மஹாபாரதம் பகுதி 19: கௌரவர்களுக்கு கிடைத்த புதிய நட்பு
பாண்டவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டும் கௌரவர்கள், செயலில் இறங்க ஆயத்தமாகிறார்கள். திறமையும் ஆற்றலும் மிக்க கர்ணனுடன் துரியோதனனின் நட்பு பிறப்பதையும், பாண்டவ சகோதரர்கள் சதி வலைக்குள் இழுக்கப்படுவதையும், இந்தப் பகுதியில் விளக்குகிறார் சத்குரு.
முடிசூட்டப்பட்டான் கர்ணன்
தன் வாழ்நாளின் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று தன் கண் முன்னே நிற்பதைக் கண்ட துரியோதனன், அது தன்னை கடந்து சென்றுவிட அனுமதிப்பதாக இல்லை. தன் சகோதரர்களில் யாரும் வில்வித்தையில் சிறந்தவர்களாக இல்லை என்ற பெருங்கவலை இதுவரை அவனிடம் இருந்தது. எப்படியும் தன்னால் பீமனை ஒரு நாள் வீழ்த்திவிட முடியும் என்றும், தன் சகோதரர்கள் யாராவது சேர்ந்து நகுலனையும் சகாதேவனையும் இல்லாமல் செய்துவிட முடியும் என்றும், தர்மத்தைப் பற்றி பேசியே யுதிஷ்டிரனையும் வீழ்த்திவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அர்ஜுனன் பற்றித்தான் அவனது கவலை இருந்தது, ஏனென்றால் அப்பேர்ப்பட்ட வில்வித்தை வீரன் யாரும் அவர்கள் பக்கம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கர்ணனையும் அவனது ஆற்றலையும் கண்டதும், அப்படியே அள்ளிக் கொண்டான் துரியோதனன். கர்ணனின் சார்பாக முன்நின்று அரசரிடம் பேச துவங்கினான். "தந்தையே இது எப்படி முறையாகும்? ஒருவன் மூன்று வழிகளில் அரசனாக முடியும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அரசனின் மகனாக பிறப்பதாலோ, வீரத்தாலும் திறனாலும் இன்னொரு அரசனை வெல்வதாலோ, தனக்கான ராஜ்ஜியத்தை தானே உருவாக்கிக் கொள்வதாலோ ஒருவன் அரசனாக முடியும்."
"அரசன் இல்லை என்ற காரணத்திற்காக கர்ணனுடன் மோத அர்ஜுனன் விரும்பவில்லை என்றால், இதோ கர்ணன் இப்போது இங்கேயே இருக்கிறான், கர்ணனை நான் அரசனாக்குகிறேன். நம்முடைய சிறிய ராஜ்ஜியம் ஒன்று - தொலைதூரத்தில் அங்க தேசம் என்ற பெயரில் இருக்கிறது. அதற்கு அரசன் இல்லை. கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக முடிசூட்டுகிறேன்," என்றபடியே வேத விற்பன்னரை அழைத்து, அங்கேயே அப்போதே கர்ணனுக்கு முடிசூட்டினான் துரியோதனன். "கர்ணன் இப்போது அங்க ராஜன்! அங்க தேசத்தின் அரசன். அர்ஜுனன் ஒருவரின் பிறப்பை ஒரு காரணமாக பயன்படுத்துவதை இனியும் அனுமதிக்க வேண்டாம். கர்ணனின் தந்தை யார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. இவன் என் நண்பன்." என்றவாறே கர்ணனை ஆரத்தழுவிய துரியோதனன், "இப்போது நீ எனது சகோதரன் மட்டுமல்ல, நீ ஒரு அரசன்" என்றான்.
சுற்றி வளைத்து ஒரு திட்டம்
திக்குமுக்காடிப் போனான் கர்ணன். பிறப்பால் தாழ்ந்தவனாக கருதப்பட்டு, வாழ்க்கையில் பாராபட்சத்தையே சந்தித்து வந்த நிலையில், இங்கே ஒரு அரசகுமாரன் தனக்காக சபையில் எழுந்து நின்று பேசியது மட்டுமின்றி, ஆரத்தழுவி அரசனாகவும் முடிசூட்டி விட்டானே! இந்த விசுவாசம் கர்ணனை வாழ்க்கை முழுவதும் கட்டிப்போட்டது. கண்மூடித்தனமான இந்த விசுவாசம், சில சமயங்களில் பேரழிவுக்கான திருப்பமாக காலப்போக்கில் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். போட்டி முடிந்த பிறகு, அரசனான கர்ணன், துரியோதனனின் நண்பனாக அரண்மனையில் இணைய, ஏற்கனவே சகுனியின் துணையுடன் இருந்த கௌரவர்களுக்கு இதனால் புது பலம் சேர்ந்தது. கர்ணனின் புத்திசாலித்தனமும் திறனும் அவர்களை இன்னும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றவே, தங்களின் நோக்கத்தில் இன்னும் கவனமானார்கள். பாண்டவர்கள் ஐவருக்கும் முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்தான் துரியோதனன்.
Subscribe
பாண்டவர் அணி அல்லது கௌரவர் அணி என மக்கள் கட்சி சேரத் துவங்கினார்கள். யார், யாருக்கு விசுவாசமானவர்கள் என்பது, அரண்மனையிலும் நகரிலும் நிலைநிறுத்தப்பட்டது. இதனால் நகரமே இரண்டாகப் பிரிந்து நின்றது. இதற்கு மேலும் இதை அனுமதித்தால் உள்நாட்டு போர் மூளும் என நினைத்தான் திருதராஷ்டிரன். யாராவது நகரை விட்டு வெளியேற வேண்டும் - அது தன் பிள்ளைகள் அல்ல என்றும் இயல்பாக நினைத்தான். பாண்டவர்கள் வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும், அதைப் பற்றி பெரிதாக பேசவும் விரும்பவில்லை. தேசத்தின் மீது மட்டுமே உண்மையான பற்று வைத்திருந்த பீஷ்மர் நடப்பதையெல்லாம் பெரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டே வந்தார். இன்னும் தெருவில் இறங்கி யாரும் சண்டையில் ஈடுபடவில்லை என்றாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும், எண்ணத்திலும் உள்நாட்டுப் போருக்கு ஆயத்தமாவதை அவர் பார்த்தார். யாரிடமெல்லாம் கருத்து கேட்கக்கூடாதோ, அவர்களிடமெல்லாம் ஆலோசனை கேட்ட திருதராஷ்டிரனிடம், பாண்டவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற ஆலோசனையையே எல்லோரும் வழங்கினார்கள்.
"அவர்களை புனிதமான இடத்திற்கு அனுப்புவோம்" என்று சகுனி ஒரு திட்டத்தை முன்வைத்தான். நாட்டில் எவ்வளவோ புனிதமான இடங்கள் இருந்தாலும், அனைத்திலும் புனிதமான இடம் என்றால், அது எப்போதுமே தூரத்தில்தானே இருக்கவேண்டும். அரசர் அவர்களை காசிக்கு புனித யாத்திரையாக அனுப்பி வைக்கலாமே என ஆலோசனை வழங்கினான் சகுனி. யுதிஷ்டிரனை அழைத்த திருதராஷ்டிரன், "நீங்கள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து பல சிக்கல்களையும் சந்தித்து வருவதால், ஏதாவது ஒரு புனித தலத்திற்கு யாத்திரை செல்வது உங்களுக்கு நல்லது. இதுவரை யாரும் காணாத மாபெரும் வில்லாளியும், வீரருமாக, பசுபதிநாதராக அருள் பாலிக்கும் சிவனை காசி சென்று வழிபட்டு வருவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பி வரும்போது நீ அரசனாக தகுதி பெற்றுவிடுவாய்" என்றான். ஏற்கனவே இளவரசனாக பட்டம் சூட்டப்பட்டிருந்தான் யுதிஷ்டிரன். அதாவது, அடுத்த அரசன் என்று அங்கீகரிக்கப்பட்டிருந்தான்.
யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் சென்று, "எங்களது பெரிய தகப்பனார், பசுபதிநாதரிடமே சென்று அருள் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நாங்கள் காசிக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்கிறார், இதை எப்படியும் எங்களது முதுமை காலத்தில் செய்ய இருந்தோம். ஆனால் அவர் எங்களை மிகவும் நேசிப்பதால், அந்த நல்ல காரியத்தை அவ்வளவு நாட்கள் தள்ளிப்போட வேண்டாம் என்று நினைக்கிறார். இப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்," என்று நடந்ததை விளக்கினான். இளவரசன் யுதிஷ்டிரனின் சிலேடை புரிந்தபோதும், அதை புறம் தள்ளினார் பீஷ்மர், ஏனென்றால் அவருக்கு அவரது தேசமே முக்கியம். உள்நாட்டுப் போரை நோக்கிய கொதிநிலை ஏற்பட்டிருந்ததை அறிந்திருந்த பீஷ்மர், கௌரவர்களை தணிக்கவோ, பாண்டவர்களை பாதுகாக்கவோ வழிதெரியாமல் இருந்தார். பாண்டவர்கள் அங்கிருந்து விலகியிருப்பதே நல்லது என்பதை ஒருவகையில் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அரக்கு மாளிகை
அதே நேரத்தில் துரியோதனன் சகுனியின் உதவியுடன் விரிவான திட்டத்தை தீட்டியிருந்தான். காசிக்கு அருகில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை உருவாக்கினார்கள். மண்ணை குழைத்து வெளிப்பூச்சு செய்து அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தாலும், அதற்குள்ளே இருந்தது எல்லாமே எரியும் பொருட்கள்தான். அதிலும், வேகமாக உருகும் தன்மையுடைய அரக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தது. தங்கள் உயிருக்கு அபாயம் சூழ்ந்திருப்பதை உணர்ந்து ஐந்து சகோதரர்களும் எப்போதும் எதற்கும் தயாராக இருந்தார்கள். அதிலும் குறிப்பாக, குந்தி ஒரு பெண் புலியைப்போல எப்போதும் தன் பிள்ளைகள் மீது கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டே இருந்தாள். அவர்களை வழியனுப்ப விதுரர் வந்தார், கூடவே கௌரவர்களும் வந்தார்கள். பாண்டவர்கள் மீது எப்போதுமே ஒரு கண் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். கௌரவர்கள் கண்களில் நீர் பெருக்கெடுத்தது, சகுனியிடமிருந்து வஞ்சகத்தை இப்போது நன்றாகவே கற்றிருந்தார்கள் அவர்கள். துளிகூட உணர்ச்சிவசப்படாமல், தனக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது சகுனி அழுவான். ஏனென்றால் பேச்சும், முகபாவமும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வை வெளிப்படுத்துவதைவிட மறைப்பதற்கான வழியாகவே சகுனி பார்த்தான்.
விதுரரின் உளவாளிகள், பாண்டவர்களுக்கு ஏதோ வலை விரிக்கப்பட்டிருப்பதைப் பற்றி அறிந்தார்கள். ஆனால் எந்த தகவலும் பாண்டவர்களை அடைய முடியாதபடி கௌரவர்கள் எப்போதுமே உடனிருந்தார்கள். எனவே விதுரர் யுதிஷ்டிரனிடம் தாங்கள் இருவரும் அறிந்திருந்த பழங்குடியினர் மொழியில் பேசினார். "ஒரு வாளை விட நெருப்பு மிக அபாயகரமான ஆயுதம் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். ஒரு எலி குளிரில் இருந்து தப்பித்துக்கொள்ள வளை தயார் செய்வதுபோல நீயும் தயாராக இருக்கவேண்டும். உன்னுடன் உங்களுக்கு உதவியாக கனகனை அனுப்புகிறேன்," என்றார். சுரங்கம் அமைப்பதில் தேர்ந்த கனகன் ஒரு தமிழன். கிணறு வெட்டுவதில் இந்தியாவிலேயே சிறந்தவர்களாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் கிணறு வெட்டுவதை துவங்கிய முன்னோடிகளில் தமிழருக்கும் இடம் உண்டு. இன்றும் கூட, இயந்திரங்களின் உதவி இல்லாமலே கிணறு வெட்டுவதில் ஈடுபடும் தமிழரை நீங்கள் பார்க்கலாம்.
காசியை அடைந்த பாண்டவர்கள் அரண்மனையில் குடியேறினர். நறுமணப் பொருட்களை அதிகமாக பயன்படுத்தி அரக்கு வாசம் தெரியாதபடி செய்திருந்தனர். அரண்மனைக்குள் நுழைந்த யுதிஷ்டிரனின் கண்களில் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த அகழி உறுத்தலாக தோன்றியது. ஏனென்றால் வெளிப்புறத்தில் மட்டுமின்றி, அரண்மனை மதிலின் உட்புற சுவரை ஒட்டியும் அகழி ஏற்படுத்தியிருந்தனர். உட்புறத்தில் அகழி ஏற்படுத்த யார் விரும்புவார்கள் என்று வியந்தான் யுதிஷ்டிரன். அரண்மனையில் இருப்பவர்கள் வெளியேறக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்று தோன்றியது. ஏதோ ஒரு அபாயம் சூழ்ந்திருப்பதை உணர்ந்தாலும், அதை எந்த வடிவத்தில் துரியோதனன் ஏற்பாடு செய்திருக்கிறான் என்பது பாண்டவர்களுக்கு புரியவில்லை.
அடைகாக்கும் கோழியைப் போல ஓரிடத்தில் நிலையாக அமர்ந்தான் சகாதேவன். முன்னர், ஒரு சிறு உணவு துணுக்கை எறும்பிடமிருந்து எடுத்து உட்கொண்டிருந்தது இப்போது அவனுக்கு அற்புதம் செய்தது. ஒரு எறும்பைப்போல அரண்மனையை பார்த்தான். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அதன் உரிமையாளரைவிட எறும்புதானே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. சுவற்றை சுரண்டி பார்த்த சகாதேவன், "இந்த அரண்மனை அரக்கு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நெருப்பு பிடித்தால், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் நம் அனைவரின் கதையும் முடிந்துவிடும்" என்றான்.
அவர்கள் தப்பிக்க வேண்டும், ஆனால் அங்கிருந்து ஓட முடியாது, ஏனென்றால் தெருவில் இறங்கியதுமே அவர்களை கொன்றுவிடலாம். எனவே, கனகனை கொண்டு ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை உருவாக்கினார்கள். நதிக்கரையில் சென்று சேரும்படி சுரங்கப்பாதையை ஒரு மாதத்தில் உருவாக்கி முடித்திருந்தான் கனகன். இத்தனை நாட்களில், அரண்மனையில் பாதுகாவலனாக நடித்துக்கொண்டிருந்த துரியோதனனின் உளவாளியின் கவனம் ஒருமாதிரியாக லேசாகியிருந்தது, ஏனென்றால் பாண்டவர்கள் நன்றாக உணவருந்துவதும், சிரிப்பதும் மட்டுமின்றி அவனிடம் நன்றாக பேசவும் துவங்கியிருந்தனர். நாடகத்தை கற்றுக்கொண்ட பாண்டவர்கள், எல்லாமே சாதாரணமாக இருப்பதைப் போலவும், அரண்மனை வாழ்வில் ஆனந்தமாக இருப்பதாகவும் காட்டிக்கொண்டார்கள். ஒரு பௌர்ணமி இரவன்று, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.
தொடரும்...