கேள்வியாளர்: சத்குரு, நம் நாட்டில் நிகழும் சில கசப்பான உண்மைகளையும் நாம் பார்க்கவேண்டும். பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு வருடமும் தோராயமாக 3.5 லட்சம் குற்றங்கள் நடக்கின்றன. அதில் பாதிக்கு மேல் வீட்டுக்குள் நிகழ்பவை. சில குடும்பங்களில் நீங்கள் கூறியது போல பெண்களை மிகவும் மதிக்கிறார்கள். பெண்களை மதிக்கவேண்டும் என்பது ஆண்பிள்ளைகளுக்கு குழந்தைப்பருவத்தில் இருந்தே கற்றுத்தரப்படுகிறது. அதையும் மீறி இப்படி பெரியளவில் குற்றங்கள் இழைக்கப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை பதியப்படாமலே போகின்றன. பதியப்பட்டுள்ள குற்றங்கள் 3.5 லட்சம், பதியப்படாதவை எத்தனை என்று தெரியாது. ஈஷாவில் நீங்கள் யோகாவை உள்நிலை தொழில்நுட்பமாக அற்புதமான விதத்தில் பரிமாறி வருகிறீர்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகளுடன் நீங்கள் வேலை செய்ததுண்டா? அல்லது மிக சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது செய்திருக்கிறீர்களா? பொதுவாக, சமுதாயத்தை பெண்களை நோக்கி நுண்ணுணர்வு கொண்டவர்களாகவும், மரியாதையுடன் நடத்தும் விதமாகவும் எப்படி மாற்றுவது? இது நோக்கி ஈஷா ஏதாவது செய்கிறதா?

சத்குரு: 20 வருடங்களாக சிறைச்சாலைகளில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள சிறைகளிலும், அமெரிக்காவிலுள்ள சில சிறைகளிலும் வேலை செய்துள்ளோம். "சிறைவாசிகளுக்கு உள்நிலை விடுதலை" என்று இந்த யோகா நிகழ்ச்சிகளை அழைக்கிறோம். இது சிறைகளுக்குள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. ஆனால் இது சமுதாயத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இது சிறைகளில் சிக்கியிருப்போருக்கானது.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஹார்மோன்களின் தாக்கம் அவர்களுக்குள் மேலோங்குகிறது, அதனால் சில விஷயங்கள் அவர்களுக்குள் நடக்கின்றன.
ஆனால் மனிதர்களை குற்றவாளிகள், கற்பழிப்பு செய்தவர்கள், இவர்கள், அவர்கள் என்று முத்திரை குத்தும்முன், இதை தயவுகூர்ந்து புரிந்துகொள்ளப் பாருங்கள். நான் சொல்லவிருப்பதை தயவுசெய்து சற்று கூருணர்வுடன் கவனித்துப் பாருங்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஹார்மோன்களின் தாக்கம் அவர்களுக்குள் மேலோங்குகிறது, அதனால் சில விஷயங்கள் அவர்களுக்குள் நடக்கின்றன. இதை அறிந்து, கடந்தகாலத்தில் இப்படி ஏற்பாடு செய்தோம், 16 - 17 வயது வரும் சமயத்தில், பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள், அல்லது அவளிடம் ஒருவரைக் காட்டி இவன்தான் உனக்கானவன் என்று சொல்லி, இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என்று ஏதாவது சொல்லவேனும் செய்தார்கள். இதை அந்தப்பையன் 16 வயதிலிருந்து பார்க்கத்துவங்கி, 17, 18, 19, அல்லது 20 வயதாகும் சமயத்தில் திருமணம் செய்துகொள்வான்.

இன்று நம் கல்வி முறையினாலும், உலகத்தின் அமைப்பே இப்படி மாறியிருப்பதாலும், பெண்கள் இந்தியாவில் சராசரியாக 21 - 22 வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆண்கள் 26 - 27 வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள். பலருக்கு திருமணம் செய்வதற்குள் 30 வயதைக் கடந்துவிடுகிறது. படித்தவர்களையும், வசதியானவர்களையும் விட்டுவிடுங்கள், அவர்களுக்கான தீர்வுகளை அவர்கள் எப்படியோ கண்டுகொள்வார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால், இவர்கள் கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்ந்து வருபவர்கள். இந்த இளவயதுப் பையன், இரண்டு வயர்களை சேர்க்கத் தெரிந்தால் எலக்ட்ரீஷியன் என்று நகரத்திற்கு வருகிறான். அல்லது கொஞ்சம் தச்சுவேலை தெரிந்தால் நகரத்திற்கு வந்துவிடுகிறான். 17 - 18 வயது கிராமப்பையன் நகரமெனும் விநோதமான ஒரு உலகிற்குள் வருகிறான். இந்த நகரம் அவனுக்கு இரக்கமற்றதாக இருக்கிறது. ஒரு ஆணுக்கு நகரம் இரக்கமற்றதாக இருக்காது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அது அவனை மிகவும் கொடூரமாக நடத்துகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அவன், அடிபட்டு, மிதிபட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டு ஏமாற்றப்படுகிறான். அவனுக்கும் எல்லாம் நடக்கிறது.

கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கும்போதெல்லாம், நாம் அனைவரும் கத்திக் குரல் எழுப்புகிறோம். பிறகு 3 நாட்கள் கழித்து சமாதானமாகி நம் தினசரி வாழ்க்கை செயல்களைப் பார்க்கிறோம். இது சரியில்லை
அவன் கிராமத்தில் இருந்திருந்தால், அவன் அம்மா, அத்தை, அல்லது யாராவது அவனிடம் "நீ இந்தப்பெண்ணை மணக்க வேண்டும், அந்தப் பெண்ணை மணக்க வேண்டும்" என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த சிந்தனையே போதும், அதுவே பல விஷயங்களை கவனித்துக்கொள்கிறது. "நாளையோ, நாளை மறுநாளோ, அடுத்த வருடமோ, அதற்கடுத்த வருடமோ எனக்கு திருமணமாகப் போகிறது" என்று நினைக்கிறான். அவன் வந்து நகரத்திற்குள் காலடி எடுத்துவைத்தால், தன்னுடையவர் என்று அழைக்க ஒருவர்கூட அவனுக்கு இல்லை. அவன் 3 - 4 பையன்களுடன் கூட்டு சேர்ந்துகொள்வான். அவர்களுக்குள் கட்டின்றி ஏதேதோ செய்தபடி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி எல்லோரிடமும் இந்த முட்டாள் செல்பேசி வேறு இருக்கிறது. அதை ஸ்மார்ட்போன் என்கிறார்கள். அதில் எல்லாவித ஆபாசப் படங்களும் பார்க்கிறார்கள். அவன்தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை சந்திப்பான் என்ற நம்பிக்கையே துளியும் இல்லாமல் அங்கு இருக்கிறான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, இப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர்களுக்கு ஒன்றும் துறவிகளாக வாழ நீங்கள் பயிற்சியளிக்கவில்லையே! அவர்கள் சராசரி பையன்கள். இந்நிலையில் அவன் வாயில் ஒரு சொட்டு மது பட்டால் அவ்வளவுதான், முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறான். அப்போது அவன் காட்டுத்தனமான விஷயங்களைச் செய்வான். நான் அவன் செயலை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு சமுதாயமாக, இதற்கு என்ன செய்வது என்று நாம் விவாதம் செய்ய வேண்டாமா? இது ஒரு மனிதப் பிரச்சனை! இல்லையா? இப்படியொரு பிரச்சனை இல்லாததுபோல நாம் நடந்துகொள்ள முயல்கிறோம். இப்படி இருந்தால் அது தேடிவந்து உங்கள் முகத்தில் அடிக்கும். மீண்டும் மீண்டும் முகத்தில் அடிக்கும்.

மனித பாலுணர்வு என்பது இல்லாததுபோல நாம் நடந்துகொள்ள முயல்கிறோம். ஆனால் அது உங்கள் முகத்தில் அடிக்கிறது. அது உங்கள் முகத்தில் அடிக்கும்போது அசிங்கமாக இருக்கிறது. ஆனால் இதற்கான நேரம் வந்துவிட்டதுதானே? இதுபற்றி நாம் என்ன செய்யப்போகிறோம் என்று விவாதமாவது செய்யவேண்டாமா? இதை நீங்கள் கையாள விரும்பினால், 16, 17, 18 வயதில் திருமணம் செய்துகொண்டால், அதுவே இதை மிகச் சுலபமாக கவனித்துக்கொள்ளும். இப்போது 30 வயதில் திருமணம் செய்கிறார்கள். அதிலும், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்திருக்கும் இந்தப்பையன் துளியும் நம்பிக்கையே இல்லாமல் இருக்கிறான். இதை எப்படிக் கையாளுவது? இதற்குத் தீர்வுதான் என்ன? இதுபற்றி நாம் விவாதிக்க வேண்டாமா? இதைச் செய்யுங்கள், அல்லது அதைச் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. நம் மனிதநேயத்தின் அடிப்படையில், இதை சற்றேனும் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன்.

நம்மில் மிகச்சிறந்த வாழ்க்கை ஏற்பாடுகள் கொண்டவர்களாக இருப்பவர்கள் நிலை வேறு. இவர்கள் வெறும் பிழைப்பை சம்பாதிப்பதற்காக, ஏழ்மையாக இருந்தாலும் சௌகரியமாக இருந்த அவர்களின் கிராமத்து சூழ்நிலையை விட்டுவிட்டு வந்துள்ளார்கள். அங்கிருந்து நகரத்தின் கடுமையான சூழ்நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். குடும்பத்தின் உதவியும் எவரின் ஆதரவும் இல்லாமல் வந்துள்ளார்கள். இவர்களை எப்படி கையாளப் போகிறீர்கள்? அகதிகளுக்கு அமைக்கப்படும் முகாமைப் போல ஏதாவது செய்துதரப் போகிறீர்களா? அல்லது அவர்களுக்கான வாழ்க்கை முறை எதையாவது வழங்க விரும்புகிறீர்களா? இது நீங்கள் முடிவுசெய்ய வேண்டிய ஒரு விஷயம், இல்லையா? குறைந்தது இதுபற்றி நாம் விவாதம் செய்யவாவது தயாராக இருக்கவேண்டும்.

கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கும்போதெல்லாம், நாம் அனைவரும் கத்திக் குரல் எழுப்புகிறோம். பிறகு 3 நாட்கள் கழித்து சமாதானமாகி நம் தினசரி வாழ்க்கை செயல்களைப் பார்க்கிறோம். இது சரியில்லை, இதற்கான தீர்வைத் தேடும் நேரம் வந்துவிட்டது. இந்த தேசத்தில், ஆண், பெண், இருபாலரிடமும், இந்த ஹார்மோன்களின் உந்துதல்களை நாம் எப்படி கையாளப்போகிறோம்? ஏனென்றால் அவர்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வதில்லை. அப்படிச்செய்வது ஒரு குற்றம் வேறு. அவர்கள் திருமணமாகாமல் இருப்பது மட்டுமல்ல, அந்த வயதில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அது குற்றமாக இருந்தால் இதற்குத் தீர்வு என்ன? மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் சற்று சமநிலையாக நடத்திக்கொள்ள வழிதான் என்ன? இது நாம் கவனித்து, தீர்வுதேட வேண்டிய ஒரு விஷயம்.

கேள்வியாளர்: உண்மைதான். சாதாரணமாக குற்றம் நடந்தபிறகு நிலைமையை சரிசெய்ய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் காட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களைத் தடுத்து குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, சமுதாயத்தின்மீது நாம் வேலைசெய்வது பற்றி நாம் பார்க்கவேண்டும். நான் இதை முற்றிலுமான ஏற்றுக்கொள்கிறேன். கிராமப்புறங்களுக்கு புத்துணர்வூட்டுவதற்கு ஈஷா கையிலெடுத்திருக்கும் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். நகரங்களுக்கு இடம்பெயர்வதை இது குறைத்து, கிராமங்களிலுள்ள மக்கள் வாழ்க்கையை துடிப்பானதாக மாற்றுகிறது. இவை அற்புதமான முன்னெடுப்புகள்...

சத்குரு: ஒரு சாதாரண விஷயம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இதை நீங்கள் தெலுங்கானாவில் செய்யவேண்டும், ஏனென்றால் இது உங்கள் கையில் இருக்கிறது. (இதை நீங்கள் உங்கள் ஊரில் செய்யவேண்டும்.) ஒவ்வொரு கிராமத்திலும், சராசரியாக, 5,000 முதல் 10,000 பேர் வாழும் கிராமம் என்று வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் சினிமா மல்டிப்ளக்ஸ் கட்டவேண்டும். ஒவ்வொரு தியேட்டரிலும் 80 - 100 சீட் இருந்தாலும்கூட போதும். இந்த ஒரு விஷயத்திற்காகவே நிறையபேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வருகிறார்கள், இதை தெரிந்துகொள்ளுங்கள். கிராமத்தில் ஒரு மல்டிப்ளக்ஸ் கட்டி, அதில் புதிதாக ரிலீஸான 5 படங்கள் ஓடினால், அவர்கள் அங்கேயே இருப்பார்கள், இது உண்மைதான். பலர் அங்கேயே இருப்பார்கள்.

கேள்வியாளர்: இது முற்றிலும் உண்மை. நாங்கள் ஏற்கனவே இதை செய்துகொண்டு இருக்கிறோம். தொகுதி தலைமையகங்கள் அனைத்திலும், பஸ் ஸ்டான்டுகளில் ஏற்கனவே நாங்கள் மல்டிப்ளக்ஸ் கட்டி வருகிறோம்.

சத்குரு: இது சொற்பமான விஷயமாகத் தெரியலாம். ஆனால் நான் இதைச் சொல்கிறேன், இது மிகவும் முக்கியமானது.

கேள்வியாளர்: ஆம், இது முக்கியம். இது மிகப்பெரிய பிரச்சனை. அதோடு, அங்கு அவர்களுக்கு ஒரு சமுதாய வாழ்க்கையும் தேவைப்படுவதால் அரசு இப்படியை எடுத்து இதைச் செய்து வருகிறது.

சத்குரு: விளையாட்டு அரங்கம் (ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்), மல்டிப்ளக்ஸ், இரண்டும் வரவேண்டும்.