முந்தைய பகுதியில் நாம் இந்திரனின் சடங்குகளை தலைமை ஏற்று நடத்தும் தேவர்களின் குருவான பிரஹஸ்பதியை பற்றியும் அவரது அன்புக்கு ஏங்கிய மனைவி தாரா, சந்திரன் மீது காதல் வயப்பட்டதையும் பார்த்தோம். கோபமடைந்த பிரகஸ்பதி, தாரா சந்திரனின் குழந்தையை ஆணாகவோ பெண்ணாகவோ இன்றி பிறக்க சபிக்க, குழந்தை புதன் என்ற பெயரில் கேள்விகளுடன் வளர்கிறது.

ராஜா சுத்தியும்னா வேட்டைக்கு செல்கிறார்

சத்குரு: ஒரு நாள் சுத்யும்னா என்ற அரசன் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்றார். அது சிவனும் பார்வதியும் வசித்து வந்த வனப்பகுதி. அங்கே வாழ்ந்த வனவிலங்குகளை சுட்டிக்காட்டி குறுநகையுடன் சிவனை வம்பிழுக்க துவங்கினார் பார்வதி்.

"உங்கள் மீது எனக்கு அளப்பரிய காதல் இருக்கிறது. ஆனால். இந்த கானகத்தில் வாழும் பிடரிமயிர் அடர்ந்த ஆண் சிங்கத்தின் கம்பீரம், தோகை விரித்து ஆடும் மயிலின் அழகு, யானையின் பிரம்மாண்டம் எல்லாமே உங்களுக்கு சவால் விடுவது போல இருக்கிறது. இங்கே உங்களைத் தவிர வேறு எந்த ஆணும் இருக்கக்கூடாது என விரும்புகிறேன்." என்றாள் பார்வதி.

காதல் மிகுதியில் இருந்த சிவன் "அவ்வளவுதானே... காட்டில் வாழும் எல்லா உயிரினங்களும் பெண்ணினமாக மாறிவிடுங்கள்," என்றார். ஆண் சிங்கங்கள் எல்லாம் பெண் சிங்கங்களாக, ஆண் மயில்கள் எல்லாம் பெண் மயில்களாக, ஆண் யானைகள் எல்லாம் பெண் யானைகளாக என இப்படியே ஒவ்வொரு உயிரினமும் பெண்ணாக மாறியது.

காட்டுக்குள் வேட்டையாட வந்திருந்த அரசன் சுத்யும்னனும் பெண்ணாக மாறினார்! தன்னைப் பார்த்த சுத்யும்னன் அதிர்ந்தார் - வீரம் மிகுந்த அரசனாக வேட்டையாட வந்தவர், பெண்ணாக மாறிய விசித்திரம் புரியாது தவித்தார். "யார் என்னை இப்படி மாற்றியது? யக்ஷனா... பைசாசமா... யாருடைய சாபம் இது..?" என்று புலம்பி கதறினார். ஆற்றாமை பொறுக்காமல் தன்னை இப்படி மாற்றியவர்களை தேடி அலைந்தார்.

ஒரு வழியாக சிவனும் பார்வதியும் காதலாகி கசிந்துருகும் வனப்பகுதியை வந்து சேர்ந்தார். "நான் ஒரு ஆண்மகன். அரசன். எனக்கென்று ஒரு குடும்பமும் இருக்கிறது. வேட்டைக்குதானே வந்தேன். என்னை இப்படி பெண்ணாக மாற்றி விளையாடுகிறீர்களே இது நியாயமா. நான் இப்படியே எப்படி என் தேசம் செல்வேன்?" என்று சிவனின் காலில் விழுந்தார். "நான் செய்ததை என்னால் திரும்பப் பெற முடியாது, எனவே தேய்பிறையின் போது பெண்ணாகவும், வளர்பிறையில் ஆணாகவும் இருக்கும்படியாக கொஞ்சம் சரி செய்து விடுவோம்," என்றார் சிவன்.

பிறந்தது சந்திரவம்சம்

மீண்டும் தன் அரண்மனைக்கு திரும்ப மறுத்த சுத்யும்னன் அந்த காட்டிலேயே தங்கினார். மாதத்தில் பாதி நாட்கள் ஆணாகவும், மீதி பாதி நாட்கள் பெண்ணாகவும் ஈலா என்ற பெயருடன் வாழ்ந்து வந்தவர், ஒருநாள் புதனை சந்தித்தார். இருவருக்கும் பொருத்தம் சிறப்பாக அமைந்தது. இருவருமே ஆணாகவும் பெண்ணாகவும் சரிசமமாக இருந்தார்கள். அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்தார்கள். அந்த குழந்தைகளே சந்திர வம்சத்தவர்களின் முதல் தலைமுறை ஆனார்கள்.

சந்திரவம்சத்தார் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருந்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, கலைநயம் மிக்கவர்களாக, அதேசமயம் உறுதியாக நம்பிக்கை வைக்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள்.

இந்த தேசத்தில் சூரியவம்ச அரசர்கள் சந்திரவம்ச அரசர்கள் என அரசாட்சியில் இருந்திருக்கிறார்கள் - சூரியனின் வழித்தோன்றல்கள் மற்றும் சந்திரனின் வழித்தோன்றல்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். சூரிய வம்சத்தவர்கள் வெற்றிவீரர்களாக, எதிலும் தெளிவானவர்களாக, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற அணுகுமுறையோடு இருந்தார்கள்.

சந்திரவம்சத்தார் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருந்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, கலைநயம் மிக்கவர்களாக, அதேசமயம் உறுதியாக நம்பிக்கை வைக்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள். சூரிய வம்சத்தவர்களில் முதலில் குறிப்பிடத்தக்கவர் மனு. அடுத்து இக்ஷவாகு. பின்னர் தொடர்ந்த வம்சாவளியில் பலர் தோன்றினார்கள். பாகீரதன், தசரதன், அயோத்தியின் ராமன், ஹரிஷ்சந்திரன் என பலர் தோன்றினார்கள். இங்கே நாம் சந்திர வம்சத்தவர்களை பற்றியே பார்க்கப்போகிறோம். ஏனென்றால், கௌரவர்களில் பலர் சந்திர வம்சத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செயல்கள் உணர்ச்சி மயமாக இருப்பதன் காரணம் இதுவே.

நகுஷா பேரரசன் மலைப்பாம்பான கதை

புதன் மற்றும் ஈலாவின் குழந்தைகளில் ஒருவரான நகுஷா வளர்ந்து பேரரசனானான். ஒருமுறை தேவலோகத்தில் இந்திரனின் அரண்மனையில் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தான். இந்திரன் எங்கேயோ செல்ல வேண்டியிருந்தது. எனவே நகுஷனிடம், "என் தேவலோகத்தை சில காலம் பார்த்துக்கொள், இங்கே நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

இந்திரன் வெளியேறியதும், தனக்கு கொடுக்கப்பட்ட இந்த எளிய செயலில் அளவற்ற பெருமிதம் அடைந்தான் நகுஷா. இந்திரனின் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அங்கிருந்த அப்சர கன்னிகைகளில் தான் விரும்பியவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டான். அப்போதும் போதாதவனாக நகுஷனின் பார்வை இந்திரனின் மனைவியான சாக்ஷி மீது விழுந்தது. அவரை கட்டாயப்படுத்த துவங்கினான். "நான் இப்போது சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறேன். நானே இந்திரன். நீ என்னவள்" என்றான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நகுஷா தேவலோகத்திலிருந்து விழுகிறான்

பலவழிகளிலும் நகுஷனை தவிர்க்க முயன்ற சாக்ஷியின் மீது தன் வலிமையை பயன்படுத்தவும் முயன்றான் நகுஷன். சாக்ஷி "ஆமாம். நீ இப்போது இந்திரன்தான். ஆனால் ஒன்று மட்டும் இன்னும் நடக்க வேண்டி இருக்கிறது. சப்தரிஷிகள் உன்னை பல்லக்கில் வைத்து சுமந்து வரவேண்டும். அதன்பிறகுதான் நான் உனக்காவேன்," என்றார். உடனே நகுஷன் சப்தரிஷிகளை அழைத்து, தன்னை பல்லக்கில் வைத்து சாக்ஷியின் அரண்மனைக்கு சுமந்து செல்ல ஆணையிட்டான். அவர்களும் அவனை பல்லக்கில் சுமந்து சென்றார்கள்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிரந்தர யுத்தம்

ஏற்கனவே நாம் பார்த்ததுபோல, தேவர்களுக்கு ஆசானாக இருந்து அவர்களது பூஜைகள் சடங்குகள் அனைத்தையும் பிரகஸ்பதி கவனித்து வந்தார். அசுரர்களின் பூஜைகள் சுக்ராச்சாரியார் தலைமையில் நடந்தது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கங்கை நதியின் சமவெளிப்பகுதி நிரந்தர போர்க்களமாக இருந்தது. தேவர்கள் மலைப்பிரதேசங்களில் இருந்து சமவெளி நோக்கியும், அசுரர்கள் பாலைவனப் பகுதிகளில் இருந்து இன்னும் வளமான இந்தியாவின் இதயப்பகுதிகளில் நுழையவும் முயற்சி செய்தார்கள்.

போர்க்களத்தில் இறந்த வீரர்களுக்கு அன்று மாலையே மீண்டும் உயிரூட்டி அடுத்தநாள் போருக்கு தயார்செய்து விடுவார் சுக்கிராச்சாரியார்.

நிரந்தரமான இந்த யுத்தத்தில் அசுரர்களுக்கு ஒரு சாதகம் இருந்தது - அவர்களிடம் சுக்ராச்சாரியார் இருந்தார். ஆற்றல் நிரம்பிய சுக்ராச்சாரியாருக்கு பக்கபலமாக சஞ்சீவினியின் துணை இருந்தது. சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி, போர்க்களத்தில் இறந்த வீரர்களுக்கு அன்று மாலையே மீண்டும் உயிரூட்டி அடுத்தநாள் போருக்கு தயார்செய்து விடுவார் சுக்கிராச்சாரியார். இப்படி ஒரு படையை நீங்கள் எப்படி வெல்வது? வெட்டிச் சாய்த்தாலும் இறக்காமல் அனைவரும் அப்படியே இருந்தால் எப்படி அவர்களுடன் போர் செய்வது? மீண்டும்மீண்டும் தங்களை உயிர்ப்பிக்கும் சுக்கிராச்சாரியார் அசுரர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்தார்.

தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். எனவே, பிரகஸ்பதியின் பிள்ளையான கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் வந்து பணிவுடன், "ஆங்கீரரின் பேரனும், பிரகஸ்பதியின் மகனுமான எனக்கு கச்சன் என்று பெயர். என் முன்னோர்களின் சிறப்பை நீங்கள் அறிவீர்கள். அவர்களின் வழித்தோன்றலான என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்," என வணங்கி நின்றார்.

சுக்கிராச்சாரியாரின் சிஷ்யனாக கச்சன்

அசுரர்கள் சுக்கிராச்சாரியாரிடம், "இவன் எதிரணியை சேர்ந்தவன். சஞ்சீவினி ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காகத்தான் உங்களிடம் வந்திருக்கிறான். பேசாமல் இவனை இப்போதே கொன்று விடுவோம்," என்று எச்சரிக்கை செய்தார்கள். சுக்கிராச்சாரியார் அமைதியாக, "இந்த பிள்ளை நமக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தவில்லை. என்னுடைய சிஷ்யனாவதற்கு தேவையான தகுதியும் இவனிடம் இருக்கிறது. நான் மறுக்க இயலாது," என்றார். தகுதியுள்ளவர்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், அதை மறுக்கக்கூடாது என்பதே அன்றைய தர்மமாக இருந்தது.

கச்சனை சிஷ்யனாக சுக்கிராச்சாரியார் ஏற்றுக்கொண்டார். தான் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என்பதையும் நிரூபித்தான் கச்சன். தன் குருவுக்கான பணிவிடைகளை கவனித்து செய்தான், அங்கு நடக்கும் எல்லாவற்றிலுமே ஏதாவது ஒருவகையில் அவனது பங்களிப்பு இருந்தது. சுக்கிராச்சாரியாருக்கு தேவயானி என்று ஒரு மகள் இருந்தாள்.

தேவயானியின் பார்வை மெல்ல கச்சனின் மீது விழுந்தது. காதல் வயப்பட்டாள். ஆனால் இந்த இளம் பெண் மீது கச்சனின் கவனம் திரும்பவேயில்லை. அவள் என்ன செய்தும் கச்சனின் கவனத்தை ஒரு ஷணமும் தன்மீது திருப்ப முடியவில்லை. தான் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறோம் என்பதிலிருந்து அவனது கவனம் மாறவே இல்லை. சஞ்சீவினிதான் அவனது நோக்கம் என்பது அசுரர்களுக்கும் தெரிந்திருந்தது.

அசுரர்களின் தாக்குதல்

ஒரு நாள் தன் குருவின் கால்நடைகளை அருகில் இருந்த வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்று இருந்தான் கச்சன். அசுரர்கள் கச்சன் மீது பாய்ந்து தாக்கி கொன்றதுடன், உடலை பலநூறு துண்டுகளாக்கி வனவிலங்குகளுக்கு இறையாக்கினர்.

மகளின் கெஞ்சலை பார்த்த சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி கச்சனை மீண்டும் உயிர்ப்பித்தார்.

மாலையில் பசுக்கள் மட்டும் தனியாக வீடு திரும்பின. கச்சனை காணாமல் துடித்துப்போன தேவயானி நேராக சுக்கிராச்சாரியாரிடன் சென்று கதறி அழுதவாறே, "கச்சன் இன்னும் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ ஏதோ செய்திருக்கிறார்கள். அவர் எங்கிருந்தாலும் நீங்கள் மீண்டும் உயிருடன் இங்கே கொண்டு வரவேண்டும்" என்றாள். மகளின் கெஞ்சலை பார்த்த சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி கச்சனை மீண்டும் உயிர்ப்பித்தார்.

என்ன நடந்தது என்று கேட்ட சுக்கிராச்சாரியாரிடம் அசுரர்கள் தன் மீது பாய்ந்து கொன்றதை விளக்கினான் கச்சன். "நீ எதிர்தரப்பை சேர்ந்தவன் என்பதால் அசுரர்களுக்கு உன்னை பிடிக்கவில்லை. இனிமேல் நீ கவனமாக இரு. இன்னும் நீ என் மாணவன் தான்," என்றார்.

சிலநாட்களுக்கு பிறகு, காலைநேர பூஜைக்காக மலர்களை பறித்துவரச் சென்ற கச்சனை அசுரர்கள் வழிமறித்து பிடித்து கொன்றார்கள். அவனது எலும்புகளையும் தசைகளையும் அரைத்து உப்பான கடல்நீரில் கலந்தார்கள். உடல் உறுப்புகளை அரைத்து சுக்கிராச்சாரியார் அருந்தும் பானத்தில் சிறிதளவு கலந்து கொடுத்தார்கள். இது எதையும் அறியாத சுக்கிராச்சாரியார் அதை குடித்தும்விட்டார்.

மாலை மயங்கியும் வீடு திரும்பாத கச்சனுக்கு என்ன நடந்ததோ என எண்ணி கதறினாள் தேவயானி. ஆனால், இம்முறை சுக்கிராச்சாரியார், "இறப்பது அவனது விதி என்று நினைக்கிறேன். அடிக்கடி இறந்துகொண்டே இருக்கிறான். அவனுக்கு திரும்பவும் உயிர் கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு புத்திசாலி, நீ பிறந்திருக்கும் வம்சம், உனக்கு இருக்கும் உயிர் பற்றிய அனுபவஅறிவு - எல்லாம் இருந்தும் பிறப்பு இறப்பை பார்த்து நீ அழுவது சரியா? எல்லா உயிரினங்களுக்கும் நடப்பதுதானே இது.

அவன் இறப்பு இறப்பாகவே இருக்கட்டும். அடிக்கடி ஒருவனை இப்படி உயிர்பிப்பது சரியும் அல்ல," என்றார். ஆனால், தேவயானி இதயம் நொறுங்கினாள். "கச்சன் மீண்டும் வரவேண்டும் அல்லது நான் இந்த குளத்தில் மூழ்குவேன்," என்றாள். இது நடக்க விரும்பாத சுக்கிராச்சாரியார், "கடைசியாக இந்த ஒருமுறை மட்டும் முயற்சி செய்கிறேன்," என்று ஆறுதல் கூறினார்.

கச்சனுக்கு சஞ்சீவினி மந்திர உபதேசம்

சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியார் பயன்படுத்த முயற்சி செய்ததும், தன் வயிற்றில் ஏதோ உருள்வதையும், ஒலியையும் கேட்டார். கச்சன் தான் அது. கோபமடைந்த சுக்கிராச்சாரியார், "யார் உன்னை இப்படி செய்தது, இதுவும் அசுரர்களின் வேலைதானா? அவர்களால் எப்படி இப்படி செய்ய முடிகிறது?" என்றார். அவரது வயிற்றுக்குள் இருந்தபடியே தன்னை கொன்றது, அரைத்து கடலில் கலந்தது, தனது உறுப்புகளை சுக்கிராச்சாரியார் பருகும் பானத்தில் கலந்தது என எல்லாவற்றையும் கச்சன் கூறினான்.

அங்கிருந்து கிளம்பிய கச்சனிடம் தேவயானி, "நீ இங்கிருந்து போக முடியாது. நான் உன்மீது காதல் கொண்டிருக்கிறேன்," என்றாள்.

நடந்ததை முழுமையாக கேட்ட சுக்கிராச்சாரியார் கோபத்தின் உச்சிக்கே சென்றார். "இது எல்லை தாண்டி போகிறது, என் வயிற்றுக்குள் இருக்கும் இவனை இப்படியே இறக்க விட்டுவிட வேண்டும், அல்லது இவனை உயிர்ப்பிக்க நான் இறக்க வேண்டும்," சற்று சிந்தித்தவர், "பேசாமல் என் பதவியை துறந்து தேவர்களின் பக்கமே சேர்ந்துவிடலாம் போலிருக்கிறது. என் வயிற்றுக்குள்ளேயே இந்த பிள்ளையை அனுப்பும் தைரியம் இந்த அசுரர்களுக்கு எங்கிருந்து வந்தது. எனக்கு இங்கு சரியான மதிப்பு இல்லை," என்றார். ஆனால், தேவயானியின் அழுகை கூடியது. "எனக்கு நீங்கள் இருவருமே வேண்டும். நீங்களோ, கச்சனோ இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் நான் குளத்தில் மூழ்கி விடுவேன்," என்றாள்.

சுக்கிராச்சாரியார் தன் வயிற்றில் இருந்த கச்சனிடம், "நீ வந்த நோக்கத்தில் வென்றுவிட்டாய். சஞ்சீவினியின் ரகசியத்தை அறிய நீ விரும்பினாய், அதற்கு நீ தகுதியானவன்தான். இதோ இப்போது முதலில் உனக்கு நான் கற்றுத்தருகிறேன், பிறகு மந்திரத்தை பயன்படுத்தி உன்னை உயிர்ப்பிக்கிறேன். நீ என் உடலில் இருந்து வெடித்து வெளிவருவாய். இதனால் நான் இறப்பேன். நீ மந்திரத்தை பயன்படுத்தி என்னை உயிர்ப்பிக்க வேண்டும். பிறகு நீ வேறு எங்காவது சென்று உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்," என்றார்.

சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தியதும், அவரது வயிற்றுக்குள் நிலவைப்போல வளரத்துவங்கிய கச்சன், ஒரு வெடிப்புடன் வெளியே வந்தான். சுக்கிராச்சாரியார் இறந்து விழுந்தார். பார்த்துக்கொண்டிருந்த தேவயானியிடமிருந்து ஒரு அலறல் கிளம்பியது.

சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்திய கச்சன், சுக்கிராச்சாரியாரை உயிர்ப்பித்தான். அங்கிருந்து கிளம்பிய கச்சனிடம் தேவயானி, "நீ இங்கிருந்து போக முடியாது. நான் உன்மீது காதல் கொண்டிருக்கிறேன்," என்றாள். எவ்வளவு பேசியும், கெஞ்சியும், விஞ்சியும் கச்சன் நிலைமாறவில்லை. "நான் உன் தந்தையின் மாணவன். அந்த வகையில் நீ என் சகோதரி. அதுமட்டுமல்ல இப்போது உன் தந்தையின் உடலில் இருந்து பிறந்தேன், எனவே எனக்கு தாயாகவும் தந்தையாகவும் அவர் இருக்கிறார். எப்படி பார்த்தாலும் நீ என் சகோதரிதான். எனவே எந்த வழியும் இல்லை, விடைபெறுகிறேன்," என்று அங்கிருந்து கிளம்பினான்.

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடராக எதிர்வரும் நாட்களில் பதிவிடப்பட உள்ளது! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!