தெய்வீகத்தின்  பாதையில்
சுவாமி ஏகபாதா
~ ஒற்றை காலில் நிற்பவர் - நடராஜா

இந்த தொடரில், ஈஷா பிரம்மச்சாரிகளும் சந்நியாசிகளும் தங்களது சொந்த பின்புலம், பார்வைகள் மற்றும் இந்த புனிதமான “தெய்வீகப் பாதை"யில் பயணிப்பதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

"சுவாமி ஏகபாதா பத்தின மிகச்சிறந்த விஷயம் என்னன்னா, இப்போ அவர் இருக்கற நிலைல இருந்து அவரால ஒரு அடி முன்னாலயோ, பின்னாலயோ எடுத்து வைக்க முடியாது - அவர்கிட்ட இருந்து இயல்பா வெளிப்படற இனிமையான, திறம்பட செயலாற்றும், அச்சுறுத்தல் இல்லாத குணத்துல ரொம்ப உறுதியா வேரூன்றி இருக்காரு. இப்படி இருந்தாலும், எப்போ தேவை ஏற்பட்டாலும், முதல் ஆளா சுவாமி களத்துல நிற்பார்!" முதன்முதலாக ஈஷா யோகா வகுப்பில் சுவாமி ஏகபாதா கலந்துகொண்ட 2000ம் ஆண்டு முதல் அவரை அறிந்திருக்கும் சுவாமி விபு இப்படி பகிர்ந்து கொண்டார். இருவரும் தற்போது ஈஷா ஹோம் ஸ்கூல் செயல்பாடுகளில் ஒரு அங்கமாக இணைந்துள்ளார்கள்.

கட்டிட வடிவமைப்பாளராக தம் கல்வியில் தேர்ந்திருந்த சுவாமியிடம், இயல்பாகவே பேச்சாற்றல், நடிப்பு திறன் மற்றும் நாடக ஆசிரியர் என திறன்களை இயற்கை கொடையாக அளித்துள்ளது - இத்திசையில் இவரது பயணமே எதிர்பாராத ஒன்றுதான். தகவலை பரிமாறும் அதே நேரத்தில் தன் குரலை தன் விருப்பத்திற்கு கட்டுப்படுத்தி, குரலிலேயே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தனித்திறமையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் கவர்பவராக இருக்கிறார் சுவாமி.

"சுவாமி தனித்துவமும் வித்தியாசமுமான ஒரு ருசியை நாடகங்களில் கொண்டுவந்து விடுகிறார். மிகவும் சீரியஸாக இல்லாமல், ஒவ்வொரு விநாடியும் உங்களை நீங்களே இலேசாக எடுத்துக்கொள்ளும் தன்மையை இவரது குரல் கொண்டிருக்கிறது. நாம் கட்டமைத்துக்கொள்ளும் எல்லைக்குட்பட்ட ஆளுமை தன்மைகளை தகர்த்தெறியும் இன்னுமொரு ஆக்கப்பூர்வமான வழி இது" என பகிர்கிறார் டினா ஜாபர். ஈஷாங்காக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு நாடக பயிற்சி வகுப்பில் சுவாமியுடன் இவரும் பங்கேற்றிருந்தார்.

இந்த நாடக பயிற்சி வகுப்பின் நிறைவு நாளன்று, ஈஷாங்காக்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதை காண நேரில் வந்திருந்தார் சத்குரு. அரங்கத்திற்குள் நுழைந்ததுமே சுவாமி ஏகபாதா இருந்த திசை பார்த்து சத்குரு ஒற்றைக்காலில் நின்றார். சுவாமியின் பெயரின் பொருள் குறித்து அவரை வம்பிழுக்க கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் சத்குரு தவறவிடுவாரில்லை. பிரம்மச்சாரிகளின் சந்திப்பு ஒன்றின் போது இருவருக்குமிடையே நிகழ்ந்த சுவாரஸ்யமான ஒரு உரையாடலை இங்கே உங்களுக்காக வழங்குகிறோம், வாசித்து மகிழுங்கள்.

"ஒற்றைக்காலில் நின்றபடி கேளுங்கள், சுவாமி." கேள்வி கேட்க சுவாமி மைக்கை எடுத்தவுடனே தன் வழக்கமான குறும்புத்தனத்தை துவங்கிவிட்டார் சத்குரு.

சுவாமி ஏகபாதா: என்னுடைய காலனிகளை எங்கே விட்டேன்?

சத்குரு: உங்களுக்கு ஒரு காலனிதான் தேவை சுவாமி. எனவே ஒன்று போய்விட்டது, இன்னொன்று அங்கே இருக்கிறது, உங்களுக்கு அதுவே போதுமானது.

சுவாமி ஏகபாதா: சத்குரு, இது ஒரு கேள்வி, இன்னொரு கேள்வி... நீங்கள் என்னை ஏகபாதா என அழைத்தீர்கள், எனது உண்மையான கேள்வி: நீங்கள் எதை குறிப்பிட்டீர்கள், இடது பாதமா அல்லது வலது பாதமா?

சத்குரு: அது மிக ஆழமான கேள்வி! அதற்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. அது சும்மா மேம்போக்காக கேட்கப்பட்ட ஒரு கேள்வியல்ல. ஒரு காலனி தொலைந்து போனது ஒரு பொருத்தமான கேள்வியல்ல, ஏனெனில் உங்களுக்கு தேவையானதே ஒன்றுதான்.

நீங்கள் ஒற்றைக்காலில் நின்றாலும், இப்போது வரவர நீங்கள் விவேகமடைந்து வருகிறீர்கள்...

தொடர்ந்து சுவாமியின் கேள்விக்கு பதிலளித்தார் சத்குரு. அந்த பதிலில் அவரது வழக்கமான கூர்மையும், தெளிவும் நிறைந்திருந்தது.

2002ம் ஆண்டு ஆசிரமவாசியாக மாறிய சுவாமி ஏகபாதா, 2004ம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். "நான் சிறுவயதாக இருந்த போது, இயேசு என்ன போதனை கொடுத்ததாக கூறினார்களோ, அதை உறுதியாக எடுத்துக் கொண்டேன். அவர் எப்படி இருந்தார், என்ன செய்தார், தன்னை அவர் எப்படி வர்ணித்துக் கொண்டார் என அனைத்துமே எனக்கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. ஆனால் அதை ஒருவர் அனுபவபூர்வமாக உணர முடியும் என்பதை நான் ஒருபோதும் சிந்தித்தது கூட இல்லை. ஏனெனில், உங்களுக்கே தெரியும், அவர் 'தேவ குமாரன்' - நான் ஒரு சாதாரண குழந்தைதானே. அப்போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒருநாள், குறிப்பிட்ட ஒரு கடினமான ஒரு சூழ்நிலைக்கு பிறகு, அழுதுகொண்டே என் அறைக்கு திரும்பி, அப்படியே பிரார்த்தனை செய்ய அமர்ந்தேன். கண்ணீர் பொங்க, வலியோடு, நான் தீவிரமாக பிரார்த்தித்தேன், 'நான் உன்னை மட்டுமே அறிய விரும்புகிறேன் என் தேவனே, எனக்கு வேறெதுவும் பொருட்டில்லை.' அந்த கணத்தில் நான் என்ன வேண்டுகிறேன் என்பதை நான் அறியவில்லை, ஆனால் அந்த கணத்தில் அதுவே என் விருப்பமாக இருந்தது," தொடர்ந்து சுவாமி பேசுகையில், அவரது வாழ்வில் சிவன் எப்படி நண்பனாக, ஒரு பாதையாக, ஒரு இலக்காக ஆனார் எனும் நேரமும் வந்தது என்பதை பகிர்ந்து கொண்டார், "நான் அடைய விரும்பிய அனைத்துமானார் அவர். வாழ்வைப் பற்றி அறிய வேண்டிய அனைத்தும் அவராக இருந்தது. இவரை தவிர வேறெதுவும் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போனது." உலகம் முழுவதுமிருக்கும் சொற்களால் கட்டமைக்கப்பட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து உண்மையை தேடிய ஒரு சாதகரின் அசாதாரணமான கதை இதோ நம்‌முன் வாழும் உண்மையாக...

சுவாமி ஏகபாதா அவர்களின் அனுபவ பகிர்வு

ஈஷாவுக்கு முன்

ஒரு பருவ வயது இளைஞனாக, என்னை சுற்றி உள்ளவர்களை கவனித்தபோது, பள்ளிக்கு செல்வது, பிறகு கல்லூரி, பின் வேலையில் சேர்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் என எல்லோருடைய வாழ்க்கையும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு நடப்பது போல எனக்கு தோன்றியது. இது என்னை திரும்பத் திரும்ப பாதித்தது. எனக்குள் நானே வியந்தேன், "வாழ்க்கையில் இதை தவிர வேறு ஒன்றும் இல்லையா? என்ன அது? நான் எப்படி தெரிந்துகொள்வது?"

19-வது வயதில் பல புத்தகங்களை வாசித்தேன், பிறகு நோய் தீர்க்கும் முறைகளை (ஹீலிங்) கற்றேன். எனக்குள் ஒரு இனிமையான நிலையை உணர்வதற்காக பல விஷயங்களை முயற்சி செய்தேன். ஒரு சைவ உணவுப் பிரியராகவும் மாறினேன். கடவுளைப் பற்றி என்றுமே கண்டறிய முடியாது என்னும் கொள்கையுடன் இருந்தேன். சிறிதளவில் ஒரு தத்துவ ஞானியாகவும் இருந்தேன். மிகுந்த தேடலுக்குப் பிறகு, எனக்கு ஒரு அனுபவம் நடந்தது: அதுவரைக்கும் உணராத ஒரு இனிமையான நிலையில் இருந்தேன்.

ஜூன் 1998ல் இது நடந்தது. எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு [MM1] மலை உச்சிக்கு மேலே இருக்கும் ஹரிஸா (Harissa) என்ற இடத்துக்கு சென்றோம். அங்கே புகழ் வாய்ந்த மத முக்கியத்துவம் நிறைந்த ஒரு சிலை இருந்தது. அது ஒரு புனித யாத்திரைக்கான இடமாகவும் இருந்தது. நாங்கள் அதற்காக அங்கே செல்லவில்லை - கீழே பெய்ரூட் (Beirut) என்ற இடத்தின் சிறந்த ஒரு காட்சி அங்கிருந்து காண கிடைக்கும் என்பதால் அங்கே போனோம். அங்கு மக்கள் மேலே செல்ல உதவும் சுருள்வட்ட வடிவிலான ஒரு சரிவான பாதை இருந்தது. சிறந்த காட்சி கிடைப்பதற்காக, அந்த சரிவு பாதையில் எவ்வளவு தூரம் மேலே போக முடியுமோ, அந்த அளவுக்கு மேலே நாங்கள் சென்றோம். என் நினைவில் முதல் முறையாக, எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒரு உண்மையான ஆனந்தத்தை அந்த இடத்தில் எப்படியோ நான் உணர்ந்தேன். இது ஒரு "ஆன்மீக" அனுபவம் என்று நான் உறுதியாக நம்பினேன்.

நாள்பட, இந்த அனுபவம் என்னுள் அதிகரித்தது - என்னை சுற்றியுள்ள எல்லாவற்றுடனும் எனக்குள் ஒரு தொடர்பு ஏற்பட்டு, எந்த முயற்சியும் இல்லாமல் எல்லோரிடமும் ஒரு கருணை எனக்குள்ளே உண்டானது. என் சிறு வயது கேள்விக்கான விடை கிடைத்தது: ‘வாழ்க்கையில் இன்னும் அதிகமான ஏதோ ஒன்று உள்ளது’. ஆறு மாதத்திற்கு பிறகு, ஒரு நாள் காலையில் நான் கண்விழித்தபோது, இந்த அனுபவம் என்னை விட்டு சென்றதை நான் உணர்ந்தேன்.

நாக்கு வறண்டு தாகமுடன் இருக்கும் ஒரு மனிதனுக்கு, ஒரு கிணறு உள்ள இடத்திற்கான வழி கிடைத்தபின், இப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது போன்ற ஒரு நிலைமையில் நான் இருந்தேன். மிகவும் நிலைகுலைந்து நம்பிக்கை இழந்து போனேன். மேலும் பல புத்தகங்களைப் படித்து, பல நவீன பயிலரங்குகளில் கலந்துகொண்டு, பல வழிமுறைகளை பின்பற்றினேன். நான் எதிர்கொண்ட எந்த ஒரு ஆன்மீக அனுபவத்துடனும் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் அனுபவங்கள் கிடைக்க கிடைக்க, அதைவிட இன்னும் ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் நிரந்தரமான ஒரு அனுபவத்திற்காக மேலும் வெறியுடன் தேடினேன்.

என் வாழ்வில் ஈஷா நுழைந்தது

ஈஷாவைப் பற்றி முதன்முதலாக என் அம்மாவிடம் இருந்து கேள்விப்பட்டேன். அந்த நேரத்தில் அவர் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருந்ததால், நண்பர்கள் சிபாரிசு செய்ததின் பேரில், அவர் உடனே ஈஷா யோகா வகுப்பிற்கும் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சிக்கும் பதிவு செய்தார். இது மற்றுமொரு பயிலரங்கமாக இருக்கும் என்று நான் கருதினேன். இது வேலை செய்யுமா என்று பார்க்க காத்திருந்தேன்.

அவர் பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சி முடித்து வந்தவுடன் அவர் முகத்தை பார்த்த எனக்கு, அவரை அடையாளம் காண இயலவில்லை. ஒரு பெரிய சுமை அவர் வாழ்க்கையிலிருந்து இறக்கி வைக்கப்பட்டது போல அவருடைய முகம் மிகவும் பிரகாசமாகவும் தளர்வாகவும் தெரிந்தது. அவருக்கு என்ன அனுபவம் நடந்திருந்தாலும் அது வேலை செய்துள்ளது என்பதை நான் அறிந்துகொண்டேன்.

சத்குருவுடனான அடுத்த ஈஷா யோகா வகுப்பிற்கு நான் பதிவு செய்தேன். நிகழ்ச்சியின் போது, வகுப்பின் அத்தனை அம்சங்களும் என் தலைக்கு மேலே சென்றன. வகுப்பு முடிந்ததும் கதறி அழுதேன் - ஏனென்றால், எனக்கு எந்த அனுபவமும் நடக்கவில்லை அல்லது நான் எதிர்பார்த்த அனுபவம் எதுவும் எனக்கு நடக்கவில்லை. இருப்பினும், அந்த வகுப்பின் சூழல், இது ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டிருந்தது என்பதை எனக்கு உணர்த்தியது. சத்குரு வித்தியாசமாக இருந்தார். இது மற்றுமொரு நவீனகால தந்திர வேலை அல்ல.  

அடுத்த முறை சத்குரு லெபனனுக்கு ஒரு வருடம் கழித்து வந்தார். இந்த முறை நிகழ்ச்சிக்கு நான் தன்னார்வத் தொண்டு செய்தேன். மலைமேல் எனக்கு நேர்ந்த அனுபவம் நடந்து அப்போது இரண்டு வருடங்கள் கழிந்து இருந்தன. என்னுடைய ஏக்கம் ஒரு வலி நிறைந்த உச்சத்தை எட்டியிருந்தது. நிகழ்ச்சியின் போது, ஒரு வகுப்பின் முடிவில் சத்குருவை கண்டு நான் பைத்தியக்காரத்தனமாக தேம்பித் தேம்பி அழுதேன். கூச்சமாக இருந்தபோதிலும், என்னுள் இருந்த ஏதோ ஒன்று சரணடைய விரும்பியது. அப்போதுதான் என் புரிதலுக்கும் அப்பாற்பட்டவர் சத்குரு என்பதை உணர்ந்தேன்.  

என்னுடைய பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியின்போது தன்னார்வத் தொண்டர்களின் சேவை என்னை மிகவும் ஈர்த்தது. நான் அறிந்திடாத ஒரு அன்பை, ஒரு ஆனந்தத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை அறிந்தேன். இல்லையென்றால், நாங்கள்தான் அவர்களுக்கு எல்லாம் என்ற நிலையில் எங்களை இப்படி கவனித்திருக்க மாட்டார்கள். சத்குரு "சிவ சம்போ" உச்சாடனம் செய்த விதம், என்னை தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை அவர் அறிந்துள்ளார் என்பதை எனக்கு உணர்த்தியது. என்னுடைய ஏக்கத்திலும் ஆவலிலும் உருகி, மிகப்பெரிய மதிப்புடைய ஏதோ ஒன்றை கண்டறிந்ததினால் கண்ணீர் விட்டேன். அப்போதுதான் எல்லாவற்றையும் அழிப்பவராய் சிவாவைப் பற்றி முதல் முதலில் கேள்விப்படுகிறேன். வகுப்பின் ஒரு குறிப்பிட்ட செயல்முறையில் முழுவதுமாக ஈடுபட தீர்மானித்தேன். என்னையே நான் முழுவதும் கொடுத்தேன். சில தருணங்களுக்கு என் உடலைப் பற்றிய உணர்வுகளை முழுவதும் இழந்தேன். மற்றுமொரு செயல்முறையில், தீவிரமான உணர்ச்சிகள் என் உடல் முழுதும் பெருக்கெடுத்து ஓடின. கட்டுப்படுத்த முடியாதபடி நடுங்கி அழுது கொண்டிருந்தேன். ஒவ்வொரு பங்கேற்பாளரையும் தெய்வீகத்தின் உருவமாக பார்த்தேன். எல்லோரையும் இயல்பாக வணங்கினேன்.

சம்யமா என்னும் வெடி

சம்யமாவிற்குப் பிறகு என் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது என்பது நன்றாக தெரிந்ததால், புதிதாக கட்டப்பட்டிருந்த ஸ்பந்தா ஹாலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் திரும்பிப் பார்த்து, நான் அதுவரை அறிந்திருந்த உலகத்திற்கு பிரியா விடை கொடுத்துவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றேன்.

நிகழ்ச்சியின் செயல்முறைகளின் போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு கணம் பாம்பு போல் நெளிந்து கொண்டிருந்தேன், அடுத்த கணத்தில் புலியைப் போல உறுமிக் கொண்டிருந்தேன். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் என்னையே கொடுத்தேன். பலமுறை இருள்சூழ நிலைகுலைந்து தரையில் விழுந்தேன். கற்பனை செய்து பார்க்க முடியாத அனுபவங்களால் சிவா எனக்கு எல்லாமும் ஆனார்.

லெபனனுக்கு திரும்பி வந்த பிறகு, என் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உணர்ச்சிகரமான தொடர்பு மறைந்தது போலிருந்தது. என் பயிற்சிகளுடன் முழு ஈடுபாடு கொண்டேன். அடிக்கடி தீவிரமான நிலைகளுக்கு சென்றேன். சிவா ஒரு நண்பனாக, ஒரு பாதையாக, ஒரு குறிக்கோளாக மாறினார். உயிரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அனைத்துமாக இருந்தார்.

இவை அனைத்தும் உள்நிலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, வெளியில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடைய கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தேன். பிழைப்புக்காக என்னை நானே நிலைநாட்ட பார்த்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்தும் அவ்வளவு அர்த்தமுள்ளதாக இப்போது எனக்கு தெரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல, என்னுடைய ஏக்கம் ஒரு கோபமாக மாறிக் கொண்டிருந்தது. ஏனென்றால், அர்த்தமற்றவைகளுக்காக என் வாழ்வை வீணாக்க நான் விரும்பவில்லை.  

என்ன நடந்தாலும் என் வளர்ச்சிதான் எனக்கு மிகவும் முக்கியமானது என்பதை நிர்ணயித்தேன். இது எனக்கு ஒரு பெரிய நோக்கத்தை தந்தது. கற்பனையிலும் என்னால் செய்ய இயலாத காரியங்களை நான் செய்தேன். என்னுடைய அனுபவத்தில் அது ஒரு அர்ப்பணிப்பாக இருந்தது. நான் சந்தித்த ஒவ்வொரு சூழ்நிலையையும் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக பார்த்தேன். என் வாழ்வின் பயமற்ற ஒரு காலகட்டமாக அது இருந்தது.

உறுதி பெற்ற என் ஏக்கம்

என் பட்டப் படிப்பு முடிந்தவுடன் மூன்று மாதங்கள் தங்கி இருக்க திட்டமிட்டு, ஆசிரமத்திற்கு வந்தேன். சாதனா அட்டவணையை மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பின்பற்றினேன். ஆனால், என் மனதின் பைத்தியக்காரத்தனத்தை காண ஆரம்பித்தேன். எல்லாம் மேற்பரப்புக்கு வந்தது. இதை நம்புவதற்கும் ஜீரணிப்பதற்கும் மிகவும் கடினமாக இருந்தது. நான் ஒரு தோற்கடிக்கப்பட்ட மனநிலையில் இருந்தேன். பத்தாவது நாள் சத்குருவை நேரில் காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அறைக்குள் நுழைந்தவுடன் சத்குருவின் காலில் விழுந்து என்ன நடக்கிறது என்று கேட்டு அழுதேன். அந்த சந்திப்பில், நான் விரும்பினால் இங்கேயே தங்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சூட்சுமமாக எனக்கு உணர்த்தினார். இது சாத்தியம் என்று நான் அறிந்திருக்கவே இல்லை.

ஆசிரமத்திற்கு வந்த 14-வது நாளன்று, இந்த இடம் உட்கொண்டிருக்கும் சக்தியின் மூலத்திற்காகத்தான் நான் உள்ளூர ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்தேன். எனக்கு வேறு வழி இல்லாமல் போனது. நான் இங்குதான் இருக்க வேண்டும்: பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதை நான் பார்த்தே தீருவேன் என்று இருந்தேன். நான் லெபனனுக்கு செல்வதற்கு முன், சத்குருவுடன் மற்றுமொரு சந்திப்பு நடந்தது. "இந்த மரம் வளர்வதற்கு அதிலிருந்து பல கழிவுகளை அகற்ற வேண்டியுள்ளது," என்று கூறினார். அவர் கூறியதன் உட்பொருள் எப்போதும் போல எனக்கு புரியவில்லை.

சேற்றுக் குட்டை
என் மனம் எனும்
பிசுபிசுப்பான ஒரு குட்டை
சேறும் சகதியுமாலானது
இதில் ஊடே
அலைந்து திரியாமல்

தேவனே, இந்த குட்டையை உனதாக்கு;
மலைக்காற்றைப் போல தூய்மையாக,
காற்றில்லா கடலைப் போல அசைவற்றதாக,
ஆழ்வேர் கொண்ட மரத்தைப் போல ஸ்திரமாக,

அலைந்து திரிவது நின்று போக
சிற்றலைகள் மரித்துப் போக
அதன் பரப்பில்
உன் நிரந்தர வானின் இருட்டைப் பார்க்கிறேன்.

லெபனனுக்கு சென்று, மூன்று மாதத்திலேயே ஆசிரமத்திற்கு நிரந்தரமாக திரும்பி வந்தேன். உணவு பரிமாறுவது, சமையலறை, ஒலி மற்றும் பெட்டக (ஆர்கைவ்ஸ்) துறைகளில் தன்னார்வத் தொண்டு செய்தேன். அந்நாட்களில் நான் ஒரு மணி நேரத்தில் 70 சூரிய நமஸ்காரங்கள் செய்து கொண்டிருந்ததால், செயல்கள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. என் எடை வெகுவாக குறைந்தது. ஒருநாள் எதேச்சையாக சத்குருவை மைதானத்தில் சந்தித்தபோது, என்னைப் பார்த்து, "என்ன செய்து கொண்டிருக்கிறாய்? போய் சாப்பிடு, இப்போதே சாப்பிடு!" என்று அதட்டினார். அதன் பிறகு, அதிக அளவில் உண்ண ஆரம்பித்தேன்... சொல்லப்போனால், ஒவ்வொரு உணவு வேளையின் போதும் ஒரு மணி நேரம் எடுத்து அதிக அளவில் உண்டேன். அப்படி இருந்தும் ஒரு சில மாதங்களில் கிட்டத்தட்ட 2 கிலோ எடை குறைந்தேன்.

பிரம்மச்சரியத்திற்கான தீட்சை எனக்கு 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் பல விஷயங்கள் என்னால் கையாள முடியாமல் என்னுள்ளும் வெளியிலும் நடந்து கொண்டிருந்தன. நான் ஒரு தீப்பிழம்பாக எரிந்து கொண்டிருந்தேன் - அது பிரச்சனை இல்லை. ஆனால், என்னால் செயல்களை சரியாக செய்ய முடியவில்லை. எளிய வழிமுறைகளை பின்பற்றி என்னால் செய்ய முடிந்தது. ஆனால், சிறிது அதிகமாக தேவை இருந்தால், அப்போது நான் போராடினேன்.

என் வழியில் அனைவருக்கும் உதவியாக இருக்க விரும்புகிறேன்

எனக்குள் நான் ஒரு கட்டிடக்கலை கலைஞராக இருக்க விரும்புகிறேன் என்பது அவருக்கு தெரியும் என்பது போல், சத்குரு என்னை கோயம்புத்தூருக்கு அனுப்பிவைத்தார் - அங்கே, ஈஷாவுடன் சில செயல்திட்டங்களில் பணியாற்றும் ஒரு கட்டிடக்கலை நிபுணருடன் சேர்ந்து பணி செய்வதற்காக. அவர் சத்குருவால் மிகவும் உந்தப்பட்டு இருந்தார். புதிதாக துவங்கப்பட்ட ஈஷா பிசினஸின் பகுதியாக ஒரு அழகு சாதன கடையின் உட்புற வடிவமைப்பை தயார்செய்யும் பணியில் இருந்தேன். இது ஈஷாவின் சமூக நல அவுட்ரீச் திட்டங்களுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தனிச்சலுகையாக, பொறுப்பாக நான் உணர்ந்தேன்.

இந்த வேலை - வடிவமைப்பு, நேரடியாக இடத்திற்கு சென்று கட்டிடப் பணியை நிறைவேற்றுதல் மற்றும் மக்களை ஒருங்கிணைப்பது - இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதை எப்படியும் நிகழ்த்திவிட வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். இது ஒரு அந்நியமான இடமாக இருந்தாலும், மக்கள் தெரியாத மொழி பேசினாலும், முற்றிலும் தெரியாத ஒரு கலாச்சாரமாக இருந்தாலும் - வாழ்க்கையில் முதல்முறையாக, நான் ஏதோ ஒரு இடத்தின் அங்கமாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

மூன்று மாதங்களாக, தினமும் நான் ஆசிரமத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பூண்டி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். இதில் எவ்வளவு நேரம் செலவு செய்திருக்கிறேன் என்றால், யாராவது என்னிடம், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "நான் பூண்டி பேருந்து துறையில் பணி செய்து கொண்டிருக்கிறேன்!" என்று நகைச்சுவையாக சொல்லும் அளவுக்கு.

ஆனால், என்னிடம் இருந்த தடைகளுடன் எனக்குள்ளேயே நான் மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள, பல சூழ்நிலைகளில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். எதிர்பாராத விளைவுகள், தவறான புரிதல்கள், முட்டாள்தனமான பேச்சுக்கள் மற்றும் செயல்கள் - இவை யாவும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சில சமயம் என்னால் சமாளிக்க இயலாத அளவிற்கு அவை இருந்தன. அந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் நமது பிரம்மச்சாரிகள் அணியின் உதவியினால் எங்களால் இயன்ற அளவிற்கு செயல்கள் நடந்தது.  

உள்நிலையிலும் வெளிநிலையிலும் இது நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நான் வெடித்து, எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன்!! இது என்னை வேதனைமிக்க ஒரு சுயபரிசோதனைக்கு கொண்டு வந்தது.

ஒரு உண்மையான தன்னார்வத் தொண்டராக ஆனபோது

சிறிது நாட்களுக்குப் பிறகு, ஒரு வாரம் பிரம்மச்சாரிகள் சந்திப்பு நடக்கவிருந்தது. ஆனால், என் விசாவில் பிரச்சனை இருந்ததால் நான் நேபாளில் சிக்கியிருந்தேன். நாங்கள் மௌனத்தில் இருக்க வேண்டி இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஒரு சாதனா அட்டவணையையும் பெற்றேன். அப்போது ஒரு நாள், நான் ப்ரஸன்ஸ் சாதனாவில் இருந்தபோது, எனக்குள் ஒரு மென்மையான, அதே சமயம் என்னை ஆட்கொள்ளும் தருணம் ஒன்று நிகழ்ந்தது. நானே என்னுள் குலைந்து போய், அங்கு சத்குரு மட்டும் இருப்பதாக தோன்றியது. நானே எனக்கு சொந்தமில்லை என்று உணர்ந்தேன். திரும்பி வந்து என்னை சுற்றியுள்ள எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்படியான தீவிரத்துடன் இருந்தேன். ஆனால், இந்த முறை இது என் விருப்பப்படி இருக்கப் போவதில்லை.

உன் வழி

ஒரு கயிற்றின் மேல் ஊசல் ஆடுகிறேன்
இரு முனைகளிலிருந்தும் தொங்கியபடி
என் விஷமத்தனமான வழிகளுக்கும்
உன் பற்றியெறியும் அருளுக்கும் மத்தியில்

என் வழிகளில்
உயிரை விஷம் ஆக்குவேன்
உன் வழிகளில்
விஷமே உயிராக மாறிவிடும்.

ஓ ஷம்போ,
என் வாழ்க்கை
நீ விரும்பிய வண்ணம் இருக்கட்டும்
ஏனெனில், என் வழி, விஷம்
உன் வழி, எனது வாழ்க்கை!

நேபாளில் இருந்து திரும்பி வந்தவுடன், ஒரு புதிய துவக்கத்திற்காக தயாராக இருந்தேன். சத்குரு என்னை ஈஷா ஹோம் ஸ்கூல்-க்கு ஒரே ஒரு அறிவுறுத்தலுடன் அனுப்பினார்: "ஆன்மீகத்தைப் பற்றி பேசாமல், ஆனால் ஆன்மீகமாக இருப்பது." என்ன நினைத்தீர்கள்? எப்போதும்போல எனக்கு அது புரியவில்லை!

ஈஷா ஹோம் ஸ்கூலில் முதல் நாள்: என் பயிற்சிகளை முடித்துவிட்டு பள்ளி சபைக்கு வந்தேன். அன்றைய நாள் அற்புதமாக இருந்தது. பள்ளியின் சூழல் இளமை உற்சாகத்துடன் பரவசமாக காணப்பட்டது. இது சிறப்பாக இருக்கப் போகிறது என்று எண்ணினேன், அவ்வாறே இருந்தது.  

ஒரு நாள் பள்ளி சபையின் ஒலி பெருக்கி (ஆம்ப்ளிபையர்) வேலை செய்யாததால் ஒரு மைக்கின் கம்பியை அதில் சொருகினேன். அன்று முதல், ஒலி அமைப்பு சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டேன். அதன்பிறகு, பள்ளியில் ஒலி அமைப்பின் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு பிறகு, மற்றும் ஒரு தவறு செய்தேன். ஒரு ஆங்கில ஆசிரியர், சில மாணவர்கள் ஒரு நாடகத்தை (ஸ்கிட்) அரங்கேற்றுவதற்காக போராடுவதனால் அவர்களுக்கு உதவிசெய்ய முடியுமா என்று கேட்டதற்கு நான் சம்மதித்தேன். நான் எப்போதும் நாடகங்களில் ஈடுபட்டு இருந்ததால், அது எனக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. அந்த நாடகம் வெற்றி அடைந்ததால், மாணவர்கள் மேலும் கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டினர். அதன்பின், இளம் மாணவர்களுக்கு நாடக வகுப்புகளை நடத்த நான் நியமிக்கப்பட்டேன். மெல்ல மெல்ல, வகுப்புகள் அதிகரித்து, நாடகங்கள் மேம்பட்ட தயாரிப்புகளாக பரிணமித்தன. இவ்வாறாக விஷயங்கள் நடந்தன.

நானாக உருவாக்கிய கூட்டிலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தேன். பிறரை என்னுடன் இணைத்துக்கொண்டு, அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளத் துவங்கினேன்.

கண்ணுக்கு புலப்படாத கை

2010 ஆம் ஆண்டிலிருந்து சில வருடங்களுக்கு எனக்கு ஏற்பட்ட தீவிரமான சோர்வுடன் போராடினேன். உடலளவில் ஏற்பட்ட காயங்களினால், முயற்சி எடுப்பதே பலமுறை சாத்தியம் இல்லாமல் இருந்தது. முயல்வதையே விட்டுவிட்டேன்.

பித்து

எது அன்பு, துயரம், தீவிரமான ஏக்கத்துடன் துவங்கியதோ...
அது தீவிரமான வலியையும் ஆனந்தத்தையும் கண்டறிந்தது...
தோல்விகளுக்கு இடையில்
அலைந்து திரிந்து...
வெற்றிகளால் உந்தப்பட்டு...
தன்னையே தொலைத்து
மீண்டும் மீட்டெடுத்தது
ஒரு ஆயிரம் முறை...

என்னால் இது முடியாது என்று எனக்கு நானே சொன்னேன்
இது வேலை செய்யாமல் இருப்பதற்கான அனைத்தையும்
எனக்கு நானே சொன்னேன்

இது சாத்தியம் இல்லை என்று
எனக்கு நானே சொன்னேன்...
ஆனால், அது அப்படி அல்ல
எப்படியோ...
அது அப்படி அல்ல

சரியான அளவிலான பித்தில்
அந்த தேவன் என்னை மீண்டும் கவனிக்கக் கூடும்
அவர் என்னை மீண்டும் கவனிக்கக் கூடும்!

எங்கிருந்தோ ஆதரவு எனக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், "வகுப்பின் அம்சங்களை பயன்படுத்துகிறீர்களா?" என்று. "வகுப்பின் அம்சங்களா? அப்படி என்றால் என்ன?" நீங்கள் நம்ப மாட்டீர்கள், உண்மையிலேயே அவைகள் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். அதனால் அடுத்த சில வருடங்களுக்கு, ஈஷா யோகா புதுப்பித்தல் வகுப்பில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு வருடமும் வகுப்பின் ஒரு அம்சம் என்னுள் திறந்துகொண்டது - ஆம், அவ்வளவு திண்மையாக இருந்தேன். மெல்ல மெல்ல, விவேகத்துடன் இருக்க ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக என் உடலுக்கும் மனதுக்கும் மேலும் மேலும் பொறுப்புடன் இருந்து வந்தேன்.

ஒரு சக்தி சங்கமம் நிகழ்வில், விழிப்புணர்வுடன் இருந்து என் சாதனாவை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் என் முழு கவனத்தையும் குவித்தேன். இடைவேளைகளில் முழுவதுமாக நிரப்பி என் அருகில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன். தேவையான போது சிறிது நீரை அருந்தி விட்டு, விழிப்புணர்வுடன் இருப்பதற்காக சிறிது நீரை என் தலையில் ஊற்றிய படி என் தியானத்தை தொடர்ந்தேன். இன்னும் அதிகமாக தெரிந்து கொள்வதற்கான என் ஏக்கம் அதிகரித்தது. நிகழ்வின் இறுதியில் குருபூஜைக்காக அமர்ந்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பின. முதல் வார்த்தை உச்சரிக்கப்பட்ட போது, நான் முற்றிலும் வேறொரு நிலைக்கு சென்றேன். அதே நிலை என்னுள் மேலும் ஆழமாகி, நான் எதிர்பார்க்காத திசையில் கட்டுக்கடங்காமல் போனது. அதிலிருந்து வெளியே வந்தபோது, என் புரிதல் முற்றிலுமாக மாறியிருந்தது. அதே அனுபவம் எனக்குள் சில மணி நேரங்கள் இருந்தபோதிலும், நான் எதற்காக விடாமல் முயற்சிக்க வேண்டும் என்பதை எனக்கு காட்டித் தந்தது.

மற்றொரு சக்தி சங்கமம் நிகழ்வில், நான் ஏகாதசியன்று நடை மேற்கொண்டேன். அன்று நாள் முழுவதும் விரதமிருந்து விழிப்புணர்வுடன் நடப்போம். என் விழிப்புணர்வை தக்கவைத்துக்கொள்ள முயன்று, கருவிகளை பயன்படுத்தினேன். சூரியன் மேலெழும்பும் போது, கோடையின் அனல் அதன் உச்சத்தில் இருந்தது. சூரியனை மேலே பார்த்து அதன் முழு மகிமைக்கு பதில் கொடுத்தேன். திடீரென்று, சூரியன் வெறும் வெப்பத்தின் மூலமாக இல்லாமல் ஒரு சக்தியின் மாபெரும் மூலமாக தோன்றியது. சோர்வாக இருப்பதற்கு பதில், சக்தியின் எழுச்சியுடன் முன்பைவிட இலகுவாக உணர்ந்தேன். களைப்பினாலும் வெப்பத்தினாலும் கால்களை இழுத்து நடப்பதற்கு பதில், சூரியனை பார்த்தபடி பேரானந்தத்தின் களிப்பில், சாலையில் நான் துள்ளிக் குதித்தேன்.

அது கண்களுக்குப் புலப்படாத சத்குருவின் கைகள் என்பதை அறிந்தேன். என் வாழ்க்கையில் எப்போதெல்லாம் மிகவும் அவசியமோ, அப்போது அவைகள் தோன்றி என்னை என் சாதனாவிற்கு திசை திருப்பும். இந்த அனுபவம் மூலம் சத்குரு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒன்று எனக்கு புரிந்தது: நமது நான்கு சக்கரங்கள் (உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் உயிர்சக்தி) ஒரே திசையில் அமையப்பெற்றாலே, வாகனம் முன்னே செல்லும். நிறைய ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்தும், இன்னும் என்னை எவ்வாறு சீரமைப்பது என்று தெரியவில்லை. கற்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

[1] பிரம்மச்சாரிகள் இரண்டு வாரங்கள் ஒன்றாக மௌனத்தில் இருந்தபடி தங்கள் சாதனாவை மேற்கொள்வதற்கான ஒரு நிகழ்ச்சி.

கடைசி முறையாக நான் கைவிட்டது

ஒருவேளை கடந்த ஆண்டு அனுபவங்கள்தான் சமீப காலங்களில் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களின் உச்சமாக இருக்கலாம். ஒருபுறம் என் உடலில் பல இடங்களில் வலி ஏற்பட்டு, என் உடல் உறுதியும் ஆரோக்கியமும் மோசமான நிலையில் இருந்தன. மறுபுறம், இன்னும் அதிகமான பொறுப்புகளையும் செயல்பழுவையும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளானேன்.

எப்போதும் இருந்த உடல் வன்மையின்மையால் களைத்துப்போய், சில நிர்ப்பந்தங்களிலிருந்து வெளியே வருவதற்காக, சுவாமிகள் சிலருடன் இணைந்து ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். முறையான பயிற்சிகள் மூலமும் சில ஆயத்த மற்றும் இறுதிக்கட்ட உடற்பயிற்சிகள் மூலமும் என்னுடைய உடல் உறுதி, ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையை அதிகரிக்க முடிந்தது.

இரண்டு வாரம் கழித்து, லிங்கார்ப்பணம் செல்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. பல எதிர்மறை தன்மைகளிலிருந்து என்னை மீளச் செய்ததால், அது முற்றிலும் ஒரு சக்தியூட்டும் அனுபவமாக இருந்தது. உடல் நலமாக இருந்ததால், நான் ஓய்வு நேரங்களில் ஜாகிங் செய்வதை தொடர்ந்தேன்.

அது முடிந்தவுடன் சக்தி சங்கமம் நிகழ்ந்தது. 20 வருடத்திற்கு முன் சம்யமா துவக்கத்திற்கு முன்பு உணர்ந்தது போல, பல விஷயங்கள் மாறும் என்று எனக்கு தோன்றியது. எனக்கு தெரிந்த உலகத்திற்கு பிரியா விடை கொடுத்து உள்ளே வந்தேன்.

சக்தி சங்கமம் முடிவுற்ற உடனே நான் பெங்களூரு சென்று 10 கிலோமீட்டர் மாரத்தானில் பங்கேற்றேன். தசைப்பிடிப்பு ஏற்பட்டும் நான் மாரத்தானை நிறைவு செய்தேன். என்னால் அது முடியும் என்று நான் நினைக்கவே இல்லை.

சில வருடங்களுக்கு முன்னர் வரை ஒரு கிலோமீட்டர் தூரம் கூட நடக்கமுடியாமல் களைத்திருந்தேன் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

என் உள்நிலையிலும் பல விஷயங்கள் நிலைநிறுத்தப்பட்டன - எதையும் கைவிடுவது பற்றிய கேள்வியே இல்லை. என்னையே சீரமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரிந்தது. வரிசையாக அமைந்த வாய்ப்புகளுக்கும், வழிகாட்டுதலுக்கும், அருளின் வெளிப்பாடுகளுக்கும் சத்குருவை நான் வணங்கினேன்.

கைவிடல்

உன்னை அறிவதில்
தோல்வியை சந்தித்ததனால்
என் மனத்தின் இருண்ட மூலைகளில்
ஏமாற்றத்தை
வடித்துக்கொண்டிருந்தேன்

ஒவ்வொரு படியிலும் தோல்வி...
உன்னை
காண கிடைக்காததால்
பலமுறை கைவிட்டேன்
விரக்தியின் வலையை பின்னிக்கொண்டேன்

அனைத்தையும் தந்தாயே
என்னை பித்தேற்ற...
பின் இந்த விரக்தி என்ன?
இந்த கைவிடல் என்ன?

என் முகத்தில் அறைந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு
நான் கண்மூடிக்கொண்டு இருப்பதை நிறுத்தும் வரை
முதுகெலும்பில்லாத
முட்டாளாக இருப்பேன்
அறியாமையின் அவமானத்துடன்

உன்னைத் தவிர
வேறொரு உண்மை இல்லை, சிவா!
இந்த விரக்தியை தூக்கி எறிந்து
எழுந்து வருகிறேன்.
கரைந்து போவதற்கு துணிந்தால்
இனியும் கைவிடுதல் கூடாது
இனியும் கைவிடுதல் கூடாது!

சங்கா மற்றும் சத்குரு - என்னைப் பொருத்தவரை…?

ஒவ்வொரு சூழ்நிலையும் என்னை சோதிக்கவும், என் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் இருப்பதனால், நான் வளர்வதை மிகவும் சுலபம் ஆக்கியது சங்கா. பிரம்மாச்சாரிகளின் சங்கா மட்டுமல்லாமல், ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் கூட, பல நேரங்களில் எதிர்பாராத இடத்தில் இருந்து ஆதரவும் உதவியும் தந்தது என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. அதனால் நான் எல்லோரையும் வணங்க வேண்டும்தானே? அவர்கள் அனைவரும் என் வாழ்க்கையை செலுத்தும் அவரின் கண்ணுக்கு புலப்படாத கைகள்தானே?

என்னைப் பொருத்தவரை, சத்குருவின் ஸ்தூலமான இருப்பைவிட, அவர் இல்லாத போதுதான் அவரை இன்னும் ஆழமாக உணர்கிறேன். எனக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது - இவை யாவற்றிற்கும் காரணி அவர்தான். என் உச்சபட்ச சாத்தியத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குபவராகவே நான் அவரைப் பார்க்கிறேன். அவற்றை நான் பிடித்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். தடைகளுக்கிடையே வழிநடத்தும் கண்ணுக்குப் புலப்படாத கைகள் அவர். என்னுடைய அனுபவத்தில் எப்பொழுதெல்லாம் அவரிடம் ஒரு திறந்த நிலையில் நான் இருந்தேனோ அப்பொழுதெல்லாமே அவருடைய அருளும், வழிகாட்டுதலும் இருந்தது... நம் உள்வாங்கும் தன்மை மலர்வதற்காக மட்டுமே அவர் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன், ஒரு பிரம்மச்சாரிகள் சந்திப்பில் சத்குரு என்னிடம் கூறியது: "நான் நிலையாகவும் கவனம் சிதறாமலும் இருக்க வேண்டும், என் பாதை சற்று மெதுவாக இருக்கும். என் 40 - 50 வயதில் விழிப்புணர்வின் ஆழமான பரிமாணங்களை நான் ஆராய்வேன்." எனக்கு இப்போது 41 வயது... என்னுடைய ஸ்திரத்தன்மை மற்றும் கவனத்தன்மையை மேம்படுத்த முயற்சி செய்துகொண்டே நான் காத்திருக்கிறேன்... அவருக்காக காத்திருக்கிறேன்.