
ஒவ்வொரு புனித வடிவத்திற்கு பின்னணியிலும் துல்லியமான கணிதம் உள்ளது. சத்குரு லிங்கபைரவியை பிரதிஷ்டை செய்தபோது, கவனமாக வடிவமைக்கப்பட்ட கணித முறைகளைப் (அல்காரிதம்களைப்) பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சக்தியை நிறுவினார். முதன்முறையாக சத்குரு, ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய லிங்கபைரவியின் ஒரு முக்கிய அம்சத்தை வெளிப்படுத்துகிறார்: பைரவி ரக்த சுத்தியின் (இரத்த சுத்திகரிப்பு) மூலம், மறைமுகமாக உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் முன்னோர்களின் பதிவுகளிலிருந்து விடுதலையை பைரவி வழங்குகிறாள்.
சத்குரு: ஏன் பைரவி? நாம் அழகான வேறு யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே. அவருடைய இந்த குறிப்பிட்ட வடிவம் மற்றும் தோற்றத்திற்கு பின்னால் ஆன்மீகம், வடிவியல் மற்றும் பிற இருத்தலியல் அம்சங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வகையான சக்தியை வெளியிடுவதற்காக நாங்கள் உருவாக்கிய சில கணித முறைகளின் (அல்காரிதம்களின்) விளைவே அவர். முதலில் கணிதத்தை உருவாக்கினோம், அதிலிருந்து வடிவம் தோன்றியது.
முக்கியமானது உங்களுடைய தன்மை தான், நீங்கள் எப்படி தோற்றமளிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல. முதல் அபிப்பிராயத்திற்கு மட்டுமே உங்கள் தோற்றம் முக்கியம். சிறிது நேரத்திற்குப் பிறகு, உங்களுக்குள் இருப்பது எதுவோ அதுதான் முக்கியம். பைரவி அந்த சக்தியை கொண்டுள்ளாள். அவளது வெளித்தோற்றத்திற்கு அப்பால் பார்த்தால், அவள் மிகவும் வித்தியாசமானவள்.
இந்த நாட்களில், பெங்களூருவில் உருவாகி வரும் பெரிய லிங்கபைரவி கோவில் காரணமாக, நான் ஒரு "கோவில் கட்டுபவர்" என்று எல்லோரும் நினைக்கிறார்கள். சமீபத்தில் கர்நாடகா முழுவதும் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களில் இது முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டது. நான் ஒரு கோவில் கட்டுபவர் என்று முத்திரையிடப்படுகிறேன், ஆனால் அது நான் அல்ல. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் இதைக் கட்டவில்லை என்பதால், நான் இதைச் செய்கிறேன்.
தேவையான சக்தி உருவாக்கப்படாத வரை, அவர்களை ஈர்க்கும் ஏதாவது ஒன்று இல்லாத வரை, பெரும்பாலான மனிதர்களால் தங்கள் கவனத்தை ஒரே திசையில் நிலைநிறுத்த முடியாது. நிச்சயமாக, அவர்களும் தங்களுக்குக் கிடைக்கும் பலன்களை எதிர்பார்ப்பார்கள். அதனால்தான் லிங்கபைரவி ஆன்மீகம், பொருள் மற்றும் சமூகம் சார்ந்த பலன்களை அருள்கிறது என்று நான் கூறினேன்.
லிங்கபைரவி பிரதிபலிக்கும் அம்சங்களில் மிக முக்கியமானது பைரவி ரக்த சுத்தி. ரக்தா என்றால் "இரத்தம்” என்றும், ரக்த சுத்தி என்றால் "உங்கள் இரத்தத்தின் சுத்திகரிப்பு" என்றும் பொருள். நாம் "இரத்த உறவுகள்" என்று சொல்வதற்கு காரணம், நீண்ட காலத்திற்கு முன் இறந்துபோன பலர் இன்னும் உங்கள் இரத்தத்தில் வாழ்கிறார்கள். நீங்கள் அவர்களை நீக்கவில்லை என்றால், உங்கள் அனுமதியின்றி உங்களுக்கு முன் வந்தவர்கள் உங்கள் மூலம் தொடர்ந்து வாழ்வதால், உங்கள் வாழ்க்கை என்ன என்பதை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள்.
நீங்கள் 18 வயதில் இருந்தபோது, அவற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் உங்களுக்கு வயது ஆக ஆக, அவை மெதுவாக இன்னும் வெளிப்படையாகத் தெரியத் துவங்குகின்றன. பைரவி ரக்த சுத்தி என்பது உங்கள் முன்னோர்களின் பதிவுகள் அனைத்திலிருந்தும் உங்கள் இரத்தத்தை சுத்திகரிப்பது - அதனால் நீங்கள் இங்கே அமர்ந்திருந்தால், அது வெறும் நீங்கள் மட்டுமே - வெறும் உயிர் மட்டுமே - பழைய திரைப்படத்தின் மறுஒளிபரப்பு அல்ல. இது ஒரு புதிய திரைப்படம், ஒரு புதிய நாடகம் - மறு ஒளிபரப்பு அல்ல.
நீங்கள் இதைப் புரிந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் கடந்த ஆறு அல்லது ஏழு தலைமுறைகளின் மறுஒளிபரப்பு மட்டுமே. உங்கள் சூழ்நிலைகள் வேறுபட்டிருக்கலாம் - உங்கள் முன்னோர்களில் யாரும் இருந்திராத வகையில் நீங்கள் ஒரு கணினி பொறியாளராக இருக்கலாம். ஆனால் அது அப்போது கணினிகள் இல்லாததால் மட்டுமே. நாம் இப்போது செய்வது நாம் வாழும் காலத்தின் விளைவு. இது நம்முடைய செயல் அல்ல.
பல தலைமுறை மக்கள் உழைத்து நாம் இன்று இருக்கும் நிலைக்கு நம்மை கொண்டு வந்துள்ளனர். கணினிகள் உங்கள் தலைமுறையால் உருவாக்கப்படவில்லை. கடந்த சில தலைமுறைகள் இது எங்கு கொண்டு செல்லும் என்று தெரியாமலேயே, அதன் கணிதவியல் மற்றும் பிற அம்சங்களில் பணியாற்றி, படிப்படியாக இதனை அடைந்தனர். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் கடந்த ஆறு அல்லது ஏழு தலைமுறையினரின் உழைப்பின் அடிப்படையிலே அமைந்துள்ளன.
இது பொருள் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பொருந்துவதல்ல, உங்களிடம் உள்ள உடல் மற்றும் மனதின் தன்மை, அவை நன்றாக செயல்படுகிறதா இல்லையா என்பதற்கும் பொருந்தும். "ஓ, அப்படியென்றால், எனது தாத்தாதான் இதற்கு காரணம்!" - இந்த மனப்பான்மையைத்தான் நாங்கள் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்; நாம் "பொறுப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்தும்போது, அது எப்போதுமே உங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இதுவும் ரக்த சுத்தியே. "நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதற்கு நானே பொறுப்பு" என்பதை நீங்கள் புரிந்து உணரும்போது, ஏதோ ஒருவகையில், முந்தைய தலைமுறைகளை ஒதுக்கி வைக்கிறீர்கள். இல்லையெனில், அவர்கள் உங்களை உங்களுக்குள் இருந்தே ஆட்சி செய்வார்கள்.
வெளியிலிருந்து உங்களை ஆள்பவர்களை உங்களால் சமாளிக்க முடியும். ஆனால் உங்களை உள்ளிருந்து ஆள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போது தங்கள் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியாது. உதாரணமாக, நீங்கள் ஏதாவது சாப்பிடுகிறீர்கள், அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். உண்மையில் அது உங்கள் கொள்ளுப்பாட்டனாருக்கு பிடிக்காததாக இருக்கலாம். இது ஒரு எளிமையான உதாரணம் மட்டுமே; இதுபோன்ற பல அம்சங்கள் உள்ளன. இது எண்ணற்ற வழிகளில் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, பைரவியின் முக்கியமான அம்சங்களில் ஒன்று பைரவி ரக்த சுத்தி, இது முன்னோர்களின் பதிவுகளிலிருந்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் இங்கே அமரும்போது, நீங்கள் வெறும் ஒரு உயிர் மட்டுமே, மேலும் இந்த வாழ்க்கையை உங்களுக்கு விருப்பமான எந்த வழியிலும் வடிவமைக்க முடியும். நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருப்பவர் என்றால், இது அடிப்படையானது.