வாழ்வின் மர்மங்கள்

ஆனந்தமாக வேலை செய்யுங்கள்: எண்ணங்களில் மூழ்காமல் ஆற்றலுடன் செயலாற்றுங்கள்

சிந்தனையைத் தூண்டும் இந்தப்பதிவில், நிறைவான ஒரு வாழ்க்கைக்கான திறவுகோலை சத்குரு வெளிப்படுத்துகிறார். ஆனந்தம் பொங்க வாழ்ந்து பணிபுரியும் கலையையும், நம்மை குறைத்து மதிப்பிடுவதாக உணரும் சவால்களையும் எப்படிக் கடந்துசெல்வது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். வெற்றியின் அர்த்தத்தை மறுவரையறை செய்யும் ஒரு தன்னிலை மாற்றத்துக்கான பதிவு இது.

தளர்வும், நிறைவுமான வாழ்க்கையைத் தழுவிக்கொள்வது

கேள்வியாளர்: இன்றைக்குப் பெரும்பாலானோர் மிகவும் பரபரப்பான மக்களாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. எங்களது நேரத்தை மேலும் சிறப்பாகக் கையாண்டு, அதிக அர்த்தம் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதற்கு எங்களுக்கு தாங்கள் என்ன விதமான அறிவுரை வழங்குவீர்கள்?

சத்குரு: உலகெங்கும் உள்ள எல்லா விதமான பின்புலத்திலிருந்தும் மக்களைச் சந்திப்பதில், நான் கவனித்தவரை, அவர்கள் பெரும்பாலானவர்களும் பரபரப்பாக வேலை செய்வதைவிட, அதிகமாக எண்ணங்களில்தான் மூழ்கியுள்ளனர். இது ஏனென்றால், அவர்களது சொந்த எண்ணங்களும், உணர்ச்சிகளுமே அவர்களின் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய பிரச்சனைகளாக உள்ளன. அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட, அவர்களுக்குள் நிறைய போராட்டம் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு விளையாட்டிலோ அல்லது படைப்பாக்கமான விஷயங்களிலோ ஈடுபட்டிருந்தால், ஒரு சிறிய போராட்டம்கூட அந்தப் பந்தை, உங்கள் ராகத்தை அல்லது உங்கள் வண்ணத்தீட்டலை வேறு திசையில் எடுத்துச் சென்றுவிடுவதை நீங்கள் அறிவீர்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், எளிமையாக செய்யக்கூடிய ஏதோ ஒன்று, மிகுந்த கடினத்துடன் செய்யப்படுகிறது. இதற்கு முக்கியமாக மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மனம் காரணமாக உள்ளது. மனம், ஒரு அற்புதமான கணினி போன்றது, ஆனால் அவர்கள் பயனாளர் கையேட்டினை வாசிக்காமல் அதை இயக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அதனால்தான், இறுதி நாள் வரையிலும், தனிமனிதர்கள் அவர்களது சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் போராடுகின்றனர். இந்த அம்சங்களை அவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியிலேயே புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டால், அவர்கள் சில மணி நேரங்கள் வேலை செய்து, அதிக உற்பத்தித் திறனுடன் இருப்பார்கள்.

வாழ்க்கையை, போராட்டம் இல்லாமல் எளிதாக வாழ்வதற்கான சாத்தியத்தை மக்களுக்கு வழங்குவது என் முயற்சியாக இருக்கிறது. பொதுவாக, மக்கள் கடுமையாக வேலை செய்வதற்குக் கற்றுக்கொடுக்கப்படுகின்றனர், ஆனந்தமாக வேலை செய்வதற்கு அல்ல. அவர்களது வேலை அவர்களின் ஆனந்தம் அல்லது அன்பின் ஒரு வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்று ஒருவரும் அவர்களுக்குக் கூறவில்லை. ஆனால் நீங்கள் கடினமாக உழைத்தால், வாழ்க்கை சோர்வூட்டுவதாக இருக்கும். ஏதோ ஒன்றை எப்படிச் செய்வது என்று உங்களுக்குத் தெரியாத காரணத்தினால்தான், அது கடினமாக இருக்கிறது. அதனை நன்றாக செய்வது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், அதை நீங்கள் எளிதாக செய்வீர்கள்.

வாழ்க்கையை, போராட்டம் இல்லாமல் எளிதாக வாழ்வதற்கான சாத்தியத்தை மக்களுக்கு வழங்குவது என் முயற்சியாக இருக்கிறது.

ஒரு விஷயத்தை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்ளாமல், புரிந்துணர்வதில் போதுமான நேரத்தை முதலீடு செய்யாமல், வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம்செலுத்தி, அதைச் செய்வதற்கு நீங்கள் முயற்சித்தால், அப்போது வாழ்க்கை ஒரு பெரிய போராட்டமாகிறது. மக்கள், தாங்கள் பல விஷயங்களைச் செய்துகொண்டிருப்பதாக நம்பிக்கை கொள்ளலாம், ஆனால் உண்மையில், பெரும்பாலானவர்கள் சாப்பிட்டுக்கொண்டும், உறங்கிக்கொண்டும், இனப்பெருக்கம் செய்வதுமாக இருந்துவிட்டு, ஒருநாள் இறந்துவிடுகின்றனர். மற்றும் அதற்கே, அவர்கள் அவ்வளவு பெரிதாக ஆரவாரம் செய்கின்றனர்.

ஒவ்வொரு உயிரினமும், ஒரு மண்புழு அல்லது பூச்சியிலிருந்து உருவத்தில் பெரிய உயிரினம் வரை, அதற்குரிய வாழ்க்கையை நன்றாக வாழ்கிறது. அவை சாப்பிடுகின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, மற்றும் இறக்கின்றன. இவை அனைத்தையும், மனித மூளையில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு மூளையுடனேயே செய்துவிடுகின்றன. ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் பெரிய மூளையுடன், அவர்கள் பெரிதும் போராடுகின்றனர் – அவர்கள் செய்யும் விஷயங்களுடன் அல்ல, ஆனால் அவர்களது சொந்த புத்திசாலித்தனத்துடனேயே போராட்டம் நிகழ்கிறது. வாழ்வின் மிகப்பெரிய வெகுமதியாக இருக்கும் அவர்களது புத்திசாலித்தனம், இப்போது ஒரு பிரச்சனையாகியுள்ளது, ஏனென்றால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அது இடைவிடாமல் அவர்களுக்கு எதிராக வேலைசெய்கிறது.

மக்கள் இதனை அழுத்தம், இறுக்கம், துன்பம், பதற்றம் அல்லது பைத்தியக்காரத்தனம் என்று குறிப்பிடலாம். முக்கியமாக, அது என்னவென்றால், அவர்களது புத்திசாலித்தனம் அவர்களுக்கு எதிராக வேலைசெய்கிறது. இதுதான் எனது பணியின் அடிப்படையான கவனம் – உடலும், மனமும் அவர்களின் நலனுக்காக செயல்படுவதை உறுதிப்படுத்துவது. இது நிகழ்ந்தால், ஆனந்தமாக, அழகாக, மற்றும் திறம்பட வாழ்வது இயல்பான விளைவாக இருக்கிறது.

எனது முயற்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?

கேள்வியாளர்: நமது முயற்சிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று யாரேனும் வருந்தினால், அந்த நிலையில் மேலும் முன்னேறவும், மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் எப்படி தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வது? தங்களது செயல்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று நினைக்கும் மக்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள்?

சத்குரு: “நான் பொருட்படுத்தமாட்டேன்” என்று இருப்பது பலனளிக்கப் போவதில்லை. அதே நேரத்தில், மக்கள் பலரும், அவர்களது முயற்சிகள் விரும்பிய பலனை வழங்கவில்லை என்று வருந்தக்கூடும். உங்களது கணிப்பில், நீங்கள் சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம், ஆனால் உலகமும் அதை அங்கீகரிக்க வேண்டியுள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதன் மதிப்பீடு என்ன என்பதை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் – அப்போதுதான் அது அங்கீகாரம் காணும்.

நீங்கள் செய்வது மதிப்பு வாய்ந்தது என்று நீங்கள் உணர்ந்தால், அதன் பிறகு மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பற்றி எதுவும் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் செய்வது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் காரணத்தால் அவர்கள், “ஓ, இது அற்புதமாக இருக்கிறது” என்று கூறுவார்களே தவிர, நீங்கள் செய்வது மகத்தானது என்பதால் அல்ல. ஆகவே, “நான் பொருட்படுத்துவதில்லை” என்பது நிச்சயம் வேலை செய்வதில்லை. மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்கின்றனரா இல்லையா என்பது, நீங்கள் செய்வது அந்த நேரத்துக்கு அவர்களுக்கு எப்படி உபயோகமாக இருக்கிறது என்பதைச் சார்ந்துதான் இருக்கிறது. நாம் கையிலெடுத்திருக்கும் குறிப்பிட்ட வேலையை அது சார்ந்துள்ளது.

நான் யார் என்பதன் தன்மையை மக்கள் அங்கீகரிப்பதில்லை - அவர்களுக்கு நான் எப்படி பயன்படுகிறேன் என்பதையே அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.

இன்று, நான் செல்லும் இடமெல்லாம், "ஓ, அவர் ஒரு யோகி, ஒரு ஞானி," என்பது போன்ற விஷயங்களை மக்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஒரு யோகி அல்லது ஒரு ஞானி என்றால் என்ன என்று தெரியாது. பல பத்தாண்டுகளாக நான் ஒரே விஷயங்களைக் கூறிக்கொண்டுள்ளேன், ஆனால் அதைப்பற்றி எதையும் யாரும் சிந்திக்கவில்லை. இப்போது உலகம் முழுவதிலும், மக்கள் கரவொலி எழுப்புகின்றனர். இந்த அங்கீகாரம் அனைத்தும் எனக்கு அர்த்தமில்லாதவை.

ஏதோ ஒருநாள், ஒரு யோகியாக இருப்பதன் உண்மையான சாராம்சத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு, அப்படிப்பட்ட ஒருவராக இருப்பதற்கு உந்துதல் கொண்டால், அது அற்புதமாக இருக்கும். மேலும் உண்மையில், அவ்விதமாக உந்தப்பட்ட மக்கள் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், நான் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு, உலகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்தால், என் குடும்பம் உட்பட எனக்கு நெருங்கிய மக்கள்கூட, நான் ஒரு யோகியாக இருப்பதைப் பற்றி அதிகம் நினைக்கமாட்டார்கள்.

உங்கள் வேலை, உங்களது ஆனந்தத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தால், அங்கீகாரம் இருந்தாலும், இல்லையென்றாலும், அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

உண்மையில் ஒரு யோகி என்றால் என்ன என்பதையே அறியாமல், இன்றைக்கு, சர்வதேச அங்கீகாரத்தின் காரணத்தால் ஒவ்வொருவரும், “அவர் ஒரு மகா யோகி”, என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அது என்னவென்றால், அவர்களுக்கு அது உபயோகமாக இருப்பதை பலரும் புரிந்துகொண்டுள்ளனர். நான் யார் என்பதன் தன்மையை மக்கள் அங்கீகரிப்பதில்லை - அவர்களுக்கு நான் எப்படி பயன்படுகிறேன் என்பதையே அவர்கள் அங்கீகரிக்கின்றனர். என்னுடைய தன்மையை ஒரு சிலரே அடையாளம் கண்டுகொள்வார்கள். மற்றவர்களுக்கு இது என்னவென்று கூட தெரியாது, அது பரவாயில்லை.

உங்கள் வேலை, உங்களது ஆனந்தத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தால், அங்கீகாரம் இருந்தாலும், இல்லையென்றாலும், அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? உங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு வாய்ப்பைக் காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பார்க்கும்போது, உங்கள் மகிழ்ச்சியின் தேடுதலில் நீங்கள் இருக்கும் கணங்களின் தன்மை என்னவாக இருக்கிறது? மற்றும் உங்கள் ஆனந்தத்தை நீங்கள் வெளிப்படுத்தும் கணங்களின் தன்மை என்னவாக இருக்கிறது? நிச்சயமாக, உங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும்போது இருப்பதுதான் உங்கள் வாழ்வின் சிறப்பான கணங்களாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களது ஆனந்தத்தின் வெளிப்பாடாக உங்கள் வேலை இருக்கும்போது, இவை உங்கள் வாழ்வின் சிறந்த கணங்களாக இருக்கும்.