சிறப்புக் கட்டுரை

தியானலிங்கம்: நம்மோடு வாழும் வாய்பேசாத குருவின் வழிகாட்டுதல்

உடல்தன்மையான எல்லைகளைக் கடந்திருக்கும் ஒரு வாழும் குருவாக தியானலிங்கம் செயலாற்றுவதை சத்குரு விவரிக்க, அதன் ஆழங்காண முடியாத சக்தியை அறிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் ஆன்மீக நல்வாழ்வை உருவாக்கும் இந்த சக்திவடிவம் எப்படி தனிமனிதர்களின் தியானத்தில் எளிதாக வழிநடத்தி, அவர்களது வாழ்வில் தன்னிலை மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும் என்பதையும் அறிந்திடுங்கள்.

கேள்வியாளர்: சத்குரு, தியானலிங்கம் எப்படி ஒரு வாழும் குருவாக இருக்கிறார் என்பதைப் பற்றி நீங்கள் கூறினீர்கள். எனது கேள்வி, தியானலிங்கமானது முற்றிலும் வேறொரு பரிமாணத்திலிருந்து எங்களுக்கு ஏதோவொன்றைக் கற்றுக்கொடுத்து, மக்களுக்கு விஷயங்களைப் பரிமாறமுடியுமா?

எல்லைகள் விரிவடைதலும், முயற்சியற்ற தியானமும்

சத்குரு: இதைப்போன்ற ஒரு பொழுதுபோக்கு அமர்வை தியானலிங்கம் நிகழ்த்துமா என்பதுதான் உங்கள் கேள்வியா? தியானலிங்கத்தில் கற்றுக்கொடுப்பதற்கு எதுவுமில்லை, அங்கே பரிமாறுவதற்கு ஒரு விஷயம் இருக்கிறது, அதைத்தான் தியானலிங்கம் செய்கிறது.

தியானலிங்கம் என்றால் கதைகள் எதுவும் இல்லை; நீங்கள் வெறுமனே அங்கு அமர்ந்திருங்கள். யோகா என்றால், வாழ்க்கையை மிகப் பெரிய அளவில் உணர்வதற்கு உங்களது தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை விரிவாக்குவது. நீங்கள் அங்கு அமர்ந்தால், இயல்பாகவே அது உங்களது தனிப்பட்ட இருப்பின் எல்லைகளை நீக்கிவிடும் விதமாக, தியானலிங்கத்தின் அதிர்வானது உருவாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை விலக்குவதற்காக தியானலிங்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தியானம் செய்வது என்றால் என்ன என்பதையே ஒருபோதும் அறிந்திராத மக்கள் அங்கு வந்து அமர்கின்றனர். அவர்கள் 15 நிமிடங்களுக்கு அமர்ந்திருக்கலாம் என்று நினைத்திருக்கக்கூடும், ஆனால் பல மணி நேரங்கள் கடந்ததை அவர்கள் உணராத நிலையில் இருப்பது ஏனென்றால் அவர்கள் தங்களது உடல் குறித்த உணர்வினை இழந்துவிடுகின்றனர். தனிப்பட்டதன்மையின் எல்லைகளை விலக்குவதற்காக தியானலிங்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தியானலிங்கத்தில், நீங்கள் யோகா செய்யாமலேயே உங்களால் யோகா செய்யமுடியும். இல்லையென்றால், தியானம் கற்றுக்கொடுப்பதற்கு, நீங்கள் எத்தனை நபர்களை வழி நடத்தமுடியும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஆனால் தியானலிங்கம் லட்சக்கணக்கான மக்களை தியானத்துக்கு வழி நடத்தமுடியும்; நேரடியாக, ஒரு வார்த்தையும் இல்லாமல், மக்கள் தியானத்தன்மை அடையமுடியும், மற்றும் அதுதான் நோக்கமாக இருக்கிறது.

வாரத்தின் வெவ்வேறு நாட்களிலும், அது சற்றே வித்தியாசமாக இருக்கிறது; அடிப்படையான அம்சம் ஒன்றாகவே இருந்தாலும், மேலோட்டமான அம்சங்கள் நாளுக்கு நாள் மாறுபடுகிறது. வாரத்தின் ஏழு நாட்களும், வாழ்வின் ஏழு வித்தியாசமான பரிமாணங்கள் அல்லது ஏழு சக்கரங்களுக்கு தொடர்புடைய ஏழு வித்தியாசமான தன்மைகள் உள்ளன.

பௌதிக உடல் இல்லாமல், முழுமையான ஒரு மனிதர்

தியானலிங்கம், ஒரு முழு அளவிலான சக்தி உடலுடன் இருக்கும் ஒரு வாழும் குருவைப் போன்றது. அவருக்கு பௌதிகரீதியான ஒரு உடல் இல்லை, ஆனால் மற்ற எவரையும்போல் மற்றும் எவரையும்விட மிக அதிகமான உயிர்ப்புடன் இருக்கிறார். தியானலிங்கம் ஏழு சக்கரங்களுடன் உச்சபட்ச மனிதராக இருக்கிறார், ஆனால் பௌதிகத்தன்மையின் சுமை இல்லை. கருத்துரீதியாக நாம் விரும்பினால், சக்தி உடலுக்கு ஒரு பௌதிக உடலை உருவாக்கமுடியும், ஆனால் நடைமுறையில், அது மிகவும் சிக்கலானது.

தியானலிங்கம் ஏழு சக்கரங்களுடன் உச்சபட்ச மனிதராக இருக்கிறார், ஆனால் பௌதிகத்தன்மையின் சுமை இல்லை.

ஆகவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – உடல் இல்லாதவர். உடல் இல்லாதவர் என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். உடல் இல்லாதவர் என்றால் உங்களால் எந்த இடத்திலும் இருக்கமுடியும்; உங்களுக்குப் பிரச்சனையே இருக்காது. அவர் பௌதிகரீதியான உடல் என்ற சுமை இல்லாத முழுமையான மனிதராக இருப்பதால், குருவின் அணுக்கமான தொடர்பில் பெருந்திரளான மக்கள் அவர்களது சாதனாவைச் செய்யமுடியும். ஒரு குருவுக்கு பௌதிக உடல் இருக்கும்வரை, இந்த அணுக்கத் தொடர்பானது சிறு குழுவில் மட்டுமே நிகழமுடியும்.

தியானம் குறித்து எதையும் அறிந்திருக்காத மக்கள்கூட தியானலிங்கத்தின் வட்டத்தில் வெறுமனே அமர்ந்திருப்பதால் மட்டுமே தியானத்தன்மை அடையமுடியும் அளவுக்கு தியானலிங்கத்தினுடைய சக்தியின் அடிப்படை இயல்பாக இருக்கிறது. இதனால், வழிகாட்டுதல் இல்லாமல் மக்களை தியானம் செய்ய வைக்கமுடியும் என்பதுடன் இந்த தியானத்தன்மை அவர்களது வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்து இருக்கும். தியானலிங்கத்தின் அடிப்படையான நோக்கம் ஆன்மீக நல்வாழ்வு, ஆனால் அதற்கு மற்ற பரிமாணங்களும்கூட இருக்கின்றன, ஏனென்றால் தியானலிங்கம் ஏழு சக்தி மையங்கள் அல்லது சக்கரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைவருக்குமான ஒரு வாழும் குரு

இங்கு சிவனே வந்து அமர்ந்திருப்பதைப்போல, தியானலிங்கம் ஒரு உச்சபட்ச மனிதரைப் போன்று இருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள், ஒரு வாழும் குருவின் இருப்பிலும், மிக அருகாமையிலும் தங்கள் சாதனாவை செய்யமுடிகிறது. இல்லையென்றால், இது வழக்கமாக சாத்தியமில்லாதது. நீங்கள் எதையும் நம்பவேண்டியதில்லை; உங்களுக்கு எந்த விதமான சடங்கு அல்லது அர்ப்பணமும் தேவையில்லை. உங்கள் கண்களை மூடியவாறு அங்கு வெறுமனே அமர்ந்திருங்கள். தியானலிங்கத்தின் ஆற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் செயல்படத் தொடங்கும்.

இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு நாளில் வாழ்வின் மிக உயரிய நிலையில் இருந்தாக வேண்டியுள்ளது. எப்படியும், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்; நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் – உங்களையே முழுமையான உயிரோட்டத்துடன் ஏன் உருவாக்கிக்கொள்ளக்கூடாது? மரணத்துக்கு உங்கள் உதவி தேவையில்லை; அது அதிதிறன் வாய்ந்தது. வாழ்க்கைதான் திறனில்லாமல் நிகழமுடியும். ஆகவே, வாழ்க்கைக்கு உதவி, கூர்கவனம், மற்றும் மேம்படுத்துதல் தேவையாக உள்ளது. உங்கள் உயிர்த்தன்மையைக் குறைத்துக்கொள்வது பாதுகாப்பானது என்று நீங்கள் நினைப்பதால், அதைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், அப்போது நீங்கள் உங்களது உயிரோட்டத்தைக் குறைக்கிறீர்கள்.

இங்கு சிவனே வந்து அமர்ந்திருப்பதைப்போல, தியானலிங்கம் ஒரு உச்சபட்ச மனிதரைப் போன்று இருக்கின்றது.

எந்தக் கல்லையும்விட தாங்கள் பெரியவர்கள் என்று மக்கள் நினைக்க முற்படும் காரணத்தால், அவர்கள் தியானலிங்கத்திற்கு வந்து, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அமர்ந்திருக்கின்றனர். இருப்பினும், அவர்களில் பலருக்கும், அது வாழ்வை மாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. தினசரி, ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர், மற்றும் அவர்களைப் பொறுத்தவரை, அது படிக்காமலேயே தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது, எந்தத் திறமையும் இல்லாமல் எப்படி பணம் சம்பாதிப்பது, அல்லது மிக அழகிய ஆண் அல்லது பெண்ணை எப்படிக் கையாள்வது என்பதைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாமல் வாழ்க்கைத்துணையாக அடைய விரும்புவது போன்ற விஷயங்களைப்பற்றி வேண்டுகோள் விடுப்பதாக இருக்கலாம். இத்தகைய பிரார்த்தனைகள் அனைத்தையும் தியானலிங்கம் புறக்கணிக்கிறது.

தியானலிங்கம் எல்லா அறியாமைகளையும் புறக்கணிக்கிறார் – அவர் வெறுமனே அதிர்வுகளைப் பரப்புகிறார். ஒரு வாழும் குரு என்ற நிலையில், தியானலிங்கம் நீங்கள் எந்தத் தளத்தில் இருந்துகொண்டிருந்தாலும், அதில் செயல்படுகிறார். உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால், அவர் விதையை ஊன்றுகிறார். அந்த விதை முளைவிடவும் காத்திருக்கும். வேறொருவர் வந்து, முதல்முறையாக அங்கு அமர்ந்திருக்கக்கூடும், ஆனால் அவர்கள் முற்றிலும் பித்து நிலைக்குச் செல்லக்கூடும். வேறொருவருக்கு அது எதுவும் இல்லாத ஒரு காற்றுவெளியாக மட்டும் இருக்கக்கூடும். மற்றவர்கள் அவர்களுக்குள் ஒரு சிறு அதிர்வை உணரமுடியும். அது பல்வேறு மக்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது.

பொருள்வெளி கடந்த ஒரு சக்திவடிவம்

தியானலிங்கம் ஏற்கெனவே முழுமையான இயக்கத்தில்தான் இருக்கிறது, ஆனால் நீங்கள் கிரகிக்கும் தன்மையில் இருக்கவேண்டியுள்ளது. ஒரு நிலையில் பார்த்தால், கிரகித்தல் என்றால் நீங்கள் உணரும் திறனுடன் இருக்க விரும்புகிறீர்கள். இங்கே உங்கள் வெளிப்பாடு முக்கியமல்ல. அந்த ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுக்குள் மாற்றிக்கொண்டால், பிறகு நீங்கள் கிரகிப்புத்தன்மை கொள்வீர்கள்.

தியானலிங்கம் ஒரு குறிப்பிட்ட பொருள்தன்மையான வடிவம் அல்ல, அது காலம் மற்றும் இடத்தை விஞ்சிய ஒரு சக்திவடிவமாக இருக்கிறது.

தியானலிங்கத்திடம் எப்படி கிரகிப்புத்தன்மை கொள்வது? நீங்கள் வெறுமனே அமர்ந்து, கவனிக்கவேண்டும். “ அவர் ஏதாவது சொல்லப்போகிறாரா?” என்றால், ஒரு விஷயத்தைக்கூட அவர் சொல்லப்போவதில்லை. ஆனால் எதையும் சொல்லாத ஒன்றை நீங்கள் உற்றுக்கவனிக்கவேண்டும். தற்போது உங்களுக்கு அது அர்த்தமில்லாமல் இருக்கக்கூடும். அதன் அர்த்தத்தை நீங்கள் அறியும் நாளில், அனைத்தும் தெளிவாகும். எதையும் சொல்லாத ஒருவருக்கு நீங்கள் செவிசாய்க்க விரும்பும்பொழுது, உங்களுக்கு அனைத்தும் புரியத் தொடங்குகிறது.

தியானலிங்கத்தைப் போன்று ஒரு சிக்கலான பிரதிஷ்டை செய்யப்பட்டவடிவம் அதன் பொருள்ரீதியான வெளியின் எல்லைக்கு உட்படுவதில்லை. உங்களது கதவுகள் திறந்த நிலையில் இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் அது உங்களுக்குக் கிடைக்கிறது. தியானலிங்கம் ஒரு குறிப்பிட்ட பொருள்தன்மையான வடிவம் அல்ல, அது காலம் மற்றும் இடத்தை விஞ்சிய ஒரு சக்தி வடிவமாக இருக்கிறது. நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கே அது உங்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் உங்களில் பலருக்கு இது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது.

Consecrated Dhyanalinga Yantra

தியானலிங்கத்தின் அருளை எந்நேரத்திலும், எவ்விடத்திலும் தொடர்புகொள்வது

தியானலிங்கத்தை உங்களது கண்களுக்குள் பதியவைத்துக்கொள்வதற்கு நீங்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது வருகை தருவது சிறந்தது. நீங்கள் அங்கே அமர்ந்தால், ஆன்மீக விதை எப்படியும் உங்களுக்குள் ஊன்றப்பட்டுவிடும். பிறகு, உங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தில், காலை அல்லது மாலை நேரம் ஒரு சாதகமான பொழுதில் அமைதியாக உட்கார்ந்தால் – தியானலிங்கத்தின் சக்தி உங்களுக்குள் நிச்சயமாக வியாபிக்கும்.

மேலும் உங்களுக்கு ஒரு காட்சிப்படுத்தல் தேவைப்பட்டால், அதற்கு உறுதுணையாக இருக்கும்படி ஒரு புகைப்படம் அல்லது ஒரு யந்திரத்தை நீங்கள் எப்போதும் வைத்துக்கொள்ளமுடியும். ஆனால் ஒருவரது மனரீதியான கவனச்சிதறல் காரணமாகத்தான் இந்த உதவிகள் தேவைப்படுகின்றன. இல்லையென்றால், இவைகள் எதுவும் தேவையில்லை. தியானலிங்கத்தின் இருப்பில் ஆன்மீக விதை ஊன்றப்படும் நிகழ்வு, எப்படியும் இதனைப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளும். முக்கியமாக, உங்கள் வீட்டில் ஒரு இடத்தில் நீங்கள் அமைதியாக அமர்ந்தால், தியானலிங்கத்தின் இடவெளியில் நீங்கள் இல்லாமல் இருந்தாலும், உங்களுக்குள்ளிருந்தே அதை நீங்கள் உணரவேண்டும். அது சாத்தியம்தான், ஆனால் அதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையிலான கிரகிப்புத்தன்மையில் இருக்கவேண்டும்.

பழமையான பாரம்பரியங்கள் உடைந்துகொண்டும், வாழும் குருமார்கள் மேலும்மேலும் அரிதாகிக்கொண்டிருக்கும் காரணத்தால், தியானலிங்கம் தலையாய முக்கியமானதாக இருக்கிறது. தியானலிங்கம், எதிர்காலத்துக்கான பிரமாண்டமான ஆன்மீக முதலீடாக உள்ளது.