மண்ணின் அவலநிலை நமக்கு என்ன உணர்த்துகிறது ?
சுற்றுச்சூழலியல் என்பது நாளை நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை என்று நினைக்கும் தவறை செய்ய வேண்டாம் என்று சத்குரு நமக்கு அறிவுறுத்துகிறார். நமது இயற்கை சூழலின் தரம்தான் நம் வாழ்வின் தரத்தை தீர்மானிக்கிறது என்கிறார்.

பொருளாதாரம் என்பது நமது உயிர்வாழ்வின் மிக சிக்கலான பதிப்பாகும். சாதாரணமாக உயிர்வாழ்வது என்பது சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது ஒரு நாள் இறப்பது என்பதாகும். ஆனால், இப்போது இதுதான் சிக்கலானதாக உள்ளது. நான் இதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் இன்றைய சமுதாயம், பொருளாதாரத்தை இன்றைய பிரச்சனையாகவும், சுற்றுச்சூழலை நாளைய பிரச்சனையாக நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாறவேண்டும்.
சுற்றுச்சூழல்தான் இன்றைய பிரச்சினை மற்றும் கவலை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலோ அல்லது தேசத்திலோ நடக்கும் வளர்ச்சி புள்ளிகளின் சதவீதத்தின் காரணமாக நம் வாழ்க்கை அற்புதமாக இல்லை. சத்தான உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் தூய்மையான காற்று இவற்றினால்தான் நம் வாழ்க்கை மிக அழகாக உள்ளது. இதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.
எல்லாவற்றிலும் விஷம்
இன்று, நாம் சாப்பிடும் உணவு ரசாயனங்கள் நிறைந்ததாக உள்ளது. நாம் குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று கூட விஷமாக உள்ளது. தொழில்நுட்பம் காரணமாக பத்து பதினைந்து ஆண்டுகளில் காற்று தூய்மைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். அந்த திசையில் ஒரு முழு இயக்கம் நடக்கிறது. ஆனால் மண் மற்றும் தண்ணீர் பெரிய பிரச்சனையாகவே உள்ளது.
Subscribe
மண்ணில் இருந்துதான் உயிர் உருவாகிறது. எது மண்ணோ அது உணவாக மாறுகிறது. எது உணவாக உள்ளதோ அது ரத்தம் தசையாக மாறுகிறது. இது உங்களுக்கு இப்போது புரியவில்லை என்றால், ஒரு நாள் நீங்கள் புதைக்கப்படும் போது இதை புரிந்துகொள்வீர்கள். பெரும்பாலான மக்கள் அதை தாமதமாக உணருவார்கள், ஆனால் அனைவரும் ஒரு சமயத்தில் உணரப்போவது மட்டும் நிச்சயம்.
துரதிருஷ்டவசமாக, மண் சூழலியல் அடிப்படையில் மிகவும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் உள்ள மண்ணிற்கு நாம் ஏற்படுத்திய தீங்குகள் மிக அதிகம். மற்ற விஷயங்களான பணிப்பாறை உருகுதல் போன்றவை நாம் பார்க்கும் படியாக உள்ளது. ஆனால், நாம் இந்த மண்ணிற்கு இளைக்கும் தீங்கு மிக அபாயகரமானது.
ஊட்டச்சத்தில் வீழ்ச்சி
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பயிர்களின் ஊட்டச்சத்தின் அளவு முப்பது சதவிகிதம் குறைந்துவிட்டது. இதனால்தான், மக்கள் எதை சாப்பிட்டாலும் அவர்களின் உடல்கூறு முழு வளர்ச்சியடைவதில்லை.
நீங்கள் இறைச்சி சாப்பிடவில்லையென்றால், போதிய அளவு ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு வழியில், அவர்கள் சொல்வதில் தவறில்லை. சைவ உணவு வகைகளில் ஊட்டச்சத்து இல்லாததற்கு காரணம் அவை வளர்க்கப்படும் விதத்தில்தான். அவர்கள் தாவரங்களை ஏதோவொரு வகையில் உருவாக்கி, அதை உணவு என்று உங்களுக்கு விற்கிறார்கள். அது உணவல்ல, வெறும் குப்பை. மண்ணின் தரம் வியத்தகு முறையில் குறைந்துவிட்டதால் இப்படி நடக்கிறது.
மண்ணை வளமாக வைத்திருக்க உரமும், ட்ராக்டரும் மட்டும் போதாது. நிலத்தில் உங்களுக்கு கால்நடைகள் வேண்டும். பண்டைய காலங்களில் இருந்து நாம் பயிர்களை வளர்த்தபோது, விளைச்சலுக்கு பின் பயிரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள தாவர மற்றும் விலங்கு கழிவுகளை எப்போதும் மண்ணில் விட்டு சென்றோம்.
இன்று, நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எதையும் திரும்பக் கொடுப்பதில்லை. கொஞ்சம் உரங்களை தூக்கி எறிந்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என்று நினைக்கிறோம். அதனால்தான் உணவு மற்றும் அதன் ஊட்டச்சத்தின் மதிப்பு வியத்தகு முறையில் குறைந்து வருகிறது.
உணவை வளர்க்கும் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நாட்டை பாலைவனமாக மாற்றி வருகிறோம். எந்தவொரு கரிம பொருட்களையும் மண்ணிற்கு அளிக்காததால் மண் வெறும் மணலாக மாறிவருகிறது. ஏனென்றால், இலைகள் அல்லது விலங்கு கழிவுகள் போன்ற எதையும் நாம் மண்ணிற்கு இடுவதில்லை.
உரங்களின் உண்மையான ஆபத்து
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், நான் விவசாயத்தில் இருந்தபோது, உர நிறுவனங்கள் வந்து உரங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி கிராமங்களில் பரப்புரை செய்வார்கள். எனக்கோ அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியாது.
ஒரு மிதமான தட்பவெப்ப நிலையில் நீங்கள் மண்ணில் வைக்கும் உரங்கள் ஒன்பது முதல் பன்னிரண்டு ஆண்டுகள் வரை அங்கே தங்கிவிடும். ஆனால், இதுபோன்ற ஒரு வெப்பமண்டல காலநிலையில் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மேல் தங்காது. இயற்கை வழியில் இல்லாமல் வேறு வழியில் கூட பயிர்களை வளர்க்க முடியும் என்ற எண்ணத்தை நாம் எங்கிருந்தோ பெற்று விட்டோம். இது நம்ப முடியாத ஒன்று.
இயற்கை முறையில் உணவு வளர்ப்பதை தவிர வேறு முறைகளில் உணவினை வளர்க்க முடியுமா என்ன? இல்லவே இல்லை. நீங்கள் மண்ணை பாதுகாக்க ஒரே வழி விலங்கு மற்றும் காய்கறி கழிவுகளை மண்ணில் போடுவதுதான். நீண்ட காலத்திற்கு நிலத்தை காப்பாற்ற நீங்கள் செய்யும் ஒரே வழி இதுதான்.
மண்ணை சரிசெய்தால் எல்லாம் சரியாகும்.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நாம் உறுதியான நடவடிக்கையில் இறங்கினால், அடுத்த இருபத்தி ஐந்து முதல் முப்பது ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும் படியான அளவிற்கு நம் மண்ணை சீரமைத்துவிட முடியும். தற்போது மண் மோசமான நிலையில் இருப்பதால், நான்கு முதல் ஐந்து தலைமுறைகளுக்கு வாழ்க்கையில் உணவு சம்பந்தபட்ட விஷயங்களில் பயங்கரமான நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.
நம்மால் மண்ணை சீரமைக்க முடிந்தால், அதன் மூலம் நீர் சீரடையும், அதன் மூலம் காற்றும் சீரடையும். மண் வளமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த உடல் அதிலிருந்து பெறப்படுவதுதான். நமது குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய பரம்பரை சொத்து வளமான மண் மற்றும் சுத்தமான தண்ணீர். மண்ணின் தரத்தை காப்பாற்றினால் மட்டுமே, கிரகத்தின் தரமும், வாழ்க்கையின் தரமும் உயரும்.
ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!