ஞாபக சக்தியை அதிகரிக்க…

சத்குரு: நாம் விரும்புவது நடப்பதென்பது எந்த ஒரு மனிதருக்கும் அது அவர்கள் விரும்புவதால் மட்டுமே நடக்காது. அதற்குரிய திறமையை சம்பாதித்தால்தான் நடக்கும். திறமை இல்லாமல், எனக்கு இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டும் என்று நினைத்தால், பகல் கனவு தான் நடக்கும்.

நம் ஞாபக சக்தியையும் செயல்திறனையும் நம் உள்சூழ்நிலையை சரியாக கையாண்டால், பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.

வாழ்க்கை நடக்க வேண்டும் என்றால், தேவையான திறமையை நாம் சம்பாதிக்க வேண்டும். நம் திறமை, அடிப்படையாக நம் வாழ்க்கையுடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும், நம்மால் எவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்பட முடியும் என்பதை சார்ந்து இருக்கிறது.

புத்திசாலித்தனமாக செயல்படுவது, அடிப்படையாக நம் மூளை எவ்வளவு சிறப்பாக ஒருங்கமைந்து இருக்கிறது என்பதை சார்ந்திருக்கிறது. நம் நாட்டில், பழங்காலத்தில், இந்த கலாச்சாரத்தில், மூளைக்கு எப்படி பயிற்சி கொடுப்பது, அதை எப்படி முடிந்தவரை தீவிரமாக ஒருங்கமைப்பது என்று விரிவான முறைகள் இருந்தது.

மந்திரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள விதம்

இப்படி மக்கள் இருக்கிறார்கள். 1930களில் நடந்த ஒரு அழகான சம்பவம் இது. மக்கள் தொடர்ந்து மந்திரங்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். கோவில்களிலோ, எங்கேயோ ஹோமங்கள் செய்யும்போது எல்லோரும் மணிக்கணக்கில் மந்திரம் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இப்படி மந்திரம் சொல்வதை மூளையை பெரிய அளவில் ஒருங்கமைக்க பயன்படுத்தினார்கள். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தும் ஒலிகள், மூளையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மந்திரங்கள் எப்படி கட்டமைக்கப்பட்டது என்றால், கொஞ்சம் கணிதம் இருக்கும், கூடவே கொஞ்சம் கவித்துவமும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட நிலையில் முறைப்படுத்தப்பட்ட ஒலிகளை பயன்படுத்தும்போது, அது அவர்களின் மூளையை ரொம்பவே ஒருங்கமைத்ததால், அவர்களுக்கு அபாரமான நினைவாற்றல் இருந்தது. இது கிட்டத்தட்ட மனிதனுக்கு சாத்தியமே இல்லாதது. பொதுவாக நவீன காலத்தில் இது மனிதனுக்கு சாத்தியம் இல்லை என்று நாம் நினைக்கிறோம். இந்த ஒலிகளை ஒரு குறிப்பிட்ட வழியில் பயன்படுத்தியதால், அவர்களுக்கு அந்தமாதிரி ஞாபக சக்தி இருந்தது.

புரோகிதரின் ஞாபக சக்தி

ஒரு சமயம், இரண்டு பேர் காசிக்கு போனார்கள். அவர்கள் நண்பர்கள். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டு, வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அப்போது ஒரு நண்பர் அடுத்தவருக்கு வியாபாரம் செய்வதற்காக 50,000 ரூபாய் கொடுப்பதாக ஒத்துக்கொண்டார், அங்கேயே வாய்மொழியாக ஒப்பந்தம் செய்துகொண்டார்கள், செயல்படுத்தினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, எழுதிய பத்திரம் இல்லாததால், இவர் பணத்தை திரும்ப கேட்டபோது, அடுத்தவர் சொன்னார், "நீ என்னிடம் கொடுக்கவே இல்லை, அப்படி எதுவும் நடக்கவே இல்லை."

அதனால் அவர் நீதிமன்றத்திற்கு போனார். நீதிமன்றத்திற்கு போனபோது அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் “பணம் கொடுத்தேன்,” என்று சொன்னார், ஆனால் அவரிடம் ஆதாரம் இல்லை. அப்போது நீதிபதி, "நீங்கள் ஏதாவது ஆதாரம் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் நாங்கள் எதுவும் செய்யமுடியாது," என்று சொல்லிவிட்டார்.

அப்போது அவருக்கு ஞாபகம் வந்தது. அவர்கள் ஆற்றில் இருந்தபோது, அவர்களின் அருகில் ஒரு பிராமண புரோகிதர் குளித்துக் கொண்டிருந்தார். “நாம் பேசியதை அவர் கேட்டிருப்பார், அவரை ஒரு சாட்சியாக கொண்டுவரலாம்,” என்று நினைத்தார். 

அவரை தேடி காசிக்கு போனார், அவரை கண்டுபிடித்தார், ஆனால் பெரிய ஏமாற்றம், ஏனென்றால் அந்த புரோகிதருக்கு ஆங்கிலம் தெரியாது. இவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டபோது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள், இந்த புரோகிதருக்கு ஆங்கிலம் தெரியாது. இது பிரயோஜனம் இல்லாதது என்று நினைத்தார். அப்போது அந்த பிராமணர், "ஏன், என்ன ஆச்சு?" என்று கேட்டார். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் சொன்னார், "நான்கு வருடங்களுக்கு முன்பு நாங்கள் இங்கே குளித்துக் கொண்டிருந்தோம், நீங்களும் இருந்தீர்கள், உங்களை ஒரு சாட்சியாக அழைக்கலாம் என்று நினைத்தேன்" என்றார். 

அதற்கு அந்த பிராமணர், "சரி, நீங்கள் சொன்னதை என்னால் திரும்ப சொல்ல முடியும், நீங்கள் இருவரும் பேசிக்கொண்டதை நான் அப்படியே ஒப்பிக்க முடியும்," என்று சொன்னார்.

அவருக்கு ஆங்கில மொழி தெரியாது, ஆனால் அவர்கள் பேசியதை ஒரு வார்த்தை விடாமல் திரும்ப சொன்னார். அவர்கள் உச்சரித்த ஒவ்வொரு சப்தமும் அவருக்கு நினைவிருந்தது. அவருக்கு அதனுடைய அர்த்தம் தெரியாது, மொழி தெரியாது, ஆனால் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே சொன்னார். அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து வழக்கில் வெற்றி அடைந்தார்.

அசையாமல் இருக்க கற்றுக்கொண்டால்…

அசையாமல் இருத்தல், Stillness

நம் ஞாபக சக்தியையும் செயல்திறனையும் நம் உள்சூழ்நிலையை சரியாக கையாண்டால், பெரிய அளவில் மேம்படுத்த முடியும். இதற்கு ஒரு எளிமையான காரியம் செய்யவேண்டும். நீங்கள் எல்லோரும் விருப்பமாக இருந்தால், நாம் இன்னும் பல படிகளை கொண்டுவரலாம். ஆனால், ஆரம்பத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிய விஷயம், அசையாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்கேயாவது உட்கார்ந்தால், அசைவில்லாமல், துளிகூட அசையாமல் உட்கார கற்றுக்கொள்ள வேண்டும். சும்மா அசையாமல் உட்கார்ந்தால், உங்கள் உணர்திறனும், மூளையை பயன்படுத்தும் திறனும் ரொம்பவே அதிகமாவதை கவனிப்பீர்கள். 

நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கின்ற, கேட்கின்ற, நுகர்கின்ற, ருசிக்கின்ற, தொடுகின்ற எல்லாமே பதிவாகிறது. 

உங்கள் ஞாபகத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் எல்லாம் அது தேவைப்படும்போது வெளியே கொண்டுவருகின்ற திறன் பற்றியது தான். அது பதிவாவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது எல்லாவற்றையும் பதிகிறது. ஆனால் நீங்கள் விரும்புவதை வெளியே எடுக்க முடியவில்லை. நீங்கள் இதை எடுக்க விரும்பினால், வேறு ஏதோ வருகிறது.

தேவை தெளிவு தான்

அது தெளிவு சார்ந்த விஷயம், ஞாபக குறைவு இல்லை. ஞாபக சக்தி என்றால், இந்த போனில் memory குறைவாக இருக்கிறது என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்? அதனுடைய பதிவு செய்கின்ற ஆற்றல் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம், இல்லையா?

நான் இரண்டை அழுத்தும்போது, ஐந்து வந்தது என்றால், என்ன அர்த்தம்? மோசமான memoryயா, மோசமான keyboardடா? மோசமான keyboard.

அதனால், இது மோசமான keyboard பற்றியது. இது மோசமான நினைவாற்றல் பற்றியது இல்லை. நீங்கள் இரண்டை அழுத்தினால், இரண்டு வருவது ரொம்பவும் முக்கியம், ஐந்து வரக்கூடாது. இது மோசமான keyboard பற்றியது. ஞாபக சக்தியை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள். ஞாபக சக்தி நன்றாகவே இருக்கிறது. 

நீங்கள் பார்க்கின்ற எல்லாமே பதிவாகிறது. உங்களால் சரியான நம்பரை டைப் செய்ய முடியவில்லை, அவ்வளவுதான் பிரச்சனை, இல்லையா? இது ஞாபக சக்தியைப் பற்றிய விஷயம் இல்லை, இது தெளிவைப் பற்றியது. அதனால், நாம் தெளிவிற்காக வேலை செய்யவேண்டும். நமக்கு மனத் தெளிவை தருவது எது? 

தெளிவைக் கொண்டு வருவதற்கு சில வழிகள்

முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, நமக்கு தெளிவு இல்லை என்றால், ஒரு எளிமையான விஷயம், எல்லாவற்றையும் ஒருவித துல்லியத்தோடு செய்வது. இதுதான் ஹடயோகா. உங்கள் பாதங்கள் எங்கே இருக்க வேண்டும்? இது எல்லாம் சரிசெய்யும்போது, என் தலை குனிந்து இருக்கிறது, ஓ! இப்படி இல்லை, இப்படி, துல்லியமாக!

இப்போது நீங்கள் கீழே போகிறீர்கள். நீங்கள் உட்காரும்போது இதை கவனியுங்கள், சரியா? உங்கள் பேண்ட் எப்படி இருக்க வேண்டும்? இப்படி. நீங்கள் என்ன கொண்டு வந்திருந்தாலும், உங்கள் புத்தகம், உங்கள் நோட்புக் எங்கே இருக்க வேண்டும்? உங்கள் பேனா எங்கே இருக்க வேண்டும்? 

அது அது அங்கங்கே இருக்க வேண்டும், இதை மட்டும் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்திலும், உங்களது செயலில் துல்லியத்தைக் கொண்டுவந்தால், அது உங்கள் மனதில் நடக்கும். என்ன கவனிப்பீர்கள் என்றால், நான் இதை சொன்னால், அது இரண்டாம் நம்பருக்கு போகும், ஐந்துக்கு போகாது. இப்போது குழம்பி போகிறது, அதனால் மெதுவாக செய்யுங்கள். 

இரண்டு... மூன்று... ஒன்று... 

சரி, இரண்டு இங்கே, 

மூன்று இங்கே, 

ஒன்று இங்கே.

உங்கள் வாழ்க்கையுடைய ஒவ்வொரு அம்சத்திலும் இதை செய்யுங்கள். நீங்கள் தூங்கப் போகும்போது அது எப்படி இருக்க வேண்டும், எல்லாமே!

உங்கள் ரூமிற்கு போகிறீர்கள், அது எப்படி இருக்க வேண்டும்? ஆசனத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதே துல்லியத்தை உங்கள் வாழ்க்கையிலும் கொண்டுவாருங்கள், அப்போது மெல்ல மெல்ல மனம் தெளிவாக மாறும்.

அது எல்லாவற்றையும் துல்லியமாக நடத்தும். நீங்கள் செய்யவேண்டிய எளிமையான பயிற்சி, இந்த ஷணத்தில் இருந்து, நீங்கள் நிற்கும்போது, உட்காரும்போது, நடக்கும்போது, இங்கே இருந்து வெளியே போகும்போது, நீங்கள் இப்படியே பார்க்க வேண்டும். 

என்ன மாதிரி பார்க்க வேண்டும். மத்ஸ்யேந்திராசனம் மாதிரி. இதில் எத்தனை தூண்கள் இருக்கிறது? எல்லாவற்றையும் எண்ணப் பார்க்காதீர்கள். முதல் வரிசை, சும்மா இப்படி பார்த்தால், ஐந்து தூண்கள். இது உங்களுக்குள் பதிய வேண்டும். ஐந்து தூண்கள், ஒரு பாத்திரம், ஒரு உட்காரும் பாறை, ஒரு பெரிய பாறை, ஒரு குளம், இன்னொரு மூன்று நான்கு தூண்கள், ஒரு கதவு, எவ்வளவு உயரம்? 12 அடி போல தெரிகிறது. 

எல்லாவற்றிலும் இதை செய்யுங்கள். இங்கே இருந்து அங்கே போவதற்கு எத்தனை படிகள்? ஒன்று, இரண்டு என்று எண்ணக்கூடாது. நீங்கள் மூன்று அடி நடந்த பிறகு, சரி, அது மூன்று. இன்னும் மூன்று, இன்னும் மூன்று, இன்னும் மூன்று என்று நினைக்கிறேன். சில நாட்களுக்குப் பிறகு பதினொன்று அல்லது நான்கு அல்லது ஐந்து என்று எண்ணுங்கள். சும்மா யோசிக்காமலே மெதுவாக தெரிய வேண்டும். சரி, நான் 12 படி நடந்திருப்பேன். 

இதுதான் யோகா. 

படியில் ஏறுதல்

இயல்பாக மாறும் தெளிவு

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இது தானாக நடக்கும். ஆனால் இப்போது நாம் அவசரமாக இருக்கிறோம். அதனால், அந்த துல்லியத்தைக் கொண்டுவருவதற்கு மனதையும் பயன்படுத்துங்கள். உங்கள் உடலில் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற அதே துல்லியத்தை உங்கள் மனதிலும் கொண்டு வாருங்கள். மனமும் உடலை பின்பற்ற வேண்டும். அப்போது இயல்பாகவே தெளிவு வருவதை பார்க்க முடியும். 

ஞாபகசக்தி பிரச்சனை இல்லை, எல்லாம் எப்படியும் பதிவாகி இருக்கிறது. நான் இப்போது உங்களை திட்டப் போகிறேன். உங்களை மோசமாக திட்டப் போகிறேன், அதை மறக்க முயற்சி செய்யுங்கள். மறப்பீர்களா? வாழ்நாள் முழுக்க ஞாபகம் வைத்திருப்பீர்கள். ஆமாவா இல்லையா? உங்களுக்கு அபாரமான ஞாபகசக்தி இருக்கிறது, ஆனால் கெட்ட வார்த்தைகள் மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

உங்கள் மனதை இப்படி பயன்படுத்தினீர்கள் என்றால், அது எப்படி ஆகிவிடும் என்றால், அதை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அப்போது என்ன கவனிப்பீர்கள் என்றால், மெதுவாக மனம் மிக மிகத் தெளிவாகும். உங்கள் மனம் ஒருமுனைப்பாக ஆகும்போது, அது சக்திவாய்ந்த கருவி. இது உங்களுக்குள் நீங்கள் செய்ய வேண்டியது. அப்போதுதான் உங்களால் மனதிற்கு பின்னால் நழுவிப்போக முடியும். கண்ணாடிக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரிந்தால், அது எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும்.