சத்குரு:

முழுமையான ஈடுபாட்டுடன் உங்கள் வாழ்க்கையாக இதை பார்த்தால், கதை நடந்த காலத்தில் நீங்களும் உடன் நடந்து வரலாம். வேறு யாரோ ஒருவரின் கதைகள் எல்லாம் உங்களுக்கு வேண்டாம், உங்கள் அனுபவமாக நீங்கள் இதைப் பார்க்கவேண்டும் என நாம் விரும்புகிறோம். இன்றைய உங்கள் நம்பிக்கைகள், சரி-தவறுகள், விதிமுறைகள் என எதுவாக இருந்தாலும் அதை 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் மீது திணித்து ஒப்பிட்டு பார்ப்பது நமக்கு வேண்டாம். அது நியாயமானதாகவும் இருக்காது. அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, அவர்களைப் போலவே சிந்தித்து, அவர்களாகவே மாறி அன்றைய வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள். பூமிக்கும் மற்ற உயிரினங்களுக்குமான பரிமாற்றம், அன்றைய சூழ்நிலையில் சாதாரண நிகழ்வாக இருந்தது.

பூமிக்கும் மற்ற உயிரினங்களுக்குமான பரிமாற்றம், அன்றைய சூழ்நிலையில் சாதாரண நிகழ்வாக இருந்தது.

உங்களால் நம்பவே முடியாத பல அம்சங்கள் மகாபாரதத்தில் இருக்கிறது. நீங்கள் எதையுமே நம்பாமல் இருக்கத் தேவையில்லை. இப்போது 21ம் நூற்றாண்டில், எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதைவிட எல்லாவற்றையும் பிரித்துப் பார்ப்பதற்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இப்போது, இந்த கதை, கதையில் வரும் மனிதர்கள், மிருகங்கள், யட்சர்கள், கிண்ணரர்கள், பூதகணங்கள், தேவர்கள், தேவிகள் என யாராக இருந்தாலும் அவர்களை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோம். அப்போதுதான் இது ஏன் இப்படி நடந்தது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். எந்த விதத்தில் இந்த கதை உங்களுடன் சம்பந்தமாக இருக்கிறது என்பதும் முக்கியமானது. பிரித்துப் பார்க்கும் மனநிலையோடு அணுகும்போது, இந்த கதையின் உயிரோட்டத்தையும், நோக்கத்தையும் நீங்கள் தொலைத்துவிடக்கூடும்.

பிரகஸ்பதி - இந்திரனின் ஆசான்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கல்வியறிவும், சடங்கு, சம்பிரதாயங்களில் தேர்ச்சியும் நிறைந்தவராக பிரகஸ்பதி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது புகழ் பரவ துவங்கியதும், தேவர்களின் தலைவனான இந்திரன் தனது பூஜைகளை நடத்த அவரை தலைவராக நியமித்தான். அப்போது துவாபர யுகம் நடந்து வந்ததால், மக்களின் வாழ்க்கையில் சடங்குகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பொருட்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்தி, தங்கள் வாழ்விலும் வாழ்க்கை சூழ்நிலையிலும் மட்டுமல்லாது மற்றவர்களின் வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தும் வழிமுறைகளை அன்றைய மக்கள் கற்றிருந்தார்கள். சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த இந்த கலாச்சாரத்தின் மிச்சம் நமது தேசத்தின் தென்பகுதியில் இன்றும் உயிருடன் இருக்கிறது. தேசத்தின் மற்ற எந்த பகுதியை விடவும், அதிகமான சடங்குகளையும் அதன் தூய்மையையும் கேரளம் தன் மண்ணில் இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

பிரகஸ்பதியும் அவரது மனைவி தாராவும்

பிரகஸ்பதி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார். அவரது மனைவியின் பெயர் தாரா. பிரகஸ்பதி 'வியாழன்' கோளின் பிரதிநிதியாக இருந்தார். 'தாரா' என்பதற்கு நட்சத்திரம் என்று பொருள். பழங்கால இந்தியாவில், எல்லா சடங்குகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான இடம் இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரகஸ்பதியின் காலத்தில், ஆணின் வாழ்க்கையில் பெண் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருந்ததால், பெண்ணை பயன்படுத்தி கொள்வதோ, தவறிழைப்பதோ, ஒதுக்குவதோ நடக்க முடியாதவாறு சமூக சூழல் என்று அழைக்கப்படும் "தர்மம்" உறுதி செய்திருந்தது.

தனது மனைவியின் துணையின்றி ஒரு ஆணால் தனித்து எந்த சடங்கும் செய்ய முடியாது என்ற இந்த ஏற்பாடு, உடல்ரீதியாக வெளிசூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை இருப்பதை உறுதிசெய்தது. தன் மனைவியின் துணையில்லாமல் ஆணால் ஆசிர்வாதம்கூட பெறமுடியாது என்ற நிலை இருந்தது. மனைவி இல்லாமல் சொர்க்கத்திற்கும் போக முடியாது, மனைவி இல்லாமல் முக்திக்கும் வழியில்லை. எல்லா சடங்குகளும், எந்தவகையிலும் பெண்ணை தவிர்த்துவிட்டு நடத்த முடியாதவாறு சமூகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், எதிர்பாராதவிதமாக இன்றைய சுதந்திரம் அவர்களது பல சிறப்புரிமைகளை பறித்துக் கொண்டுள்ளது. இன்று பெண்களுக்கு ஓரளவு சமஉரிமை நிலவுகிறது. 'ஓரளவு' என்று நாம் சொல்ல காரணம், சட்டப்படி பெண்கள் சமமாக இருந்தாலும், நடைமுறையில் இது 'ஓரளவுதான்' சாத்தியமாக இருக்கிறது. இப்போது பெண்களுக்கு கிடைக்கும் சம உரிமையும்கூட தொழில்நுட்ப வளர்ச்சி இருபாலருக்கும் சமவாய்ப்பு ஏற்ப்படுத்தியதால்தான். மனிதம் மலர்ந்ததால் அல்ல.

பிரகஸ்பதியின் காலத்தில், ஆணின் வாழ்க்கையில் பெண் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருந்ததால், பெண்ணை பயன்படுத்தி கொள்வதோ, தவறிழைப்பதோ, ஒதுக்குவதோ நடக்க முடியாதவாறு சமூக சூழல் என்று அழைக்கப்படும் "தர்மம்" உறுதி செய்திருந்தது. உடல் வலிமையால் ஆணை நெருங்க முடியாத இடத்தில் பெண் இருந்தாலும், ஆணுக்கு அருகில் பெண் இருந்தால் மட்டுமே ஆன்மீக பரிமாணம் சாத்தியமானது. இதனால் பெண்ணை ஆண் மதிக்கும் சூழல் நிலவியது.

நிலாவும் நட்சத்திரமும்

தேவர்களின் ஆஸ்தானத்தில் இருந்தாலும், தான் செய்யும் அனைத்திற்கும் தாராவின் துணை பிரகஸ்பதிக்கு அவசியமாக இருந்தது. தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே தாராவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த பிரகஸ்பதியின் இயல்பில் மலருக்கு மலர் தாவும் குணம் இருந்தது. இதை கவனித்துவந்த தாரா, ஒருநாள் வானில் மிதந்த முழுநிலவை பார்த்து அதன் தலைவனான சந்திரன் மீது காதல் வயப்பட்டார்.

பிரகஸ்பதி கடும் கோபமடைந்தார். தனது மனைவியை மட்டும் பிரகஸ்பதி இழக்கவில்லை, அவரது தலைமை பதவி, அவரது கௌரவம், சமூகத்தில் இருந்த மதிப்பு, இதனுடன் தேவலோகத்தில் நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது.

சந்திரனும் தாராவைக் காண நேரில் பூமிக்கு வந்தார். காதலில் இருந்த தாரா, சில நாட்களில் பிரகஸ்பதியை பிரிந்து சந்திரனுடன் வெளியேறினார். இதனால் பிரகஸ்பதி கடும் கோபமடைந்தார். தனது மனைவியை மட்டும் பிரகஸ்பதி இழக்கவில்லை, அவரது தலைமை பதவி, அவரது கௌரவம், சமூகத்தில் இருந்த மதிப்பு, இதனுடன் தேவலோகத்தில் நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், இந்திரனை அழைத்து "என் மனைவியை மீண்டும் என்னிடம் அழைத்து வரவேண்டும், இல்லையென்றால் என்னால் தொடர்ந்து உங்களுக்காக சடங்குகளை நடத்த முடியாது," என பிரகஸ்பதி கூறினார். தன் நலனுக்காக தாராவை மீண்டும் பிரகஸ்பதியுடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தினார் இந்திரன்.

ஒரு குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது முதன்முறையாக நிகழ்ந்தது. "திரும்பி வந்தே தீரவேண்டும்" என்ற இந்திரனுக்கு, தாராவிடமிருந்து "என் காதல் அதற்கு மேல் இருக்கிறது" என்பதே பதிலாக கிடைத்தது. இந்திரன் "உன் உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை. நீ பிரகஸ்பதியுடன் சேர்ந்து வாழ்வதே தர்மம். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே எனது சடங்குகள் தொடர்ந்து நடக்கும்," என்று தாராவை மீண்டும் பிரகஸ்பதியுடன் சேர்த்து வைத்தார்.

தாராசந்திரனின் குழந்தை

தாரா தாய்மை அடைந்தார். இது யாருடைய குழந்தை என்பதை அறிய விரும்பினார் பிரகஸ்பதி. தாரா பதில்பேச மறுத்தார். மக்கள் மெல்ல குழுமினார்கள். அப்போதும் தாரா பதில் பேசவில்லை. அப்போது, "உண்மையில் நான் யாருடைய குழந்தை?" என்று இன்னும் பிறக்காத அந்த குழந்தை கருவறையில் இருந்து கேள்வி எழுப்பியது. கருவாக இருக்கும் போதே தன் மூலத்தை அறிந்துகொள்ள விரும்பும் குழந்தையின் புத்திசாலித்தனத்தை மெச்சிய மக்கள், தாரவிடம், "உன் கணவனிடம் நீ சொல்ல மறுக்கலாம், அந்த கடவுளிடம் சொல்ல மறுக்கலாம், ஆனால் இன்னும் பிறக்காத உன் குழந்தையின் கேள்விக்கு நீ பதில் சொல்ல மறுக்கமுடியாது," என்றார்கள். "இது சந்திரனின் குழந்தை," என்றார் தாரா.

குழந்தை பிறந்ததும், புதன் கிரகத்தின் நினைவாக பெயரிடப்பட்டது.

தன் மனைவி இன்னொரு ஆணின் குழந்தையை சுமப்பதை கேட்ட பிரகஸ்பதி கோபத்தில் "நீ ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் பிறப்பாய்," என்று குழந்தைக்கு சாபமிட்டார். குழந்தை பிறந்ததும், புதன் கிரகத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. "நான் ஆணாக வளர்வதா? பெண்ணாக வளர்வதா? என்னுடைய தர்மம் என்ன? நான் சந்நியாசி ஆவாதா? திருமணம் செய்து கொள்வதா? நான் ஆணை மணப்பதா அல்லது பெண்ணை மணப்பதா? என்று தன் தாயை கேள்விகளால் துளைத்தெடுத்து புலம்பியவாறே குழந்தை வளர்ந்தது.

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடராக எதிர்வரும் நாட்களில் பதிவிடப்பட உள்ளது! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!