சகுந்தலையின்‌ பிறப்பு

சத்குரு:

மன்னன்‌ புரு‌-வுக்கு ஒருசில தலைமுறைக்குப் பிறகு, விஸ்வாமித்திரர் என்று அழைக்கப்படும் கௌசிகன் அரசனாகிறான். ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இருக்கும் சக்தியைப் பார்த்து, அவர்கள் முன் அரசனது பலம் ஒன்றுமில்லை என்பதை உணர்கிறான். அரசனாகப் பிறந்தாலும், தானும் முனிவனாக வேண்டும் என முடிவு செய்து காட்டுக்குள் சென்று தவம் செய்யத் துவங்கினார். கௌசிகன் தவத்தில் ஈடுபடும் தீவிரத்தைப் பார்த்த இந்திரனுக்கு, அவர் இலக்கை அடைந்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் வந்தது. எனவே மாய வலைவீச தனது அப்சர கன்னிகைகளில்‌ இருந்து ‌மேனகையை‌ அனுப்புகிறான்.

மேனகையின் ஒரே‌ நோக்கம் விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்து சாதனாவை‌ தடுப்பதே. தனது முயற்சியில் வெற்றிபெரும் மேனகை ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள். சில காலத்திற்குப் பிறகு, தனது சாதனாவின்‌ மூலம் அடைந்த அனைத்தையும் கவனமின்றி இழந்துவிட்டதை‌ உணர்கிறார் விஸ்வாமித்திரர். கோபமடைந்து, குழந்தையையும், தாயையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அப்சர கன்னிகையான மேனகை, தான்‌ பூமிக்கு வந்த நோக்கம் முடிந்ததால் திரும்ப முடிவு செய்கிறாள். குழந்தையை பார்த்துக் கொள்ள அதன் தந்தையும் விரும்பாததால், மாலினி நதிக்கரையில் குழந்தையை தனியே விட்டுவிட்டு கிளம்புகிறாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கௌசிகன் தவத்தில் ஈடுபடும் தீவிரத்தைப் பார்த்த இந்திரனுக்கு, அவர் இலக்கை அடைந்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் வந்தது.

தனியாக நதிக்கரையில் இருந்த குழந்தையை அங்கே வசித்த ஷாகுன் பறவைகள் மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள துவங்கின. ஒருநாள் அந்த வழியாக வந்த கன்வ முனிவர் ஒரு பச்சிளம் குழந்தையை ஷாகுன் பறவைகள் கவனித்துக்கொள்ளும் விசித்திரத்தைப்‌ பார்த்தார். குழந்தையை ‌எடுத்துக்கொண்டு தனது ஆசிரமத்தில் ‌வைத்து வளர்க்கத் துவங்கினார். ஷாகுன்‌ பறவைகள் குழந்தையை பாதுகாத்து வந்ததால், சகுந்தலை என்று பெயரிட்டார். காலம் ‌உருண்டோட அழகான இளம் பெண்ணாக வளர்கிறாள் சகுந்தலை.

ஒருநாள் மன்னன் துஷ்யந்தன் போருக்கு கிளம்பினான். போர் முடிந்து திரும்பும் வழியில், தனது வீரர்களின் உணவுக்காக அருகில் இருந்த காட்டுக்குள் புகுந்து கண்ணில்பட்ட எல்லா ‌மிருகங்களையும் வேட்டையாடினான். அப்போது ஒரு பெரிய ‌ஆண் மான் கண்ணில்பட்டது. அதன் மீதும் அம்பை எய்தான். அம்பு இலக்கை அடைந்தாலும், காயத்துடன் மான் தப்பி ஓடியது. துரத்திச் சென்ற துஷ்யந்தன், சகுந்தலையின்‌ கரங்களில் அந்த மான்‌ தஞ்சம் புகுவதை பார்க்கிறான். சகுந்தலை, தனது வளர்ப்பு மானுக்கு ஏற்பட்ட காயத்தை பெருங்கருணையுடன் கவனித்து சிகிச்சை செய்கிறாள்‌‌. இதைப் பார்க்கும் துஷ்யந்தன், சகுந்தலையின் மீது காதல் கொண்டு அங்கேயே சிலகாலம் தங்குகிறான். கன்வ முனிவரின் அனுமதியுடன் சகுந்தலையை திருமணமும் செய்து கொள்கிறான்.

காட்டின் எல்லையில் தங்கள் அரசனுக்காக படைவீரர்கள் காத்திருக்கிறார்கள்‌, எனவே துஷ்யந்தன் விடைபெற‌ வேண்டியநிலை வருகிறது. சகுந்தலையிடம், தனது தேசத்திற்குச் சென்று சூழ்நிலையை சரிசெய்துவிட்டு வருவதாக உறுதி கூறுகிறான் துஷ்யந்தன். தன் நினைவாகவும், தங்கள் திருமணத்தை உறுதி செய்யும்விதமாகவும் தனது அரசமுத்திரை பதிந்த ஒரு மோதிரத்தை சகுந்தலையின் விரலில் அணிவிக்கிறான். இயற்கையாகவே அது சரியாக பொருந்தவில்லை. "உனக்காக மீண்டும் வருவேன்" என்று உறுதியளித்து விடைபெறுகிறான் துஷ்யந்தன்.

தன் நினைவாகவும், தங்கள் திருமணத்தை உறுதி செய்யும்விதமாகவும் தனது அரசமுத்திரை பதிந்த ஒரு மோதிரத்தை சகுந்தலையின் விரலில் அணிவிக்கிறான்.

காட்டில் வாழ்ந்தவள் ஒரே நாளில் அரசியாக மாறிவிட, மகாராணி கனவில் மூழ்குகிறாள் சகுந்தலை. கன்வரின் ஆசிரமத்திற்கு, இயல்பிலேயே கோபக்காரான துர்வாச முனிவர் ஒருநாள் வருகிறார். ஆசிரமத்தில் அவரது கண்களில் முதலில் பட்ட சகுந்தலையை பார்த்து பேசுகிறார். கண்கள் திறந்திருந்தாலும், காட்சி எதுவும் தெரியாத கனவுலகில் இருந்த சகுந்தலைக்கு தன்முன் முனிவர் நிற்பதும், பேசுவதும் கவனத்திலேயே இல்லை. தனக்கு அவமரியாதை நடந்துவிட்டதாக எண்ணிய துர்வாசர், "நீ இப்போது யாரை நினைத்துக்கொண்டு இருக்கிறாயோ, அவர் உன் நினைவே இல்லாமல் முழுவதுமாக உன்னை மறந்துவிடுவார்" என்கிறார். திடுமென சுயநினைவுக்கு திரும்பிய சகுந்தலை, "அப்படி நடக்கக்கூடாது.. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என கதறுகிறாள்.

ஆசிரமத்தில் இருந்தவர்கள் துர்வாசரிடம், துஷ்யந்தனுடன் நடந்த திருமணத்தை எடுத்துச் சொல்லி, தன் கணவன் தன்னை அழைத்துச்செல்ல வருவான் என எதிர்பார்த்து காத்திருக்கும் சகுந்தலையை மன்னிக்க வேண்டுகிறார்கள். துர்வாசருக்கு தேவையான பணிவிடைகளை கவனித்து பார்த்துக்கொண்டு, "அவள் பகல் கனவு காண்கிறாள்.. மன்னியுங்கள்" என்று வேண்டுகிறார்கள். அவர்களின்‌ உபசரிப்பில் சற்றே குளுமையான துர்வாசர், "இதை கொஞ்சம் சரிசெய்கிறேன். இப்போது துஷ்யந்தன் உன்னை மறந்துவிட்டான். ஆனால், உன்னை நினைவுபடுத்தும் ‌ஒருபொருளை பார்த்தால் மீண்டும் உன் நினைவு துஷ்யந்தனுக்கு திரும்பி வரும்" என்றார்.

பரதனின் பிறப்பு

சகுந்தலை காத்திருந்து காத்திருந்து பார்த்தாள்‌. துஷ்யந்தன் வரவேயில்லை. சகுந்தலைக்கு‌ ஒரு ஆண் குழந்தை பிறக்க, பரதன் என பெயர்சூட்டி வளர்க்கத் துவங்கினாள்‌. பாரதம் என்ற நம் தேசத்தின் பெயர் இவரிடமிருந்தே வந்தது. பாரதநாடு என எல்லா திசையிலும் புகழ்பரவ, பல குணநலன்களும் நிறைந்தவராக, பேரரசராக திகழ்ந்த பரதர் ஒரு முன்னுதாரண மனிதனாக இருந்தார்.

பரதரின்‌ குழந்தைப்பருவம் அவரது தாயுடன் காட்டில் கழிந்தது. ஒருநாள் கன்வ முனிவர் சகுந்தலையை அழைத்து, "நீ நேரே சென்று துஷ்யந்தனைப் பார்த்து, நீ அவரது மனைவி என்பதை நினைவுபடுத்து. உங்கள் இருவரின் குழந்தையாக பரதன் பிறந்திருப்பதை‌யும் தெரிவி. அரசனின்‌ மகனான பரதன், தன் தந்தையின் அறிமுகம் இல்லாமல் காட்டில் தனியே வளர்வது சரியல்ல." என்றார். சகுந்தலை தன் மகனை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு கிளம்பினாள். வழியில் அவர்கள் ஒரு நதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது. சகுந்தலை ‌இன்னமும் காதல் கனவிலேயே மூழ்கியிருந்தாள். படகில் நதியை கடக்கும்போது, நதிநீரில் கையை நனைத்துப்பார்க்க கை நீட்டுகிறாள்.. சற்றே அளவில் பெரிதாக இருந்த மோதிரம் விரலிருந்து நழுவி நதியில் விழுந்துவிடுகிறது. மோதிரம் நழுவியது தெரியாமல் கனவுலகிலேயே பயணம் செய்து அரண்மனையை அடைகிறாள்‌.

பரதன் வன விலங்குகளுடனேயே வளர்ந்தான். வலிமையானவனாக வீரமும் தீரமும் மிக்கவனாக அதேசமயம் அந்த பூமியின் அங்கமாகவும் இருந்தான். .

மன்னனிடம் பேசும் முறையையோ, அரண்மனை நடைமுறைகளை பற்றியோ எதுவும் அறியாதவளாக இருந்தாள் சகுந்தலை. துஷ்யந்தன் அரசவையில் அமர்ந்து, "யாரம்மா நீ?" என‌ வினவுகிறான். "நல்லது. என்னையே‌ தெரியவில்லையா.. நான்தான் உங்கள் மனைவி சகுந்தலை.. இது உங்கள் பிள்ளை" என்கிறாள். துஷ்யந்தனுக்குதான் நினைவு மறந்துவிட்டதே, "என்ன தைரியம் உனக்கு? இப்படியெல்லாம் பேசுவதற்கு‌ நீ யார்?" என்று கோபம் கொள்கிறான். சகுந்தலை அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள். என்ன நடந்தது என்பதே புரியவில்லை சகுந்தலைக்கு. "என் மீது அத்துணை அன்பாக இருந்தாரே.. என்‌ நினைவே இல்லாமல் பேசுகிறாரே" என்ற தவி்ப்புடன் திரும்பிச்செல்கிறாள். சமுதாய அமைப்புடனான முதல் சந்திப்பு சகுந்தலைக்கு இப்படி முடிய, ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த அடர்ந்த காட்டிற்குள் தனது பிள்ளையுடன் சென்று வசிக்கத் துவங்கினாள்.

பரதன் வன விலங்குகளுடனேயே வளர்ந்தான். வலிமையானவனாக வீரமும் தீரமும் மிக்கவனாக அதேசமயம் அந்த பூமியின் அங்கமாகவும் இருந்தான். இதற்கிடையில் சகுந்தலை தவறவிட்ட மோதிரம் ‌துஷ்யந்தனிடம் வந்து ‌சேர்கிறது. மீண்டும் அதே வனப்பகுதிக்கு வேட்டையாட‌வரும் துஷ்யந்தன் பரதனை பார்க்கிறான்.

முழு வளர்ச்சியடைந்த சிங்கத்துடன் விளையாடுவதும், வளர்ந்த யானை மீது சவாரி செய்வதுமாக இருந்த பரதனைப்‌ பார்த்து, "யார்‌ நீ? அதிசய‌ மனிதனாக இருக்கிறாயே.. கடவுளா? வேறு‌ எங்கிருந்தாவது வருகிறாயா?" என ‌கேள்வி‌ மழை பொழிந்தான். "இல்லை. நான்‌ பரதன். மன்னர் துஷ்யந்தனின்‌ பிள்ளை" என்கிறான்‌ பரதன். "நானே துஷ்யந்தன். உன்னை எப்படி நான் தெரியாமல் இருக்கிறேன்" என்கிற துஷ்யந்தனுக்கு அங்கே வரும் கன்வ முனிவர் நடந்ததை முழுவதுமாக சொல்கிறார். இறுதியாக சகுந்தலையையும், பரதனையும் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார் துஷ்யந்தன்.

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!

தொடர்