இதுவரை: மஹாபாரதம் தொடரில் இதுவரை பாண்டவர்களும் திரௌபதியும் தங்களது 13 ஆண்டு வனவாசத்தை முடித்திருப்பதைப் பார்த்தோம். துரியோதனனுக்கு இப்போதுகூட பாண்டவர்களுடைய ராஜ்ஜியத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுப்பதில் விருப்பமில்லை. கௌரவர்கள் விராட தேசம் சென்று பாண்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, அர்ஜுனனிடம் பதிலடி வாங்கி அவமானத்தோடு திரும்புகிறார்கள். இவர்களுக்கு இடையேயான மோதல் பெரும் போராக வெடிக்கவிருக்கும் சூழ்நிலையில், மஹாபாரதத்தின் மாபெரும் வீரன் களத்தில் நுழைகிறான்.

அமைதி வேண்டி இறுதி முயற்சி

சத்குரு: இனி போரை தவிர்க்கவே முடியாது என்ற சூழல் உருவாகியிருந்தது. உண்மையிலேயே அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், சில கடைசிநேர முயற்சிகள் நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தனிமனிதர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதுதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் அவர்களது உண்மையான முகமாக இருக்கிறது. சூழல் சௌகரியமாக இருக்கும்போது, மக்கள் உங்களை எப்படி வேண்டுமானாலும் நம்ப வைத்துவிட முடியும். ஒரு அவசர சூழ்நிலையோ அல்லது ஒரு இக்கட்டான நிலையோ ஏற்படும்போது தான், யார் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். யாரால் எவ்வளவு தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும், எந்த அளவுக்கு அவர்கள் செல்வார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும். அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூழ்நிலை அவர்களை உள்ளே இழுத்துக்கொண்டு, ஒரு புதுவிதமான வித்தியாசமான மனிதர்களை காட்டுகிறது. ஒரு சிக்கலான சூழ்நிலைதான் மனிதர்களை உருவாக்குகிறது. எதற்கும் லாயக்கில்லை என்று உங்களைப் பற்றி நீங்களே நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஜாம்பவானாக எழுந்து நிற்கக்கூடும், தன்னைத்தானே மிகப்பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒரே கணத்தில் விழுந்து விடவும் கூடும். எது வேண்டுமானாலும் எந்த விதமாக வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் சிக்கலான சூழ்நிலையை சந்திப்பதை இனி தவிர்க்கவே முடியாது என்பது உறுதியான நிலையில், அந்த சிக்கல் நிகழ்வதற்கு சற்று முந்தைய காலகட்டம் தான், ஒருவர் உண்மையாகவே எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அமைதி ஏற்படுத்துவதற்காக நடந்த கடைசி பேச்சுவார்த்தைகளின் போது, யுதிஷ்டிரன் "இந்தப் போர் நடப்பதற்கான காரணமாக நான் இருக்க விரும்பவில்லை. மற்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டால், வெறும் ஐந்து நகரங்களைக் கொடுத்தால் கூட, அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக அதை நான் ஏற்றுக்கொள்வேன். இந்திரப்பிரஸ்தம், விருகபிரஸ்தம், ஜெயந்தம், வாரணவதம் ஆகிய நான்கு இடங்களும் எங்கள் நினைவுகளைத் தாங்கும் இடங்கள். இவற்றுடன், ஐந்தாவதாக துரியோதனன் ஒரு கிராமத்தைக் கொடுத்தாலும் பரவாயில்லை, அவன் விருப்பப்படி கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று பேசி முடித்தார். துரியோதனன் தன் தந்தை திருதராஷ்டிரனிடம், "என் அரசே, உங்களுக்கும் இங்கிருக்கும் அனைவருக்கும் நான் சொல்வது இதுதான், தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்: பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை நான் ஒருபோதும் திரும்ப கொடுக்கப் போவதில்லை. மொத்த ராஜ்ஜியத்திற்கு பதிலாக ஐந்து நகரங்களை கேட்கிறார்கள், ஐந்து நகரங்கள் மட்டுமல்ல, ஐந்து கிராமங்களைக் கூட நான் கொடுக்கமாட்டேன். ஏன், குண்டூசி முனை அளவு நிலப்பரப்பைக் கூட நான் கொடுக்கமாட்டேன்.

திரௌபதி சீறினாள், "எனக்கு போர் வேண்டும்! கிருஷ்ணா, எனக்கு போர் வேண்டும், போரைத் தவிர வேறெதுவும் வேண்டாம். அந்த மோசமான நாளில் நான் அடைந்த அவமானத்திற்கும் அதன் பிறகு 13 ஆண்டுகள் நான் பட்ட வேதனைக்கும் பழிதீர்க்கும் விதமாக ரத்த ஆறு ஓடும் ஒரு போர்தான் வேண்டும். அதில் கௌரவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்பட வேண்டும். நான் அரசவையில் இறைஞ்சி மன்றாடியபோது தங்கள் சுண்டு விரலைக்கூட அசைக்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த மூத்தோர்கள் அனைவரும் இறந்து கிடப்பதை நான் பார்க்க வேண்டும். யுதிஷ்டிரன் எப்போதுமே அமைதியை விரும்புகிறவன் என்பதும், அதற்கு விலையாக தன்னையும், தன் குடும்பத்தையுமே கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், பீமன், அர்ஜுனன். நகுலன் என எல்லோருமே இன்று அமைதியைப் பற்றி பேசுகிறார்களே?! இதை என்னால் தாங்கவே முடியவில்லை. எனக்கு கௌரவர்களுடன் அமைதியோ, நட்புறவோ தேவையில்லை. என் மீது உனக்கு அன்பிருந்தால் கிருஷ்ணா, எனக்கு அன்று நடந்தவைகளுக்கு சிறிதளவேனும் நீ வருத்தம் கொண்டிருந்தால், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நடப்பதை உறுதி செய். எனது எதிரிகள் போர்க்களத்தில் இறந்து, நரிகளுக்கும், வல்லூறுகளுக்கும் உணவாக கிடப்பதை நான் பார்க்க வேண்டும்." இதுதான் திரௌபதி.

திருதராஷ்டிரன் சஞ்சயன் மூலமாக ஒரு அமைதிக்கான செய்தியை யுதிஷ்டிரனுக்கு அனுப்பி வைத்தான்: என் இளவரசே, அரசரிடமிருந்து நான் கொண்டு வந்துள்ள இந்த அமைதி நாடும் செய்தியை நீங்கள் இதற்குமுன் முழுமையாக கேட்டிருக்க முடியாது: மனிதனின் வாழ்க்கை மிக சொற்ப காலம் யுதிஷ்டிரா. அதை ஏன் அவமானத்தில் முடிவடைய விடவேண்டும்? தன் பங்காளிகளின் ரத்தத்தை சிந்த வைத்தவன் என்ற பெயரை நீ உனக்கு ஏன் ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறாய்? உனது வாழ்க்கையை இந்த போருக்குள் எடுத்துச் செல்லாதே. அதில் நீ வென்றாலும் தோற்றாலும் இதுதான் உனக்கு முடிவாக இருக்கப்போகிறது. இந்த மண்ணில் ஒரு ராஜ்ஜியம் என்ன தந்துவிடப் போகிறது யுதிஷ்டிரா? தர்மத்தின் தலைமகனாக இருக்கும் உன்னைப் போன்ற ஒருவன், தன் சொந்த ரத்தத்திற்கு எதிராக இந்தப் போரில் ஈடுபடுவதை விட விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் அல்லது யாதவர்களின் தயையில் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாமே.

பொருள் தன்மையானவற்றை சேர்க்க வேண்டுமென்ற ஆசைதான் ஒரு மனிதனின் நடுநிலைமையை அவனிடமிருந்து திருடுகிறது. உன்னைப் போன்ற ஒருவன், உண்மை தேடும் ஒருவன், ஆசையின் ஒரு அடிச்சுவடும் அவனது இதயத்தில் இல்லாதபடி எரித்துவிட வேண்டும். செல்வமும் அதிகாரமும் வேண்டும் என்ற ஆசையே உயிருக்கு விலங்கு மாட்டுகிறது, மோட்சம் தேடும் வழியில் ஒரு தடைக்கல்லாக நிற்கிறது. ஒரு சில மனிதர்களால்தான் அவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி செல்லமுடியும், அந்த ஒரு சிலரில் தர்மத்தின் இளவரசனான நீயும் ஒருவன் யுதிஷ்டிரா. இது உனக்கு எனது கடைசி வார்த்தை, உனது கோபத்தை கைவிடு. நடந்த அனைத்தையும் மறந்து விட்டு காட்டுக்கு திரும்பு. உனது மிச்ச வாழ்க்கையை நிர்வாண நிலையை அடைவதற்கு பயன்படுத்து, இரவாப் புகழையும் ஆனந்தத்தையும் உனக்காக ஈட்டு. இல்லையென்றால், கிருஷ்ணனோடு துவாரகை சென்று வாழ்; யாதவர்களிடமிருந்து யாசகம் பெற்று நீ வாழமுடியும். உனக்கான ஒவ்வொரு தேவையையும், சௌகரியத்தையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீண்ட காலமாக தர்மத்தின் நெடிதுயர்ந்த செம்மையான பாதையில் நடந்து கொண்டிருக்கிறாய், இப்போது அதை விட்டு விலகி ஏன் பாவத்தின் குறுகிய பாதையில் செல்ல விரும்புகிறாய்? உன்னை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து நீ திட்டமிடும் ரத்தகளரியை கைவிடு, அமைதியில் வாழ்.

அமைதிக்கான இந்த முயற்சி அப்பட்டமான தோல்வியை சந்தித்தது. தவிர்க்க முடியாமல் அவர்களே அவர்களை போர்க்களத்தை நோக்கி கொண்டு சென்றார்கள். இருதரப்பினரும் குருக்ஷேத்திரத்தில் போர் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடந்த தலைமுறையில் இதே இடத்தில்தான் பரசுராமர் நூற்றுக்கணக்கான ஷத்திரியர்களை வெட்டி வீழ்த்தி ரத்தக் குளங்களை ஏற்படுத்தியிருந்தார். படையினர் அணி திரண்டார்கள். கௌரவர்கள் வசம் 11 அக்குரோணி சேனை பலம் இருந்தது. பாண்டவர்களிடம் 7 அக்குரோணி சேனை பலம் இருந்தது. அவர்களுக்கிடையான பலம் 11:7 என்ற விகிதத்தில் இருந்தது. இந்தப் போரில் முக்கியமான இருவர் எந்தப் பக்கமும் சேரவில்லை. ஒருவர் ருக்மி, ருக்மிணியின் சகோதரன். இன்னொருவர் பலராமன், கிருஷ்ணரின் சகோதரர். கிருஷ்ணருடன் அவர்களுக்கு இருந்த உறவால் போரில் கலந்து கொள்ளாமல் அவர்களும் விலகிக் கொண்டார்கள்.

தலையை இழக்கும் பார்பாரிக்

போர்க்களத்திற்கு தெற்கிலிருந்து ஒரு போர் வீரன் வந்து சேர்ந்தான். அவனது பெயர் பார்பாரிக். அதற்கு முன் அவனை யாரும் பார்த்திருக்கவில்லை. வெறும் மூன்று அம்புகளை தன் அம்பாரியில் வைத்துக்கொண்டு போரில் கலந்துகொள்ள வந்திருந்தான் அவன். கிருஷ்ணரும் மற்றவர்களும் அங்கே இருந்தார்கள், போருக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் அவனிடம், இது என்ன வெறும் மூன்று அம்புகளை மட்டும் வைத்திருக்கிறாய் என்று கேட்டார்கள். தெற்கில் இருந்து வந்த வீரன் இப்படி கூறினான், "என்னால் ஒரு அம்பில் கௌரவர்கள் அனைவரையும் கொல்ல முடியும், இன்னொரு அம்பில் பாண்டவர்கள் அனைவரையும் கொல்ல முடியும். எனவே மூன்று அம்புகளே எனக்கு அதிகம்தான்" என்றான். இந்த தற்பெருமையை கேட்ட கிருஷ்ணர், "உன் திறமையை எங்களுக்கும் ஏன் காட்டக்கூடாது?" என்று கேட்டார். ஆயிரமாயிரம் இலைகளோடு இருந்த ஒரு ஆலமரத்தை சுட்டிக்காட்டி, உனது ஒரு அம்பால் இதில் எத்தனை இலைகளை உன்னால் துளைக்க முடிகிறது என்று நான் பார்க்கிறேன் என்றார். ஒரு அம்பை எடுத்து தாந்திரீக சக்தியூட்டி எய்தினான் பார்பாரிக். மரத்திலிருந்த மொத்த இலைகளையும் துளைத்து விட்டு, கிருஷ்ணரின் காலடியில் மிச்சமிருந்த ஒரு இலையையும் துளைப்பதற்காக வந்து காத்துக் கொண்டிருந்தது பார்பாரிக் எய்திய அம்பு.

கிருஷ்ணர், "பலேபலே, நன்றாகவே இருக்கிறது. நீ எந்த பக்கம் நின்று போர் செய்வாய்" என்று கேட்டார். பார்பாரிக், "நான் எப்போதுமே தோற்கும் பக்கத்திற்காகத்தான் போர் புரிவேன். தினமும் யார் தோற்கிறார்கள் என்று பார்ப்பேன், கௌரவர்கள் தோற்பதாக தெரிந்தால் நான் அவர்களுக்காக போரிடுவேன், பாண்டவர்கள் தோற்பதாக தெரிந்தால் நான் அவர்கள் பக்கம் நின்று போரிடுவேன். எப்போது எந்த படையினர் தோல்வி அடைகிறார்கள் என்பதைப் பார்த்தாலும், நான் அவர்களுக்காக சென்று போரிடுவேன்" என்றான். கிருஷ்ணர் பார்த்தார். இவன் எந்த பக்கம் இருந்தாலும் உங்களால் போரை வெல்ல முடியாது - இவனை உங்கள் பக்கம் வைத்திருந்தாலும், நீங்கள் ஜெயிப்பது தெரிந்தால் இவனே உங்களுக்கு எதிராக திரும்பிவிடுவான் என்பதை முடிவு செய்தவராக, "உன்னிடம் நான் ஏதாவது கேட்டால் எனக்காக அதை நிறைவேற்றுவாயா? ஒரு வீரனின் தலையை கொய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார். அதற்கு பார்பாரிக், "உங்களுக்காக நான் அதைச் செய்வேன். யார் அது என்று சொல்லுங்கள்" என்றான். தனது கூடாரத்திற்குள் சென்ற கிருஷ்ணர் திரும்பி வரும்போது, அவர் கைகளில் ஒரு கண்ணாடி இருந்தது, அதை பார்பாரிக்கின் முகத்திற்கு நேராக காட்டினார்.

தான் கட்டம் கட்டப்பட்டதை உணர்ந்த பார்பாரிக்கால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை, வாக்கு கொடுத்துவிட்டானே. எனவே ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தான்: "சரி, ஆனால் நான் தெற்கே இருந்து இந்த பெரும் போரை காண்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இவ்வளவு பெரிய போர் வீரனாக இருந்துவிட்டு இந்த ஒரு அற்புதமான போரை பார்க்காமல் தவற விடுவதை நான் விரும்பவில்லை" என்றான். எனவே கிருஷ்ணர், "அது பரவாயில்லை. உனது தலையை எடுத்து விடு. உன் தலையால் பார்க்கவும், கேட்கவும் முடியும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். பிறகு தனது வாளை எடுத்த பார்பாரிக், தனது தலைமுடியைப் பற்றிக்கொண்டு. ஒரு கையால் தலையைக் கொய்து தனது உடல் கீழே விழுமுன் கிருஷ்ணரிடம் கொடுத்தான். அந்த தலையை, போர்க்களத்தில் நடப்பவை அனைத்தும் தெரியும்படியான ஓரிடத்தில் வைத்தார்கள். போர் துவங்கியதும், போர்க்களத்தில் ஏதாவது வஞ்சகமான, வேடிக்கையான நிகழ்வைப் பார்த்ததும் பெரும் குரலில் சிரிக்கத் துவங்கிவிடுவான் பார்பாரிக். திடீரென எழும் அவனது சிரிப்பொலியின் சத்தம் கேட்டு போர் வீரர்கள் பலரும் நிலை குலைந்தார்கள். அவனது வெறும் சிரிப்பு சத்தமே சீரற்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதாக இருந்தது.