வாழ்வியல் கேள்விகள்

மிகுதியான பொருளாதார வளத்தைத் தேடுவது முடிவில் ஏன் பொருளற்றதாகிவிடும்?

லூயிஸ் ஹோவ்ஸ் சத்குருவை பேட்டியெடுக்கிறார்

லூயிஸ் ஹோவ்ஸ் நியூயார்க் டைம்ஸின் பிரபலமான எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர். "ஸ்கூல் ஆப் கிரேட்னஸ்" என்ற அவரின் வலையொலி நிகழ்ச்சிக்காக சத்குருவை பேட்டி எடுத்தார். அதில் அவர்கள் மிகுதியான பொருளாதார வளம் எனும் கருத்தாக்கம் குறித்தும் உரையாடினர். ஈடுபாடு நிறைந்த உரையாடலின் சில பகுதிகளை இங்கே வாசிக்கலாம்.

லூயிஸ் ஹோவ்ஸ்: பொருளாதாரம், ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் உறவுநிலைகளில் இன்னும் மிகுதியான வளத்தை ஒருவர் எவ்வாறு உருவாக்குவது?

சத்குரு: நீங்கள் எல்லா தவறான குறிக்கோள்களையும் முன்வைக்கிறீர்கள்.

லூயிஸ் ஹோவ்ஸ்: குறிக்கோள்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

சத்குரு: தத்துவார்த்தமாக பார்க்காமல், வேதங்களையோ, சுயஉதவி நூல்களையோ வாசிக்காமல், வெறுமனே தற்போது இங்கே சுற்றிலும் இருக்கும் மரங்களை மட்டும் நீங்கள் கவனியுங்கள் - அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன? நிலத்துக்கடியில் அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எதற்காக அவை சண்டையிடுகின்றன? ஒரு மேப்பிள் மரம் ஆப்பிள் பழங்களை உருவாக்க முயற்சிக்கிறதா?

லூயிஸ் ஹோவ்ஸ்: இல்லை

சத்குரு: அது தன்னளவில் சிறந்த மேப்பிள் மரமாக திகழ முயற்சித்துக் கொண்டிருக்கிறது, அவ்வளவுதான். ஒரு மனிதராக, இந்த உயிர் எவ்வாறு முழுமையாக மலர முடியும் என்பதைப் பற்றி நீங்கள் பார்க்கவேண்டும். இது தன்னுடைய முழுமையான நிலைக்கு மலர்ந்தால், சிலர் பணக்காரராக ஆகக்கூடும், சிலர் புத்திசாலியாக ஆகக்கூடும், சிலர் ஞானம் நிறைந்தவராக ஆகக்கூடும், சிலர் அன்பானவராக ஆகக்கூடும், சிலர் ஏதேனும் ஒரு கலைஞராக ஆகக்கூடும், சிலர் வெறுமே நாடோடியாக ஆகக்கூடும்.

முழுமையாக மலர்ந்த ஒரு மனிதரைப் பார்ப்பதே மிகவும் ஆனந்தமானது. அவர்கள் என்ன செய்தாலும் சரி அல்லது எதுவும் செய்யாவிட்டாலும் சரி, முழு மனித குலத்துக்குமே அவர்கள் பெரும் வளமாக விளங்குவார்கள். "மிகுதியான பொருளாதார வளம்" என்று நீங்கள் கூறும்போது உங்கள் எதிர்பார்ப்பு என்ன? அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆவது? தனிப்பட்ட அளவில் அவரது சொத்து மதிப்பான 20,000 கோடி அமெரிக்க டாலர்கள்?

லூயிஸ் ஹோவ்ஸ்: எனக்கு 20,000 கோடி அமெரிக்க டாலர்களா? மிகுதியான வளம் என்று நான் நினைப்பது அதுவல்ல.

சத்குரு: என்னதான் அது? இருநூறு கோடி? இந்த எண்கள் அர்த்தம் இல்லாதவை. சமூகரீதியாக அவற்றுக்கு சம்பந்தம் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு அது சம்பந்தமானது அல்ல. உங்களிடம் 20,000 கோடி அமெரிக்க டாலர்கள் உள்ளது என்று வைத்துக்கொள்ளலாம். அது உங்கள் நினைவில் மட்டும்தான் உள்ளது. நான் உங்கள் நினைவை அழித்துவிட்டால், உங்கள் செல்வமும் காணாமல் போய்விடும்.

லூயிஸ் ஹோவ்ஸ்: ஆனால் அது என் வங்கி கணக்கில் உள்ளது.

சத்குரு: அது உங்கள் வங்கி கணக்கில்தான் உள்ளது. ஆனால் அதை நீங்கள் மறந்துவிட்டால், பின்னர் என்னவாகும்? இப்படித்தான் முன்னர் மக்கள் பலரும் தங்கள் செல்வங்களை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். ஆயிரம் வருடங்கள் கழித்து வேறு யாரோ ஒருவர் எதேச்சையாக அதை கண்டடைகிறார்.

லூயிஸ் ஹோவ்ஸ்: அது உண்மைதான். இப்போதுகூட மக்கள் பலரும் அவர்களின் எல்லா பிட்காயின்களையும் (எந்த அரசாங்க விதிமுறைகளாலும் கட்டுப்படுத்தப்படாத, தனி நபர்களால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் ஆன்லைன் நாணயம்) இழந்துவிட்டனர். அவற்றின் மீதிருந்த அவர்களது உரிமையை அவர்களால் திரும்பப்பெற முடியவில்லை!

சத்குரு: ஆம், "மிகுதி" என்பதற்கு பதிலாக "செழுமை" என்ற வார்த்தையை நான் உபயோகிக்க விரும்புகிறேன். எதற்காக நீங்கள் செழுமையை நாடுகிறீர்கள்? அது தனிநபராக இருந்தாலும் சரி, ஒரு சமூகமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தேசமாக இருந்தாலும் சரி, அனைவருமே செழுமையாக வாழவே முயற்சிக்கின்றனர். அதற்கான காரணம், துவக்கத்தில் அது ஊட்டமான உணவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. உங்களிடம் பணம் இருந்தால், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை உங்களால் உண்ண முடியும். ஆரம்பத்தில் அதுதான் குறிக்கோள். அதற்கு அப்பால் சென்றால், அடுத்த தேர்வு உங்கள் வாழ்க்கை முறையைப் பற்றியது.

மிகுதியான வளம் என்ற அடிப்படையில் சிந்திக்காதீர்கள். நிறைவான வாழ்க்கை என்ற அடிப்படையில் சிந்தியுங்கள்.

உதாரணத்திற்கு, ஊட்டச்சத்து மற்றும் விரும்பும் வகையில் வாழ்க்கையை வாழ்வதற்கான அதிகபட்சமான வாய்ப்புகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் 3.8 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை மருத்துவத் துறைக்கு செலவு செய்கிறீர்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட அது மிக அதிகமான தொகை! 140 கோடி மக்கள்தொகைக்கு, 3.8 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் எங்களிடம் இல்லை. அப்படியானால் நீங்கள் தேடும் "மிகுதியான வளம்" என்பதன் அளவு என்ன? நீங்கள் இந்த பூமியை அழித்துவிட நினைக்கிறீர்கள். மிகுதியான வளம் என்ற அடிப்படையில் சிந்திக்காதீர்கள். நிறைவான வாழ்க்கை என்ற அடிப்படையில் சிந்தியுங்கள்.

நீங்கள் ஒரு நிறைவான உயிராக இருந்தால், உங்கள் திறன் மற்றும் நீங்கள் வாழும் காலத்திற்கு ஏற்றவாறு உரிய செயல்களை நீங்கள் செய்வீர்கள். தற்போது மிகுதியான வளத்தைத் தேடுவதில் மக்கள் அசிங்கமான விஷயங்களை செய்கிறார்கள். 50 படுக்கை அறை கொண்ட வீட்டில் இருவர் வாழ்கிறார்கள்! இதில் என்ன பொருள் இருக்கிறது? ஐம்பது வெவ்வேறு இடங்களில் உங்களால் உறங்க முடியுமா? நீங்கள் உபயோகிக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் கொண்டிருக்க முடியும், ஆனால் முக்கியமான விஷயம் யாதெனில்: இந்த உலகில் செயல்புரிவதற்கான ஒரு வழியாக வசதிகளை நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்களா? அல்லது உங்களை மேம்படுத்திக்கொள்ள உருவாக்குகிறீர்களா? நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள் அண்டை வீட்டாரை விட உங்களின் கார் சிறிது பளபளப்பாக இருந்தால், நீங்கள் சிறந்தவராக ஆகிவிடுவீர்களா?

பொருட்படுத்த வேண்டிய ஒன்றே ஒன்று, உங்களால் இயன்ற அனைத்துமாக உங்களுக்குள் நீங்கள் இருப்பதுதான். நம்மால் செய்ய இயலாதவற்றை நாம் நம் வாழ்வில் செய்யவில்லையென்றால் அது பரவாயில்லை; நம்மால் இயன்றதையே நாம் செய்யவில்லை என்றால், நாம் ஒரு பெருந்துயரம்.

குறைந்தபட்சம், உங்களது ஐந்து வயதில் இருந்ததைப் போலவாவது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? உங்கள் ஐந்து வயதில் நீங்கள் இருந்ததைப் போன்ற மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உங்கள் முப்பத்தைந்து வயதில் நீங்கள் இல்லையென்றால், வெளிப்படையாக நீங்கள் பெருந்துயரம் தான். ஏனெனில் அது தான் உங்கள் வாழ்க்கையின் முதல் கட்டம். முதல் கட்டத்துக்கும் கீழான நிலையில் நீங்கள் புதைந்துவிட்டால் அது பெருந்துயரமான வாழ்க்கைதான்.

லூயிஸ் ஹோவ்ஸ்: அப்படியானால் மிகுதியான வளம் மற்றும் பொருளாதாரத்தைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாதா...

சத்குரு: அப்படிப்பட்டவை எல்லாம் கால சூழலுக்கு ஏற்ப நிகழும். ஒருவேளை நீங்களும் நானும் இந்த பூமியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தால், நான் கட்டாயம் இந்தியாவில் ஒரு குகையை கண்டுபிடித்திருப்பேன். ஏனெனில் இங்கு நிறைய குகைகள் உள்ளன. அப்படியே நீங்களும் ஓஹியோ அல்லது கென்டக்கி மாகாணத்தில் ஒரு பெரிய குகையை கண்டுபிடித்து இருப்பீர்கள். அன்றைய கால சூழலில் மிகுதியான வளத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்?

லூயிஸ் ஹோவ்ஸ்: ஆமாம்.

பொருட்படுத்த வேண்டிய ஒன்றே ஒன்று, உங்களால் இயன்ற அனைத்துமாக உங்களுக்குள் நீங்கள் இருப்பதுதான்

சத்குரு: நான் என்ன கூறுகிறேன் என்றால், மிகுதியான வளத்தைப் பற்றி எண்ணாதீர்கள். ஏனெனில் அவ்வாறு சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து இந்த பூமியை நாம் வெகுவாக அழித்துவிட்டோம். அவ்வளவும் செய்த பின்னர், சுற்றுச்சூழலுக்கு உகந்தவர்களாக இருக்கும் வகையில் இப்போது மின்சார கார்களை உபயோகிக்க நாம் விரும்புகிறோம். இது அடிப்படையாக தவறான சிந்தனையால் உருவாகியிருக்கிறது - அதாவது உங்களை சுற்றி இருக்கும் ஏதோ ஒன்று உங்களை மேம்படுத்துகிறது என்ற தவறான எண்ணம். உங்களை நீங்கள் மேம்படுத்துவதற்கான ஒரே வழி, இந்த உயிரை அதனால் இயன்ற சிறந்த நிலைக்கு மலரச் செய்வதுதான்.

லூயிஸ் ஹோவ்ஸ்: ஒருவர் தனது முழுமையான ஆற்றல் என்னவென்று எவ்வாறு அறிந்துகொள்வது?

சத்குரு: இப்போது இந்த மரம் முழுமையாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதன் பழத்தின் திசையில் ஒருபோதும் பார்க்காதீர்கள் - அதன் வேர் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் மரத்தில் உள்ள பழங்களின் எண்ணிக்கையை கணக்கிடத் துவங்கினால், ஒரு மரம் மற்றொன்றைக் காட்டிலும் அதிகமாக பழங்களைத் தரக்கூடும். அது முக்கியம் அல்ல. நீங்கள் வேரின் மீது முழுமையாக கவனம் செலுத்தி பராமரித்தால், அது என்னவாக ஆகவேண்டுமோ அதுவாக உருவாகும். புல்லின் ஒற்றை கீற்று மரமாக மாற முடியாது, ஆனால் அதனளவில் அது அற்புதமாக இருக்கிறது அல்லவா?

நீங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலிலும் முதன்மையாகவும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: உங்கள் வாழ்வை சற்று திரும்பிப் பார்த்து - உங்கள் வாழ்வில் குறைந்தபட்சம் ஏதோவொரு 24 மணிநேரமாவது எந்த மனக்கவலையும் இல்லாமல், பயம் இல்லாமல், பதட்டம் இல்லாமல் கடந்திருக்கிறதா என்று பார்ப்பதுதான். 24 மணிநேரம் நீங்கள் இலகுவான நிலையில் இருந்தால், உங்கள் மனம் மற்றும் உடலை நீங்கள் உபயோகிக்கக்கூடிய ஆற்றல் நூறு மடங்கு அதிகரிக்கக் கூடும். வெளிசூழ்நிலையை நமக்கு ஏற்றவாறு உருவாக்குவதற்கு ஒரு அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பது போல, நம் உள்நிலையை நாம் விரும்பும் வண்ணம் உருவாக்கிக்கொள்வதற்கு தேவையான முழுமையான ஒரு அறிவியலும், தொழில்நுட்பமும் இருக்கிறது.