தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது?
யோகப் பயிற்சிகளை செய்ய ஒருநாளின் சிறந்த நேரம் எது என்பதை எப்படி முடிவு செய்வது..? உங்கள் உடல் உஷ்ணம், வெளிச்சூழலின் வெப்பநிலை மற்றும் யோகா செய்யும் நேரம் ஆகியவற்றிற்கான தொடர்புகளை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கி சத்குரு இதற்கான விடையைச் சொல்கிறார்!
கேள்வி : குறிப்பிட்ட சில யோகப் பயிற்சிகளை சூரியன் உதயமாகும், அஸ்தமனமாகும் நேரத்திற்கு முன்பாக அல்லது பின்னர் செய்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள் சத்குரு.
சத்குரு:
சூரிய நமஸ்காரம் மற்றும் ஷிவ நமஸ்காரம் போன்ற பயிற்சிகளை நீங்கள் இரவும் பகலும் சந்திக்கும் அந்திகாலத்தில் செய்வது சிறந்தது. சாந்தியா காலம் என அழைக்கப்படும் இந்த சூரிய உதய, அஸ்தமன நேரத்தில் எல்லாமே ஒருவிதமான இளகிய நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பயிற்சிகளை செய்யும்போது, உங்கள் எல்லைகளை கடந்து, உச்சபட்ச சாத்தியத்தை அடையும் திறன் அதிகரிக்கிறது. ஏனென்றால் அப்போது உங்கள் சக்திநிலையும் இளகிய நிலையில் இருக்கிறது. இது ஒரு அம்சம்.
அப்பப்பா என்ன வெயில்..!! பயிற்சிக்கு உகந்த நேரமல்ல..
இன்னொரு அம்சம், எல்லா பயிற்சிகளுமே உங்கள் உடலில் குறிப்பிட்ட அளவு உஷ்ணத்தை உண்டாக்குகிறது. இந்த உடலில் நடக்கும் பல்வேறு செயல்களையும் உஷ்ணம், சீதளம், பித்தம் இந்த மூன்றும் கட்டுப்படுத்துகின்றன. உங்கள் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது, இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் உடலில் சமத் பிராணா அதிகரிக்கும்போது, உங்கள் உடல் சூடாக இருப்பதாக உணர்வீர்கள். ஆனால் உங்கள் உடலின் வெப்பநிலையை பரிசோதித்து பார்த்தால் அது சாதாரணமாக இருக்கும். உஷ்ணா என்பது காய்ச்சல் போல உங்கள் உடலில் ஏற்படுவதல்ல. இது உங்கள் அனுபவத்தில் நிகழ்வது.
சமத் பிராணா அல்லது சமான வாயு என்பது உங்கள் உடலில் உள்ள வெப்பநிலையை பராமரிக்கிறது. ஒரு யோகி எப்போதுமே தன் உடலில் லேசான ஒரு சூடு தங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்வார். உடலில் இருக்கும் உஷ்ணம் தீவிரத்தையும், சுறுசுறுப்பையும் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குகீழே உடலின் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியாகும் போது, உடலில் ஒருவித மந்தநிலை ஏற்படும்.
சாதாரணமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைக் காட்டிலும் அதிகமான சக்தி நிலையில் வாழ்வை நிகழ செய்யும் வகையிலேயே கிட்டத்தட்ட எல்லா பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Subscribe
மாற்றம் நடக்கும் நேரம்
பிரம்ம முகூர்த்தம் - ஆன்மீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த நேரம்
ஆன்மீகத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், யோகப் பயிற்சிகளை சூரியோதயத்திற்கு முன்னர் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது சிறந்தது. அதாவது, அதிகாலை 3.40 மணி. அந்நேரத்தில், இயற்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் நிகழ்வதால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இயல்பாகவே விழிப்புணர்வு-நிலையினை எட்டுவீர்கள். ஆசனாக்கள் செய்து, உங்கள் உயிரியலுக்கும் இந்த பூமியின் உயிரியலுக்கும் ஒத்திசைவு ஏற்படும்போது தினசரி காலை 3.20 முதல் 3.40 வரை இயல்பாகவே உங்களுக்கு விழிப்பு ஏற்படும்.
3.40 மணி என்பது யாரோ ஒருவர் கண்டுபிடித்த அல்லது வகுத்துக்கொடுத்த நேரமல்ல. நம் உடலமைப்பில் உள்ள ஏதோவொன்று இந்த பூமியுடன் தொடர்பில் உள்ளது, அது உங்களை விழிப்படையச் செய்கிறது.
உடல்தன்மையை தாண்டிய ஆன்மீகப் பரிமாணங்களை உணர நீங்கள் விரும்பினால், பிரம்ம முகூர்த்தம்தான் சிறந்த நேரம். வெறும் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாவை நாடுபவராய் நீங்கள் இருந்தால் சாந்தியா காலத்தில் பயிற்சி செய்யலாம்.
அதிக சக்திநிலை உடலில் வளர்சிதை மாற்றம் (higher level of metabolism) ஏற்படுத்துவதில்லை. வளர்சிதை மாற்றம் அதிகரித்தால் இந்த உடலின் ஆயுட்காலம் குறைகிறது.
உங்கள் சக்திநி்லை இயல்பைவிட சற்று தீவிரமாகும்போது உங்கள் உடல் இலகுவாக தன் வேலைகளை கவனித்துக்கொள்ளும். இதை மூன்று அல்லது ஆறு வாரங்களில் நீங்கள் அனுபவப்பூர்வமாக பார்க்க முடியும். -குறிப்பிட்ட சில பயிற்சிகளை செய்து உங்கள் சக்தி நிலையை குறிப்பிட்ட ஒரு நிலைக்கு எடுத்துவரும்போது, உடலியல் காரணிகள்(physical factors) ஒரு சமநிலையை அடைவதை, சுலபமாக நடப்பதைப் பார்க்க முடியும். உங்கள் சக்திநி்லை குறையும்போது, உயிர் வாழத் தேவையான அத்தியாவசியமான செயல்களைச் செய்ய உடல் முழு தீவிரத்துடன் செயல்படும். இது ஒட்டுமொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தும். உடலியக்கம் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் நடக்கும்போது, உங்கள் மனம் பித்து பிடித்த நிலைக்குச் செல்வதுடன், உங்கள் ஆயுளும் குறையும்.
யோகப் பயிற்சிகளை செய்வதால் நம் உடலில் உஷ்ணம் ஏற்படும் என்ற கவனம் நம்மிடம் இருக்கிறது. வெளிவெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், நம் உடலின் உஷ்ணம் ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டி உயரும்போது, செல் அறைகளில் பாதிப்பு (cellular damage) ஏற்படும். இதனால் தான் யோகப் பயிற்சிகளை எப்போதுமே ஒரு நாளின் குளுமையான பொழுதில் செய்ய வேண்டும் என்கிறோம். பகல் பிரிந்து இரவு சேரும் வேளையில் ஏற்படும் மாறுதல், உடலில் உராய்வைக் குறைக்கிறது. இதனால் பயிற்சி செய்யும்போது குறைவான உஷ்ணமே உருவாகிறது.
இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் யோகா பரிணமித்ததால் நாம் எப்போதுமே காலை 8.30 மணிக்கு முன் அல்லது மாலை 4, 4.30 க்கு பிறகு யோகப் பயிற்சிகள் நிகழ வேண்டும் என்றோம்.
ஐந்தே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய புத்துணர்வூட்டும் உப-யோகப் பயிற்சிகளை இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.