திறமையான இளைஞர்கள் ஏன் வழக்கமான வாழ்க்கை பாதைகளை அல்லாமல் ஆன்மீக வளர்ச்சியை தேர்ந்தெடுக்கிறார்கள்? வெற்றியின் வழக்கமான அளவுகோல்களான - தொழில், திருமணம், வீடு போன்றவற்றை தாண்டி வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். "ஒரு மனிதன் என்பவன் முழுமை பெறாத ஒரு திட்டம்," என்று சத்குரு விளக்குகிறார், நிறைவான வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கான வேறொரு பார்வையை வழங்குகிறார்.
கேள்வியாளர்: சத்குரு, உங்களுடைய "சுய நோக்கங்களை" நிறைவேற்றிக் கொள்வதற்காக, பிரகாசமான எதிர்காலம் உள்ள இளைஞர்களை நீங்கள் "இழுத்துச் செல்கிறீர்கள்" என்று சிலர் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சத்குரு: அவர்கள் சொல்வது சரிதான் - நான் "பிரகாசமான" மனிதர்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன், அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி, முதியவர்களாக இருந்தாலும் சரி. மந்தமான கூட்டத்துடன் நான் என்ன செய்ய முடியும்? மந்தமானவர்களுக்கு நான் எதிரானவன் அல்ல, ஆனால் அவர்களுடன் வேலை செய்வது கடினம்.
நான் செய்யும் அனைத்தும் என் தனிப்பட்ட விஷயங்களே, ஏனெனில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் என்னுடைய ஒரு பகுதியாகவே இணைத்துக்கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட விஷயங்கள் என்பது பற்றிய உங்கள் கருத்து என்னுடையதில் இருந்து வேறுபட்டிருக்கலாம்.
இது எனக்கு ஒரு கதையை நினைவூட்டுகிறது: ஒருமுறை ஒரு சிறிய மளிகைக் கடை உரிமையாளரிடம் ஒரு வளர்ப்புக் கிளி இருந்தது. துடிப்பான அந்தப் பறவைதான் கடையின் முக்கிய ஈர்ப்பு - அது எப்போதும் வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருக்கும். கிளி தன் நோக்கத்தை நிறைவேற்றியதால் கடை உரிமையாளர் மகிழ்ச்சியாக இருந்தார்.
ஒரு நாள், கடை உரிமையாளர் குளியலறையில் இருந்தபோது, மளிகைக் கடையில் இருந்த பூனை ஒரு எலியைப் பார்த்து வேகமாக அதன் மீது பாய்ந்தது. இதைப் பார்த்து கிளி பயந்து கடை முழுவதும் பதற்றத்துடன் பறந்தது. அதன் பதற்றத்தில், விலையுயர்ந்த பாதாம் எண்ணெய் நிறைந்த ஜாடியை தள்ளிவிட்டது. ஜாடி கீழே விழுந்து உடைந்து, சேதத்தை ஏற்படுத்தியது.
கடை உரிமையாளர் திரும்பி வந்து நடந்ததைப் பார்த்தபோது, கிளியைக் கோபமாகப் பார்த்து, "முட்டாளே! இவ்வளவு விலையுயர்ந்த பொருளை கீழே தள்ளிவிட்டாயே" என்று கத்தினார். அவர் ஒரு சிறிய குச்சியை எடுத்து கிளியின் தலையில் அடிக்கத் தொடங்கினார். கிளி அலறியபோதும், அதன் தலையிலிருந்த அனைத்து இறகுகளும் உதிரும் வரை அந்த நபர் தொடர்ந்து அடித்தார். அன்றிலிருந்து, கிளி கடையின் ஒரு மூலையில், மொட்டையாகவும் மனச்சோர்வுடனும் அமர்ந்திருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கடை உரிமையாளர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் கிளிக்கு மிகச் சிறந்த உணவை வழங்கி, தொடர்ந்து அதனுடன் பேச முயற்சித்தார். அவர் கெஞ்சினார், வேண்டிக்கொண்டார், மன்னிப்பு கேட்டார், ஆனால் கிளி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. விரக்தியடைந்த உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களிடமும் அது என்மீது கோபமாக இருக்கிறது என்று விளக்கி பறவையிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன, கிளி பதிலளிக்கவே இல்லை; அது மொட்டைத் தலையுடனும் மனச்சோர்வுடனும் அமர்ந்திருந்தது.
ஒரு நாள், மொட்டைத் தலையுடன் ஒரு பெரிய மனிதர் கடைக்குள் நுழைந்தார். அந்த கிளி அவரைப் பார்த்த உடனேயே, தனது மனச்சோர்வை மறந்துவிட்டது. அது கவுண்டருக்கு பறந்து சென்று, அங்கே அமர்ந்து கொண்டு, "என்ன, நீங்களும் பாதாம் எண்ணெய் ஜாடியை கீழே தள்ளிவிட்டீர்களா?" என்று கேட்டது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையை தாங்கள் அறிந்த வகையில் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள்; வேறு எப்படி புரிந்துகொள்ள முடியும்? துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை அதில் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களிடம் இருந்து எதைப் பெற முடியும் என்ற எண்ணத்தினாலேயே கட்டமைத்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்ளும் போதும் கூட, அதிலிருந்து எவ்வளவு பணம், இன்பம், மற்றும் பிற விஷயங்களை பெறமுடியும் என்று மட்டுமே யோசிக்கிறார்கள். அவர்கள் எந்த செயலைப் பார்க்கும்போது, ஒரு நபர் மற்றவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்திக்கிறார்கள், ஏனெனில் அதற்கு மேல் அவர்களால் சிந்திக்க முடியவில்லை.
மனிதகுலத்திற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருப்பதால், போதுமான அளவு இளமையான மற்றும் திறமையான மக்களை நான் "எடுத்துள்ளதாக" கருதவில்லை. ஒரு மனிதன் என்பவன் முழுமை பெறாத திட்டப்பணி. அந்த திட்டப்பணியை முழுமைபெறச் செய்யவே நான் மக்களை "எடுக்கிறேன்”.
மக்கள் அவர்கள் இருக்கும் விதம், அவர்கள் வாழும் விதம், மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட விதம் அவற்றை எல்லாம் நான் பார்க்கும்போது அவர்கள் முழுமை பெறாத திட்டங்களாகவே இறந்துபோவார்கள் என்பதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. முழுமை அடையக்கூடிய சாத்தியக்கூறுகளை நான் பார்க்கும்போது, அப்போது நான் அவர்களை எடுக்க விரும்புகிறேன். சிலர் ஏற்கனவே சென்றுவிட்டனர்; மற்றவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஏற்கனவே சென்றுவிட்டனர்.
நிறைய பேர் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். இதைப் பற்றி யார் பேசினாலும் - அதனால் என்ன? மக்கள் எப்போதுமே ஏதாவது ஒன்றைப் பற்றி பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்; அவர்கள் பேசாத விஷயம் ஏதாவது இருக்கிறதா?
எப்போதெல்லாம் ஆன்மீக செயல்முறை ஒன்று நடந்து, மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறார்களோ, முதலில் எழும் கேள்வி எப்போதுமே "தனிப்பட்ட நோக்கம்" பற்றியதாகவே இருக்கிறது. இளம் பெண்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இளம் ஆண்களாக இருந்தால், கொத்தடிமைகள் என்றோ அல்லது வேறு ஏதோ என்றோ யூகிக்கிறார்கள். மக்களால் தங்களது அடிப்படை உள்ளுணர்வுகளுக்கு அப்பால் சிந்திக்க முடிவதில்லை; அதுதான் அவர்களின் அடிப்படைப் பிரச்சனை.
அவர்களால் அதற்கு மேல் சிந்திக்க முடிந்தால், அடுத்து அவர்களால் யோசிக்க முடிவது பணத்தைப் பற்றி மட்டுமே. அவர்களின் வாழ்க்கையில் இவற்றைத் தாண்டி எதுவும் இல்லை.
இத்தகைய மனிதர்களின் கருத்துக்களும் அபிப்ராயங்களும் அர்த்தமற்றவை. இத்தகைய கருத்துக்களால் யாரும் வழிநடத்தப்படக்கூடாது, ஆனால் துரதிருஷ்டவசமாக, உலகம் பெரும்பாலும் அப்படித்தான் செல்கிறது. இந்த இரண்டு அடிப்படை உந்துதல்களுக்கு அப்பால் சிந்திக்க முடியாத மனிதர்களின் கருத்துக்களிலிருந்து உலகை விடுவிப்பதும் எங்களது திட்டங்களில் ஒன்று.
கௌதம புத்தருக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அவர் எங்கு சென்றாலும், மக்கள் கூட்டம் திரண்டது, இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பங்களை விட்டு துறவிகளாக மாறினர். 40,000 துறவிகள் அவரைப் பின்தொடர்ந்த நிலையில், குறைந்தது 20,000 விரக்தியான குடும்பங்கள் இருந்தன. இதனை கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இன்றைய காலத்தைப் போல் அல்ல, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருக்க முடியும் என்ற நிலை அப்போது இல்லை. அவர்கள் கௌதமரிடம் சென்றவுடன், முற்றிலுமாக மறைந்துவிட்டனர்; குடும்பத்தினர் அவர்களை மீண்டும் பார்க்கவே இல்லை. யாரும் பல வருடங்களுக்கு பார்க்கவோ சந்திக்கவோ முடியாத இடங்களுக்கு துறவிகளை அனுப்புவதை அவர் உறுதி செய்தார்.
இயல்பாகவே, குடும்பங்களிடையே கோபம் இருந்தது. சிலர் அவரை அவமதிக்க ஒரு திட்டம் தீட்டினர். ஒரு பெரிய நகரத்தில் நடந்த அவரது பிரம்மாண்டக் கூட்டங்களில் ஒன்றின்போது, கர்ப்பமாக இருப்பதுபோல் தோற்றமளித்த ஒரு பெண் முன்வந்து அவர் முன் நின்று, "இந்த ஆன்மீக பேச்செல்லாம் போதும்! நீங்கள் தான் என்னை கர்ப்பமாக்கினீர்கள். இந்த குழந்தைக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என் குழந்தைக்கு நீங்கள் என்ன கொடுக்கப்போகிறீர்கள்?" என்று கூக்குரலிட்டாள்.
இந்த பிரம்மாண்டக் கூட்டத்தின் முன்னிலையில், இந்தப் பெண் கௌதம புத்தர் தன்னை கர்ப்பமாக்கினார் என்று குற்றம் சாட்டினார். அவரது கண்ணியத்திற்கு கீழான செயல் என்பதால் அவர் எதுவும் பேசவில்லை. அவர் வெறுமனே அவளைப் பார்த்தார். பணத்திற்காக அங்கு வந்திருந்த ஒரு கூலித்தொழிலாளி அவள். அவரது அசையாத பார்வையில், அவள் மிகவும் அசௌகரியமாக உணர்ந்து, பதற்றத்துடன் அசைந்தபோது, கர்ப்பிணி போல் காட்ட அவள் உடைக்கு அடியில் வைத்திருந்த தலையணை கீழே விழுந்தது. பின்னர் அவர் தனது உரையைத் தொடர்ந்தார். அவர் தனது வாழ்க்கையில் இதுபோன்ற பல சூழ்நிலைகளை எதிர்கொண்டார், மேலும் அவர் மட்டும் எதிர்கொள்ளவில்லை.
இது லாவோ சுவிற்கும் நடந்தது. அவர் மிகவும் சாந்தமான மனிதர்; அவருக்கு தனிப்பட்ட அல்லது வேறு எந்த விதமான நோக்கமும் இருக்கவில்லை.
ஒரு நாள், அவரது வீட்டை சுத்தம் செய்யும் திருமணமாகாத ஒரு இளம் பெண் கர்ப்பமாகிவிட்டாள். இதற்கு யார் காரணம் என்று அவளது தந்தை கேட்டு, அவளை கடுமையாக அடித்தபோது, குரு லாவோ சு என்று சொல்வதே சிறந்தது என்று அவள் நினைத்தாள்.
கோபத்துடன், தந்தை கிராமத்துப் பெரியவர்களை அழைத்து வந்து, லாவோ சுவை எதிர்கொண்டனர்: "அந்த பெண் தன் கர்ப்பத்திற்கு நீங்கள்தான் காரணம் என்கிறாள்."
அதற்கு லாவோ சு "அப்படியா?" என்றார்.
அவர்கள் அவரை போலியானவர் என்று குற்றம் சாட்டி, அவரது வீட்டை நொறுக்கி, துறவிகளை அடித்து விரட்டினர். லாவோ சு மட்டுமே அங்கு தொடர்ந்து வாழ்ந்தார்.
அவளது கர்ப்பகாலம் முன்னேற முன்னேற, அந்த பெண் குற்ற உணர்வால் துன்புற்று, தன் தந்தையிடம் அது குரு லாவோ சுவின் குழந்தை அல்ல என்ற உண்மையைக் கூறினாள் - ஆனால் அவளது தந்தை, குருவுக்கு தான் செய்த காரியத்திற்காக ஊர் மக்கள் தன் தலையை வெட்டிவிடுவார்கள் என்ற பயத்தில், அவர்களிடம் உண்மையை சொல்ல மிகவும் பயந்தார்.
குழந்தை பிறந்த பிறகு, ஊர் மக்கள் அந்த குழந்தையை லாவோ சுவிடம் கொண்டு வந்து, "இது உங்கள் குழந்தை - நீங்கள்தான் இதை பராமரிக்க வேண்டும்" என்று கூறினர்.
லாவோ சு குழந்தையைப் பார்த்து, "அப்படியா? இது என் குழந்தையா? சரி" என்று சொல்லி, அந்தக் குழந்தையை பராமரித்தார்.
காலப்போக்கில், அந்தப் பெண்ணால் மௌனமாக இருக்க முடியவில்லை. ஊர் முழுவதும், "அது குரு லாவோ சு இல்லை. மீன் சந்தையில் இருந்த நபர்தான்" என்று சொல்லிவிட்டாள்.
ஊர் மக்கள் லாவோ சுவிடம் சென்று, அவர் காலில் விழுந்து, "குருவே, இது உங்கள் குழந்தை இல்லை! நாங்கள் தவறாக உங்களைக் குற்றம் சாட்டி, அவமதித்துவிட்டோம்" என்றனர்.
அதற்கு லாவோ சு "அப்படியா?" என்று கேட்டார், அவர்கள் குழந்தையை திரும்ப எடுத்துக் கொண்டனர், மேலும் அவர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
மற்ற யோகிகள் இதுபோன்ற சூழ்நிலைகளை வித்தியாசமாக கையாண்டனர்; அவர்கள் மக்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் உணர்திறனைப் பொறுத்தது, ஆனால் பொதுவாக, யாரையும் விட்டுவைக்க மாட்டார்கள். இதுபோன்றவை எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இத்தகைய பிரச்சனைகளால் துன்பப்படுபவர்களுக்கு: உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், இங்கே இருக்க வேண்டாம்; சென்று ஒரு பிரச்சாரத்தை தொடங்குங்கள். பிரச்சனை என்ன? இது என்னவென்று உண்மையிலேயே கவனம் செலுத்தாதவர்களை, அதாவது வெறுமனே தங்கள் நேரத்தையும் என் நேரத்தையும், தங்கள் வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் வீணடிப்பவர்களை எப்படி களைவது என்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே இதைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக, என்னிடம் எஞ்சியுள்ளதைத் திறம்பட பயன்படுத்த விரும்புகிறேன்.
நான் தொடர்ந்து ரோலர் கோஸ்டரில் இருக்கும் மனிதர்களுக்காக என் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்க விரும்பவில்லை. தங்களின் தற்போதைய வரம்புகளுக்கு அப்பால் ஏதோவொன்றைக் காண உண்மையிலேயே விரும்பும் மக்களுக்காகவே நான் என் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். இது அத்தகைய நபர்களுக்கு மட்டுமே; இது பொழுதுபோக்கு அல்ல. தனிப்பட்ட விஷயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்கள், தயவுசெய்து யாரும் உங்களிடம் எதையும் செய்யச் சொல்லாத சிறந்த, அற்புதமான இடத்தைக் கண்டுபிடியுங்கள்.
இது உலகில் தொடர்ந்து இருக்கும் ஒரு பிரச்சனை. இப்படி பேசுபவர்கள், தங்களால் கூட செய்ய முடியாமல் போன நல்ல விஷயங்களை தங்கள் பிள்ளைகள் நம்மிடம் வந்து செய்துவிடுவார்களோ என்ற கவலையில் இருப்பவர்களாக இருக்கலாம்.
மக்கள் விவேகானந்தர், கௌதம புத்தர், இயேசு, அன்னை தெரசா போன்றவர்களை வணங்குகிறார்கள். ஆனால் அதே பண்புகள் தங்கள் குழந்தைகளிடம் வெளிப்பட்டால், உடனடியாக அவற்றை நசுக்கிவிடுகிறார்கள். அவர்களுடைய மகன்களும் மகள்களும் கட்டாயம் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும், படிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெறவேண்டும்.
மனச்சோர்வு, நோக்கமின்மை, எல்லாவற்றையும் குறித்த பயம் ஆகியவை வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கங்களாக இருப்பது போல, தாங்கள் அனுபவித்த அனைத்தையும் தங்கள் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இந்த முட்டாள்தனத்திற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும் - இது ஒரு தண்டனையோ அல்லது சாபமோ அல்ல; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் உள்ள உயிரைப் பற்றிய அடிப்படை முரண்பாடுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
நம்மிடம் வந்திருப்பவர்கள் புத்திசாலிகள் என்று சொல்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள்தான் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை காட்டும் முட்டாள்களாக இருக்க வேண்டும். முட்டாள்களுடன் வேலை செய்வது கடினமானது.
நம்மிடம் வந்திருக்கும் இளைஞர்களைப் பார்த்தால், அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்கொண்ட பல துன்பங்கள் இவர்களிடம் இல்லை என்பதைக் காணலாம். இவர்கள் குறையற்ற மனிதர்கள் அல்ல, ஆனால் நிச்சயமாக மிகவும் முன்னேறிய திட்டப்பணிகளாகவே இருக்கிறார்கள். இந்த திட்டப்பணிகள் இந்த பிறவியில் முழுமைபெறும் என்பதை நான் உறுதி செய்வேன்.