ஒரு பந்தால் வாழ்க்கையை மாற்ற முடியுமா? - ஈஷா புத்துணர்வு கோப்பை
ஈஷாவால் துவங்கப்பட்ட கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் செயல்பாடுகள், வரவிருக்கும் ஈஷா கிராமோத்சவ நிகழ்ச்சி ஆகியவை பற்றி ஒரு பார்வை இங்கே...
ஈஷாவால் துவங்கப்பட்ட கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் செயல்பாடுகள், வரவிருக்கும் ஈஷா கிராமோத்சவ நிகழ்ச்சி ஆகியவை பற்றி ஒரு பார்வை இங்கே...
மிகத் திறமையான இரண்டு அணிகள் மோதிக் கொண்டன. விளையாட்டு மிகவும் விறுவிறுப்பாகவே சென்று கொண்டிருந்தது. நொடிக்கு நொடி எந்த அணி வெற்றி பெறும் என்ற சுவாரஸ்யம் கூடிக் கொண்டே இருந்தது. இறுதியில் வெற்றிப் பெற்ற அணியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அவர்கள் உற்சாக வெள்ளத்தில் துள்ளிக் குதிக்க அங்கே தோல்விப் பெற்ற அணியும் அதே உற்சாகத்தில் அவர்களது வெற்றியை கொண்டாடியது. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முகத்தில் கொண்டாட்டமும் ஆரவாரமும் தெரிந்தாலும் கட்டுப்படுத்த தேவையில்லாத அமைதியான கூட்டம்!
இது கிரிக்கெட் அல்ல! ஒலிம்பிக்கும் அல்ல! சர்வதேச விளையாட்டுப் போட்டியும் அல்ல! நம் தமிழக கிராம மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்த ஈஷா யோக மையத்தின் சார்பில் வருடந்தோறும் நிகழ்த்தப் பெறும் கிராம ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்! வெற்றி பெற்ற அணி சாவகாட்டுப்பாளையம், போட்டியில் தோற்றாலும் உற்சாகத்தில் தோற்காத அணி நெல்லிக்குப்பம். பெயரிலும் வித்தியாசம், பங்கேற்பாளர்களும் வித்தியாசமானவர்கள், இந்நிகழ்ச்சியில் கரைபுரண்டோடும் உற்சாகத்திலும் எங்கும் காணமுடியாத வித்தியாசம்.
“விளையாட்டில் என்ன இருக்கிறது? வெறும் பந்தினை அடிப்பதன் மூலம் என்ன கிடைத்துவிடும்?” என்கிறீர்களா? களையிழந்து போன கிராமத்து மக்களை விளையாட வாருங்கள் என முதன்முதலில் அழைத்தபோது இதே கேள்வி நம் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. எதிர்ப்புகளும் கிளம்பின.
ஆனால் ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் வந்தவுடன், "இப்ப ஈஷா எங்க கிராமத்துக்கு வந்தப்பறம் எங்க வாழ்க்கையே மாறிடுச்சு. எங்களுக்கு இலவசமா யோகா சொல்லித் தர்றாங்க, அதன்பின் விளையாட போய்டுவோம். யோகா உடலுக்கும் மனதிற்கும் தெம்பை கொடுக்குது. விளையாட்டு இருக்கிறதால வீட்டுக் கவலையை மறக்க இப்ப குடிக்கப் போறதில்லை," இப்படி கூறுவோர் ஒருவர் இருவர் இல்லை. ஈஷா விளையாட்டுக்கள் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இது யதார்த்த உண்மையாய் மாறியிருக்கிறது.
2463 கிராமங்களில் 852 கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுடன் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் வருடந்தோறும் விளையாட்டு போட்டிகள் நிகழ்கின்றன. 28 மாவட்ட அளவிலான போட்டிகள் 4 மாநில அளவிலான கிராமோத்சவங்கள் என நிகழும் இந்தப் போட்டிகளில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் பங்கேற்று உற்சாகமடைந்துள்ளனர்.
அரசாங்கமோ, பணபலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனமோ மட்டுமே யோசிக்க இயலும் இதுபோன்ற பிரம்மாண்டமான திட்டங்களை தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும் அன்பாலும் வெற்றிகரமாய் நிறைவேற்றி வருகிறது ஈஷா!
Subscribe
ஒருவர் விளையாடும்போது உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதோடு அவருக்குள் இருக்கும் கொண்டாட்ட உணர்வு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. உற்சாகமிக்க புதிய தலைமுறை உருவாகிறது. "மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின்பால் அதீத உற்சாகத்தைக் கொண்டிருந்தால் அவர்கள் எவ்வழியிலாவது அனைத்திற்கும் ஒரு தீர்வை கண்டறிந்து விடுவார்கள்" என்று சத்குரு கூறுகிறார். சத்குரு கூறுவதைப் போல இது கிராம மக்களது தினசரி வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இப்படி கிராம மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டுவரும் இந்த ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சத்குரு அவர்களால் 2003 ஆம் ஆண்டில் கோபிசெட்டிப்பாளையத்தில் துவங்கி வைக்கப்பட்டது.
ஒரு சிறிய ஊரில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது பெருமளவில் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறது. மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறத் துவங்கியது.
2005 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கிராமோத்சவம் நிகழ்ச்சிக்கு நடிகர் திரு.விஜய் அவர்களும் தமிழகத்தின் அப்போதைய ஆளுநர் மாண்புமிகு திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களும் வந்திருந்து கிராம மக்களை உற்சாகப்படுத்தினர். அங்கு 900 கிராமங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர். கிராம மக்களின் அன்பையும் உற்சாகத்தையும் கண்டு மலைத்துப் போன ஆளுநர் “மகாத்மாவிற்கு மட்டுமே இதுபோன்ற கூட்டங்கள் கூடின” என்று கூறி சிலிர்த்துப் போனார்.
2007ல் நடந்த கிராமோத்சவத்தில், தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி முதல் நடிகர் திரு.பார்த்திபன் வரை அந்நாளின் உற்சாக அலையை கண்டு வியக்காதவர் இல்லை எனலாம். லட்சக்கணக்கில் கூடிய கூட்டம் அரசியல் தலைவர்களையே மலைக்க வைத்தது.
எந்த நோக்கமும் இன்றி மக்கள் ஒற்றுமையாக உற்சாகமாக இருப்பது எளிதில் நிகழ்ந்திடும் நிகழ்வல்ல! முதன் முதலில் இந்த விளையாட்டுகளில் கிராம மக்களை ஈடுபடுத்த முயன்றபோது ஜாதிரீதியான, சமூகரீதியான வேறுபாடுகளால் அவர்களிடையே தயக்கங்கள் இருந்தது. ஆனால், விளையாட்டில் ஈடுபட துவங்கியபின் அது அவர்களது தடைகளைக் கடந்து இணைத்தது.
ஈஷா புத்துணர்வு கோப்பை - 2015
எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வருட “ஈஷா புத்துணர்வு கோப்பை 2015” யை வெல்லப் போவது யார் என்பது கிராம மக்களுக்கு புத்துயிர் அளித்து, குதூகலத்தில் புரட்டிப் போடும் அனுபவமாய் இருக்கப் போகிறது என்பது நிஜத்திலும் நிஜம். இத்தனை உற்சாகமாய் விளையாடும் இந்த கிராமத்து வீரர்களை உற்சாகப்படுத்த, கோவையில் நடைபெறும் இறுதிப் போட்டியை காண, வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்க கிரிக்கெட் வீரர் திரு. சச்சின் டெண்டுல்கர் அவர்கள் செப்டம்பர் 4ம் தேதியன்று கோவை வருகிறார். இவ்வருட "ஈஷா புத்துணர்வு கோப்பையில்" 640 கிராம அணிகள் மோதும் பிரம்மாண்ட ஒலிம்பிக்காய் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த படுசுவாரஸ்யமான கொண்டாட்டத்திற்கு, கள்ளம் கபடம் அற்ற அந்த கிராமத்து முகங்கள் உற்சாகத்தில் துள்ளி விளையாடுவதை பார்ப்பதற்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நலிந்து வரும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் வழக்கில் கொண்டுவரும் வகையில் நம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திருவிழா என மிகவும் கோலாகலமாக நிகழவுள்ளது. அதோடு, அன்றைய நாள் முழுக்க கிராமிய உணவுத் திருவிழாவும் நிகழ இருக்கிறது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வு கண்காட்சியும் இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க உள்ளன.
ஈஷா கிராமோத்சவம்
நாள்: செப்டம்பர் 4, 2015
இடம்: கொடிசியா மைதானம், கோவை
நிகழ்ச்சி நிரல்:
காலை 10 மணி - ஈஷா கிராமோத்சவம் துவக்கம்
- கிராமிய விளையாட்டு போட்டிகள்
- கிராமிய உணவுத் திருவிழா
மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை - ஈஷா கிராமோத்சவம் நிறைவு விழா
- ஈஷா புத்துணர்வு கோப்பை, 2015 - இறுதி போட்டிகள்: ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு எறிபந்து
- வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
- சத்குரு அவர்களின் அருளுரை
- கலை நிகழ்ச்சிகள்
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 51000 | 83000 52000
இ-மெயில்: gramotsav@ishaoutreach.org