கலாச்சாரம்

அசுரனை வதம் செய்த தேவி - வெறும் கட்டுக்கதையா அல்லது அடிப்படையான உண்மையா?

நம்மை மனிதனாக்குவது எது, நமது சுய பரிணாம வளர்ச்சியின் குறியீடு மற்றும் தேவியை கொண்டாடும் நவராத்திரிக்கு எவ்வாறு தயாராவது ஆகியவற்றைக் குறித்து இந்த பகுதியில் பேசுகிறார் சத்குரு.

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, லிங்கபைரவிக்கு முன்னால் இருக்கும் மகிசாசுர வடிவம் எதை குறிக்கிறது என்பதை விளக்க முடியுமா?

சத்குரு: மகிசாசுரனின் உருவம் மனிதருக்குள் இருக்கும் மிருகத் தன்மையை குறிக்கிறது. பரிணாம வளர்ச்சி செயல்முறையின் காரணமாக, அமீபா, மண்புழு, வெட்டுக்கிளி, எருமை மற்றும் பரிணாம வளர்ச்சியின் பகுதியாக வளர்ந்த எல்லா வகையான மிருகத்தின் தன்மைகளும் உங்களுக்குள் இன்னமும் இருக்கின்றன. இவை அனைத்தும் கட்டாயமாக செயல்படும் போக்குகளாக உங்களில் இருக்கின்றன. நவீன நரம்பியல் மருத்துவம் கூட, உங்கள் மூளையின் ஒரு பகுதி ஊர்வன விலங்கினத்தின் மூளையாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறது. பரிணாம செயல்முறையில், இந்த ஊர்வன மூளைப்பகுதியானது, அடிப்படையான உயிர் பிழைத்திருக்கும் சுபாவத்தின் அடிப்படையில் செயலாற்றும் நிலையில் இருப்பதை குறிக்கிறது.

மனிதர்கள் நேராக நிமிர்ந்து நடக்கத் துவங்கி, மனித முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலைக்கு மாறிய பின்னர், இந்த ஊர்வன மூளைக்கு மேலே பெருமூளைப் புறணி என்ற மலர் பரிணமித்தது. இதுதான் உங்களை மனிதனாக வைத்திருக்கிறது. இதுவே இந்த பிரபஞ்ச இருப்பின் பொது தன்மையையும், அனைத்தும் ஒன்றே என்பதைப் பற்றியும் உங்களை சிந்திக்க வைக்கிறது. இதுவே உங்களை ஒரு விஞ்ஞானியாகவோ அல்லது ஒரு ஆன்மீக சாதகராகவோ இருக்க அனுமதிக்கிறது. ஆனால் நீங்கள் ஊர்வன மூளைக்கு திரும்பிச் சென்றால், உங்களிடம் இருப்பதெல்லாம் எப்படியாவது பிழைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையான உந்துதலின் சுபாவங்கள் மட்டுமே.

உங்கள் ஊர்வன மூளைப்பகுதியைக் கொண்டு செயல்பட்டால், எல்லைகளை வகுப்பதை மட்டுமே நீங்கள் அறிவீர்கள்.

கல்வி, ஆன்மீக செயல்முறை மற்றும் தியானம் ஆகியவற்றைக் குறித்த மனித முயற்சிகள் அனைத்தும், ஊர்வன மூளைப் பகுதியிடம் இருந்து விலகி பெருமூளைப் புறணியை நோக்கி நகர்வதற்காகதான் - இதுவே வெகு சமீபத்தில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சி என்பதுடன், வாழ்க்கை குறித்து அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையை இது தருகிறது. உங்கள் ஊர்வன மூளைப்பகுதியை கொண்டு செயல்பட்டால், எல்லைகளை வகுப்பதை மட்டுமே நீங்கள் அறிவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களோடு உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ, அதன் அடிப்படையைப் பார்த்தால், அது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள எல்லைகளைப் பற்றியதாக இருக்கும்; அல்லது ஏதோ ஒன்று உங்களுடையதா, அவர்களுடையதா என்பதைப் பற்றியதாக இருக்கும். உங்கள் மூளையின் ஒரு அம்சத்திலிருந்து மட்டுமே நீங்கள் செயல்பட்டால் உங்கள் பிழைப்புக்கு அது உதவக்கூடும், ஆனால் உங்களின் முழு ஆற்றலையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள மாட்டீர்கள்.

யோக செயல்முறையில், ஊர்வன மூளைப்பகுதியை ஒரு வழியில் திறந்துகொள்ளச் செய்து, பெருமூளைப் புறணியுடன் அது தொடர்புகொள்ளத் துவங்கி, இரண்டும் இணைந்து ஒரே மூளையாக செயல்படத் தேவையான வழிமுறைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட தியான பயிற்சிகள் மூலம் இதை அடைய முடியும் என்பதை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. மலர் மலர வேண்டும். அதன் காரணத்தினால் தான் யோகக் கலாச்சாரத்தில் மனித அமைப்பின் சக்கரங்களை குறிப்பிடுவதற்கு தாமரை மலர்கள் குறியீடாக உள்ளன. அதில் மிகப்பெரிய மலர் உச்சந்தலைப் பகுதியில் உள்ள சஹஸ்ராரத்தை குறிக்கிறது.

உங்கள் ஊர்வன மூளையை நீங்கள் திறக்க வேண்டும், அல்லது தேவி உங்களை சாய்க்கக்கூடும்.

பெருமூளைப்பகுதி எனும் மலர் மலர்ந்தால், மனித புத்திசாலித்தனம் ஒன்றிணைந்த, உள்ளடக்கிய தன்மையில் செயல்படத் துவங்கும். உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு தத்துவம் அல்ல. உள்ளடக்கிய தன்மை என்பது இந்த இருப்பின் இயல்பாக இருக்கும் ஒன்று. வேறு எந்த ஒரு உயிரினமும் இதை உணரக்கூடிய திறனை பெற்றிருக்கவில்லை. மற்றவை அனைத்தும், எல்லைகளை வகுக்க ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாயானது எல்லா இடங்களிலும் சிறுநீர் கழிப்பது அதற்கு சிறுநீரக கோளாறு இருக்கும் காரணத்தினால் அல்ல, தன்னுடைய ராஜ்ஜியத்தின் எல்லையை அது நிர்ணயிக்கிறது. மனிதர்களும் அதே விஷயத்தைதான் வெவ்வேறு வழிகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தங்களின் எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, வாய்ப்பு கிடைத்தால் அந்த எல்லையை சிறிது சிறிதாக விரிவுபடுத்துகிறார்கள்.

லிங்கபைரவியிலுள்ள மகிசாசுரன் குறியீடு, மிருகம் கொல்லப்பட்டு கீழே தள்ளப்பட்டுவிட்டது என்பதை குறிப்பதற்காகதான். அதற்கு அர்த்தம் நீங்கள் பெரிய மலராக உருவாகிவிட்டீர்கள் என்பதுதான். நாம் இப்போது தேவிக்குரிய சிறப்பான காலகட்டத்தை நெருங்குகிறோம் - நவராத்திரி. இந்த ஒன்பது இரவுகளும் அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து துவங்குகிறது. சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண்தன்மை கொண்டதாக கருதப்படுகிறன. ஒன்பதாவது நாள் நவமி என்று அழைக்கப்படுகிறது. பௌர்ணமிக்கு அருகாமையில் உள்ள ஒன்றரை நாட்கள் நடுநிலையான காலமாக கருதப்படுகிறது. மீதமிருக்கும் 18 நாட்களும் ஆண்தன்மை கொண்டதாக அறியப்படுகின்றன. மாதத்தின் பெண்தன்மையான காலம் தேவியைக் குறித்ததாக இருக்கிறது. இதன் காரணத்தினால்தான் இந்த கலாச்சாரத்தில் நவமி வரை எல்லா வழிபாடுகளும் தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண்தன்மையானவையாக கருதப்படுகிறன.

ஒரு வருடத்தின் 12 மாதங்களிலும் வரக்கூடிய இந்த ஒவ்வொரு ஒன்பது நாள் காலமும் வெவ்வேறு தேவியருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் வரும் நவராத்திரி, தேவி சாரதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், சாரதா கல்வியின் கடவுள். மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்களில், கற்றலை மிக முக்கியமானதாக இந்த கலாச்சாரம் பார்க்கிறது. மற்ற உயிரினங்கள் நம்மைவிட மிக வேகமாக ஓடக் கூடியவை; அவை நம்மைவிட அதிக வலிமையானவை; நம்மால் செய்ய முடியாத பலவற்றை அவை செய்கின்றன. ஆனால் அவை நம்மைப் போல கற்றுக்கொள்ள முடியாது.

மனிதராக இருப்பதன் பெருமை இதுதான்: உங்களால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் - உங்களுக்கு விருப்பம் இருந்தால். ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வதன் வழியாக இந்த நவராத்திரிக்கு தயாராகுங்கள். ஒன்று, உங்கள் ஊர்வன மூளையை நீங்கள் திறக்க வேண்டும்; அல்லது தேவி உங்களை சாய்க்கக்கூடும். இந்தக் குறியீடு குறித்த மற்றொரு பரிமாணம் என்னவென்றால், ஆண்தன்மை சுபாவத்தால் வாழும் இயல்புடையது. அதற்கு அர்த்தம், ஊர்வன மூளைப்பகுதியானது இறுக்கமாக மூடிய கை முட்டியைப் போல உள்ளது என்பதே. பெண்தன்மை வரும்போது, அது திறந்துகொள்ள முடியும். அது திறந்துகொள்ளும் போது, ஆண்தன்மை அல்லது மிருகத்தின் இயல்பு அவளின் காலடியில் விழும். தேவி மற்றும் மகிசாசுரன் குறித்த குறியீடு அதைப் பற்றியதே - அவள் முழு சக்தியோடு எழுந்த காரணத்தினால், மிருகத்தன்மை சாய்க்கப்பட்டது.