கொவிட்-19 ஊரடங்கு இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டபோது சத்குரு இவ்வாறு கூறினார், "ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு இருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள், உங்கள் அனைவருக்கும் பொன்னான காலம் இது. கூர்மையான யுத்திகளை சிந்திக்கக் கூடியவர்களே! உங்களுக்கு ஒரு அருமையான காலம் இது. தங்களை இசை வல்லுனர்கள் அல்லது கலைஞர்கள் என்று எண்ணுபவர்களே! உங்களுக்கு உண்மையிலே அதிசயமான காலம் இது. பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் - பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்பவர் மட்டுமல்ல, உண்மையாகவே கற்கும் ஆவலோடு இருக்கும் மாணவர்கள் - உங்களுக்கு உண்மையிலேயே அழகான காலம் இது."

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற "சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்" என்ற தலைப்பில், அவரோடு தினசரி நிகழ்ந்த தரிசனத்தில், சத்குரு இந்த ஊரடங்கு காலத்தில் நமக்கு வாய்த்த பல முன்னோடியான வாய்ப்புகளைப் பற்றி சுட்டிக்காட்டினார். அதே சமயம் இத்தகைய சூழலில் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியும் நமக்கு எச்சரிக்கை செய்தார்.

எனவே சத்குரு கூறியவற்றிலிருந்து சிறப்பம்சம் வாய்ந்த சில பகுதிகளை இங்கு உங்களுக்காக வழங்குகிறோம். இந்த சோதனை காலத்தில் நம் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்த இவை நமக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

#1 சிறைப்பிடிக்கப்பட்ட ஆன்மீகவாதியாக இருங்கள்

சத்குரு: மக்கள் இதற்காக என்னை ஏசுவார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் இப்போது நீங்கள் ஒரு சிறைப்பிடிக்கப்பட்ட ஆன்மீகவாதியாக மாறிவிட்டீர்கள் - இது ஒரு குருவின் கனவு. உடல் ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பது மிக முக்கியம். ஆனால், இந்த காலத்தை சிறந்த முறையில் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வைரஸ் இத்தகைய ஞானத்தையும், விழிப்புணர்வையும் தரும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், இதை வெகுகாலம் முன்பே உங்களுக்கு நான் கொடுத்திருப்பேன். உங்களுக்கு பல பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பதில் நான் ஏன் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறேன் - உங்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர, உங்களை விவேகம் உடையவராக மாற்ற எத்தனை விஷயங்கள்! எனக்குத் தெரியவில்லை, ஒரு வைரஸால் இது சாத்தியப்படும் என்று. இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் சிரிப்பை இழந்துவிட்டால் வைரஸ் உங்களை விட்டு சென்றுவிடாது. நீங்கள் சிரிப்பே இல்லாத உம்மனாமூஞ்சியாக இருந்தால், நீங்கள் இறக்கும் முன்னரே இறந்தவர் ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் சிரிப்பே இல்லாத உம்மனாமூஞ்சியாக இருந்தால், நீங்கள் இறக்கும் முன்னரே இறந்தவர் ஆகிவிடுவீர்கள்.

தற்போது உங்களின் அடிப்படையான பொறுப்பு நீங்கள் உயிரோடு இருப்பது; மற்றும் உங்களை சுற்றியுள்ள அனைவரும் - முக்கியமாக எளிதில் பாதிப்படையக் கூடியவர்கள் - உயிரோடு இருக்குமாறு பார்த்துக்கொள்வது. இந்த சோதனையை வெற்றியோடு கடக்க வேண்டும். பொறுப்பான செயல் மூலம்தான் இது சாத்தியப்படும்.

#2 நமது மனிதத் தன்மையை சோதித்துப் பார்க்கும் காலம்

நாம் நெருக்கடியில் இருக்கிறோம் என்று உணரும்போது, இந்த மாதிரியான காலங்களில்தான் நாம் எந்த வகையான மனிதர்கள் என்பது முக்கியமானதாக ஆகிறது. எல்லாக் காலங்களிலும் இது முக்கியம்தான். ஆனால் இயல்பாக இருக்கும் காலத்தில் எல்லா வகையான செதில்களும் தப்பித்துக்கொள்ளும். அவர்கள் பாசாங்கு செய்யலாம். நெருக்கடியான காலகட்டத்தில்தான் எந்தவகையான மனிதராக நீங்கள் இருக்கின்றீர்கள் என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக மாறும்.

நாம் என்றுமே தீர்வின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதரா, இல்லை பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதரா? இது ஒன்றை மட்டும்தான் நாம் முடிவு செய்ய வேண்டும்

தற்போது நம் மனதில் ஒன்றை இருத்திக்கொள்ள வேண்டும் - நாம் மனிதர்களா, இல்லை மனித விலங்குகளா? நாம் மனிதர்கள் என்றால், எவ்வாறு இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தெரிந்திருந்தால், சமூக தொடர்பு என்பது தேவைப்படும்போது மட்டும் நிகழும் தேர்வாக அமையும். அது தேவைப்படாதபோது நீங்கள் உங்களை உங்களுடனே வைத்திருப்பீர்கள். மேலும், ஆன்மீகத் தேடலில் இருப்பவருக்கு இது ஒரு அருமையான காலம். தனியாக இருப்பது, மக்களிடம் இருந்து விலகி இருப்பது, அமைதியாக இருப்பது, மேலும் இதுபோன்ற விஷயங்கள் பிரச்சனைகள் இல்லை. இவை வாய்ப்புகளே. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இத்தகைய வாழ்க்கை நிலையில் இல்லை. அதனால் அவர்கள் போராடுவார்கள். அவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு பல்வேறு தீர்வுகளை வழங்குவது என்பது பற்றி நாம் சிந்தித்து வருகிறோம். ஆனால் தன்னை ஆன்மீக தேடலில் இருப்பவர் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும், மிக விழிப்புடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், தேவைப்படும்போது வெளியில் சென்று செய்ய வேண்டிய செயல்களை செய்வதற்கு விருப்பத்தோடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எல்லாம் சரியாக நிகழும்போது அனைவரும் அற்புதமானவராக இருக்கின்றார்கள். ஆனால் சோதனையான காலம் நம் கண்முன் வரும் போதுதான் நாம் எத்தகையவர் என்பது தெரிகிறது.

அடிப்படையான கேள்வி இதுதான்: நாம் என்றுமே தீர்வின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதரா, இல்லை பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதரா? இது ஒன்றை மட்டும்தான் நாம் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்துவிட்டேன், நீங்கள் அனைவரும் - நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் - இப்போதே, உடனடியாக இந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித குலத்திற்கு சவாலான காலமாக இருக்கப் போகும், வரவிருக்கும் அடுத்த சில வாரங்களில், நீங்கள் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், பிரச்சனையின் பகுதியாக அல்ல. இந்த தீர்மானத்தை ஒவ்வொருவரும் எடுக்கவேண்டும், இது மிக மிக முக்கியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#3 மரணத்திற்கான நினைவூட்டல் இது

இந்த வைரஸ் உங்களுக்கு எதிரானது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது, தான் வாழ முற்படுகிறது. துரதிருஷ்டவசமாக, தான் வாழ்வதற்காக அது எடுக்கும் தீவிரமான வழிகள், உங்கள் வாழ்க்கையை முடித்துவிடுகிறது. இதுவும் மனித செயல் போன்றதே.

வாழ்க்கையை அதன் நோக்கில் பார்ப்பதற்கு சரியான தருணம் இது - உண்மையை கலப்படம் செய்ய அல்ல

மனிதர்கள் தங்கள் நல்வாழ்வை தேடும் செயலில், இந்த பூமியில் உள்ள உயிர்களை அழித்துவிட்டார்கள். இந்த பூமியின் இருப்பையே அச்சுறுத்துகிறார்கள், கெட்ட எண்ணத்தினால் அல்ல, தாம் நன்றாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில்தான். அதைப்போலவே இந்த வைரஸும், தான் வாழவேண்டும் என்று விரும்புகிறது. அதற்கு நீங்கள்தான் விருந்தோம்பி. நாம் இந்த பூமிக்கு என்ன செய்கிறோமோ அதைத்தான் வைரஸும் நமக்கு செய்கிறது. இது தவிர வேறு ஒன்றும் இல்லை. தற்போது வைரஸைப் பற்றிய பயம் என்பது குறிப்பாக நம் கண்முன்னே நமக்குத் தெரியும் மரணம்தான். எனவே, மரணம் உங்கள் கண்முன்னே தெரியும்போது, மனித வாழ்வு எவ்வளவு எளிதில் உடையக்கூடியது என்று உங்களுக்கு புரியும். இதுபோன்ற சமயங்களில் எது நீங்கள், எது நீங்கள் இல்லை என்பதைப் பற்றிய வேறுபாட்டை அறிந்துகொள்வது அவசியம். நான் யார், எது என்னுடையது, எது எனக்கு சொந்தமானவை என்பது எல்லாம் சரி, நான் யார் என்பது மிக முக்கியமானது. உங்களுக்கு சொந்தமானதாக எது வேண்டுமானாலும் இருக்கலாம், பொருட்களை சேகரிக்க நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவு செய்யலாம், ஆனால் உங்கள் வாழ்க்கையின் முடிவில் சரக்கை எடுத்து செல்லும் வசதி இல்லை. நாம் இங்கு ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் சக்தியோடு பிறந்து இருக்கின்றோம். தற்போது இறக்கும் இயல்பில் நாம் இருக்கிறோம் என்ற நினைவூட்டலை இந்த நுண்ணுயிர் நமக்கு வழங்கியிருக்கிறது. வாழ்க்கையை அதன் நோக்கில் பார்ப்பதற்கு சரியான தருணம் இது - உண்மையை கலப்படம் செய்ய அல்ல

#4 வாழ்வில் பிரத்தியாகாரத்தை கொண்டுவருவது

இன்றைய உலகில் பலவகையான சத்தங்கள், நிறங்கள், காட்சிகள் என நம் புலன்களின் மேல் தொடர் தாக்குதல் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது. காட்சிகள் சப்தங்கள் ஆகியவற்றின் அளவு மிக அதிகமாக இருக்கும் இந்த சூழலில், உள்நோக்கி பார்ப்பது என்பது பலருக்கும் மிக அரிதான ஒன்றாக ஆகிவிட்டது. இன்றைய சூழ்நிலை உங்களை சோதித்து பார்த்துக் கொள்வதற்கு ஏற்ற தருணம். இதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அஷ்டாங்க யோகத்தில் பிரத்தியாஹாரம் என்ற ஒரு பரிமாணம் உண்டு. சிலபேர் அஷ்டாங்க யோகா என்பது ஒரு வியாபாரக் குறி என்று நினைக்கின்றனர். அஷ்டாங்க என்பதற்கு எட்டு அங்கங்கள் கொண்ட யோகா என்று பொருள். யோகாவின் எட்டு அங்கங்கள் இவை. அதில் ஒரு அங்கம் பிரத்தியாஹாரம் என்று அழைக்கப்படுகிறது. வெளியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் உங்களது புலன்களை உள்நோக்கி திருப்புவதற்கு பிரத்தியாஹாரம் என்று பொருள். இன்றைய உலகில் உள்ள மக்களால் இதை என்னவென்றே புரிந்துகொள்ள முடியாது. ஒரு நாளில் பல மணி நேரங்கள் கண்ணை மூடிக்கொண்டு - விழிப்புணர்வோடு தூங்காமல் - நீங்கள் இருந்தால் ஒரு புதிய பரிமாணத்திலான சக்தியை நீங்கள் பெறுவதை உணர்வீர்கள். இதுதான் பிரத்தியாஹாரம் - அதாவது, உலகத்தோடு சஞ்சரிக்கும் புலன்களை நீங்கள் உங்கள் உள்நோக்கி திருப்புவது.

வெளியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் உங்களது புலன்களை உள்நோக்கி திருப்புவதற்கு பிரத்தியாஹாரம் என்று பொருள்.

இதை சோதித்துப் பார்ப்பதற்கு சரியான தருணம் இது, அதாவது பிரத்தியாகாரத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வாருங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், எவராக இருந்தாலும், அது ஒரு பொருட்டு அல்ல. உங்களுக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. வெறுமனே உங்கள் கண்களை மூடி அமர்ந்து, உங்கள் மனம் வேறெங்கோ ஓடினாலும் பரவாயில்லை, அது ஓடட்டும், அதை நிறுத்த முயற்சிக்காதீர்கள். ஏனெனில், அதற்கு தடுப்பான்கள் இல்லை - எல்லா மூன்று கட்டைகளும் வேகத்தை அதிகரிக்கும் கட்டைகள்தான். அவற்றை எவ்வாறு மிதித்தாலும் இன்னும் வேகமாகதான் ஓடும். அதனால் நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை, அது ஓடிக் கொண்டிருக்கும். அது ஓடிக் கொண்டு இருப்பதற்கான காரணம், அதற்கு ஒரு குறிப்பிட்ட கர்ம தூண்டுகோல் உள்ளது. அதை கவனிக்காமல் அப்படியே சில நேரம் நீங்கள் விட்டுவிட்டால் அது வேகம் குறைந்து பின்னர் நின்றுவிடும். மனதை நிறுத்துவதை பற்றியோ அதன் நிறுத்தத்தை பற்றியோ நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் சொல்வது யாதெனில், வெளி உலகத்தோடு ஈடுபாட்டில் இருக்காதீர்கள் - உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை மணிநேரங்கள்... ஒரு மணி நேரத்தில் ஆரம்பியுங்கள், பின்னர் அதை ஒரு நாளைக்கு 6-லிருந்து 12 மணி நேரங்களாக உயர்த்துங்கள். அவ்வாறு செய்தால் உச்சத்தை எட்டும் சக்தி உங்களுக்கு கிட்டும்.

தற்போது மனிதர்கள் தங்களுக்குள் ஆனந்தத்தோடும் உற்சாகத்தோடும் இருக்க முடியாததற்கான முக்கிய காரணம், சக்தி குறைபாடுதான் - அவர்கள் ஒரு மூன்று நிமிடங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் பின்னர் சோர்ந்து போய்விடுவார்கள். வாழ்வின் எந்த ஒரு அனுபவமும் உங்களை கீழே தள்ளாமல் முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான சக்தி அமைப்பு உருவாவதற்கு தேவையான முக்கிய தன்மை பிரத்தியாஹாரம் ஆகும். பிரத்தியாகாரத்தை பின்பற்றுவதற்கு இதுவே சரியான தருணம்.

#5 பங்களிப்பிற்கான நேரம் இது, விமர்சிக்க அல்ல

இது துரதிருஷ்டவசமான காலம். நெருக்கடியான ஆபத்தை நாம் எதிர்நோக்கியிருக்கும் காலம் - நமக்கு, நம் தேசத்துக்கு, உலகம் முழுவதுக்கும் - எத்தகைய நெருக்கடி என்றால், தற்போது தேசங்கள் தம் படைகளை தம் மக்களுக்கு எதிராகவே நிறுத்தியிருக்கிறார்கள். இது எவ்வளவு அபாயமான நிலை என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆனால் இதுபோன்ற காலகட்டத்திலும் சில பேர்களால் எழுந்து நின்று தங்களை சுற்றியுள்ள யாரோ ஒருவருக்கு உபயோகமான, ஆக்கபூர்வமான ஏதோ ஒன்றை செய்யமுடியவில்லை. அவர்கள் செய்வதெல்லாம் வெறும் குப்பைகள்தான். மனித குலத்தில் உள்ள பிறருக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை. அவர்களின் அக்கறை எல்லாம் அவர்களின் கடுஞ்சொல்லில்தான் - எப்போதும் விஷத்தைக் கக்குவதே வேலை. இந்த வைரஸாவது அவர்களின் இந்த விஷத்தன்மையை சரிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மேலும், இன்னும் சில நாட்களில் அவர்கள் எழுந்து நின்று மற்றவர்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாம் பொறுப்போடு நடந்துகொண்டால், தேவைப்படும் ஆக்கபூர்வமான செயல்களை செய்தால், இந்த சூழல் பெரும் பேரழிவை ஏற்படுத்தாமல் கடந்து போய்விடும்.

மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்: இந்த தலைமுறை மக்களாகிய நாம் இத்தகைய ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை. உங்கள் நாடுகளில் நடந்த போர்களை விட பெரிய நெருக்கடி நிலை இது. நீங்கள் இதுவரை தெரிந்திருக்க முடியாததொரு நெருக்கடி நிலை இது.

இத்தகைய சூழலில் இருக்கும்போது இது நம் சுகாதார அமைப்பை பற்றியோ, நமது சுகாதார அமைச்சகம் பற்றியோ குறை கூறும் நேரமல்ல. அனைவரும் எழுந்து நின்று தங்களால் இயன்ற ஆக்கபூர்வமான செயல்களை தங்கள் வாழ்க்கையில் செய்வதற்கான காலம் இது. நாம் பொறுப்போடு நடந்துகொண்டால், தேவைப்படும் ஆக்கபூர்வமான செயல்களை செய்தால், இந்த சூழல் பெரும் பேரழிவை ஏற்படுத்தாமல் கடந்து போய்விடும்.

தற்போது நம் நாட்டில் பல விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தால், பல்வேறு அமைப்புகளால், அதற்கும் மேலாக மருத்துவத்துறை வல்லுனர்களால், காவல்துறையினரால் மற்றும் பாதுகாப்புப் படையினரால். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அபாயத்தில் வைக்கும் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். எனவே நீங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுடைய அறிவற்ற நாடகங்களை நடத்திக்கொண்டு இருக்காதீர்கள். உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் ஏதோ ஒன்றில் ஏதோ ஒரு செயலில் வீட்டில் இருந்தபடியே சமூக விலகலை கடைப்பிடித்து எவ்வாறு பங்கு கொள்வது என்று பாருங்கள். உங்களால் எந்த வழியில் பங்கேற்க முடியும் என்று பாருங்கள்.

ஏதோ ஒன்றை செய்யுங்கள். சும்மா அமர்ந்து கொண்டு எல்லாவற்றையும் பற்றி குறை கூறிக்கொண்டு இருக்காதீர்கள்.

#6 நன்றியை வெளிப்படுத்துங்கள்

நற்செயல் புரிவோரை அங்கீகரிக்கத் தவறும் ஒரு தேசமாக இருக்கிறோமோ என்று நான் நினைக்கிறேன். துரதிருஷ்டவசமாக அனைத்தையும் விமர்சனங்கள் மூலம் சரிசெய்துவிட முனைகிறோம். இந்த நிலை மாறவேண்டும். மனிதர்கள் செய்யும் பல அற்புதமான விஷயங்களை அங்கீகரிக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்யும்போது, எத்தனை பேர் ஓட்டுனரையும் நடத்துனரையும் பார்த்து "நன்றி" என்று கூறுகிறார்கள் அல்லது வெறுமனே கைகூப்பி வணக்கம் செய்கிறார்கள்? பெரும்பாலானவர்களிடம் இது இல்லவே இல்லை. முந்தைய காலத்தில் நம் கலாச்சாரத்தில் நாம் பெற்ற ஒன்று எவ்வளவு சிறியதாக இருந்தாலும் குனிந்து ஒருவருக்கொருவர் வணங்கி வந்திருக்கின்றோம்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த பழக்கம் இப்போது இல்லை. தற்போது மருத்துவ வல்லுநர்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொண்டு வரும் பல்வேறு மக்கள், அனைவரும் தங்கள் வாழ்க்கையை, தங்கள் குடும்பங்களின் வாழ்க்கையை ஒரு அபாய நிலையில் வைத்துதான் செயல்புரிந்து வருகிறார்கள். ஏனெனில், அவர்கள் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி பின்பு தன் வீடுகளுக்கு செல்கிறார்கள். செல்லும்போது அவர்கள் மரணத்தையும் தன்னோடு தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஒரு சேவையை அவர்கள் செய்யும்போது அதை நாம் அங்கீகரிக்காமல் போவது மோசமான ஒன்று.

அடுத்த 6 மாதங்களுக்கு இந்த சூழ்நிலை மாறும் வரை ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் எழும்போது உங்களுக்காக தன் வாழ்க்கையை அபாயத்தில் வைத்திருக்கும் அனைவரையும் நன்றியோடு நினைக்கும் ஒரு எண்ணத்தை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

#7 அற்புதமான மனிதர்கள் கொண்ட தலைமுறையை உருவாக்குவதற்கான வாய்ப்பு

தொடர்ந்து மாசுபடுத்திய இயந்திரங்கள் நின்றது சுற்றுசூழலுக்கு நல்லதுதான். இதை சொன்னால் மனம் புண்படும்.

.. ஏனெனில் பல மக்களுக்கும் பாதிப்புகள் நிகழ்ந்து இருக்கின்றது. ஆனால் இதை நான் கூறத்தான் வேண்டும். எல்லா பள்ளிகளிலும் ஆறு வாரங்கள், எட்டு வாரங்கள் கோடை விடுமுறை இருப்பது போல, ஒவ்வொரு வருடமும் மனிதகுலம் முழுவதும் மூன்று வாரங்கள் விடுமுறை எடுக்க வேண்டும். எந்த இயந்திரங்களும் இயங்கக் கூடாது, எந்த மோட்டார் வாகனங்களும் ஓடக்கூடாது; எந்த தொழில் நிறுவனங்களும் செயல்படக்கூடாது; மூன்று வாரங்களுக்கு இதுபோல எதுவும் நிகழக்கூடாது. நீங்கள் நடக்கலாம், மிதிவண்டியில் செல்லலாம், ஓடலாம், ஆனால் எந்த வகையான இயந்திரங்களையும் இயக்கக்கூடாது.

அற்புதமான மனிதர்கள் இல்லாமல் அற்புதமான உலகம் இருக்காது.

இவ்வாறு மூன்று வாரங்கள் செய்தால் அந்த மூன்று வாரங்களையும் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக நாம் உபயோகப்படுத்தலாம். இந்த உலகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், சிறந்த தொழில்நுட்பத்தினால் அது நிகழாது. சிறந்த இயந்திரங்கள் அதை நிகழ்த்தாது. இவை அனைத்தும் செயலில் ஒரு குறிப்பிட்ட அளவிலான மேம்பாட்டை மட்டும்தான் கொண்டுவரும். இந்த உலகம் உண்மையிலேயே ஒரு அற்புதமான இடமாக மாற வேண்டுமெனில், மனிதர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், சமூகத்தை மேம்படுத்துவது என்று ஒன்று கிடையாது; சமூகம் என்பது வெறும் வார்த்தைதான்; தேசம் என்பதும் ஒரு வார்த்தைதான்; உலகம் என்பதும் ஒரு வார்த்தைதான். தனிமனிதர்கள் மட்டும்தான் உண்மை. தனிமனித மாற்றம் நிகழாமல் இந்த உலகத்தில் மாற்றங்கள் நிகழாது. எனவே தற்போது இதுபோன்ற ஒரு விடுப்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில்தான் நீங்கள் அனைவரும் இந்த ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும்: 10 சதவிகித முன்னேற்றம், சரியா? நான் உங்களை, திடீரென நீங்கள் வேறு ஒருவராக மாற வேண்டும் என்று கேட்கவில்லை; உங்கள் தலையை சுற்றி ஒளிவட்டம் உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. ஏப்ரல் மாத முடிவில் உங்களுக்குள் 10 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நான் என்ன கூறுகிறேன் என்றால், இன்று உங்களுக்குள் மனதளவில் நீங்கள் எத்தகைய திறனில் இருந்தாலும், ஒரு பத்து சதவிகிதம் முன்னேற்றத்திற்கு முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் சரி - நீங்கள் சமைத்தாலும் சரி அல்லது தேனீர் தயாரித்துக் கொண்டு இருந்தாலும் சரி அல்லது தேசத்தை நடத்தி வந்தாலும் சரி - நீங்கள் எது செய்தாலும் ஒரு பத்து சதவிகிதம் மேம்பட்டு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் பத்து சதவிகித முன்னேற்றம் - உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக, மேலும் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்களோ அந்த திறனில். அனைவரும் இதை செய்யுங்கள். ஏனெனில், இதுபோன்ற ஒரு வாய்ப்பை உங்கள் வாழ்நாளில் நீங்கள் இன்னொரு முறை பெறப் போவதில்லை. ஒவ்வொரு வருடமும் இப்படி பத்து சதவிகித முன்னேற்றத்தை நாம் கொண்டுவந்தால், அடுத்த பத்து வருடங்களில் இப்போது இருப்பதை விட நூறு சதவிகிதம் நாம் மேம்பட்டு இருப்போம். ஒரு அற்புதமான தேசத்தை உருவாக்க, ஒரு அற்புதமான உலகத்தை உருவாக்க இது ஒன்றுதான் ஒரே வழி. ஏனெனில், அற்புதமான மனிதர்கள் இல்லாமல் அற்புதமான உலகம் இருக்காது.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு கோவிட் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு பாதி கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

IYO-Blog-Mid-Banner