மகாபாரதம் பகுதி 10: யாதவ குலத்தில் கிருஷ்ண விஜயம்
யது-விலிருந்து தோன்றிய யாதவ குலத்தினர் பற்றியும் கிருஷ்ணர் பிறந்த சூழ்நிலையையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.
அடுத்து சில தலைமுறைகள் கடந்தபிறகு வாசுதேவர் பிறக்கிறார். வாசுதேவருக்கு பிரீத்தா, ஷ்ருதாதேவி என இரு சகோதரிகள். குழந்தைகள் இல்லாததால், பிரீத்தாவை அவளது மாமா குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கிறார்கள். பிரீத்தாவின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த குந்திபோஜன், தன் பெயரையே குழந்தைக்கும் சூட்டி, பிரீத்தாவை குந்தி என்றே அழைக்க துவங்கினார்.
Subscribe
வாசுதேவருக்கு தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர் இருந்தனர். தேவகிக்கு சகோதரனாக கம்சன் இருந்தான். கம்சனின் தாயின் விருப்பமின்றி, வலுக்கட்டாயமான ஒரு சூழலில் உருவான குழந்தை கம்சன். அன்றைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும், ஒரு குழந்தையின் பிறப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, தாய் எந்த வம்சமாக இருக்கிறாரோ, குழந்தையும் முறைப்படி அதே வம்சத்தை சேரும் என்பதே கலாச்சாரமாக, தர்மமாக நிலவி வந்தது. ஆனால் யாதவர்கள் கம்சனை நிராகரித்தார்கள். முறையற்ற வகையில் பிறந்த குழந்தை என்று கம்சனை ஒதுக்கினார்கள். சிறந்த வீரனாக இருந்தாலும், அருவெறுப்பாகவும், கொச்சையாகவும் கம்சன் நடந்து கொண்டதால் ஆட்சிக்குழுவில் சேர்த்துக்கொள்ளவும் மறுத்தார்கள். ஆனால் கிழக்கு பகுதியில் இருந்த மற்றொரு பலமிக்க அரசனான ஜராசந்தனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான் கம்சன். ஜராசந்தனின் ஆதரவுடன், தன்பக்கம் ஆட்களையும் சேர்த்துக் கொண்டு யாதவ குலத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சிக்குழுவை கலைத்துவிட்டு தனக்குத்தானே முடிசூட்டி கொண்டு, தன்னையே அரசனாகவும் பிரகடனப்படுத்தி கொண்டான் கம்சன்.
அரசனானதும் தன் வலிமையையும் பெருக்கிக் கொண்டான். தன் கொடூரமான வழியிலேயே தொடர்ந்து ஆட்சி செய்ய துவங்கினான். மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளானாலும், கம்சனுக்கு பக்கபலமாக ஜராசந்தனும் இருந்ததால் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்த கொடுங்கோன்மைக்கு பரிசாக, தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் கொல்லப்படுவான் என்ற சாபம் கம்சனுக்கு கிடைத்தது. இதனால் தேவகியையும் வாசுதேவனையும் சிறையிலடைத்தான் கம்சன். அவர்களுக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் அதன் கால்களை பிடித்து தரையில் அடித்து கொல்வதை தன் வழக்கமாக்கி கொண்டான்.
ஏழாவதாக பிறந்த குழந்தையை எப்படியோ வெளியே கடத்திச்சென்ற வாசுதேவர், வேறெங்கோ இறந்தேபிறந்த குழந்தையை கொண்டு வந்து தேவகியிடம் இடம் மாற்றினார். தேவகியின் ஏழாவது குழந்தை, யமுனை நதியை கடந்து கோகுலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு வாசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குழந்தையின் பெயர் பலராமன்.
எட்டாவது குழந்தை பிறக்கும் தருவாயில், மந்திரதந்திரங்களை பிரயோகிப்பவர்கள் மூலமாக சிறைக்காவலர்களை தூக்கத்தில் ஆழ்த்தினார்கள். குழந்தை பிறந்தவுடன் நதியை கடந்து கோகுலத்திற்கு எடுத்துச்சென்றார் வாசுதேவர். அங்கே நந்தகோபனின் மனைவி யசோதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தான் எடுத்துச் சென்ற ஆண் குழந்தையை அங்கே வைத்துவிட்டு, பெண் குழந்தையை தன்னுடன் எடுத்துக்கொண்டு மீண்டும் சிறைக்கு திரும்பினார் வாசுதேவர்.
அடுத்த நாள் காலையில் சிறையறைக்கு வந்த கம்சனிடம் தேவகி "இது பெண் குழந்தைதான்.. ஆண் குழந்தையால்தானே உன் உயிருக்கு ஆபத்து வரும்.. இந்த பெண் குழந்தை வளர்ந்ததும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு வேறு எங்காவது போய்விடுவாள்.. குழந்தையை தயவுசெய்து உயிரோடு விட்டுவிடு.." என்று கெஞ்சினாள். கம்சன், "இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம்.. தெரிந்தே ஒரு ஆபத்தை நான் ஏன் விட்டுவைக்க வேண்டும்?" என்றவாறே குழந்தையை எடுத்து கால்களை பிடித்து சுழற்றி மேலே வீசினான்.
ஆனால் குழந்தை கீழே விழவில்லை.. வேறொரு வடிவம் எடுத்த அந்த குழந்தை, "உன்னை கொல்ல பிறந்தவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். ஆனால் அது நானில்லை" என்றது. அதிர்ச்சியும், பீதியும் சேர்ந்து கம்சனை தாக்கியது. அந்த பகுதியில் மூன்று மாதத்திற்குள் பிறந்திருந்த எல்லா குழந்தைகளையும் கொன்று வர வேண்டும் என்று ஆணையிட்டு தன் வீரர்களை விரட்டினான் கம்சன். பிறந்து மூன்று மாதங்களுக்குள் இருந்த எல்லா குழந்தைகளையும் கொன்று குவித்தது கம்சனின் படை. ஆனால் குழந்தையாக இருந்த கிருஷ்ணர் இவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டார்.
யாதவ குலத்தினரை பற்றி சுருக்கமாக பார்ப்போம் : யாதவர் குலத்தில் பிறந்த வாசுதேவருக்கு தேவகி, ரோகிணி என இரண்டு மனைவியர். தேவகியின் குழந்தைகளில் கிருஷ்ணர் மட்டுமே உயிருடன் இருந்தார். ரோகிணிக்கு பலராமர், சுபத்திரை என இரண்டு குழந்தைகள். வாசுதேவரின் சகோதரிகளில், ஷ்ருதாதேவி -தாமகோஷாவையும், இன்னொரு சகோதரியான பிரீத்தா எனும் குந்தி, குரு வம்சத்தின் பாண்டுவையும் திருமணம் செய்து கொண்டனர்.
தொடரும்...