
யோகப்பயிற்சிகளில் கும்பகம் மற்றும் ஷூன்யகத்தின் தன்னிலை மாற்றத்துக்கான ஆற்றலையும், மனித அனுபவத்தின் பன்முனைப் பரிமாணங்களைக் கடந்த பலன்களையும் சத்குரு வெளிப்படுத்தும் இத்தருணத்தில், அவைகளின் ஆழமான தாக்கத்தினை அறிந்துகொள்வோம்.
கேள்வியாளர்: யோகப்பயிற்சிகளில், ஷூன்யகம் அல்லது சுவாசத்தில் வெறுமையை, மற்றும் கும்பகம் அல்லது சுவாசத்தில் முழுமையை உள்நிறுத்துவதன் முக்கியத்துவம் என்ன?
சத்குரு: கும்பகம் மற்றும் ஷூன்யகம் என்பது என்ன? இந்தப் பயிற்சிகளுக்கு பல அம்சங்கள் உள்ளன. ஒரு வழக்கமான மருத்துவரை நீங்கள் கேட்டால், அவர்கள் உங்களது உடலின் சில விஷயங்களை அளவீடு செய்து, இந்தப் பயிற்சிகள் பிராணவாயு மற்றும் கரியமிலவாயுவை சீர்செய்வதால், உங்களுக்குள் அந்தப் பரிமாணத்துக்கு அதிக சமநிலையைக் கொண்டுவருகிறது, அதனால்தான் நீங்கள் அதிக சக்தியுடன் இருப்பதாக உணர்கிறீர்கள் என்பதைப்போல் கூறுவார்கள். அது உண்மைதான், ஆனால் நீங்கள் கும்பகம் மற்றும் ஷூன்யகத்தை ஏன் உள்நிறுத்துகிறீர்கள் என்பதற்கு அது காரணம் அல்ல.
சுவாசம் என்ற ஒரு செயல்பாடு நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு நீங்கள் காரணமல்ல, ஆனால் உங்களைப் பொருட்படுத்தாமல் அது நிகழ்கிறது. “உங்களைப் பொருட்படுத்தாமல்” என்று நான் கூறும்பொழுது, நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் உருவாக்கும்பொழுது, அதற்கேற்ப உங்களது சுவாச முறைகள் மாறுபடும். உங்கள் சுவாசத்தை நிறுத்த விரும்பும் உணர்ச்சிகள் பலவாறாக இருக்கின்றன.
சுவாசம் என்ற ஒரு செயல்பாடு நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு நீங்கள் காரணமல்ல, ஆனால் உங்களைப் பொருட்படுத்தாமல் அது நிகழ்கிறது.
மக்கள் அச்சத்தை உணர்ந்தால், அவர்கள் சுவாசமற்றுப் போகின்றனர், ஏனெனில் அந்த உணர்ச்சி எழும்போது, உடலானது ஏதோ ஒரு வழியில் இறந்துபோவதற்கோ அல்லது மறைந்துவிடுவதற்கோ விரும்புகிறது. நீங்கள் உண்மையில் இறப்பதில்லை, ஆனால் நீங்கள் சுவாசமற்றுப் போகிறீர்கள். உடலானது இறந்துபோக விரும்புவதை இது குறிக்கிறது, ஆனால் பிறகு நீங்கள் ஏதோ ஒன்றுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதைப்போல, வாழ்வதற்கான இயற்கையான உந்துதல் உங்களை வேகமாக, படபடவென்று சுவாசிக்கச் செய்யும்.
இப்போது நீங்கள் குறிப்பாக கும்பகம் மற்றும் ஷூன்யகம் குறித்து கேட்டாலும், அதில் யோகாவின் பல்வேறு அம்சங்கள் உள்ளன. உங்களால் கவனிக்கக்கூடிய உடலியல்ரீதியான மாற்றங்கள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளை அனுபவிக்கும்பொழுதுகூட இவைகள் நிகழக்கூடும். சிறிது காலத்துக்கு முன்னர், மணிக்கு 330ல் இருந்து 340 கிலோமீட்டர் வேகம் வரை கார் ஓட்டுவதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எனக்கு அடுத்து அமர்ந்திருந்த நபர், “சத்குரு, இந்த வேகத்தில்கூட, நீங்கள் புன்னகையுடன் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதைச் செய்யக்கூடாது”, என்று கூறினார். நான் கூறினேன், “எனது புன்னகையும், பேச்சும் நான் கார் ஓட்டுவதை என்ன செய்துவிட முடியும்?” அவர் கூறினார், “நான் ஒரு குறிப்பிட்ட வேகத்தைக் கடந்து ஓட்டும்போது, எனது இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம், அதிகரிப்பதால் ஏற்படும் ஒருவிதமான அந்தக் கிளர்ச்சியை நான் அனுபவிக்கிறேன், ஆனால் நீங்கள் எதையும் அனுபவிப்பதாகத் தோன்றவில்லை.”
கும்பகா மற்றும் ஷூன்யகா உங்களுள் சமநிலையை கொண்டுவருவதால், வெளிச்சூழ்நிலைகள் உடலமைப்பில் எந்த சமனின்மையையும் ஏற்படுத்தாது.
என்னுடைய இரத்த அழுத்தம் அதிகரிக்காததாலும், நான் வியர்த்து விறுவிறுத்துப் போகாததாலும், நான் எதையும் அனுபவிக்கவில்லை என்பது அர்த்தமா? உங்களுக்குள் குறிப்பிட்ட சமநிலை இருக்கும்பொழுது, உங்களது அனுபவிக்கும் திறன் மேம்படுகிறது. கும்பகா மற்றும் ஷூன்யகா உங்களுள் சமநிலையை கொண்டுவருவதால், வெளிச்சூழ்நிலைகள் உடலமைப்பில் எந்த சமனின்மையையும் ஏற்படுத்தாது. வாழ்வில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உற்சாகம் அனைத்தும் அட்ரினலின் குறித்ததுதான் என்று மக்கள் எப்போதும் எண்ணுகின்றனர்.
அட்ரினலின் என்பது ஒரு குறுக்கீடு; நீங்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக உங்களது உடல் எண்ணும் காரணத்தால், அட்ரினலின் உங்களது இரத்த ஓட்டத்தை சென்றடைகிறது. அட்ரினலின், போரிடு அல்லது பறந்திடு என்பதன் அடித்தளமாக இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் காட்டில் இருக்கிறீர்கள், அப்போது ஒரு புலி எதிர்படுகிறது; ஒருவேளை நீங்கள் அதனுடன் சண்டையிடலாம் அல்லது அதனிடமிருந்து விலகி ஓடலாம். இவைகள் மிகவும் எதிர்வினை சார்ந்த தேர்வுகள்.
மற்றொரு தேர்வு என்னவென்றால், ஏதோ ஒன்றை புத்திசாலித்தனமாக செய்வது, இதுதான் மனிதர்களின் வழியாக இருக்கவேண்டும். உங்கள் மனம், உணர்ச்சி, சக்தி, மற்றுமுள்ள அனைத்தின் ஒருங்கிணைப்பாகிய உங்களது உடல் எதற்கும் எதிர்வினை செய்யாமல், ஆனால் நீங்கள் விரும்பும்படி பதில் வினையாற்றும்பொழுது மட்டுமே, அந்தத் தேர்வு உங்களுக்கு இருக்கிறது.
வீரியம், புத்திசாலித்தனம், மற்றும் புரிந்துணர்தல் உள்ளிட்ட உங்களது சக்தியை கும்பகமானது மேம்படுத்துகிறது.
உங்களது இரசாயனத்தை சமநிலைக்குக் கொண்டுவந்து, அதனை எதிர்வினையற்றதாகச் செய்வது கும்பகம் மற்றும் ஷூன்யகத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. அதாவது, நீங்கள் விரும்பும்படி எந்த விதத்திலும் நீங்கள் பதில்வினையாற்ற முடியும், ஆனால் எந்தவிதமான வெளித்தூண்டுதலும் உங்களை எதிர்வினையாற்றச் செய்வதில்லை. இதனால் ஒருவித சாந்தமும், தளர்வும் உடலமைப்பில் ஏற்படுவதால், மிக அதிகமான சுழற்சி விகிதத்தில் அது செயல்படாது. இல்லையென்றால், உடலானது பல வழிகளிலும் துன்பப்படுகிறது; வாழும் திறன் குறைக்கப்படுகிறது, மற்றும் அதன் விளைவாக, அதனுடைய வாழ்நாள்கூட சுருங்கிவிட முடியும்.
கும்பகம் மற்றும் ஷூன்யகத்தின் மற்ற பரிமாணங்கள் இவை: வீரியம், புத்திசாலித்தனம், மற்றும் புரிந்துணர்தல் உள்ளிட்ட உங்களது சக்தியை கும்பகமானது மேம்படுத்துகிறது. கும்பகத்தை உள்நிறுத்துவதால் இந்த எல்லா அம்சங்களும் மேம்பாடு அடைகிறது. கும்பகத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தாமல், ஆனால் மெல்லமெல்ல உள்நிறுத்தும் திறனை அதிகரிக்குமாறு எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
ஷூன்யகம் படிப்படியாக தனிப்பட்ட தன்மையின் உணர்வைத் தகர்த்தவாறு, மிகவும் குறிப்பிடத்தக்க ஆன்மீகப் பலன்களை வழங்குகிறது. ஷூன்யகத்தை உள்நிறுத்துவதால், நீங்கள் யார் என்ற எல்லைகள் இயற்கையான வழியில் மெல்லமெல்ல காலப்போக்கில் கரைந்து, ஒருவிதமான ஒருமைத்தன்மை, நீங்களேகூட கவனிக்காதவாறு உங்களுக்குள் படர்கிறது.
ஆகவே, கும்பகமும், ஷூன்யகமும் உடல்ரீதியான, மனரீதியான, ஆன்மீகரீதியான, மற்றும் சக்திரீதியான பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஷூன்யகத்தின் மூலமாக உங்களது எல்லைகளை நீங்கள் கரைக்க முடிந்தால், கும்பகத்தின் மூலமாக உங்களுக்கே உரிய சக்தியின் மேம்பாடு, ஒரு மகத்தான இருப்பை உருவாக்கும். நீங்கள் ஒரு இடத்துக்குள் பிரவேசித்தால், மக்கள் அந்த இருப்பை உணர்வார்கள். இந்த இருப்பு முக்கியமானது. மக்கள் அவர்களால் இயன்ற அளவுக்கு, வானம் வரைக்கும்கூட மேலே பார்த்துகொண்டு மற்றும் அவர்கள் நம்பும் கடவுளிடம் பேசிக்கொண்டு இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், அங்கே இருப்பு இல்லை.
ஷூன்யகத்தின் மூலமாக, உங்களது எல்லைகளை நீங்கள் கரைத்துவிட முடிந்தால், அப்போது கும்பகத்தின் மூலமாக மேம்பாடு அடையும் உங்களுடைய சக்தியானது, ஒரு மகத்தான இருப்பை உருவாக்கும்.
ஒரு தனிப்பட்ட மனிதருக்கு நிகழவேண்டிய தன்னிலை மாற்றம் இதுதான்: நீங்கள் பிரார்த்தனையில் இருந்து இருப்புக்கு நகரவேண்டும். படைத்தலின் இருப்பை, அது எவ்வளவு வலிமையானது, மற்றும் அது எப்போதும் இருப்பது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், இந்த இருப்பினால்தான் அனைத்தும் நிகழ்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
மேலும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவமான அல்லது தீவிரமான இருப்பை நீங்கள் பெற்றுவிட்டால், ஒட்டுமொத்த படைப்பும் எப்போதும் மூழ்கியிருக்கும் இருப்பிலிருந்து, அது எந்த வகையிலும் வேறானதல்ல என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இதனை அனுபவபூர்வமாக நீங்கள் அறிந்துகொண்ட பிறகு, நீங்கள் யார் என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால், நீங்கள் யார் என்பதும், மற்றும் அனைத்துமாக இருப்பது என்னவோ அதுவும், ஒன்றாகிவிடுகிறது.
