சத்குரு: மக்கள் ஒன்றாகக் கூடுவது, இல்லங்களை அலங்கரிப்பது, ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு தெருவையும் வண்ணமயமாய் மாற்றுவது, இனிப்புகளும் பரிசுகளும் பரிமாறிக்கொள்வது என நம் கலாச்சாரத்தில் திருவிழாக்கள் அமர்க்களப்பட்டது.

இந்த தேசத்தில், தீபாவளி பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. தீபாவளி - தீபங்களின் திருவிழா! இங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவதை கண்கூடாகப் பார்த்திருப்போம்.

ஏரோப்ளேன் பட்டாசு தந்த காயம்!

என் பால்ய நாட்களில் தீபாவளிப் பண்டிகை எனக்கு குதூகலம் அளிப்பதாக இருந்தது. பள்ளிக்குப் போக வேண்டாம் என்பது முக்கியக் காரணம், டிவி இல்லாததால் அத்தனை நேரத்தையும் கிரிக்கெட் விளையாடிக் கழித்தது இன்னொரு காரணம். தேசிய அணிகளின் பெருமைகளைச் சொல்ல டிவி இல்லை, அப்போது தேசிய அணியின் மீது எங்களுக்கு மோகமும் இல்லை. எங்கள் அணியே எங்கள் மனதுகளில் பிரதானமாய் இருந்த காலகட்டம் அது.

நான் சிறியவனாக இருந்தபோது, பட்டாசுகள் எனக்கு கொண்டாட்டம் அளித்தன. ஒரு நாள் அல்ல, மாதம் முழுவதும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருப்பேன். எனக்கு 6, 7 வயதிருக்கும் என்று ஞாபகம், ஏரோப்ளேன் என்றொரு பட்டாசு ரகம் உண்டு. அதில் ஒரு டப்பாவும், ஒற்றைத் திரியும் இருக்கும். படிக்கட்டில் நின்றுகொண்டு பட்டாசிற்கு தீ மூட்டினேன், லூசாக இருந்த என் சட்டைக்குள் நுழைந்து, காலரினூடே வெளியேறி கழுத்தைப் பதம்பார்த்தது. என் தந்தையோ மருத்துவர், காயம்பட்ட மகனைக் கண்டவுடன் முழு இல்லமும் பரபரப்பிற்கு உள்ளானது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் செய்ய வேண்டும் என்ற படபடப்பு அவர்களுக்கு, எனக்கோ அடுத்த பட்டாசை ஏவ வேண்டும் என்ற துடிப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்கு 15 வயது இருக்கும் என நினைவு. ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் இயக்கம், "தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு பதில், யாருக்காவது உதவுங்கள்," என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமயம் அது. அவரது அறைகூவல் என் மனதினைத் தொட்டது. அதுவே நான் பட்டாசினை வெடித்த கடைசி ஆண்டும் கூட, அத்துடன் என் பட்டாசு சகாப்தமும் முடிவுக்கு வந்தது.

நம் கலாச்சாரத்தில் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்

பின்னாளில் நான் நகரத்தை விட்டு கிராமத்திற்கு விவசாயம் செய்யச் சென்றபோதே விழாக்களின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.

கிராமங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாகக் கூடி, வீதியெல்லாம் அலங்கரித்து, கோலமிட்டு, தெருவெல்லாம் தோரணம் கட்டி, ஆடல்-பாடல் என களைகட்டுகிறது நாட்டுப்புறம். பாரதத்தின் விழாக்கள் எத்தனை வண்ணமயமானது என எனக்கு புரிந்த சமயம் அது.

8000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேசத்தில் அறிவியல் இருந்தது. கலாச்சாரம் இருந்தது. மருத்துவம் சுகாதாரத்தைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். முறையான கழிவறைகள் மற்றும் தூய்மையாக வாழும் முறை இருந்தது. இதனால் மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக அமைதியாக வாழ முடிந்தது. மக்கள் அமைதியாக ஆரோக்கியமாக நிறைவுடன் வாழ்ந்தால்தானே கொண்டாட்டத்தைப் பற்றி நினைக்க முடியும், அதனால் இயல்பாகவே பாரதக் கலாச்சாரத்தில் ஆன்மீகம் வளர்ந்தது, கோயில்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலும் இங்கே கொண்டாட்டமாய் ஆனது.

வருடத்தின் 365 நாட்களும் 365 திருவிழாக்கள் இங்கே இருந்தன. மனித வாழ்க்கையே கொண்டாட்டமாய் மாறிப்போவதற்கு இதுபோல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், தற்போது எஞ்சியுள்ளதோ 30, 40 விழாக்கள் மட்டுமே. அலுவலகமும், தொலைக்காட்சியும் நம் திருவிழாக்களை விழுங்கிவிட்டன. அதிலும் நடைமுறையில் தீவிரமாக இருப்பதென்னவோ 8, 10 விழாக்கள் மட்டுமே. இதனை அப்படியே விட்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்கு கொண்டாட்டங்களே இருக்காது. பொருள் ஈட்டுவதும் உணவு உண்பதும் என வாழ்க்கை கடந்து போய்விடும். பலரும் அப்படித்தானே வாழ்ந்து வருகிறார்கள்? விழா நாளன்று விடுமுறை, நீண்ட நேரத் தூக்கம், திரைப்படம், தொலைக்காட்சி பெட்டி என்றாகிவிட்டது வாழ்க்கை.

ஈஷாவும் கொண்டாடங்களும்…

நம் தேசத்தில் விழாக்கள் என்றால் அதிகாலை நான்கு மணிக்கு விழித்து, பெரும் உற்சாகத்துடன் மக்கள் தம்மை தயார் செய்துகொண்ட காலம் உண்டு. வீடு முழுக்க பல வேலைகள் நடந்திருக்கும். ஊர் மக்கள் ஓரிடத்தில் கூடி, அங்கு பெரும் கொண்டாட்டம் நிகழும். ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ். இந்தக் கலாச்சாரத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இதற்காகவே அனைவரும் ஒன்றாக கூடி, ஓரிடத்தில் விழாக்களை எடுக்கும் விதமாக ஈஷாவில் கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொங்கல், மஹாசிவராத்திரி, தீபாவளி மற்றும் தசரா என நான்கு பண்டிகைகளை ஈஷா யோக மையத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

வாழ்வை விளையாட்டைப் போல அணுகுவதற்காகவே நம் கலாச்சாரத்தில் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. உங்கள் வாழ்வில் கொண்டாட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் நோக்கம்.

தீபாவளியின் வரலாறு & ஆன்மீகப் பின்னணி

கலாச்சார ரீதியாய் தீபாவளியைக் கொண்டாட பலக் காரணங்கள் இருந்தாலும், வரலாற்று ரீதியாய் நாம் சொல்லி வரும் காரணம், நரகாசுரன் என்னும் தீய அரசனை கிருஷ்ணன் கொன்றான், அதனால் அது நரக சதுர்தசி ஆனது என்பதுதான். பலவிதங்களில் பார்த்தால், இந்நாள் மிகுந்த மங்களம் சேர்க்கும் நாளாக ஆகிறது. இந்நாளில் ஒருவர் லக்ஷ்மியைத் தேடினால் அவருக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும் எனவும், ஒருவருக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால், அன்னை சக்தி வருவாள் என்றும், கல்வி வேண்டுபவருக்கு சரஸ்வதி தேவி நலம் செய்வாள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இந்நாள் ஒருவருக்கு நல்வாழ்வு வழங்கும் என்பதை மரபுவழியாக நாம் பேசியே வந்திருக்கிறோம்.

தீபாவளி - ஒளியின் திருநாள். இந்நாள் வெளியில் விளக்கேற்றுவதைப் பற்றி அல்ல, நம் அகத்தை ஒளியேற்றச் செய்வதற்கான ஒரு நாள். வெளிச்சம் என்றால் தெளிவு. தெளிவில்லாமல் நீங்கள் எதைச் செய்ய முற்பட்டாலும் அது அழிவை நோக்கி அழைத்துச் செல்லும். வெளிச்சம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் என்று நாம் சொல்வது, வெறும் நம் கண்ணால் காண்பதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, பலவிதங்களில் நமக்குள் அது தெளிவினை உண்டாக்கும் என்பதால்தான். உங்களைச் சுற்றி நடப்பதை நீங்கள் எத்தனை தெளிவான பார்வையுடன் காண்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கும்.

பலகாரங்களில் படிந்திருக்கும் பேரன்பு…

நமக்கு நன்மை விளைவிக்கும் இந்த அற்புத நாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். பட்டாசு வெடிப்பது, புத்தாடை அணிவது மட்டுமல்ல, நம் நாட்டில் இனிப்புப் பலகாரங்கள் இல்லாமல் பண்டிகைகள் எப்படி நிறைவுபெறும்? அத்தையும் மாமியும் மாவு எடுத்துக் கொடுக்க, பாட்டியின் கைப்பதம் சுவையை எடுத்துக் கொடுக்கும். பாரதத்தில் செய்யப்படும் பலகாரங்களைச் சமைப்பதற்கு ஆழ்ந்த ஈடுபாடு அவசியம். மக்கள் தங்கள் வாழ்க்கையை நேசித்தால் மட்டுமே இதுபோன்ற ஈடுபாட்டுடன் வாழ முடியும். இல்லையென்றால், அரிசியை குக்கரில் போடு, சக், சக்! மூன்று நிமிடத்தில் சாப்பாடு தயார்!

எங்கள் வீட்டில் உணவு தயாரிக்கும்போது என் அத்தைகளும், பாட்டிகளும் பாட்டுப் பாடிக்கொண்டே உணவு சமைப்பார்கள். என் அன்னையும் அப்படித்தான். உடலுக்கு மட்டும் உணவல்ல, அதில் அன்பு இருக்கும். ஈடுபாடு இருக்கும். அதில் கைப்பக்குவம் இருக்கும். அந்த உணவை உண்ணும் மனிதரின் உடலும் அதுபோலவே உருவாகும். 

சங்கரன் பிள்ளையின் தீபாவளி ஷாப்பிங்

ஒருமுறை சங்கரன் பிள்ளையை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்தினர். நீதிபதி என்ன தவறு செய்தாய் என்று கேட்டார். “நான் ஒன்றும் செய்யவில்லை. தீபாவளிக்கு ஷாப்பிங் செய்யச் சென்றேன்," என்றார். "என்ன ஷாப்பிங் செய்ததற்காக நீ கைது செய்யப்பட்டாய், என்ன கொடுமை சார் இது?" என்றார் நீதிபதி. "நான் சற்று முன்னதாக கடைக்கு சென்றுவிட்டேன், அதற்குப் போய் என்னை கைது செய்துவிட்டார்கள்," என்றார் சங்கரன் பிள்ளை. “காலையில் சீக்கிரமாகவே கடைக்கு போவது ஒன்றும் தவறான செயல் அல்ல. சரி நீ எப்போது ஷாப்பிங் போனாய்?” என்று நீதிபதி கேட்க, “கடை திறப்பதற்கு முன்னரே ஷாப்பிங் செய்தேன்,” என்றார் சங்கரன் பிள்ளை. நாம் விழாக்களை இப்படி தவறாகப் புரிந்துகொண்டாலும் ஒவ்வொரு விழாவிற்கும் ஆழமான அடிப்படை இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் தீபாவளி ஆகட்டும்

வாழ்வை விளையாட்டைப் போல அணுகுவதற்காகவே நம் கலாச்சாரத்தில் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. உங்கள் வாழ்வில் கொண்டாட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் நோக்கம். பட்டாசுகளும், மத்தாப்புகளும் உங்களுக்குள் இருக்கும் நெருப்பை மூட்டிவிடட்டும். ஏதோ ஒருநாள் மட்டும் கொண்டாடி, மறந்து போவதற்கான நாள் அல்ல தீபாவளி, உங்களுக்குள் ஒவ்வொரு நாளும் தீபாவளியாகத்தான் இருக்க வேண்டும். நாம் சும்மா அமர்ந்தாலே நம் உயிர், நம் சக்தி, நம் உடல் ஆகியவை உயிருள்ள ஒரு வெடிகுண்டைப் போல் உயிரோட்டமாய் இருக்க வேண்டும்.