ஆரோக்கியம்

உங்கள் ஆற்றலை அதிகரிக்க சிறந்த உணவுகள் எவை மற்றும் தவிர்க்க வேண்டியவை எவை?

ஒரு முழுநாளும் விழிப்புணர்வோடும் சக்தியோடும் இருக்க எந்த உணவுகள் உங்களுக்கு உதவுகின்றன, மேலும், எவையெல்லாம் மந்த நிலையையும் நோயையும் உருவாக்குகின்றன என்பதைப் பற்றி உங்களுக்கு தெளிவாக தெரியவில்லையெனில், சக்தி அல்லது பிராணன் என்ற அடிப்படையில் உணவை குறித்த சத்குருவின் பார்வை இதோ.

பிராண சக்தியுள்ள உணவுகள் எவை?

சத்குரு: யோகாவில், நாம் உணவை புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்று வகைப்படுத்தி பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நேர்மறையான பிராணசக்தி உணவு, எதிர்மறையான பிராணசக்தி உணவு அல்லது பூஜ்ஜிய பிராணசக்தி உணவு என்று உணவுகள் வகைப்படுத்தப்படுகின்றன. நேர்மறையான பிராண உணவுகள் என்பவை, உண்ணப்படும் போது, பிராணன் எனும் உயிர்சக்தியை மனித அமைப்பில் சேர்க்கின்றன. எதிர்மறையான பிராண உணவுகள் மனித அமைப்பில் இருந்து பிராணனை வெளியேற்றுகின்றன. பூஜ்ய பிராண உணவுகள் பிராணனை சேர்ப்பதோ எடுப்பதோ இல்லை; அவை வெறுமே சுவைக்காக மட்டும் உண்ணப்படுகின்றன.

எதிர்மறை பிராண உணவுகள்

பூண்டு, வெங்காயம், பெருங்காயம், மிளகாய், கத்திரிக்காய், காபி, தேநீர், மது, நரம்பு மண்டலத்தைத் தூண்டும் அனைத்து பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் எதிர்மறை பிராண உணவுகள் ஆகும். நரம்பியல் அமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் எதுவாக இருந்தாலும் அது எதிர்மறை பிராண உணவுதான், அவற்றை உட்கொள்ளக்கூடாது.

இந்தியாவில், இத்தகைய எதிர்மறை பிராண பொருட்களை ரிஷி விசுவாமித்திரர் உருவாக்கினார் என்று கூறுகிறோம். ஒருநாள் அவருக்கு கடவுளுடன் சிறு பூசல் வந்தது. தனக்கு நெருக்கமானவர்களை அவர் சொர்க்கத்துக்கு அனுப்ப விரும்பினார். ஆனால் கடவுள், "இல்லை, உன் ஆட்கள் வரமுடியாது," என்றார். விசுவாமித்திரர் கடும் கோபம் கொண்டு, "அவ்வாறெனில் என்னுடைய படைப்பை நானே உருவாக்குகிறேன்" என்று கூறினார்.

எனவே விசுவாமித்திரர் தன் மக்களுக்கென்று தனியாக ஒரு உலகம், நரகம் மற்றும் சொர்க்கத்தை படைத்தார். அவருக்கு பிரியமான சீடர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்தார். பாதிவழி வரை சென்ற திரிசங்கு, அங்கேயே சிக்கிக்கொண்டார். அவரால் முன்னேறி செல்லவோ திரும்பி வரவோ முடியவில்லை. இன்றும் இந்தியாவில் "திரிசங்கு" எனும் வார்த்தை இடைப்பட்ட நிலை என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

இந்த கதையின் சாராம்சம் யாதெனில், நீங்கள் இந்த எதிர்மறை பிராண பொருட்களை உட்கொண்டால், நீங்கள் உணர்ச்சியளவில் சமநிலையற்று போவீர்கள். அதன் காரணமாக உங்கள் வாழ்க்கை முழுவதும் இடைப்பட்ட ஒரு நிலையிலேயே இருப்பீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் - நீங்கள் குடும்பத்தில் வாழ்ந்தாலும், வியாபாரம் செய்தாலும், கல்வியோ அல்லது ஆன்மீகமோ எதில் ஈடுபட்டாலும் - உங்களின் முழு ஆற்றலையும் ஒருபோதும் உபயோகிக்க இயலாது.

பூண்டு மற்றும் வெங்காயம்

சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், பூண்டு ஒரு சக்திவாய்ந்த மருந்து. ஆனால் அதை தினசரி உணவாக உட்கொள்வது என்பது முற்றிலும் வேறான ஒரு விஷயம். பூண்டு என்ன வகையான பாதிப்பை உருவாக்குகிறது என்று நீங்கள் அறிய விரும்பினால், வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு பூண்டு சாற்றை அருந்துங்கள். பிறகு, உங்கள் வயிற்றை சுத்தம் செய்வதற்காக உங்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் ஒரு அவுன்சு வெங்காய சாற்றை அருந்தினாலும் அதே நிலைதான் உருவாகும். ஆனால் வெங்காயத்தைப் பொருத்தவரை, நீங்கள் அதை நறுக்கும்போதே உங்கள் உடல் வெங்காயமே வேண்டாமென்று எதிர்க்கிறது. பிரச்சனை யாதெனில், அது சுவையாக உள்ளது என்பதோடு பாதிப்பு மெதுவாக நீண்டகால அளவில் நிகழ்கிறது.

மிளகாய்

மற்றுமொரு எதிர்மறை பிராண உணவு மிளகாய் (பச்சை மற்றும் சிவப்பு). இந்தியாவில் மிளகாய் சேர்க்காமல் எந்த உணவும் தயாராவதில்லை. மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் வருபவர்களுக்கு இந்திய குழம்பு தான் மிகப்பெரிய அச்சுறுத்தல். மிளகாய் உட்கொண்டு பழக்கம் இல்லாதவர்களுக்கு உடனே வயிற்றுப்போக்கு ஏற்படும். உடல், மிளகாயை நச்சுப் பொருளை போல கையாள்கிறது என்பது தான் அதற்கு அர்த்தம். கழிவாக அதை வெளியேற்றி தன்னை சுத்தம் செய்துகொள்ள விரும்புகிறது. நீங்கள் எதைக் கொடுத்தலும், அதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அளப்பரிய திறன் உடலுக்கு உள்ளது. அதனால், உடல் ஏற்றுக்கொண்டு விட்டது என்பதாலேயே அது சரியான உணவாகிவிடாது.

கத்தரிக்காய்

கத்தரிக்காய் மட்டுமே குறிப்பிட்ட நச்சுத்தன்மையை தன்னில் கொண்டுள்ள ஒரே காய்கறி என்பதுடன், அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. நீங்கள் ஒரு கத்தரிக்காயை உண்டால், உங்கள் மூளை செயல்படாமல் போய்விடும் என்பதல்ல இதன் அர்த்தம். அந்த பாதிப்பு சில காலம் எடுத்துக்கொண்டு நிகழும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், கத்தரிக்காயை அறவே உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் அறிவாற்றலை அவர்கள் வளரும் முன்னரே குலைத்துவிடும்.

காபி

காபி மிக சக்திவாய்ந்த ஒரு ஊக்கப்பொருள். காலையில், வெறும் இரண்டு வாய் காபி அருந்தினாலே அனைத்தும் மிக பிரகாசமாக தெளிவாக மாறுகிறது. ஆனால் நீங்கள் தினமும் அதை அருந்தினால், சிறிது காலம் கழித்து, காபி அருந்திய 2 மணி நேரம் கழித்து உங்களுக்கு தலைவலி ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். அதை சரிசெய்வதற்கு நீங்கள் இன்னுமொரு கோப்பை காபி அருந்த வேண்டியிருக்கும்.

நீங்களே இந்த ஒரு பரிசோதனையை செய்து பாருங்கள். இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக காபி அருந்தாமல் இருங்கள், பின்னர் அதிகாலையில் ஒரு கோப்பை திடமான காபியை அருந்துங்கள் - உங்கள் கைகள் நடுங்கும். காபி உங்கள் உடலமைப்பில் நிச்சயமாக ஏதோ பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். அப்படியானால் நீங்கள் காபியை விட்டுவிட வேண்டுமா? அதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். எதற்கும் அடிமை போல வாழாதீர்கள் - அது எதுவாக இருந்தாலும் சரி. விழிப்புணர்வோடு வாழ பழகுங்கள்.

நரம்புகளைத் தூண்டும் பொருட்களை நீங்கள் உட்கொள்ளத் துவங்கினால் உங்கள் வயோதிகம் துயரமானதாக மாறக்கூடும். "என்ன இருந்தாலும் நம் வாழ்க்கையே சிறிதுகாலம்தான். 90 வயது வரை வாழ்வதற்கு பதிலாக, நான் எழுபது வயது வரை வாழ்ந்துவிட்டுப் போகிறேன் அதனால் என்ன ஆகப்போகிறது" என்பது உங்கள் எண்ணப் போக்காக இருந்தால் பரவாயில்லை. நான் அதற்கு எதிராக இருக்கப்போவதில்லை. காபிக்கு எதிராகவும் நான் இல்லை. எனக்கும் காபி பிடிக்கும். ஆனால் கட்டாயமான ஒரு செயலாக அதை நான் செய்வதில்லை. அதன் சுவை உங்களுக்கு பிடித்திருந்தால் அருந்துங்கள் - ஒரு மிகப் பெரிய கோப்பை முழுவதும் காபியை நிறைத்து, அனுபவித்து அருந்துங்கள். ஆனால் அதை ஒவ்வொரு நாளும் செய்யவேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கு இருந்தால், அது ஒரு பிரச்சனைதான்.

பூஜ்ஜிய பிராண உணவுகள்

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்ற சிலவே பூஜ்ஜிய பிராண உணவுகள். ஆரோக்கியமாக உள்ள பெரியவர்கள் அவற்றை உட்கொள்ளலாம். ஆனால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருப்பவர்கள் அவற்றை தவிர்த்துவிட வேண்டும். வாத நோய் அல்லது மூட்டுவீக்கம் போன்ற பிரச்சனைகளை அவை அதிகரிக்கும். குறிப்பிட்ட நோய் எதுவும் இல்லாத போதிலும் உங்கள் கால்கள் வீக்கம் கொள்ளுமேயானால், இந்த இரண்டு உணவு பொருட்களையும் நீங்கள் தவிர்த்து விடுவது சிறந்தது.

பூஜ்ஜிய பிராண உணவு பொருட்கள் நீங்கள் தூங்கும் நேரத்தை அதிகரிக்கும். ஏனெனில் அவை உடலில் மந்த நிலையை கொண்டுவருகிறது. இதனால் தான் மாணவர்களும் ஆன்மீக சாதகர்களும் அவற்றை உட்கொள்வதை நாம் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. மாணவர்களுக்கு பொதுவாக ஒரு பாட புத்தகமே மிகப்பெரிய தூக்க மருந்தாக இருக்கிறது. அவற்றை திறந்த அடுத்த கணமே அவர்கள் தூங்கிவிழுகிறார்கள். ஒரு தியான அன்பரோ, கண்ணை மூடியபடி முழு விழிப்புணர்வாக அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு தூக்கம் தான் மிகப்பெரிய எதிரி.

நேர்மறை பிராண உணவுகள்

பூஜ்ஜிய பிராணன் மற்றும் எதிர்மறை பிராண உணவுகள் அல்லாத மற்ற அனைத்தும் - காய்கறிகள், பருப்புவகைகள், முளைகட்டிய பயிர்கள், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் என அனைத்துமே நேர்மறை பிராண உணவுகள்தான்.