சத்குரு: தேங்கிப் போகும் நிலைக்கும் அசைவற்ற தன்மைக்கும் பலரும் வேறுபாடு தெரியாமல் இருக்கிறார்கள். அசைவற்ற தன்மை என்பது மகத்தான உயிர்ப்புத் தன்மை. அங்கே எதுவும் வெளிப்படுவதில்லை. அதன் இருப்பு மட்டுமே நிகழ்கிறது, அதுவே கடவுள். கடவுள் என்பது அசைவற்ற தன்மை, தேக்கம் அல்ல. மனம் என்பது தேக்கம். சாதனா என்பது உங்களை தேக்கத்திலிருந்து அசைவற்ற தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு சக்தி. ஆனால் தூக்கத்தையும் அசைவற்ற தன்மையையும் சேர்த்துப் பார்க்கும்போது தர்க்கரீதியான உங்கள் மனம் இரண்டுக்கும் நடுவே இருக்கும் வித்தியாசத்தை உணராது. ஏனெனில், உங்கள் மனம் அசைவு அசைவின்மை என்கிற ரீதியிலேயே புரிந்துகொள்கிறது.

அசைவற்ற தன்மையின் அற்புதம் புரியாமலிருப்பதன் காரணம்…

பௌதீக அடிப்படையில் அசைவற்ற தன்மையும் தேக்கமும் ஒன்றாகவே பார்க்கப்பட்டாலும் தரத்தின் தன்மையில் இரண்டுமே வெவ்வேறு உலகங்களை சேர்ந்தவை. தியானத்தில் இருக்கும் மனிதனும் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனும் உங்களுக்கு ஒன்று போல தோன்றலாம். ஒருவர் உட்கார்ந்து கொண்டு தூங்குகிறார், இன்னொருவர் படுத்துக்கொண்டு தூங்குகிறார், அவ்வளவு தான் வித்தியாசம் என்று நினைப்பார்கள். 

தங்களை பரபரப்பான மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தியானத்தை எவ்வளவு கிண்டலாக பார்க்கிறார்கள் தெரியுமா? தியானம் என்பது சரியாக தூங்கக்கூட தெரியாதவர் செய்யும் வேலை என்று நினைக்கிறார்கள். வெளியிலிருந்து பார்த்தால் அசைவற்ற தன்மைக்கும் தேக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால், உள் தன்மையில் இரண்டுக்கும் மிக அதிகமான வேறுபாடு உண்டு. தேக்கத்துக்கும் அசைவற்ற தன்மைக்கும், அறியாமைக்கும் ஞானோதயத்துக்கும் அதுதான் வித்தியாசம். ஒருவகையில் பார்த்தால் இரண்டும் ஒன்று. ஆனால், தன்மை வெகுவாக மாறியிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அந்தப் பாதை கடினமானது என்று பொருள் அல்ல. நீங்கள் அதனை கடினமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது மிகவும் எளியப் பாதை. நீங்கள் எளியவராக இருந்தால் அந்தப் பாதையும் மிக எளிது. நீங்கள் கடினமானவராக இருந்தால் அந்தப் பாதையும் கடினம்.

சாதனாவின் ஆழம் எந்த அள்விற்குத் தேவை?

அறியாமையில் நீங்கள் மூழ்கிக் கிடக்கும்போது தரத்தின் தன்மையிலான இந்த வேறுபாடு உங்களுக்கு எப்படி தெரிய வரும்? அதற்குதான் உங்கள் ஆன்மீக பயிற்சி ஒரு முழு சுற்று வரவேண்டும். ஒருவர் எந்த அளவுக்கு முட்டாள்தனமான மனிதரோ அந்த அளவுக்கு அவருடைய சாதனா ஆழமாக இருக்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் உணர்ச்சி அளவிலும் நீங்கள் உங்களுக்கு விதித்திருக்கும் எல்லைகளைத் தாண்டி உங்கள் சாதனா நீள வேண்டும்.

ஒவ்வொரு சிறிய சிரமத்திற்கும் நீங்கள் சாதனாவை நிறுத்தினால் அதனை உங்களால் உணர முடியாது. உங்கள் வசதிகளைத் தாண்டி சாதனாவை கொண்டு செலுத்த முற்படுகிறீர்கள். முடியாதபோது அதனை நிறுத்திவிடாதீர்கள், அடுத்தப் புள்ளியை நோக்கித் தள்ளுங்கள். உச்சம் நோக்கி தள்ளிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் மனம் தானாக கரைந்து போகும். நீங்கள் வேறெந்த சாதனாவும் செய்யத் தேவையில்லை. இந்த ஒன்றே போதும். சாதனா என்கிற பெயரில் தரப்படும் மற்ற செயல்கள் எல்லாமே இந்த ஒன்றை அடைவதற்காகதான். உங்கள் சங்கல்பம் அசைக்க முடியாததாக இருக்க வேண்டும்.

சாதனாவில் உறுதியுடன் இருப்பதன் அவசியம்

ஒருவர் 12 ஆண்டுகளுக்கு இமயமலை செல்ல பணிக்கப்படுகிறார் என்றால், அங்கிருக்கும் பாறைகள் அவருக்கு ஞானோதயம் தரும் என்று பொருள் அல்ல. உண்மையை தேடுவதற்காக அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தன் வாழ்வில் பன்னிரண்டு ஆண்டுகளை செலவிட அவர் தயாராக இருக்கிறார் என்பதுதான் முக்கியம். அத்தகைய சங்கல்பம் அவருக்கு இருக்குமேயானால் ஞானோதயம் அவருக்கு விரைவில் நிகழும். ஒருவகையில் பார்த்தால் அது வாழ்க்கையை வீண்செய்வது போல தோன்றும். உலகமே நன்கு சாப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அந்த குளிரில் உட்கார்ந்துகொண்டு சிவா சிவா என உச்சாடனம் செய்து எதுவும் நடக்கா விட்டாலும் பரவாயில்லை என்கிற உறுதியில் இருக்கிறார்.

ஒவ்வொரு சிறிய சிரமத்திற்கும் நீங்கள் சாதனாவை நிறுத்தினால் அதனை உங்களால் உணர முடியாது

சிரமங்கள் நேர்கிறபோது சிவன் நேரடியாக காப்பாற்றுவதற்கு வராமல் இருக்கவும் கூடும். பசி வந்தால் வெறுமனே பசியில் இருக்கிறீர்கள். குளிரில் இருந்தால் வெறுமனே குளிரில் இருக்கிறீர்கள். அப்படி அமர்ந்திருப்பது பயன் தராமல் போகவும் கூடும் என்று தெரிந்தும் அமர்ந்திருக்கிறீர்கள். ஏனென்றால், வாழ்வில் வேறு ஏதோ ஒன்றை மிக முக்கியமாகக் கருதுகிறீர்கள். அப்படி ஒரு சங்கல்பம் இருந்தால் 12 ஆண்டுகள் தேவையில்லை, ஒரு வினாடியில் கூட ஞானோதயம் நிகழலாம்.

எளியமையாகவும் தளர்வுநிலையிலும் இருக்கும்போது...

யாரும் 12 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. இந்த விநாடியை நீங்கள் பயன்படுத்தாததால் அடுத்த வினாடிக்குக் காத்திருக்கிறீர்கள். ஆனால், இந்தக் கணம்தான் முக்கியம். வசதி குறைவு ஏற்படும்போதெல்லாம் இறுக்கமாகி இது எனக்கான பாதையல்ல என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாய் இது உங்களுக்கான பாதை அல்ல. அந்தப் பாதை கடினமானது என்று பொருள் அல்ல. நீங்கள் அதனை கடினமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது மிகவும் எளியப் பாதை. நீங்கள் எளியவராக இருந்தால் அந்தப் பாதையும் மிக எளிது. நீங்கள் கடினமானவராக இருந்தால் அந்தப் பாதையும் கடினம்.

பல பிறவிகளில் கிடைத்த வாய்ப்புகள் வீணாகி விட்டன. இந்த வாய்ப்பும் வீணாக வேண்டாம்.

நீங்கள் எளிமையாகவும் தளர்வு நிலையிலும் இருந்தால் வாழ்க்கை மிக எளிமையானது. நீங்கள் இறுக்கமாகும் போதுதான் வாழ்க்கை கடினமாகிறது. கடந்த காலத்தில் உங்கள் நரம்புகள் முறுக்கேறும் விதமாய் எவ்வளவோ நடந்துவிட்டது. அதனால் பல முடிச்சுகள் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் பல முடிச்சுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். பழைய முடிச்சுகளே மிகுந்த வலியை உருவாக்கி உங்களை வதைத்துக்கொண்டு இருக்கின்றன. சில மனிதர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள், சிலர் உணரவில்லை. உங்களுக்குள் நீங்கள் உருவாக்கியது உள்ளிருந்தே உங்களை தின்கிறது. பல பிறவிகளில் கிடைத்த வாய்ப்புகள் வீணாகி விட்டன. இந்த வாய்ப்பும் வீணாக வேண்டாம்.