More Mahabharat Stories

 இதுவரை: இறுதியாக, துரியோதனனும் பீமனும் தண்டாயுதம் ஏந்தி, நேரடியாக மோதுகிறார்கள். பீமனே இருவரிலும் பலசாலியாக இருந்தாலும், துரியோதனன் திறமைசாலியாக இருக்கிறான். கூடுதலாக, துரியோதனனின் தாய் காந்தாரி வழங்கிய சக்தியால் அவனது உடல் கிட்டத்தட்ட தகர்க்க முடியாததாக இருக்கிறது - கிருஷ்ணர் மறைத்துக்கொள்ளச் செய்த அந்த ஒரு இடத்தை தவிர. இப்போது சூழ்நிலை பீமனின் உயிருக்கே அபாயமாக திரும்புகிறது.

இறுதி அடி

சத்குரு: பாண்டவர்கள் நால்வரும் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தபடி கலங்கி நின்றார்கள். எதில் வெற்றியை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அதில் மீண்டும் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். பீமன் கிருஷ்ணரைப் பார்க்க, "நீ துரியோதனனின் தொடையை நொறுக்குவதாக சபதம் செய்திருக்கிறாய். அதை இப்போதே செய்" என நினைவூட்டுகிறார் கிருஷ்ணர். ஆனால் தண்டாயுதம் கொண்டு யுத்தம் செய்கையில், இடுப்புக்கு கீழே தாக்குவதற்கு அனுமதியில்லை. இடுப்புக்கு கீழே தாக்குவது ஏமாற்றும் செயலாக கருதப்பட்டது. கிருஷ்ணர் "சிந்தித்தது போதும், செய்!" என்றார். தனது திறனை வெளிப்படுத்தியவாறு பீமனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் துரியோதனன். பீமனுக்கு மரண அடி கொடுக்கும் எண்ணத்துடன், காற்றில் எகிறி, முழு வேகத்துடன் கீழே பாய்ந்து வந்தான் துரியோதனன். தன் மீது இறங்கிக் கொண்டிருந்த துரியோதனனின் கால்களுக்கு இடையில் தனது தண்டாயுதத்துடன் புகுந்தான் பீமன். நொறுங்கி, படுகாயமடைந்து விழுந்த துரியோதனன், "இருவருக்கும் இடையேயான நேரடியான மோதலில் எனது இடுப்புக்கு கீழே தாக்கும் அளவுக்கு பாண்டவர்கள் இறங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்றான். கிருஷ்ணர், "தர்மத்தைப் பற்றி நீ பேசாதே, உன்னிடம் எந்த தர்மமும் பார்க்க தேவையில்லை" என்றார். அந்த சமயத்தில் பலராமர் திரும்பி வந்தார். ருக்மியும் பலராமரும் போரில் பங்கேற்கவில்லை. போர் நடந்த சமயம், பலராமர் யாத்திரை புறப்பட்டிருந்தார். இப்போது, தண்டாயுத யுத்த விதிமுறையை மீறிவிட்டான் என்பதால், பீமனை கொல்ல தனது தண்டாயுதத்தை எடுத்தார் பலராமர் - துரியோதனனுக்கும் பீமனுக்கும் தண்டாயுத பயிற்சி அளித்த ஆசிரியர் பலராமர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குறுக்கிட்ட கிருஷ்ணர், "ஓ, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக இப்போது நீ இங்கே வந்திருக்கிறாயா? எப்போது நீ தேவையாக இருந்தாயோ, அப்போது நீ புனித யாத்திரை கிளம்பிவிட்டாய். இப்போது எதற்காக திரும்பி வந்தாய்? பாஞ்சாலியின் தலைமுடியைப் பற்றி அரசவைக்குள் இழுத்து வந்தபோது உனக்கு கோபம் வரவில்லை. பாஞ்சாலியை துகிலுரிய அவர்கள் முயற்சித்த போதும் உனக்கு கோபம் வரவில்லை. தாயம் விளையாட்டில் பாண்டவர்களை ஏமாற்றி காட்டுக்குள் அனுப்பியபோது உனக்கு கோபம் வரவில்லை. தங்களுக்கு விதிக்கப்பட்ட வனவாச காலம் முழுவதையும் முட்டாள்களைப் போல அப்படியே ஏற்றுக்கொண்டு கழித்தார்களே - வேறு யாராவதாக இருந்திருந்தால் திரும்பி வந்து தாக்கியிருப்பார்கள் - பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகும், அவர்களுக்கு உரிமையானது மறுக்கப்பட்ட போதும் உனக்கு கோபம் வரவில்லை. இப்போது உனக்கு பிடித்தமான மாணவன் ஆண்மை சிதறடிக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான் என்பதால் உனக்கு கோபம் வருகிறது, நீ தர்மத்தைக் காப்பாற்ற வருகிறாய். இந்த இடத்தில் நிற்காதே, கிளம்பு! தர்மத்தைக் காப்பாற்றுவது உனது வேலையல்ல, ஏனென்றால் நீ இதில் ஒருபோதும் பங்கேற்கவே இல்லை." கிருஷ்ணர் இந்த நிலையை எடுத்த பிறகு பலராமனிடம் எந்த பதிலும் இல்லை. கடும் கோபத்துடன் துரியோதனனின் அருகில் சென்று, "இந்த ஒரு உறுதியை நான் உனக்கு அளிக்கிறேன் - நீ நிச்சயமாக சொர்க்கத்தை அடைவாய்" என்றபடி அங்கிருந்து அகன்றார்.

பீமனின் இரத்த தாகம்

அதன் பிறகு பீமன் தனது காலை துரியோதனனின் தலை மீது வைத்தான். நீங்கள் செய்யக்கூடிய மிக கீழான செயல் இதுதான். உங்கள் எதிரி தோற்றால், நீங்கள் அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆனால் இப்போது பீமன், ஏற்கனவே துச்சாதனனின் இரத்தத்தை குடித்து இதயத்தை உண்டதைப் போலவே துரியோதனனின் இரத்தத்தை குடித்து இதயத்தை உண்ண நினைத்தான். மேலும், துச்சாதனனின் இரத்தத்தை எடுத்துச் சென்று திரௌபதியின் கூந்தலில் பூசியும் இருந்தான் பீமன். அதன் பிறகே திரௌபதி மீண்டும் தனது தலையை வாரி கூந்தலை முடிந்துகொள்ள துவங்கினாள். தான் எடுத்த சப்தத்தால், பதின்மூன்று ஆண்டுகளாக தலை வாராமலே இருந்தாள் திரௌபதி.

எனவே பீமன் ஏற்கனவே துச்சாதனனிடம் நடந்து கொண்டதைப் போலவே துரியோதனனிடமும் நடந்துகொள்ள முயற்சித்த போது, யுதிஷ்டிரர் குறுக்கிட்டார். "நில் - இது தர்மம் அல்ல. தோற்றுப்போன எதிரியின் தலை மீது நீ காலை வைக்க முடியாது. அப்படி செய்யாதே" என்றார். கிருஷ்ணர் பார்த்தார், "ஆமாம், நீ உனது காலை அவன் மீது வைக்கக்கூடாது‌ என்பதைவிட, இதற்கு மேல் நீ செய்வதற்கு என்று எதுவுமில்லை. நாம் துரியோதனனை அவனது வழியிலேயே விட்டுவிடுவோம். நாம் எந்த குறுக்கீடும் செய்ய வேண்டாம். அப்படியென்றால், துரியோதனன் ‌மெதுவாக இறக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். உண்மையில், விதிமுறைப்படி, அவர்கள் துரியோதனனை கொன்றிருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணர், "நீ பீமனிடம் துரியோதனனின் தலை மீது கால் வைக்கக்கூடாது‌ என்கிறாய். உனக்கு தர்மத்தின் மீது பெரும் அக்கறை இருக்கிறது. எனவே நாம் இதற்கு மேலும் துரியோதனனின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம்" என்றவாறு பாண்டவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.

கௌரவர்களின் கடைசி முயற்சி

போரில் உயிர் பிழைத்திருந்த அஸ்வத்தாமன், கிரதாவர்மன் மற்றும் கிருபாச்சாரியார் ஆகியோர் கானகத்துக்குள்‌ தப்பி ஓடியிருந்தனர். அவர்கள் போர்க்களத்திற்கு வந்து துரியோதனனின் நிலையைக் கண்டு என்ன நடந்திருக்கிறது என்பதை ஊகித்தார்கள். அஸ்வத்தாமன் ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்தான். ஏனெனில் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக அவனது தந்தையிடம் பொய்யான தகவலை பாண்டவர்கள் சொல்லி, அவனது தந்தை துரோணாச்சாரியாரை கொன்றிருந்தார்கள். "நாம் ஏதாவது செய்தே தீரவேண்டும்" என்றான் அஸ்வத்தாமன். மற்றவர்கள் சோர்வினால் அப்படியே உறங்கிவிட, அஸ்வத்தாமன் அப்படியே அமர்ந்தபடி என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். எப்போது ஒரு மனிதனுக்குள் வெறுப்பு நிறைகிறதோ அப்போது, தூங்க முடியாத அளவுக்கு அளப்பரிய ஆற்றல் அவனுள் இருக்கிறது.

எப்படியாவது தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தான் அஸ்வத்தாமன். அந்த இரவு வேளையில், ஆந்தை ஒன்று சத்தமின்றி பறந்து சென்று காக்கைக் கூட்டை தாக்குவதை அஸ்வத்தாமன் பார்த்தான். காக்கைக் கூட்டிலிருந்த காக்கைக் குஞ்சுகள் அதிலிருந்து வெளியேறி தப்ப முயற்சித்தன, ஆனால் வேட்டையாட வந்த ஆந்தை அவைகள் அனைத்தையும் இரக்கமின்றி கொன்றது. சிறிது நேரத்திலேயே காக்கைக் குடும்பம் முழுவதையும் எந்த சத்தமும் இன்றி ஆந்தை கொன்று முடித்திருந்தது. இரவில் ஆந்தை பறந்து செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆந்தை உங்களை கடந்து சென்றால், காற்றின் ஓசையை தவிர, உங்களுக்கு வேறு எந்த ஒரு சிறு சப்தமும் கேட்காது - அந்தளவுக்கு அது அமைதியாக பறக்கும். இதை பார்த்துக் கொண்டிருந்த அஸ்வத்தாமன், இதைதான் தானும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

கொல்லப்படும் பாண்டவர்களின் குழந்தைகள்

போரில் வெற்றி பெற்ற பிறகு, வெற்றியாளர்கள் தோல்வியுற்றவர்களின் கூடாரத்திற்கு சென்று உறங்குவது வழக்கமாக இருந்தது. போரில் அவர்கள் வெற்றி பெற்றதை நிலைநிறுத்த இது ஒரு வழி. கிருஷ்ணர் பாண்டவர்களிடம், "தர்மப்படி நாம் கௌரவர்களின் கூடாரத்தில் உறங்க வேண்டும். வாருங்கள், நாம் துரியோதனனின் படுக்கை அறைக்கு சென்று மகிழ்வோம்" என்றார். பாண்டவர்கள் ஐவரும் அங்கே சென்றனர். பெண்களும் குழந்தைகளும் பாண்டவர்களின் கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அஸ்வத்தாமன், கிரதாவர்மன், கிருபாச்சாரியார் மூவரும் சத்தமின்றி பாண்டவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். முதல் காரியமாக, துரோணாச்சாரியாரைக் கொன்ற துருபதனின் புதல்வன் திருஷ்டத்யும்னனை குத்தி கொன்றார்கள்.

பாண்டவர்கள்தான் அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அஸ்வத்தாமன் சென்று, உறங்கிக் கொண்டிருந்தவர்களின் குரல்வளையை அறுத்து தலையைத் துண்டாக்கினான். தனது கையில் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு, தாங்க முடியாத வலியுடன் கிடந்த துரியோதனனிடம் ஓடி வந்தான். கையில் ஐந்து தலைகளோடு தன்னை நோக்கி அஸ்வத்தாமன் வருவதை சந்திரனின் மெல்லிய வெளிச்சத்தில் பார்த்த துரியோதனனுக்குள் ஆனந்தம் பரவியது. அஸ்வத்தாமன் பாண்டவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டு, அவர்களது தலையை தன்னிடம் அர்ப்பணிக்க எடுத்து வருவதாக நினைத்துக் கொண்டான் துரியோதனன். அஸ்வத்தாமன் கூட, பாண்டவர்கள் ஐவரையும் தான் கொன்றுவிட்டதாகவே நினைத்தான், ஆனால் அது பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் பிள்ளைகள் ஐவர் என்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களது கழுத்தை அறுத்து, தலையை கொய்து துரியோதனனின் காலடியில் கொண்டு வந்து கிடத்தியிருந்தான் அஸ்வத்தாமன்.

தொடரும்..

More Mahabharat Stories