மகிழ்ச்சியை எவ்வாறு கண்டடைவது?
டெமி லொவாடோ: ஒருவர் தனது வேலையில் மகிழ்ச்சியை கண்டடைவதற்கு அவரை நீங்கள் எவ்வாறு ஊக்கப்படுத்துவீர்கள் - குறிப்பாக அந்த வேலை கடினமானதாகவும் இருக்கிறது என்றால்?
சத்குரு: எந்த வேலையும் கடினமானது அல்ல, நீங்களாகவே அதை கடினமாக்கிக் கொண்டால்தான் உண்டு. நீங்கள் எதை மகிழ்ச்சியோடு செய்தாலும், அது உற்சாகமானதாக இருக்கும். அதையே நீங்கள் துயரத்தோடு செய்தால், அது கடினமானதாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், மேலும் கீழும் என 25 முறை வேண்டுமானாலும் உங்களால் நீச்சலடிக்க முடியும். அது உங்கள் தசைகளுக்கு கடினமானதாக இருந்தாலும், உங்களுக்கு அது கடினமான வேலை அல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லாத ஏதோ ஒன்றில் ஈடுபடும்போது மட்டுமே உங்கள் வேலை கடினமானதாக தோன்றும். அமெரிக்காவில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் வேலையை வெறுக்கிறார்கள் என்பதாக ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நீங்கள் வெறுக்கும் ஒரு விஷயத்தை வாரத்தின் ஐந்து நாட்களும் நீங்கள் செய்துகொண்டிருந்தால், நிச்சயமாக வார இறுதியில் அதிகப்படியான அளவு ஏற்றிக்கொள்வீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. வாழ்க்கை என்பது முதலில் நீங்களே அதை கடினமானதாக செய்துகொண்டு, பின்னர் கடைசியில் கேளிக்கை கொள்வதல்ல.
டெமி லொவாடோ: ஒரு மாத சம்பளத்தில் இருந்து அடுத்த மாத சம்பளம் வரை நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் பின்னர் ஒரு நாள் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைத்தானே நாம் வாழும் இந்த உலகம் நமக்கு கற்றுத்தருகிறது?
சத்குரு: ஒரு மாத சம்பளத்தில் இருந்து அடுத்த மாத சம்பளத்தை நோக்கி ஓடுவதைப் பற்றியது அல்ல இது. ஆரம்பப்பள்ளி காலம் முதலே, மற்ற அனைவரை விடவும் நீங்கள் கட்டாயம் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் மகிழ்ச்சியடையும் ஒரே விஷயம், மற்றவர்களின் தோல்விகளை குறித்ததாக இருக்கிறது. இதை நாம் மாற்றாவிட்டால், மனிதகுலம் எப்போதும் மகிழ்ச்சியைக் கண்டடையாது. அதற்கும் மேலாக, எவரும் தாங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சியை கண்டடைய முடியாது, ஏனெனில் அவ்வாறு ஒன்று இல்லை. மகிழ்ச்சியோ துயரமோ, இரண்டுமே உங்களுக்குள் மட்டும்தான் நிகழ முடியும்.
உங்கள் அனுபவத்தின் அடிப்படை உங்களுக்குள் தான் இருக்கிறது - வெளியே எங்கும் இல்லை. எனவே நீங்கள் தரையை துடைத்துக் கொண்டு இருந்தாலும், அல்லது ஒரு பெரிய ராக்ஸ்டாராக இருந்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அனைத்தையும் உங்களால் மகிழ்ச்சியோடு செய்ய முடியும். வேலையிலோ செயலிலோ மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சி என்பது எதிலும் இல்லை - நீங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் செய்யும் அனைத்தும் அவ்வாறு தான் இருக்கும்.