மண் காப்போம்

உயிருள்ள மண்:

நம் வாழ்வில் மண்ணின் முக்கியத்துவம்

மண்ணின் அதிமுக்கியமான பங்கு, நம் வாழ்வில் அதன் தாக்கம், மண்ணின் ஆரோக்கியத்தை சீர்செய்வதற்கான தற்போதைய உலகளாவிய முயற்சிகள் குறித்து அறிந்துகொள்வோம். இந்தப் பதிவில், பூமிப்பந்தின் அத்தியாவசியமான அடித்தளத்தைக் காப்பதற்கான நீடித்த கொள்கைகள் மற்றும் வழிமுறைகளுக்கான அவசியம் பற்றி சத்குரு தெளிவாக எடுத்துரைக்கிறார்.

மண்ணுடனான நமது உறவைப் புரிந்துகொள்ளல்

சத்குரு: மண்ணின் மீதான எனது ஆர்வம் கல்வி சார்ந்தது அல்ல. நான் மக்களிடம், “மண்ணுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எப்படி கவனிக்காமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு மண் விஞ்ஞானியாகவோ அல்லது ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராகவோ இல்லை என்ற காரணத்தால் அதைக் கவனிக்காமல் இல்லை – நீங்கள் உண்மையில் ஒருபோதும் உயிர்களை உற்று கவனித்ததில்லை என்பதுதான் நிதர்சனமான சிக்கல். உயிருக்கு கவனம் அளிக்காமலேயே நீங்கள் அதைப்பற்றிய தகவல் அறிவை சேகரிக்க முயற்சிக்கிறீர்கள். இது ஏன் நிகழ்கிறது என்றால், நமது கல்விமுறையானது நம்முடைய கவனித்தலைவிட, நினைவாற்றலுக்கு நமக்கு வெகுமதி வழங்குகிறது.

உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் உண்மையாகவே கவனம் செலுத்தினால், நம் வாழ்தலுக்கு மண்தான் அடிப்படையானது என்பதை எப்படி நீங்கள் உணராமல் இருக்கமுடியும்? நீங்கள் சாப்பிடும் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றும், உங்களது உடல்கூட மண், நீர், காற்று, மற்றுமுள்ள மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் நீங்கள் எப்படி இந்த பூமியில் வாழமுடியும்? அதனைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு எந்த விஞ்ஞான அறிவும் தேவையில்லை.

மற்ற எந்த ஒரு உயிரினத்தையும் போல் வாழ்வை உணர்ந்துகொண்டு, நான் இந்த பூமிக்கிரகத்தின் மீது அறுபத்து ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறேன். ஒரு புழுவைப்போல, மண்ணுக்கு என்ன நிகழ்ந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படுகிறேன். ஆனால் மனிதர்கள் பலரும் இந்த உணர்தலைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தங்களது எண்ணங்களில் ஆழ்ந்துபோயுள்ளனர்.

மண்ணுக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைத் தனிப்பட்ட முறையில், வழக்கமாக விவசாயிகளே உணரக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக, கடந்த ஐம்பது வருடங்களாக, விவசாயிகள்கூட, மண்ணுடனான தொடர்பைத் தொலைத்துவிட்டனர். நிலத்துக்கு செவிசாய்ப்பதைவிட, அவர்கள் பரிசோதனைக் கூடங்களை சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டனர். பரிசோதனைக் கூடங்கள் புதுமைகள் செய்வதற்காக பயன்படும் நிலையில், மண் என்பது அனைத்துக்குமான நிகழ்விடமாக உள்ளது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அத்தியாவசியமானது.

இயற்கையான, நீடித்த வாழ்வின் சுழற்சி

இந்த மரம், மண். இந்தக் கட்டிடம், மண். நான், மண். இங்கே மண் அல்லாத எதையாவது உங்களால் அடையாளம் காணமுடியுமா? அனைத்துமே, அது ஒரு ராக்கெட், கணினி அல்லது ஒரு வாழைப்பழமாக இருந்தாலும், அது இறுதியில் மண்ணாகத்தான் இருக்கிறது. நாம் வந்திருப்பதும் மண்ணில் இருந்துதான், நாம் வாழ்வதும், திரும்பிச் செல்வதும் மண்தான். சுருக்கமாக, பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனுடைய மறுசுழற்சியின் பாகமாக இருக்கிறோம், பூமி உயிர்ப்புடன் இருக்கும் காரணத்தால், அது நம்மை மறுசுழற்சி செய்கிறது.

நமது வாழ்க்கை தனியானது என்று நாம் எப்போதும் அனுமானித்துக் கொள்கிறோம், ஆனால் நாம் அனைவரும் ஒரு மறுசுழற்சியின் பாகமாக இருக்கிறோம். மண்ணுக்குள் திரும்பிச் செல்லாத யாராவது ஒருவர் இங்கே இருக்கின்றாரா? ஒருவேளை, ஒரு சில வருடங்களுக்கு நம் வாழ்வை நீட்டிக்கமுடியும், ஆனால் இறுதியில், நாம் அனைவரும் மண்ணுக்கு திரும்பிச் செல்வோம். இந்தப் புரிதல் புத்தகங்களிலோ அல்லது அறிவியல் கூடங்களிலோ காணப்படும் அறிவினால் வருவதல்ல, வெறுமனே நமது வாழ்க்கைக்கு கவனம் செலுத்துவதில் இருந்து வருகிறது. நாம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உண்மையாகவே புரிந்துகொண்டால், நாம் இயல்பாகவே வாழ்வின் மூலத்தைக் குறித்து கவனம் கொள்வோம்.

அது இந்தியாவாக இருந்தாலும், அல்லது சீனா, அமெரிக்கா மற்றும் எந்த நாடாக இருந்தாலும், பிரச்சனை ஒன்றுதான். கடந்த 50 வருடங்களில், உலகெங்கிலும் விவசாயிகள், இரசாயனங்களின் பயன்பாடு குறித்து உற்சாகப் பெருக்கில் இருந்துவந்துள்ளனர். 1918ல், ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி இரசாயன உரத்தை அறிமுகம் செய்தார், அப்போது அது ஒரு மாயம் போல் செயல்படுவதாகத் தோன்றியது. மண்ணின் முக்கியத்துவம் பற்றியே நாம் மறந்துவிடும் அளவுக்கு, இந்த “மாயம்” நம்மை அதிகம் மயக்கிவிட்டது.

ஆரம்பத்தில் உரம் ஒரு கூடுதல் பொருளாகத்தான் உத்தேசிக்கப்பட்டது, ஆனால் நாளடைவில், உயிர்சத்து இல்லாமலேயே மண்ணில் பயிர்களை விளைவிப்பதற்கு நாம் அதனையே சார்ந்திருக்கத் தொடங்கினோம். உயிர்தான், உயிரை உற்பத்தி செய்யமுடியும் என்பதை நினைவுகூர்வது மிகவும் முக்கியமானது. மண்ணின் உயிரோட்டம், நாம் உணவாகப் பார்க்கும் அவ்வளவு உயிரையும் உற்பத்தி செய்கிறது. நீங்கள் ஒரு கேரட்டை சாப்பிட்டாலும், அல்லது வாழைப்பழம், கோழி, எதுவாக இருந்தாலும் அது ஒரு உயிர். நமது உயிரைத் தக்கவைப்பதற்கு, நாம் ஒரு உயிரை சாப்பிடுகிறோம்; முடிவில், இந்த உயிர், மற்ற உயிர்களால் உணவாகக் கொள்ளப்படும். வாழ்வின் இயல்பு – ஒரு இயற்கையான, நீடித்த சுழற்சியாக இருக்கிறது.

இரசாயன சார்பின் விளைவுகள்

நமது இலக்குகளை உற்பத்தி செய்யக்கூடிய சில இரசாயனங்கள் நமக்குக் கிடைத்த காரணத்தால், நாம் மிகவும் உற்சாகம் அடைந்துவிட்டோம். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலகெங்கும் பல நாடுகளில் மிக மோசமான பஞ்சங்களை நாம் கண்டுள்ளோம். இரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, அவைகள் உற்பத்தியை பன்மடங்காக்கக்கூடிய காரணத்தால், உணவுப்பஞ்சத்துக்கான சிறந்த தீர்வாக அது கருதப்பட்டது. இரசாயனங்கள் தன்னளவில் பிரச்சனை இல்லை.

பிரச்சனை என்னவென்றால், மண் ஒரு வாழும் பொருள் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை – இந்த பூமி மீது மட்டுமல்லாமல், நாம் அறிந்திருக்கும் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய வாழும் பொருள் மண்தான். இதனை நாம் உணரத் தவறிவிட்டோம். நீங்கள் நல்ல உணவை சாப்பிட்டுக்கொண்டு, ஆரோக்கியமாக இருந்தபோது, ஒரு பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்ற நிலையில், அவர்கள், “உங்களுக்கு இரும்புச்சத்து குறைவாக உள்ளது” என்று கூறி, ஒரு மாத்திரையைக் கொடுத்தனர் என்றால், அந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்டு மிக நன்றாக உணர்ந்த பிறகு, “நான் 100 மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, உணவை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம்”, என்று நீங்கள் நினைப்பதைப் போன்றதுதான் இது.

இதைத்தான் நாம் நிலத்திற்கு செய்துவிட்டோம். நாம் ஏதோ இரசாயனத்தைக் கலந்தோம்; பலன்கள் கிடைத்தன. மண் உயிர்ப்புடன் இருந்த காரணத்தால், இரசாயனம் அதனைத் தூண்டியது என்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால் காலப்போக்கில், அதே இரசாயனங்களுடன், அது நல்ல விளைச்சலை உற்பத்தி செய்யும் என்று எண்ணிக்கொண்டு, மண்ணை நாம் கொல்லத் தொடங்கிவிட்டோம். துரதிருஷ்டவசமாக, நாம் எண்ணியது நிகழவில்லை. ஐக்கிய நாடுகளின் முகமைகள் தெளிவாக எடுத்துக் கூறுவதைப்போல், இந்த பூமியில் அடுத்த 50ல் இருந்து 55 வருடங்களுக்கான விவசாய மண்தான் எஞ்சி இருக்கிறது. அதற்குப் பிறகு, விவசாயம் இருக்கமுடியாது. ஏனென்றால், மண் எல்லா இடங்களிலும் இந்த ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டது.

மண்ணில் கரிமப்பொருள் அழிவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஒரு மிதவெப்ப காலநிலைக்கும் மற்றும் வெப்பமண்டல காலநிலைக்கும் தேவையான கரிமப்பொருள் வேறுபடுகிறது. வெப்பமண்டல காலங்களில், குறைந்த கரிமப்பொருளுடன்கூட, நாம் அதிக உணவை உற்பத்தி செய்யமுடியும். ஆனால் மேற்கொண்டு அட்சரேகையில் நகரும்போது, அதே விளைச்சலைப் பெறுவதற்கு அதிகமான கரிமப்பொருள் தேவைப்படுகிறது.

மண்ணில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான கரிமப்பொருள் கொண்ட எந்த நிலப்பரப்பும் பாலைவனமாதலை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளில், மிக அதிகமான சராசரி கரிமப்பொருளாக 1.42% காணப்படுகிறது. தெற்கு ஐரோப்பாவில் அது ஏறக்குறைய 1.1%, அமெரிக்காவில் அது 1.25% உள்ளது. ஆப்பிரிக்காவின் கரிமப்பொருள் சராசரியாக 0.3% உள்ளது.

இந்தியாவில், 62% நிலங்களின் கரிமப்பொருளானது 0.5% க்கும் குறைவாக இருக்கிறது. வரலாற்றுரீதியாக வளமான ஆற்றுப்படுகைகள்கூட இப்போது, மண் அழிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.

மண் ஆரோக்கியத்தை மீட்டெடுத்தல்: உலகளாவிய முயற்சிகளும், முன்னேற்றங்களும்

அதிர்ஷ்டவசமாக, திருத்தியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கம், மண் மற்றும் மர அடிப்படையிலான தலையீடுகள் மூலமாக 13 பெரிய நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக 19,000 கோடி ரூபாய்களை ஒதுக்குவதாக அறிவித்தது. மற்றும் மண்ணைக் காப்பதற்காக பத்து மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சீன அரசாங்கம், மண் ஆய்வைத் தொடங்கியுள்ளது.

அதைப்போலவே, ஐரோப்பிய ஒன்றியமும் ஆலோசனை செயல்முறைகளைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, முன்னதாகவே பணமுதலீடு செய்துவிட்டது; இங்கிலாந்து ஏதோ ஒன்றைச் செய்துகொண்டுள்ளது, மற்றும் காமன்வெல்த் நாடுகள் ஒன்றாக இணைந்து வருகின்றன. இது குறித்த முன்னகர்வு இருக்கிறது. இது நிகழுமா, இல்லையா என்பதில் எனக்கு இனியும் சந்தேகம் இல்லை. நாம் நிச்சயமாக மண்ணை மீளுருவாக்குவோம். எவ்வளவு வேகமாக என்பது முக்கியமான விஷயம். ஒரு நியாயமான கால அளவில் நாம் இதனைச் செய்துவிடுவோமா?

சராசரியாக, 27,000 உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில், சுமாராக அடுத்த 20ல் இருந்து 25 வருடங்களில், மண்ணை மீளுருவாக்கம் செய்வது அதீத கடினமானதாகிவிடும் ஒரு கட்டத்தை நாம் எட்டிவிடுவோம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மனித ஆரோக்கியமானது குறிப்பிடும்படி பாதிக்கப்படும்; மண்ணின் இந்த நுண்ணுயிர் செயல்பாடு இல்லாமல் அது சிதைந்துவிடும். அது இல்லாமல், நாம் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ ஆரோக்கியமாக இருக்கமுடியாது.

மண் அழிவையும், உலகளாவிய உணவு நெருக்கடியையும் எதிர்கொள்வது

புத்திசாலித்தனமான விஷயங்களைச் செய்யும் புத்திகூர்மையான மனிதர்கள் எப்போதும் இருக்கையில், அதனை அரசாங்கக் கொள்கையாக உருவாக்குவது மிக முக்கியமானது. இன்றைக்கு மட்டுமல்லாமல், 100 அல்லது 500 வருடங்களுக்குப் பிறகும்கூட, மக்களால் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், அந்தக் கொள்கையைப் பின்பற்றுவதையும் இது உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக, உங்களுக்கு விவசாய நிலம் இருந்தால், குறைந்தபட்சம் 3% கரிமப்பொருளை நீங்கள் பராமரிக்கவேண்டும். இதை நடைமுறைப்படுத்தவும், கட்டாயமாக்கப்படவும் வேண்டும்.

நகரங்களில் கட்டிடங்களை முறைப்படுத்துவதற்கான நகர்ப்புற விதிமுறைகள் உள்ளன, ஆனால் விவசாய நிலத்திற்கு அப்படிப்பட்ட விதிமுறைகள் இல்லை. யாராவது 100 ஏக்கர் நிலம் வைத்துக்கொண்டு, 10 வருடங்களில் நிலத்தைப் பாலைவனமாக்கினால், ஒருவரும் அவர்களைக் கேள்வி கேட்கமாட்டார்கள்; அது ஒரு குற்றமாகக் கருதப்படுவதும் கிடையாது.

கரிமப்பொருளை மேம்படுத்துவது என்பது ஆரம்பத்தில், அரசாங்கங்களிடம் இருந்து பெருத்த ஊக்கத்தொகைகள் வழங்குவதுடன் நிகழவேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்தபிறகு, மற்ற எந்த சட்டத்தையும்போல், கரிமப்பொருளை மேம்படுத்தாமல் இருப்பதும் தண்டனைக்குரியதாக இருப்பது அவசியம். இது உலகம் முழுவதிலும் நிகழத் தேவைப்படுகிறது. மற்றொரு அம்சம், உணவானது மக்கள் வாழ்கின்ற இடத்தில் விளைவிக்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, தற்பொழுது, உணவு ஒரு இடத்தில் விளைவிக்கப்படுகிறது, மற்றும் மக்கள்கூட்டம் வேறொரு இடத்தில் வாழ்கிறது. இந்தச் சூழ்நிலையானது எப்போதும் பஞ்சம் ஏற்படும் ஆபத்தைச் சுமந்திருக்கிறது.

தற்போது, ஆப்பிரிக்காவின் ஏழு நாடுகள் பஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் அங்கு பரவலான ஊடக இயக்கம் இல்லை. ஒரு பிரச்சனை பார்க்கப்படவில்லை என்றால், அது இல்லை என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் உணவு இல்லாமல் இறப்பவர்களை புறக்கணிக்க முடியாது. ஆப்பிரிக்காவில் மட்டும், இந்த ஆண்டு சுமார் 3,00,000ல் இருந்து 3,60,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறந்துபோவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நமது கண்களை நாம் மூடிக்கொண்டு, அது நிகழவில்லை என்று பாவனை செய்யலாம், ஆனால் மனித துயரம் எத்தனையோ பல வெவ்வேறு வழிகளில் திரும்பவும் வரும்.

மண்ணுக்காக ஒன்றிணைந்தது

தனிப்பட்ட விவசாயிகள் நீடித்த விவசாயத்தை கையிலெடுப்பதும், ஊக்குவிப்பதும் மட்டும் போதாது. ஒவ்வொரு நாட்டிலும், ஊக்கத்தொகை அடிப்படையிலான முன்னெடுப்புடன் தொடங்கி, காலப்போக்கில் கட்டாயமாக்கப்படும் சட்டமாக விரிவாக்கம் செய்வது வரைக்கும், அதனை ஒரு கொள்கையாக உருவாக்குவது அத்தியாவசியமானது. நகர மையங்களில் கட்டிட விதிகள் இருப்பதைப்போல் அவைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நாம் செயல்பட்டு வருகிறோம். உதாரணத்திற்கு, யாராவது விவசாய நிலம் வைத்திருந்தால், அவர்கள் நிலத்தில் குறைந்தபட்சம் 3% கரிமப்பொருளைப் பராமரிக்க வேண்டும்.

அரசியல் சார்பில் நாடுகள் வேறாக இருக்கலாம், ஆனால் மண் என்று வரும்போது, நாம் ஒரே மனிதகுலம், மற்றும் நாம் ஒரே உயிர். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் – இதுவே முன்னோக்கிச் செல்லும் வழி.