தினம் தோறும் கொண்டாட்டம்...
பண்டிகைகளை டி.வி முன் அமர்ந்து கொண்டாடி, ஹோட்டலில் சாப்பிட்டு மகிழும் கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நாம், கிராமங்களில் ஊர் கூடி, ஆடிப் பாடி, விளையாடிக் கொண்டாடி, அதே மகிழ்ச்சியுடன் அன்பு கலந்து சமைத்த உணவின் சுவையை அறிந்திருக்கிறோமா? பண்டிகைகளை சத்குரு தன் இளம் வயதில் எப்படிக் கொண்டாடியிருப்பார்? அவருடைய வார்த்தைகளில் உங்களுக்காக...
 
 

பண்டிகைகளை டி.வி முன் அமர்ந்து கொண்டாடி, ஹோட்டலில் சாப்பிட்டு மகிழும் கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நாம், கிராமங்களில் ஊர் கூடி, ஆடிப் பாடி, விளையாடிக் கொண்டாடி, அதே மகிழ்ச்சியுடன் அன்பு கலந்து சமைத்த உணவின் சுவையை அறிந்திருக்கிறோமா? பண்டிகைகளை சத்குரு தன் இளம் வயதில் எப்படிக் கொண்டாடியிருப்பார்? அவருடைய வார்த்தைகளில் உங்களுக்காக...

சத்குரு:

பள்ளி நாட்களில் பண்டிகை வந்தால் எனக்கு மாபெரும் சந்தோஷம். பள்ளிக்கூடத்துக்கு லீவு. நண்பர்களுடன் விளையாடப் போகலாம் என்று துடிப்புடன் காத்திருப்பேன். பண்டிகை நாட்களில் புத்தகம் படிப்பது, விளையாடுவது, நீச்சலடிப்பது, மலையேற்றத்தில் கலந்து கொள்வது இப்படித்தான் கவனம்போகும். மற்றபடி, சிறுவனாக இருந்தபோதும் சரி, இளைஞனாக இருந்தபோதும் சரி, பண்டிகைகளைக் கொண்டாடுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததே இல்லை.

சங்கராந்தி வந்தது... தங்கள் வித்தியாசங்களை மறந்து கிராமத்து மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்போல் ஒன்றாகக் கலந்தார்கள்.

மைசூரில் இருந்ததால், தசரா என்னும் நவராத்திரிக் கொண்டாட்டங்களை வேடிக்கைப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், தசரா விடுமுறையையும் விஞ்ஞானக் கண்காட்சியில் பங்கு கொள்வதிலும், பைக் ரேஸ்களுக்குத் தயாராவதிலும், பறக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதிலும், டெஸ்ட் ரய்டுகளில் கலந்து கொள்வதிலும்தான் செலவு செய்வேன்.

விவசாயத்தில் ஈடுபட்டு பண்ணையில் வசித்தபோதுதான் பண்டிகையின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்தேன். தசரா, ஆயுதபூஜை இவற்றையெல்லாம் கிராமமே சேர்ந்து கொண்டாடியபோது, கொண்டாட்டங்களின் தாக்கத்தைக் கண்டு வியந்தேன். நகரங்களில் தனித்தனியாக வீடுகளில் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், கிராமத்தில் அப்படி அல்ல.

சங்கராந்தி வந்தது... தங்கள் வித்தியாசங்களை மறந்து கிராமத்து மக்கள் அனைவரும் ஒரு குடும்பம்போல் ஒன்றாகக் கலந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எந்த வயது வித்தியாசமும் இன்றி, சிறு சிறு விஷயங்களில்கூட ஆர்வம் எடுத்துக் கொண்டார்கள். முழுமையான ஈடுபாட்டுடன் கிராமத்தையே அலங்கரித்து கொண்டாட்டத்துக்குத் தயாரானார்கள். அப்போதுதான், நம் பண்டிகைகள் எத்தனை வண்ணமயமானவை என்பதை நான் உணர்ந்தேன்.

என் பண்ணையில் வேலை செய்தவர்களுக்காக, முடிந்தபோதெல்லாம் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாட ஆரம்பித்தேன். என் குடும்பத்தாரும், அந்தப் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்கள். அங்கிருந்த உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றாக அமர்ந்து நாங்கள் சாப்பிட்டதெல்லாம், அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

ஒரு குறிப்பிட்ட அநாதை இல்லத்துக்கு அவ்வப்போது நான் தொண்டு செய்யப் போவதுண்டு. 43 அநாதைக் குழந்தைகள் அங்கே இருந்தனர். நான் போனாலே ஒன்று கை விரலைப் பிடித்துக் கொள்ளும், இன்னொன்று சட்டையைப் பிடித்துக் கொள்ளும். ஏதாவது ஒரு விதத்தில் எல்லோரும் என்னைத் தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்தக் குழந்தைகள் யாருமே அதுவரை தசரா ஊர்வலத்தைப் பார்த்தது இல்லை என்று அறிந்தேன்.

சிவராத்திரிப் பண்டிகை, என் வாழ்வின் புது அர்த்தத்தை உண்டு பண்ணிய பண்டிகை.

தசரா கொண்டாட்டத்தைக் காண அவர்களை அழைத்துப் போக விரும்பினேன். இல்லத்தை நடத்தும் பெண்மணி, அலைமோதும் கூட்டத்தில் குழந்தைகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்று மிகவும் தயங்கினார். என் நண்பர்கள் நான்கு பேர் எனக்கு உதவுவார்கள் என்று தைரியம் கொடுத்து, ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்தேன். என் நண்பர்கள் முன்கூட்டியே போய் ஊர்வலம் பார்க்கும் இடத்தில் இடம் பிடித்து வைத்தார்கள். சில தின்பண்டங்களை ஏற்பாடு செய்து கொண்டு குழந்தைகளை அழைத்துப் போனேன்.

அந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்து குழந்தைகளுக்கு ஏற்பட்ட பிரமிப்பையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்த்தபோதுதான் பண்டிகைகள் கொண்டாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டேன்.

ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து எதற்கு இது, ஏன் இத்தனை முறை, வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடினால் போதாதா என்றெல்லாம் நினைக்கிறோம். சிலசமயம் புத்தகங்கள் படிப்பதோ, சிலசமயம் தியானத்தில் ஈடுபடுவதோ இதைவிட சிறப்பு என்று எண்ணுகிறோம். ஆனால், எளிமையாக வாழும் மக்களின் வாழ்வில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்கிறது.
1

வேட்டைக்குப் போன ஓர் அரசன் பாலைவனத்தில் வெகு தொலைவு தனியாக வந்து சிக்கிக் கொண்டான். அரசனை பல்லக்கில் வைத்து அவன் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க அங்கே கிராமத்தில் இருந்த நான்கு பேர் சம்மதித்தார்கள். தன் நாட்டுக்குப் போய்ச் சேர ஆறு நாட்களாகும் என்று அறிந்தான், அரசன். "மூன்று நாட்களில் கொண்டு சேர்த்தால், ஆயிரம் பொற்காசுகள் கூடுதலாகத் தருகிறேன். இரண்டே நாட்களில் பயணம் முடிந்தால், இரண்டாயிரம் பொற்காசுகள் அதிகம் தருகிறேன்" என்று அறிவித்தான்.

பல்லக்கு சுமந்தவர்கள் பொன்னுக்கு ஆசைப்பட்டு வேகத்தைக் கூட்டிக் கொண்டே போனார்கள். ஆனால், ஆறு நாட்களாகியும் அவர்கள் பாலைவனத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் பல்லக்கை இறக்கி வைத்துவிட்டார்கள்.

"அரசே, வேகத்திலேயே கவனம் வைத்ததில், என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதே புரியாமல் போய்விட்டது" என்று அவர்கள் வேதனையுடன் சொன்னார்கள்.

வாழ்க்கையில் எதையோ எட்டிப் பிடிக்க வேகத்தைக் கூட்டிக் கொண்டே போவதில் வாழ்க்கையைத் தொலைத்துவிடும் அபாயம் உள்ளதால், அவ்வப்போது இந்த மாதிரிக் கொண்டாட்டங்களில் கவனத்தைத் திருப்புவது நல்லது.

வாழ்க்கையை சந்தோஷமாக வாழத் தெரியாதவர்கள்தான், கடைகளில் பாக்கெட் உணவை வாங்கிப் புசிப்பர்.

வாழ்க்கை அப்படி தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியதுதான். இதைச் சொல்லும்போது, என்னை அறியாமலேயே ஒரு பண்டிகை நாள் என் வாழ்க்கையில் மிக முக்கிய நாளாக அமைந்தது நினைவுக்கு வருகிறது!

விஜிதான் என் மனைவி என்று தீர்மானித்திருந்த நேரம்.

நாங்கள் இருவரும் கர்நாடகாவில், இருப்பு என்ற மலை கிராமத்துக்குப் போயிருந்தோம். பசுமை ஒருபுறம், பொழியும் அருவி ஒருபுறம், சிறு ஈசன் கோயில் ஒருபுறம்...!

நாங்கள் போயிருந்த ரம்மியமான மாலையில் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பள்ளத்தாக்கில் சுமார் நானூறு, ஐந்நூறு கிராம மக்கள் கூடியிருந்தனர். எங்கு திரும்பினும் பாக்கு மரக்கீற்றுகளாலும், தென்னங்கீற்றுகளாலும் எழுப்பப்பட்ட தற்காலிகக் கடைகள்... அலங்கார அமைப்புகள், மின்சாரம் இல்லாத பகுதி என்பதால், வெளிச்சத்துக்காக ஆங்காங்கே நட்டுவைத்த தீப்பந்தங்கள். அந்தப் பாரம்பரிய ஏற்பாடுகள் கண்களை மட்டுமல்லாது மனத்தையும் கொள்ளை கொண்டன.

விசாரித்தேன். அன்று மகாசிவராத்திரி என்றார்கள். பொதுவாக, மகாசிவராத்திரி அன்று சிலர் இரவுக் காட்சிக்குப் போவார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள். சிலர் குடித்துவிட்டு உருண்டு கிடப்பார்கள் என்றுதான் தெரியும். அதை ஒரு பண்டிகையாக எங்கள் வீட்டிலும் ஏனோ கொண்டாடியதில்லை.

அப்படியிருக்க, மகாசிவராத்திரிக்கு ஒரு கிராமமே திரண்டு விழாக்கோலம் பூண்டிருந்தது என்னை மிகவும் வசீகரித்தது. உடனே, விஜியிடம் "நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம்... இங்கேயே.. இப்போதே!" என்றேன்.

விஜி சம்மதித்தாள். நாங்கள் கணவன் மனைவியானோம். வழக்கமான ஆர்ப்பாட்டமான சடங்குகள் எதுவும் நடத்தவில்லை. மாலைகூட மாற்றிக் கொள்ளவில்லை. சாட்சிகள் என்று யாரையும் அழைக்கவில்லை.

சிவராத்திரிப் பண்டிகை, என் வாழ்வின் புது அர்த்தத்தை உண்டு பண்ணிய பண்டிகை.

பொதுவாக பண்டிகைகள் என்றால், விதவிதமாகச் சமைப்பதிலேயே பொழுது வீணாகிறது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். விழாக் காலங்களில் எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமான உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன?

உணவு என்பது வாழ்க்கையின் மிக அடிப்படையான அம்சம். இன்று 'நீங்கள்' என்று சொல்லிக் கொள்ளும் உடல், நீங்கள் சாப்பிட்ட உணவின் சேகரம்தான். அந்த உணவு என்ன குணம் கொண்டு இருக்கிறதோ, அதுதான் உங்கள் குணமாகவும் பிரதிபலிக்கிறது.

இந்திய உணவைத் தயாரிப்பது சுலபமல்ல. மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால்தான், ருசி நன்றாக அமையும். வாழ்க்கையை மக்கள் நேசிக்கும் நிலை இருந்தால்தான், சிறு சிறு விஷயங்களில் கூட அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு வரும்.

வாழ்க்கையை சந்தோஷமாக வாழத் தெரியாதவர்கள்தான், கடைகளில் பாக்கெட் உணவை வாங்கிப் புசிப்பர். அந்த உணவு தேவையான சத்து தராது என்பதல்ல; வீட்டில் தயாராவது போல், அதில் அன்பு குழைத்துச் சமைக்கப்பட்டு இருக்காது.

என் பாட்டியோ, என் தாயோ குழந்தைகளுக்கு உணவைத் தயார் செய்யும்போது, மிக மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக் கொண்டுதான் அந்த வேலையில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய பக்தியும், அன்பும் அந்த உணவை மேலும் சத்துள்ளதாக ஆக்கும். தான் சரியாக கவனிக்கப்படவில்லை என்று ஒருபோதும் குழந்தைக்கு எண்ணம் வராது. அது வாழ்க்கையை வெறுப்போடு அணுகாது.

இந்த அன்பும், அரவணைப்பும் கிடைக்காத சூழல்தான் மிக பிரமாண்ட பிரச்சனையாக உருவெடுத்து, குடும்பங்கள் சிதறுகின்றன.

பண்டிகை நாட்களில் குடும்பங்கள் ஒன்றாகக் கூடி, முழுமையான ஈடுபாட்டுடன் உணவுகளைத் தயார் செய்வதில், அவர்களுக்குள் அன்பான பிணைப்பு ஏற்பட்டது.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

awesome !! Someone should make sadhguru's life a movie with grand investment like shankar productions ! When i visualize the scenes described by sadhguru, thats what i thought !

4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

this is the falls and the shiva temple where sadhguru got married !!! its in kodagu district !

4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Thanks Cibi for sharing these wonderful Photos and details about the place where Sadhguru loves it.