மஹாபாரதம் பிற பகுதி

மீனவ இளவரசி மத்ஸயகாந்தி

சத்குரு ஒருமுறை, சேடி நாட்டின் அரசனான உபரிசரா, காட்டிற்குள் சென்று தொடர்ந்து வாரக்கணக்கில் தங்கி வேட்டையாடுகிறான். அப்போது, காட்டில் வசித்து வந்த மீனவபெண் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தந்தையும் ஆனான். மத்ஸயராஜா, மத்ஸயகாந்தி என இருவருக்கும் பெயரிடப்பட்டது. ஆண்குழந்தையை தன்னுடன் எடுத்துக்கொண்டு கிளம்பினான் உபரிசரா. மீனவ மக்களிடமே வளர்ந்த பெண்குழந்தையை மத்ஸயகாந்தி என்று மக்கள் அழைக்க துவங்கினர். இந்த பெயருக்கு "மீன் வாசம்" என பொருள்.

பேரறிவும், ஞானமும் நிறைந்த மாமனிதராக திகழ்ந்த பராசரரின் மீது இயல்பாகவே மத்ஸயகாந்தி ஈர்க்கப்பட்டாள்.

நாட்கள் உருண்டோட, மத்ஸயகாந்தி இரவின் அடர்வண்ணம் கொண்ட பெண்ணாக மீனவர்களின் தலைவனான தாசாவின் வீட்டில் வளர்ந்திருந்தாள். ஒருசமயம், அறிவாற்றலில் சிறந்தவராகவும், தன்னை உணர்ந்திருந்தவருமான பராசரரின் ஆசிரமம் தாக்குதலுக்கு உள்ளானது. அங்கிருந்து கால்களில் மோசமான காயத்துடன் தப்பிய பராசரர் பெருமுயற்சிக்கு பிறகு மீனவ மக்கள் வாழ்ந்த சிறிய தீவின் கரையை வந்து சேர்ந்தார். அவரது நிலையை பார்த்த மீனவமக்கள், அவரை தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்று, மத்ஸயகாந்தியின் மேற்பார்வையில் கவனித்துக் கொள்ள துவங்கினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பேரறிவும், ஞானமும் நிறைந்த மாமனிதராக திகழ்ந்த பராசரரின் மீது இயல்பாகவே மத்ஸயகாந்தி ஈர்க்கப்பட்டாள். தன்னுடன் பிறந்த சகோதரன் அரண்மனையிலும், தான் இங்கே மீனவகுப்பத்திலும் வாழ்கிறோமே என எப்போதும் தனக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்த மத்ஸயகாந்தி, இந்த முனிவருடன் இணைந்திருப்பதன் மூலம் தனக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என நினைத்தாள். நதியின் மத்தியில் ஏற்பட்டிருந்த சிறிய தீவில் வசித்த அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. தீவில் பிறந்ததால் குழந்தையை த்வைபயணா என்றும், கருமையான உடலமைப்புடன் இருந்ததால் கிருஷ்ணா என்றும் அழைத்தனர். கிருஷ்ண த்வைபயணா என மக்களால் அன்று அழைக்கப்பட்டவர் பிற்காலத்தில் வேதங்களை தொகுத்ததால் வேத வியாசர் என அழைக்கப்படலானார். மகாபாரதத்தை கதை வடிவில் சொன்னவரும் இவர்தான்.

குழந்தையாக இருந்த கிருஷ்ண த்வைபயணாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு பராசரர் கிளம்பினார். மத்ஸயகாந்தியை பிரியும்முன், 'மீன்வாசம்' மத்ஸயகாந்தியை விட்டுவிலகி, நறுமணம் கமழும் வரத்தை அளித்தார். இதனால் அதுவரை மனிதர்கள் யாருமே சுவாசித்திருக்காத தெய்வீக நறுமணம் மத்ஸயகாந்தியை வந்து சேர்ந்தது. இந்த உலகிலேயே இல்லாத ஒரு மலரின் நறுமணம் கொண்டவளாக மாறினாள் மத்ஸயகாந்தி. இந்த சிறப்புவாய்ந்த நறுமணத்தால் "உண்மையின் நறுமணம்" - சத்யவதி என மக்கள் அழைக்க துவங்கினர். இது அவர்பால் அனைவரையும் ஈர்த்தது.

சத்யவதியை மணமுடிக்க கெஞ்சும் சாந்தனு

Mahabharat Episode 7: Devavrata Becomes Bhishma

ஒருநாள் சத்யவதியை பார்த்த ‌சாந்தனு, காதலில் விழுகிறான். சத்யவதியின் தந்தையை சந்தித்து, தனக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறான். மீனவர்களின் தலைவனாக, தன்னளவில் ஒரு சிற்றரசனாக தாசா இருந்தாலும், சக்ரவர்த்தியான சாந்தனு தனது வளர்ப்பு மகளை மணமுடிக்க கெஞ்சுவதை கவனித்த தாசா, இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான். "நான் என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமானால், நீங்கள் அவளது குழந்தைகளை குரு வம்சத்தின் வாரிசாக முடிசூட்ட வேண்டும்" என்று நிபந்தனை விதிக்கிறான். "இதற்கு வாய்ப்பு இல்லை. நான் ஏற்கனவே என் மகனுக்கு பட்டமளித்து விட்டேன். குரு சாம்ராஜ்யத்திற்கு ஏற்ற சிறந்த அரசன் தேவரதனே" என்றான் சாந்தனு.

தன் தேசத்தின் மீதோ‌, வேறு எதன் மீதுமோ கவனம் செலுத்த முடியாதவாறு சத்யவதியின் நறுமணம் சாந்தனுவின் மீது தொடர்ந்து படையெடுத்தது.

மீளமுடியா காதலில் விழுந்துவிட்ட அரசனின் நிலையை ஏற்கனவே கவனித்துவிட்ட மீனவன் தந்திரமாக, "அப்படியானால் நீ என் மகளை மறந்துவிட வேண்டியதுதான்" என்றான். தாசாவிடம் சாந்தனுவின் கெஞ்சல் அதிகரித்தது. சாந்தனுவின் கெஞ்சல் அதிகரிக்க அதிகரிக்க, தன் வலையில் சாந்தனு நன்றாக சிக்கிக்கொண்டதை உணர்கிறான் தாசா. தானாகவே வந்து சிக்கிக்கொண்ட பெருத்த மீன் வெளியேற முடியாதவாறு வலையை இறுக்க துவங்கினான். "இனி நீ தான் முடிவு செய்ய வேண்டும். என் மகள் உன் மனைவியாக வேண்டுமானால், அவளது வாரிசுகள் நாடாள வேண்டும். உன்னால் இது முடியாவிட்டால் திரும்பிச் சென்று உன் அரண்மனையில் சந்தோஷமாக இருந்து கொள்." என்றான்.

அரண்மனைக்கு திரும்பிய சாந்தனு மீண்டும் சோகத்தில் மூழ்கினான். சத்யவதியை தன் மனதில் இருந்து விலக்க முடியாமல் தவித்தான். தன் தேசத்தின் மீதோ‌, வேறு எதன் மீதுமோ கவனம் செலுத்த முடியாதவாறு சத்யவதியின் நறுமணம் சாந்தனுவின் மீது தொடர்ந்து படையெடுத்தது. தன் தந்தையின் நிலையை கவனித்த தேவரதன், "தேசத்தில் எல்லாமே குறைவர சரியாகதானே நடக்கிறது. உங்களுக்கு மட்டும் என்ன நடந்தது?" என்று கேட்டான். தன் மகனிடம் உண்மையை சொல்ல முடியாமல், எதுவுமில்லை என்று தலையாட்டிவிட்டு அவமானத்தில் தலைகுனிந்து அமர்ந்தான் சாந்தனு.

கடமை தவறாத மகனாக, சாந்தனுவை வேட்டையாட அழைத்துச்சென்ற தேர்ப்பாகனை தேடிக்கொண்டு சென்றான் தேவரதன். "வேட்டைக்கு சென்றதில் இருந்து என் தந்தை முன்போல இல்லை. என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டான். "என்ன நடந்தது என்பது எனக்கும் முழுமையாக தெரியாது. மீனவ தலைவனின் வீட்டிற்கு நான்தான் அழைத்துச் சென்றேன். பேரரசராக உற்சாகமும் அன்பும் ததும்ப உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது பேயறைந்த முகத்துடன் வந்தார்" என்றார் தேர்ப்பாகன்.

பீஷ்மராகும் தேவரதன்

நடந்ததை தெரிந்து கொள்ள நேராக மீனவ தலைவனின் வீட்டிற்கு செல்கிறான் தேவரதன். அங்கே தாசா "அவர் என் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவர்களது வாரிசுகள் நாடாள வேண்டும் என்பது மட்டுமே என் நிபந்தனை. இந்த எளிமையான நிபந்தனையை நிறைவேற்ற தடையாக நீதான் குறுக்கே நிற்கிறாய்" என்றான். தேவரதன், "இது ஒரு பிரச்சினையே இல்லை. நான் அரசனாக தேவையில்லை. எப்போதும் நான் அரசபதவியில் அமர மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். சத்யவதியின் குழந்தைகளே அரசாளட்டும்" என்றான். மீனவன் சிரித்துக் கொண்டே, "இப்போது இளைஞனாக இருக்கும் துணிச்சலில் நீ இப்படி பேசுகிறாய். ஆனால் நாளை உனக்கு பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் அரியணைக்காக சண்டையிடுவார்கள்" என்றான். "சத்யவதியின் குழந்தைகள் அரசனாக முடிசூடும் உரிமையை பெறுவதற்காக நான் என் வாழ்நாளில் திருமணம் செய்து குழந்தைக்கு தந்தையாக மாட்டேன்." என்றான் தேவரதன்.

யாருடைய கட்டாயமும் இன்றி தனக்குத்தானே மிகமிக கடுமையாக நடந்து கொண்டதால் அப்போது முதல் தேவரதனை பீஷ்மா என அழைக்க துவங்கினர்.

தனது மதிய உணவை உண்டு கொண்டிருந்த மீனவன், தன்முன் உணவாக இருந்த மீனில் இருந்த முட்களை கவனமாக நீக்கியபடியே சற்றே தலையை உயர்த்தி, "இளைஞனே.. நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால் வாழ்க்கை நிகழும் முறை பற்றி உனக்கு இன்னும் தெரியவில்லை. நீ திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தாலும், உனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கிறதே" என்றான். அப்போதுதான் தேவரதன் தன் ஆண்மையை தானே நீக்கிக் கொள்ளும் சபதத்தை எடுக்கிறான்: "எனக்கு குழந்தைகளே பிறக்க மாட்டார்கள். இப்போது முதல் நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவன் ஆகிறேன். இது உங்களுக்கு திருப்தியானதாக இருக்கிறதா?" என்றார். இறுதியில் மீனவன் சம்மதிக்கிறான். மக்கள் அனைவரும், "ஒரு ஆண் தனக்குதானே செய்து கொள்ளக்கூடிய கடுமையான செயல் இதுவே." என்றனர். யாருடைய கட்டாயமும் இன்றி தனக்குத்தானே மிகமிக கடுமையாக நடந்து கொண்டதால் அப்போது முதல் தேவரதனை பீஷ்மா என அழைக்க துவங்கினர். சாந்தனு சத்யவதியை திருமணம் செய்து கொள்கிறான்.

தொடரும்...

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!