சத்குரு: சகுனி இப்படிக் கூறினான், "வாள் கொண்டு உன்னால் எதை சாதிக்க முடியவில்லையோ, அதை தந்திரத்தால் சாதிக்க முடியும். நீ ஒரு முட்டாள் ஷத்ரியன், எப்போதுமே வாள், விஷம், கொலை செய்வது என்றே நீ சிந்தித்துக் கொண்டிருக்கிறாய். நீ நினைத்தை சாதிக்க வேறு வழிகளும் இருக்கிறது" என்றபடியே தனது தாயக்கட்டைகளை வெளியே எடுத்து, "இவை எனது தகப்பனாரின் எலும்புகள். எனக்கு வேண்டியபடி இவை உருளும். உனக்கு என்ன எண் வேண்டுமோ கேளேன் - அதை நான் உனக்காக விழச்செய்வேன்."

அன்றைய தர்மப்படி, நீங்கள் ஒரு ஷத்ரியனை தனிப்பட்ட முறையில் நேருக்குநேர் மோதும் பலப்பரிட்சைக்கு அழைத்தாலும் சரி அல்லது தாயம் விளையாட அழைத்தாலும் சரி, அவன் "வரமாட்டேன்" என மறுக்க முடியாது. அவன் நிச்சயம் சவாலை ஏற்றே ஆகவேண்டும். சகுனி, "யுதிஷ்டிரனிடம் தாயம் விளையாடும் சபலம் உண்டு, அதோடு எப்படி விளையாட வேண்டும் என்ற சூட்சுமமும் அவனுக்கு சுத்தமாக தெரியாது. நாம் ஒரு முறை அவனை தாயம் விளையாட அழைப்போம். உனக்காக நான் விளையாடுகிறேன். இந்த ஒரு ஆட்டத்தில் அவர்களது சொத்து, ராஜ்ஜியம் என அனைத்தையும் அவர்களிடமிருந்து பறித்துவிடலாம். அவர்களை இங்கே மட்டும் வரச்செய்து விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றான்.

சட்டென்று உயிர் வந்தவனான் துரியோதனன் - உடனே குளித்து, உடைமாற்றிக் கொண்டு உணவருந்திய அதே வேகத்தில் தனது தந்தையை சென்று சந்தித்து, "தந்தையே, நாம் பாண்டவர்களை தாயம் விளையாட அழைக்க வேண்டும்" என்றான். இதை கேட்ட மாத்திரத்தில் குறுக்கிட்ட பீஷ்மர், "அதற்கு வழி இல்லை" என்றார். முதன்முறையாக வெளிப்படையாகவே பீஷ்மரை எதிர்க்கத் துவங்கினான் துரியோதனன், "உமக்கு வயதாகி விட்டது. உம்மால் இன்றைய அரசியலை புரிந்து கொள்ள முடியாது. அதை என்னிடமே விட்டுவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றான். அந்த நாள் வரையிலும் யாருமே பீஷ்மரை கண்டனம் செய்து பேசியதில்லை. ஆனால் இன்று இந்த இளையவனால் ஓரமாக ஒதுக்கித் தள்ளப்பட்டார் பீஷ்மர். இதை பார்க்க நேர்ந்த அனைவருமே அதிர்ச்சியோடு திகைத்து நின்றனர். ஆனால் யாரிடமும் எதை பேசுவதற்கும் துணிச்சல் இல்லாமல் போனது.

வெளியே தனக்கு இதில் விருப்பமில்லை என்று சொன்னாலும் உண்மையில் திருதராஷ்டிரன் இதை விரும்பினான். அவர்கள் பாண்டவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். மிக நல்ல ஒரு மனிதனாக இருந்த யுதிஷ்டிரன், "நமது பங்காளிகள் நம்மை அழைத்திருக்கிறார்கள். அவர்கள் இப்போதுதான் நம்மிடம் விருந்தாளிகளாக வந்து தங்கியிருந்தார்கள். அவர்கள் இடத்திற்கு சென்று அவர்களது விருந்தினர்களாக தங்க வேண்டிய நமது முறை வருகிறது, அதை ஏற்பதுதான் நமது தர்மம்" என்று துவங்கினான். உடனே பீமன், "மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அவர்களோடு பகடை விளையாடினால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது. அவர்கள் வேறு ஏதோ திட்டமிட்டு இருக்கிறார்கள். எப்படியாவது நம்மை தீர்த்துக்கட்ட அவர்கள் மீண்டும் முயற்சி செய்வார்கள்" என்றான். யுதிஷ்டிரன், "இல்லை. இது நமது தர்மம். அவர்கள் என்னை தாயம் விளையாட அழைத்தால், ஒரு அரசனாக என்னால் மறுக்க முடியாது" என்றான். அதுமட்டுமல்ல, எப்படி தாயம் விளையாட வேண்டுமென்பதைப் பற்றி அறிந்திராத போதும், அவனுக்குள் விளையாட‌ வேண்டுமென்ற ஆசையிருந்தது.

துவங்கியது ஆட்டம்

ஐந்து சகோதரர்களும் அவர்களது அரசியும், பெருமை மிகுந்து பட்டொளி வீசிப்பறக்கும் தங்கள் புகழை பறைசாற்றும் விதமாக முழு அரச பரிவாரங்களின் துணையோடு ஹஸ்தினாபுரம் நோக்கி திரும்பும் பயணத்திற்கு ஆயத்தமானார்கள். பகடை விளையாடுவதற்காகவே ஒரு தனி மண்டபத்தை பாண்டவர்களுடைய மாய அரங்கிற்கு இணையானதாக அமைத்திட விரும்பினான் துரியோதனன். உள்ளூரிலேயே ஒரு கட்டிட கலைஞனை அமர்த்தி, கண்கவரும் விதத்தில் அரங்கை அசத்தலாக அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் சகிக்க முடியாதபடி அலங்கோலமாக நிர்மாணித்து முடித்தான். அவனது சொந்த சகோதர்களுக்கே, ரசனை என்பதே பொதுவாக அவர்களிடம் இல்லாதபோதும், இந்த அரங்கை பிடிக்காமல் போனது. இங்கே பாண்டவர்களும் ஒரு தவறை செய்தார்கள். துவாரகைக்கு திரும்பியிருந்த கிருஷ்ணரிடம் அவர்களுக்கு வந்திருந்த அழைப்பைப் பற்றி தெரிவிக்கவில்லை. தாங்களாகவே, நமது பங்காளிகளை சந்திக்கத் தானே போகிறோம் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாண்டவர்கள் அரங்கிற்கு வந்து சேர்ந்தார்கள். இந்த பகடை விளையாட்டை பார்ப்பதற்காக மொத்த அரசவையும் நிரம்பியிருந்தது. விளையாட தயாராக தாயம் விளையாடும் கரத்தின் முன் சென்று அமர்ந்தான் யுதிஷ்டிரன். அடுத்து வந்த துரியோதனன், தாயகரத்தின் எதிர்முனையில் அமராமல் சற்றுத்தள்ளி அமர்ந்தான். மக்கள் இதை சற்று வியப்புடன் பார்த்தார்கள். "எனக்காக எனது மாமா சகுனி அவர்கள் தாயம் விளையாடுவார்" என்று அறிவித்தான் துரியோதனன். சபையோருக்குள் ஒரு மெல்லிய முணுமுணுப்பு கிளம்பியது. தாயம் விளையாடுவதில் சகுனி கைதேர்ந்தவன் என்பதை அனைவருமே அறிந்திருந்தார்கள். தாயம் விளையாடுவது ஒன்றையே தனது முழுநேர வேலையாக வைத்திருந்தான் சகுனி. அதிலும் அவனது கையிலிருக்கும் பகடைக்காய்கள் தந்திரீக முறையில் சக்தியூட்டப்பட்டிருந்ததையும் அனைவரும் அறிந்திருந்தார்கள். மக்கள், "இது சரியில்லை, யுதிஷ்டிரன் தோற்றுவிடுவான்" என்று கிசுகிசுத்தார்கள்.

யுதிஷ்டிரன் துரியோதனனிடம், "நான் உன்னோடு விளையாடுவதற்குதான் வருவதாக நினைத்திருந்தேன்" என்றான். அதற்கு துரியோதனன், "என் சகோதரனே, நீ ஏன் பயப்படுகிறாய்? என் மாமா எனக்காக விளையாடுகிறார். இதிலென்ன பிரச்சனை? நாமெல்லோரும் ஒரே இரத்தம் தானே. உன் தைரியத்தை நீ தொலைத்து விட்டாயா?" என்றான். யுதிஷ்டிரன், "இல்லை. அது பரவாயில்லை, நாம் விளையாடுவோம்" என்றான். அவர்கள் அவனிடம், "நீ எதை பணயம் வைக்கிறாய்" என்றார்கள். யுதிஷ்டிரன் தனது யானைகள், தனது குதிரைகள் - எல்லாவிதமான பொருட்களையும் பணயமாக வைத்தான். ஒவ்வொரு முறை சகுனி தாயகட்டையை உருட்டும் போதும் அவனுக்கு என்ன வேண்டுமோ அது விழுந்தது, யுதிஷ்டிரன் பணயம் வைத்த அனைத்தையும் இழந்தான்.

அரசர்கள் அடிமைகளானார்கள்

திருதராஷ்டிரன் கண் பார்வை இல்லாத போதும், தனக்கு உதவியாக இருந்த சஞ்சயனை அருகில் அமர்த்திக் கொண்டு விளையாட்டை நேர்முக வர்ணனையாக கேட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை தாயக்கட்டை உருளும் ஓசை கேட்டதும், திருதராஷ்டிரன் ஆர்வமாக, "யார் ஜெயித்தார்கள்? யார் ஜெயித்தார்கள்?" என்றான். ஒவ்வொரு முறையும் சகுனியே வென்று வந்தான். யுதிஷ்டிரன் தனது மொத்தக் கருவூலத்தையும் இழந்தான். தனது படையை இழந்தான். தனது தனிப்பட்ட ஆபரணங்களை இழந்தான். அடுத்து அவனது சகோதரர்கள் தாங்கள் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களை கொடுக்க வேண்டி வந்தது, அதையும் இழந்தான். இந்த ஆபரணங்களுக்கு பொருள் மதிப்பு மட்டுமல்லாமல் அவை அவர்களது கௌரவத்தின் அடையாளமாகவும் விளங்கி வந்தது. அவற்றை இழப்பது என்பது கிட்டத்தட்ட அவர்களது மானத்தை இழப்பதை போல் இருந்தது.

அடுத்து யுதிஷ்டிரன் தனது ராஜ்ஜியத்தை பணயம் வைத்து அதையும் இழந்தான். மக்கள் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பீஷ்மர் எழுந்து, "விளையாடியது போதும், நிறுத்துங்கள்." என்றார். துரியோதனன் குரலுயர்த்தி அவரை அமர்த்தினான். "இந்த விளையாட்டை நிறுத்த நீங்கள் வரவேண்டியது இல்லை. ஷத்ரிய தர்மப்படி நாங்கள் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம். யுதிஷ்டிரனுக்கு விளையாட பயமாக இருந்தால் அவன் விலகிக்கொள்ளலாம். வேறு யாரும் நாங்கள் விளையாடுவதை தடுத்து நிறுத்த முடியாது" என்றான். யுதிஷ்டிரனுக்கு எதைப் பற்றியும் பயம் இல்லை. உலகத்தில் எங்கே வலையை விரித்தாலும், நேராக நடந்து சென்று அதற்குள் நிற்பதற்கு யுதிஷ்டிரனுக்கு தெரிந்திருந்தது. ராஜ்யத்தை இழந்திருந்த யுதிஷ்டிரனிடம் இப்போது சகுனி ஆசை வார்த்தை காட்டத் துவங்கினான், "உனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தருகிறேன். உனது தம்பி பீமனை பணயமாக வைத்தால், இதுவரை நீ இழந்த உனது ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் திரும்ப வென்று விடலாம்" என்றான்.

முதலில் நகுலனை பணயமாக வைத்தான், இழந்தான். அடுத்து சகாதேவனை இழந்தான். அடுத்து அர்ஜுனனையும் இழந்தான். இறுதியாக பீமனையும் இழந்தான். மீண்டும் சகுனி தனது வேலையைத் துவங்கினான், "இதுதான் உனது வாய்ப்பு யுதிஷ்டிரா, உன்னையே பணயமாக வைத்து, நீ இழந்த அனைத்தையும் நீ வென்று விடலாம்" என்றான். தன்னை பணயம் வைத்து, தானே தாயத்தை உருட்டி தன்னையும் இழந்தான் யுதிஷ்டிரன். கௌரவர்கள் உற்சாக கூச்சலிட்டார்கள். "இப்போது பான்டவர்கள் நமது அடிமைகள்! நாங்கள் சொல்வதை கேட்டு அவர்கள் இப்போது நடக்க வேண்டும்" என்றபடியே, "உங்களது மேல் ஆடைகளை அகற்றி விடுங்கள்" என்றார்கள். இது அடிமைதனத்தின் அடையாளமாக இருந்தது - ஒரு அடிமைக்கு மேலாடை அணியும் அனுமதியில்லை. பாண்டவ சகோதரர்கள் தங்களது மேலாடையை அகற்றி விட்டு அவமானத்தோடு நின்றார்கள். பதினைந்து நிமிடங்களுக்கு முன் அவர்கள் அரசர்களாக இருந்தார்கள். இப்போது அவர்களது மேலாடை உருவப்பட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடிமைகளாக நின்றார்கள்.

திரௌபதியின் அவலம்

இப்போது கர்ணன் யுதிஷ்டிரனிடம், "உனது மனைவியை, உனது அரசியை நீ பணயமாக வைக்கலாமே" என்றான். அப்போது திரௌபதி அரசவையில் இருக்கவில்லை. அது திரௌபதியின் மாதாந்திர காலமாக இருந்ததால் தனது தனிப்பட்ட குடியிருப்பில் இருந்தாள். அவர்கள் யுதிஷ்டிரனுக்கு சபலமூட்டினார்கள். "இதுவே உனது வாய்ப்பு. உனது ராஜ்ஜியம், உனது சகோதரர்கள், உங்களது செல்வங்கள் என அனைத்தையும் உன் அரசியை பணயம் வைத்து நீ வென்றுவிடலாம். இதில் நீ வென்றால் நீ இழந்த அனைத்தும் மீண்டும் உன்னுடையவை ஆகிவிடும். எப்படியும் நீ வென்று விடுவாய், இது உனது அதிர்ஷ்ட நேரம்" என்றார்கள். யுதிஷ்டிரன் தன் மனைவியையும் பணயம் வைத்து இழந்தான். குதூகலத்தில் கொக்கரித்தான் துரியோதனன், "திரௌபதி நமது அடிமை. அவளை இங்கே கொண்டு வாருங்கள்" என்றான். அவர்கள் திரௌபதிக்கு செய்தி அனுப்பினார்கள். பொதுவாக, அரசியின் மாளிகைக்குள் ஆண் தூதுவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக மாதத்தின் இது போன்ற நாட்களில் கட்டாயமாக அனுமதிக்கப்படுவதில்லை. செய்தி கொண்டு சென்றவன் திருப்பி அனுப்பப்படவே துரியோதனன் தனது சகோதரன் துச்சாதனனிடம், "என்னால் வரமுடியாது, வரமுடியும் என்று சொல்வதற்கு அவள் யார்? அவளை இங்கே கொண்டு வா" என்றான்.

துச்சாதனன் சென்றான், கதவுகளை உடைத்து திறந்தான், அந்தப்புரத்திற்குள் நுழைந்து "வா!" என்றான். "எனது மாளிகைக்குள் நுழைய என்ன தைரியம் உனக்கு" எனக் கேட்ட திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்துச் செல்லத் துவங்கினான் துச்சாதனன். திரௌபதியின் ஆடையில் ரத்தம் தோய்ந்தது. "நான் ஒற்றை ஆடையில் இருக்கிறேன், நான் இந்த நிலையில் இருக்கையில் என்னை நீ எப்படி தொட முடியும், என்ன தைரியத்தில் நீ என்னை இழுத்துச் செல்கிறாய்?" என்றாள். "அது ஒரு பொருட்டில்லை. நீ எங்கள் அடிமை." என்றபடியே துச்சாதனன் அரண்மனையின் தாழ்வாரங்களின் வழியாக தொடர்ந்து திரௌபதியின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி அரசவைக்குள் கொண்டு சென்றான். சிலர் எழுந்து நின்று, "இது தர்மம் இல்லை. இதற்கு முன் ஒரு அரசனின் அரசவையில் இது போன்று எந்த ஒரு பெண்ணும் நடத்தப்பட்டது இல்லை" என்றார்கள். ஆனால் துரியோதனன், "இதுதான் சட்டம். அவள் ஒரு அடிமை. எனக்கு எப்படி வேண்டுமோ அப்படி அவளை நான் நடத்துவேன்" என்றான்.

கடும் சீற்றத்துடன் எழுந்து அமர்ந்த திரௌபதி, பீஷ்மரை பார்த்து தலையிடுமாறு கெஞ்சினாள், ஆனால் பீஷ்மர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். பிறகு திரௌபதி, "யுதிஷ்டிரன் முதலில் என்னை பணயம் வைத்தானா அல்லது தன்னை பணையம் வைத்தானா?" என்று கேட்டாள். அவர்கள் யுதிஷ்டிரன் அவனையே முதலில் பணயம் வைத்தான் என்று பதில் தந்தார்கள். அதற்கு திரௌபதி, " அப்படி தன்னை முதலில் பணயமாக வைத்து இழந்துவிட்டான் என்றால், ஏற்கனவே அவன் அடிமையாக இருக்கையில், என்னை வைத்து சூதாட அவனுக்கு எந்த உரிமையும் இல்லை" என்றாள். மக்கள் தர்மத்தின் நாயகரான பீஷ்மரை பார்த்து தர்மத்தை தெளிவுபடுத்தக் கேட்டார்கள். "யுதிஷ்டிரன் ஏற்கனவே தன்னை இழந்த நிலையில், அவன் மனைவியின் வாழ்க்கையை எப்படி சீரழிக்க முடியும்" என்று கேட்டார்கள். "தர்மப்படி ஒரு அடிமைக்கும் தன் மனைவி மீது உரிமை இருக்கிறது. எனவே அடிமையாக இருந்தாலும், தன் மனைவியை பணயமாக வைத்து சூதாட அவனுக்கு உரிமையிருக்கிறது" என்று உணர்ச்சியில்லாத குரலில் தர்மத்தை வார்த்தைகளில் உதிர்த்தார் பீஷ்மர்.

மனிதர்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை தொழில்நுட்ப ரீதியாக துல்லியமாக நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதநேயத்தை தொலைக்கும் சூழ்நிலை அங்கே உருவானது. அங்கே என்ன நடந்ததேறியதோ அது மிகக்கொடூரமான காட்சியாக இருந்தது. இதுவரை நடந்தது போதாது என்பதை போல் அவர்கள் திரௌபதியை விமர்சிக்கத் துவங்கினார்கள். பண்டைய கால சட்டப்படி, ஒரு அரசன் அல்லது ஒரு ஷத்ரியனுக்கு குழந்தைகள் இல்லை என்றால், தன் கணவனின் அனுமதியுடன் அந்த மனைவி மற்ற ஆடவர்கள் மூவர் மூலமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவள் ஐந்தாவதாக ஒரு ஆடவனிடம் சென்றால் வேசியாக கருதப்படுவாள். கர்ணன் திரௌபதியை அவமானப்படுத்தும் விதமாக, "இவள் ஐந்து ஆடவர்களுடன் வாழ்கிறாள் இவள் அரசி அல்ல வேசி. நாம் இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்றபடியே திரௌபதியிடம் திரும்பி, "ஏன் ஐவர் மட்டும் - இப்போது உனக்கு நூறு பேர் இருக்கிறார்கள்" என்றான்.

கிருஷ்ணரின் பாதுகாப்பு

அடுத்து துரியோதனன், "வா பாஞ்சாலி, என் மடியில் வந்தமர்" என்றான். ஆவேசமடைந்த பீமன், "இன்று உனது தொடையை தட்டி பாஞ்சாலியை அங்கே வந்து அமர்‌ என்கிறாய். ஒருநாள் நான் உனது தொடையைப் பிளந்து உன்னைக் கொல்வேன்" என்றான். எதிர்தரப்பிலிருந்து, "கொல்வதைப் பற்றி பிறகு பேசலாம். இப்போது இவள் உடைகளை களைவோம்" என்றார்கள். திரௌபதி அணிந்திருந்த ஒற்றை ஆடையும் உருவச் சென்றான் துச்சாதனன். அந்த சூழ்நிலை நாகரிகத்தில் இருந்து அநாகரிகமான கொடுமையாக மாறியது. அங்கே இருந்தவர்கள் மிருகங்களாக மாறினார்கள்.

அனைவராலும் கைவிடப்பட்டவளாகவும் கோபத்திலும் தகித்துக் கொண்டிருந்தாள் திரௌபதி. ஆனால் ஏற்கனவே திரௌபதிக்கு கொடுத்திருந்த வாக்கின்படி அவளைப் பாதுகாத்த கிருஷ்ணர், தனது வழியில் செயல்பட்டு அவளது ஆடைகள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்தார். இந்த அதிசயம் தங்கள் கண்முன் நடப்பதைப் பார்த்தவர்கள் - அவர்களது நோக்கம் முடிந்த வரை சென்று பார்த்து விடுவது என்பதாக இருந்தாலும், அவர்களால் முடியவில்லை - திருதராஷ்டிரனின் இதயத்தை பயம் அடைத்தது.

இது மொத்தமும் நடந்து கொண்டிருக்கையில் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த திருதராஷ்டிரன் முதல்முறையாக எழுந்து, "இதோடு விளையாட்டு முடிந்தது. விளையாட துவங்குவதற்கு முன் யார் யாருக்கு எது சொந்தமாக இருந்ததோ அது அவர்களுக்கே மீண்டும் சொந்தமாகும். இப்போதும் யுதிஷ்டிரன்தான் இந்திரப்பிரதேசத்தின் அரசன். அவர்கள் தக்க மரியாதையோடு திரும்பச் செல்லலாம்" என்றான். துரியோதனன், கர்ணன், துச்சாதனன் மற்றும் அவர்களது மொத்த கூட்டமும் கடும் கோபமுற்றனர். துரியோதனன் சபையில் இருந்து வெளியேறினான். பாண்டவர்களுக்கு அவர்களது அரசு, அவர்களது சுதந்திரம், அவர்களது செல்வம் என அனைத்தும் கிடைத்து விட்டது. ஆனால், அடைந்திருந்த அவமானத்தின் சுமை அகலாமல் அவர்களிடமே எஞ்சியிருந்தது. தலைகுனிந்தபடி இந்திரபிரஸ்தம் நோக்கி தங்கள் பயணத்தைத் துவங்கினார்கள்.

சகுனி, கர்ணன் மற்றும் துரியோதனனும் சேர்ந்து உடனடியாக திருதராஷ்டிரனை தனியாக அழைத்துச்சென்று, "இது சரியல்ல. நீங்கள் தலையிட்டதால் தான் நடுநிலையாக விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு இப்போது பாரபட்சமான முடிவுக்கு போய்விட்டது. அவர்களை இன்னும் ஒரேயொரு முறை மட்டும் விளையாட நாம் அழைக்க வேண்டும். அதற்கு இவை மட்டும்தான் நிபந்தனை: அவர்கள் வென்றால், நாம் கானகம் செல்ல வேண்டும். அவர்கள் மொத்த ராஜ்யத்தையும் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தோற்றுவிட்டால், அவர்கள் காட்டுக்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, அடுத்து ஒரு வருட காலம் தலைமறைவாக இருக்க வேண்டும். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் தங்கள் ராஜ்யத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்கள். எப்படியும் நாம் விளையாடிய விளையாட்டுக்கு ஏதாவது ஒரு விலை இருக்க வேண்டுமே" என்றார்கள் அவர்கள்.

மீண்டும் ஒருமுறை தனது மகனின் மீது கொண்ட பாசத்தினால் திருதராஷ்டிரன் தலையாட்டினான். மீண்டும் பாண்டவர்களை திரும்ப அழைத்து வர தூதுவர்களை அனுப்பினான். மற்ற நான்கு சகோதரர்களும் ஆரம்பத்தில் திரும்பவும் செல்வதற்கு மறுத்தார்கள். ஆனால் யுதிஷ்டிரன், "இதுதான் தர்மம். அவர்கள் நம்மை மீண்டும் அழைக்கிறார்கள், நாம் செல்ல வேண்டும்" என்றபடியே திரும்பிச் சென்றான். அனைவரும் எதிர்பார்த்தபடியே விளையாட்டில் தோற்றான் அனைத்தையும் இழந்தவர்களாக தங்களது அரச உடைகளை கைவிட்டு சாதாரண ஆடைகளை அணிந்து அவர்கள் கானகம் கிளம்பினார்கள்.

தொடரும்...