மஹாபாரதம் பிற பகுதி

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு. தன் உச்சபட்ச விடுதலையை அடைவதற்காக ஒரு மனிதர் தேர்ந்தெடுக்கும் வழியை பற்றியதாக என் கேள்வி இருக்கிறது. பீஷ்மர் பிரம்மச்சரியத்தை தேர்வு செய்கிறார், கர்ணன் நட்பை தேர்ந்தெடுக்கிறான், காந்தாரி தன் கண் பார்வையை துறப்பது - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்கிறார்கள். எதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இதை முடிவு செய்வது?

சத்குரு: பீஷ்மர், தன் தந்தை மீது இருந்த மதிப்பினாலும், ஈடுபாட்டினாலும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க சபதம் ஏற்றார். ஆனால் அப்படி ஒரு சபதம் ஏற்ற பிறகு, அதையே தனது உச்சபட்ச இலக்கை அடைவதற்கு பயன்படுத்துகிறார். ஏனென்றால் ஒரு சத்திரியனாக அவரால் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்க முடியாது. உங்களது உச்சபட்ச நல்வாழ்வை அடைவதற்கு அப்படி ஒரு சபதம் ஏற்பது சிறந்த வழி அல்ல. ஆனால் இப்போது அவர் அந்த சபதத்தில் உறுதியாக இருப்பதால், அதையே தன் உச்சபட்ச நல்வாழ்வை அடைய பயன்படுத்திக் கொள்கிறார். காந்தாரி திருதராஷ்டிரனை திருமணம் செய்வதை தேர்வு செய்யவில்லை. ஹஸ்தினாபுரம் வந்த பிறகே, காந்தாரிக்கு தன் கணவன் கண் பார்வையற்றவர் என்பது தெரிய வருகிறது. இதை உணர்ந்ததும், பல காரணங்களுக்காக தன் கண்களை மூடிக்கொள்வது என அவள் முடிவு செய்கிறாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இளம் பெண்ணாக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் திருமணம் முடிந்த பிறகு உங்கள் கணவர் பார்வையற்றவர் என்பது தெரியவந்தால் மிகப்பெரிய அதிர்ச்சிதானே? எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னும் சற்று பின்னால் சென்று பார்த்தால், காந்தாரியின் ஜாதகம், "இவளை யார் திருமணம் செய்தாலும் மூன்று மாதங்களுக்குள் இறந்துவிடுவான்" என்று சொல்கிறது. காந்தாரிக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதை அறிந்த பிறகு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மூலம் பல விஷயங்களை காந்தாரி சந்தித்திருக்கக்கூடும். அதிலும் அப்படி ஒரு குடும்பத்தில், சகுனியைப் போன்ற சகோதரர் இருந்தால், பல விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருக்க முடியும்.

அடுத்ததாக, ஒரு ஆட்டை திருமணம் செய்துகொள்ளும் அவமானம், பிறகு உங்களின் 'கணவனை' கொலை செய்வது, அடுத்ததாக, தான் திருமணம் செய்யவிருப்பவரிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை மறைப்பது என எல்லாவற்றையும் கடந்து, திருமணம் முடிந்து அங்கே ஹஸ்தினாபுரம் சென்று பார்த்தால் தன் கணவனுக்கு கண் பார்வை இல்லை. இதையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது, அது உங்கள் மனதில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது சாதாரணமான ஒன்றல்ல. இன்றைய சமுதாயத்தில், நீங்கள் கல்வி கற்றிருக்கிறீர்கள். "இந்த திருமணத்தை தூக்கி குப்பையில் போடு - நான் எங்காவது சென்று உழைத்து பிழைத்துக்கொள்வேன்" என்று நீங்கள் சொல்லமுடியும். ஆனால் அன்றைய சூழ்நிலை அப்படி இல்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு, திருமணம் செய்துகொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள் அல்லது உங்களுக்கு வாழ்க்கையே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கண் பார்வையற்ற மனிதனுடன் வாழ்வது என்றால் நீங்கள்தான் அவனுக்கு எல்லாவற்றையும் செய்யவேண்டும். ஆனால் உங்களுக்கே கண் பார்வை இல்லையென்றால், எல்லோரும் உங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார்கள். மார்க் ட்வைன் இப்படி சொன்னார்: "ஒருபோதும் எதை செய்யவும் கற்றுக்கொள்ளாதே. நீ கற்றுக்கொள்ளவில்லை என்றால், அந்த வேலையை உனக்காக செய்யும் யாராவது ஒருவரை நீ எப்போதும் கண்டறிவாய்." ஒரு அரசியாக, காந்தாரிக்கு எல்லாமே பார்த்துக்கொள்ளப்படுகிறது. நான் நடந்த மொத்தத்தையும் கேலிக்குள்ளாக்க முயலவில்லை. காந்தாரி பலவற்றையும் பலவாறாக சிந்தித்துப் பார்த்தாள். மனித மனம் எல்லாவற்றையும் பரிசீலித்து பார்க்கிறது. மனம் சிந்தித்தால் யாருமே அப்பாவி இல்லை.

இன்னொரு அம்சம் என்னவென்றால், கண் பார்வையை துறப்பது என விழிப்புணர்வாக நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதோடு சேர்ந்து வரக்கூடிய புகழை உங்களால் நம்பவே முடியாது. எவ்வளவு பெரிய தியாகம்! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் மக்கள், "அடடா! என்ன ஒரு பெண்மணி! தன் கணவனுக்காக தானும் பார்வையில்லாமல் வாழ்கிறாள் பார்" என்று பேசுவார்கள். நீங்கள் உண்மையிலேயே அறிவுபூர்வமாக செயல்படும் பெண்ணாக இருந்து, உங்கள் இதயத்தில் அந்த மனிதன் மீது அன்பும் இருந்தால், உங்கள் தலைக்குள் மூளையும், உங்கள் இதயத்தில் அன்பும் இருந்தால், நீங்கள்தான் அவனது கண்களாக இருக்க வேண்டும். ஆனால் அவள் வேறு வழியை தேர்ந்தெடுத்தாள், ஏனென்றால் தியாகம் செய்வதில் தனிப்பட்ட புகழும் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பதில் எந்த ஒரு தனிப்பட்ட புகழும் இல்லை. ஆனால் ஒரு கருப்பு துணியை உங்கள் கண்களைச் சுற்றி கட்டிக்கொள்வதில் புகழ் இருக்கிறது. இப்போது இரண்டு பேருக்குமே யாராவது உதவி செய்ததாக வேண்டும்.

அதோடு, எல்லோருக்கும் தெரியும்படி நீங்கள் ஒரு சபதம் ஏற்றுவிட்டால், உங்களால் அதிலிருந்து பின்வாங்க முடியாது. ஒரு அரசியாக இருப்பதால் குளியலறையில் கூட உங்கள் கண்களில் கட்டியுள்ள கருப்பு துணியை அகற்ற முடியாது. ஏனென்றால் எல்லாப்பக்கமும் உங்களுக்காக உதவியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு தனிப்பட்ட மனிதராக இருந்தால், குறைந்தபட்சம் குளியலறையிலாவது உங்கள் கண்களில் கட்டியுள்ள துணியை அகற்றிவிட்டு ஒரு நடனமாடி விடலாம். இதை எல்லாம் பரிசீலனை செய்த பிறகுதான் காந்தாரி அந்த முடிவை எடுத்தாள். நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்த பிறகு, அது எவ்வளவு மோசமான முடிவாக இருந்தாலும், ஆரம்பத்தில் நீங்கள் வருந்துவீர்கள்; உங்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும்; மன அழுத்தம் ஏற்படும்; இது வேண்டவே வேண்டாம் என உங்களுக்குள் சண்டையே நிகழும். ஆனால் இதிலிருந்து வெளியேற வழியே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த பிறகு, இதை எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என பார்க்கத் துவங்குவீர்கள். ஏனென்றால், எதுவாக இருந்தாலும், அதை எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என்று பார்ப்பதற்கு மனித புத்திசாலித்தனம் களமிறங்கிவிடும்.

காந்தாரிக்குள், "எப்படியும் கண் பார்வையை துறப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது - எனவே இதையே எனது நல்வாழ்வுக்கு பயன்படுத்தினால் என்ன?" இது ஒரு எண்ணமாக கூட இல்லை - வாழ்க்கை இயல்பாகவே இந்த திசையில்தான் நகர்கிறது. இப்படி மறுபரிசீலனை செய்து வாழ்க்கை சூழலோடு தன்னை பொருத்திக்கொள்ளும் புத்திசாலித்தனம் மனிதனுக்குள் இல்லையென்றால், இந்நேரம் எல்லா மனிதர்களும் உடைந்த மனதோடு தான் உலவுவார்கள்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு:  கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெரும்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.