நிகழவில்லை.

நீங்கள் விரும்பிய முழுமை இனிமேல்தான் நிகழ இருக்கிறது எனும்போது, காதல் ஒரு உந்துதலாக இருப்பதுடன், அங்கே ஒரு ஈர்ப்பும் இருக்கிறது. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது இன்னும் நிகழ்ந்திராத காரணத்தால், காதல் பேராவலும், வலியும் மிக்கதாக இருக்கிறது. இரண்டு உயிர்களும் ஒன்றாகும்போதுதான், அதை காதல் என்று நீங்கள் அழைக்கமுடியும். அனைத்தையும் உங்களின் ஒரு பாகமாக உண்மையிலேயே நீங்கள் உணரத் தொடங்கினால், அப்போது நீங்களே காதலாக மாறிவிட்டீர்கள் - அது இனிமேலும் ஒரு உணர்ச்சியாக இல்லாமல், உங்கள் இருப்பே அப்படி இருக்கிறது.

இரண்டு உயிர்களும் ஒன்றாகும்போதுதான், அதை காதல் என்று நீங்கள் அழைக்கமுடியும்.

உணர்ச்சி என்பது உங்களை வேறு ஏதோ ஒன்றுடன் இரண்டற கலந்திடச் செய்கிறது. ஏதோ ஒரு இடத்தை சென்றடைவதற்கு உணர்ச்சி ஒரு வாகனமாகச் செயல்படுகிறது. அதற்கென்று சுயமாக தனித்த நோக்கம் இல்லை. இரண்டு உயிர்கள் இணைந்து ஒன்றானால், அப்போது இந்த உணர்ச்சி உபயோகமான ஒன்று. உங்களது வாழ்க்கை முழுவதும் உணர்ச்சியை அனுபவித்துக்கொண்டு, ஒருபோதும் ஒன்றாகவில்லை என்றால், அப்போது அதனால் பயனேதும் இல்லை. பல வழிகளிலும் அது உங்கள் உயிரை வடியச் செய்துவிடுகிறது. அது ஒரு ஏக்கமாக மட்டுமே தேங்கிவிடுகிறது. உதாரணத்துக்கு, நான் கோவைக்குச் செல்ல விரும்பி, ஒரு பேருந்தில் ஏறுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். பேருந்து சென்றுகொண்டே இருக்கிறது, ஆனால் அது கோவையைச் சென்றடையவில்லை என்றால், அந்தப் பேருந்தில் ஏறுவதில் எந்த பயனும் இல்லை. அது அர்த்தமில்லாதது மற்றும் ஏமாற்றமளிப்பது.

உணர்ச்சியின் வழியே செல்லும் போது, முழுமையடைந்துவிடும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதில் இருக்கிறது. ஆனால் இன்னும் முழுமையடையாமல் இருப்பதன் வலியும், பயமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காதல், நேசம் அல்லது அன்பு என்பது ஒரு உணர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் அன்புமயமாக மாறிவிட விரும்புகிறீர்கள், ஆனால் இன்னமும் அப்படி மாறிவிடவில்லை. நீங்கள் அன்பு மயமாகிவிட்டால், அப்போது நீங்களே காதலாக, அன்பாக அல்லது நேசமாக இருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் அது வெறுமே ஒரு உணர்ச்சியாக இருப்பதில்லை.