சத்குரு: சிறுமியாக இருந்தபோது குந்தி ஒருமுறை தனது பணிவிடைகளால் துர்வாச முனிவரின் மனதை மகிழச் செய்திருந்தாள். அதை பாராட்டும் விதமாக எந்த கடவுளை வேண்டுமானாலும் அழைக்கக்கூடிய ஒரு மந்திரத்தை உபதேசித்தார். ஒரு நாள் இந்த மந்திரத்தை பரிசோதித்து பார்க்க நினைத்தாள் குந்தி. வெளியே சென்ற குந்தியின் கண்களில் சூரியன் அற்புதமாக உதயமாகும் காட்சி தோன்றியது. சற்றும் தாமதிக்காமல், "சூரியக் கடவுள் எனக்கு வேண்டும்" என்றாள், சூரியக் கடவுள் வந்தார். குந்தி கர்ப்பவதியானாள், குழந்தையும் பிறந்தது.

கர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தையின் பிறப்பே அசாதாரணமான‌ ஒன்று. விதியின் குழந்தையாகவே கர்ணனின் பிறப்பு இருந்தது.

பதினான்கு வயதில் திருமணமாகாமல் தாயான குந்திக்கு சமுதாய சூழ்நிலையை எப்படி சந்திப்பது என தெரியவில்லை. குழந்தையை ஒரு மரப்பெட்டியில் வைத்து, அவன் எதிர்காலம் என்ன ஆகுமென்றே தெரியாத நிலையில் ஆற்றில் விட்டாள். குந்திக்கு இது பெரும் போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான நோக்கமுடைய பெண்ணாகவும் இருந்தாள். தன் நோக்கம் மட்டும் தெளிவாக இருந்ததால், எதையும் செய்யத் துணிந்திருந்தாள் அவள்.

திருதராஷ்டிரனின் அரண்மனையில் தேர்ப்பாகனாக இருந்த அதிரதன், நதிக்கரை ஓரமாக இருக்க நேர்ந்த சமயத்தில் நதியில் அழகான ஒரு மரப்பெட்டி மிதந்து செல்வதை பார்த்தார். வேலைப்பாடுகள் மிகுந்த அந்த பெட்டியை மீட்டு கரையில் வைத்து திறந்தார். உள்ளே குழந்தையை பார்த்ததும் ஆனந்தமடைந்தார். குழந்தை வரம் இல்லாத தனக்கு இது கடவுள் கொடுத்த பரிசு என்றே நினைத்தார். குழந்தையை தன் மனைவி ராதாவிடம் எடுத்துச் சென்றார். குழந்தையின் வரவில் இருவரும் பேருவகை அடைந்தார்கள். பெட்டியின் வேலைப்பாடுகளைப் பார்த்ததுமே இது சாதாரண வீட்டு குழந்தை அல்ல என்பதும், ஒரு அரசனோ அல்லது அரசியோதான் குழந்தையை கைவிட்டிருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அது யாரென அவர்கள் அறியாதபோதும், குழந்தை இல்லாத தங்கள் வாழ்க்கையில் நிறைவைத் தரவே இந்தக் குழந்தை கிடைத்ததாக மகிழ்ந்தார்கள்.

கர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த குழந்தையின் பிறப்பே அசாதாரணமான‌ ஒன்று. விதியின் குழந்தையாகவே கர்ணனின் பிறப்பு இருந்தது. பச்சிளம் குழந்தையாக இருந்தபோதிலும் அப்போதே காதுகளில் குண்டலமும், மார்புப் பகுதியை சுற்றிலும் இயற்கையான கவசம் போன்ற அமைப்பும் கர்ணனுக்கு இருந்தது. பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தான். பேரன்புடன் குழந்தையை வளர்த்தாள் ராதா. தான் ஒரு தேரோட்டியாக இருந்ததால், கர்ணனுக்கும் தேர் ஓட்ட கற்றுத்தர விரும்பினார் அதிரதன். ஆனால் கர்ணன் வில்வித்தை வீரனாக வேண்டும் என்று தகித்துக் கொண்டிருந்தான். அன்றைய காலகட்டத்தில் ஷத்ரியர்களுக்கும், போர்த்தொழில் செய்பவர்களுக்கும் மட்டுமே போர்ப் பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் பெற தகுதி இருந்தது. அரசனின் அதிகாரத்தை பாதுகாக்க இது ஒரு எளிமையான வழி. எல்லோரும் ஆயுதங்களை பயன்படுத்த அறிந்திருந்தால், அவற்றின் பயன்பாட்டில் கட்டுப்பாடே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ஷத்ரியனாக இல்லை என்ற காரணத்தால் கர்ணனை எந்த ஆசிரியரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

புறக்கணித்த துரோணர்

அப்போது அந்த பகுதியிலேயே பெயர் பெற்ற வீரர்களில் ஒருவராக பரசுராமர் திகழ்ந்து வந்தார். அவரே துரோணரின் ஆசிரியர். தனது அஸ்திரங்களை துரோணரிடம் வழங்கும் முன், எந்த ஷத்ரியனுக்கும் இந்த சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பற்றி கற்றுத்தரக் கூடாது என்று நிபந்தனையும் விதித்தார். சத்தியம் செய்த துரோணர் நேராக ஹஸ்தினாபுரம் சென்று இந்த ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஷத்ரியர்களுக்கு கற்றுத்தரும் அரச பதவியை பெற்றுக் கொண்டார். இதுதான் துரோணரின் குணம் - உயர்வடைய விருப்பமுள்ளவர்; கொள்கைப்படி வாழ்பவர், ஆனால் நேர்மை இல்லாதவர். எல்லா தர்மமும், சாஸ்திரமும், நீதிநெறிகளும், வேதங்களும் அறிந்தவர், ஆனால் கொஞ்சம்கூட மன உறுத்தலே இல்லாதவர். பெரும் ஆசிரியர், ஆனால் குறுக்கு புத்தியும் பேராசையும் கொண்ட மனிதன்.

துரோணரின் கீழ் பயிற்சி துவங்கியது, கூடவே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான போட்டியும்.

துரோணர் ஹஸ்தினாபுரம் வந்து சேரும் முன் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர்க்கலைகளை கற்றுத்தந்து கொண்டிருந்தவர் கிருபாச்சாரியார். ஒரு நாள் பிள்ளைகள் சேர்ந்து பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் பந்துகளை ரப்பர், தோல் அல்லது பிளாஸ்டிக்கில் செய்யும் வழக்கமில்லை - சாதாரணமாக களைச் செடிகளை இறுக்கமாக பந்து போல சுற்றி தயார் செய்திருப்பார்கள். எதிர்பாராத விதமாக பந்து அருகிலிருந்த கிணற்றுக்குள் விழுந்தது. பந்து கிணற்றில் மிதப்பதை பார்த்து விட்டாலும், அதை எப்படி வெளியே எடுப்பது என்று யாருக்கும் புரியவில்லை. ஏனென்றால், கிணறு ஆழமாக இருந்ததுடன், அதில் படிக்கட்டுகளும் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்த வழியாக வந்த துரோணர், சூழ்நிலையை கவனித்தார், "நீங்கள் ஷத்ரியர்கள்தானே?" என்று கேட்டார்.

"ஆம், நாங்கள் ஷத்ரியர்கள்தான்" என்றனர் பிள்ளைகள்.

"அப்படியானால், உங்களில் யாருக்கும் வில்வித்தை தெரியாதா?"

அர்ஜூனன் முன்னே வந்து, "நான் ஒரு வில்லாளி. இந்த உலகிலேயே சிறந்த வில்வித்தை வீரனாக விரும்புகிறேன்" என்றான்.

துரோணர் அர்ஜூனனின் ஆவலைத் தூண்டும் வகையில், "நீ ஒரு வில்லாளி என்றால், உன்னால் ஏன் இந்த பந்தை வெளியே எடுக்க முடியவில்லை?" என்றார்.

பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில், "வில்வித்தையை வைத்து கிணற்றுக்குள் கிடக்கும் பந்தை எப்படி வெளியே எடுப்பது?" என்றார்கள்.

"பொறுங்கள், செய்து காட்டுகிறேன்" என்ற துரோணர், சற்று உறுதியாக இருந்த ஒரு புல்லை எடுத்து கிணற்றுக்குள் கிடந்த பந்தில் துளைக்கும்படி எய்தினார். தொடர்ந்து புற்களை அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக குத்தி நிற்கும்படி எய்து, ஒரு உறுதியான கம்பு போல உருவாக்கினார். கைக்கு எட்டும் தூரம் வரை எழுப்பிய அந்த புற்தொடரை வெளியே எடுத்து பந்தையும் அப்படியே மேலே வரச்செய்தார். பிள்ளைகள் துரோணரின் இந்த ஆற்றலைப் பார்த்து பிரமித்தார்கள் - இது கிட்டத்தட்ட மாயாஜாலமாகவே அவர்களுக்குத் தெரிந்தது. இந்த வித்தையை தங்களுக்கும் கற்றுத்தர வேண்டினார்கள். மறுத்த துரோணர், தன்னை குருவாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது நடக்கும் என்றார். பிள்ளைகள் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் சென்றனர். பீஷ்மர், துரோணரை பார்த்ததுமே கண்டுகொண்டார் - துரோணர் யார் என்பதை உணர்ந்த பீஷ்மர், அவரது திறனையும் ஆற்றலையும் மெச்சி, அடுத்த தலைமுறைக்கு அரசனை உருவாக்கும் ராஜகுருவாக அமர்த்தினார்.

துரோணரின் கீழ் பயிற்சி துவங்கியது, கூடவே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான போட்டியும். சில ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சியில் அனைவருமே பெரும் வீரர்களாக வளர்ந்தனர். ஈட்டியை கையாள்வதில் யுதிஷ்டிரன் அனைவரிலும் மிகச் சிறந்தவனாக விளங்கினான். தண்டாயுதத்தில் பீமனும் துரியோதனனும் சரிநிகர் சமமாக விளங்கினார்கள். தங்களுக்குள் மோதும் போதெல்லாம் யாருக்குமே வெற்றி கிடைக்காமல், ஒருவரை ஒருவர் வெல்ல முடியாமல் இருவரும் சோர்ந்து விழுவார்கள். வில்வித்தையில் அர்ஜூனன் தனித்து நின்றான். வாள் வித்தையிலும் குதிரையேற்றத்திலும் நகுலனும் சகாதேவனும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தேர்ப்பாகன் மகனின் ஏமாற்றம்

சிறந்த வில்லாளி ஆகவேண்டும் என்று விரும்பிய கர்ணன் துரோணரிடம் சென்றான். ஆனால், தேரோட்டியின் மகன் பிறப்பால் தாழ்ந்தவன் என்று அவமதித்து நிராகரித்தார் துரோணர். இது கர்ணனை ஆழமாக காயப்படுத்தியது. தொடர்ந்த பாரபட்சமும், சந்தித்த அவமானங்களும் நேர்மையான, வெளிப்படையான மனிதனாக இருந்த கர்ணனை மட்டமானவனாக மாற்றியது. தேரோட்டியின் மகன் என்று யார் அழைத்தாலும், அந்த வார்த்தையை கேட்டாலே கர்ணனின் உண்மையான இயல்பு அதற்கு நேர்மாறான எந்த நிலைக்கும் கீழே இறங்கியது. ஷத்ரியன் இல்லை என்று துரோணர் நிராகரிக்கவும், தற்காப்புக் கலைகளை கற்றுத்தருவதில் வல்லவராக இருந்த பரசுராமரிடம் செல்ல முடிவு செய்தான்.

பரசுராமர் பிராமணர்களை மட்டுமே சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பதை கர்ணன் அறிந்திருந்தான். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தானாகவே ஒரு பூணூலை அணிந்துகொண்டு பிராமணன் என்று தன்னை போலியாக காட்டிக்கொண்டான்.

அன்றைய காலகட்டத்தில், தற்காப்புக் கலைகள் என்பது வெறும் கைகளுடன் மோதுவதாக மட்டும் இல்லை. எல்லாவிதமான ஆயுதங்களிலும் பயிற்சி பெறுவதுடன் வில்வித்தைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பரசுராமர் பிராமணர்களை மட்டுமே சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பதை கர்ணன் அறிந்திருந்தான். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தானாகவே ஒரு பூணூலை அணிந்துகொண்டு பிராமணன் என்று தன்னை போலியாக காட்டிக்கொண்டான். சீடனாக ஏற்றுக்கொண்ட பரசுராமர், தான் அறிந்த அனைத்தையும் கற்றுத்தந்தார். கர்ணன் அசாத்திய வேகத்தில் கற்றான். வேறு எந்த சீடனிடமும் இந்தளவுக்கு இயல்பான திறமையும் ஆற்றலும் அவர் கண்டிருக்கவில்லை. கர்ணனின் திறனில்‌ பரசுராமர் பெரிதும் மனம் மகிழ்ந்தார்.

பரசுராமர் ஏற்கனவே தனது முதுமைப்பருவத்தில் இருந்த சமயம் அது. ஒருநாள் இருவரும் காட்டிற்குள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பரசுராமர் சோர்வாகவும், மயக்கமாகவும் உணர்ந்தார். கர்ணனிடம் தாம் சற்று கீழே படுக்க வேண்டும் என்றார். பரசுராமர் தனது மடி மீது தலை வைத்துக்கொள்ள ஏதுவாக கர்ணனும் தரையில் அமர்ந்தான், பரசுராமர் அப்படியே கண்ணயர்ந்தார். கர்ணனின் மடிமீது ஊர்ந்து ஏறிய இரத்தம் உறிஞ்சும் பூச்சி ஒன்று கர்ணனின் தொடையை கடித்து ரத்தம் உறிஞ்ச துவங்கியது. ரத்தம் வடிந்து கடும் வேதனையை கொடுத்தாலும், தன் குருவின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாதபடி அந்த பூச்சியை அகற்ற முடியாத நிலையில் கர்ணன் இருந்தான். தனது குருவின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கர்ணனுக்கு விருப்பமில்லை. வடிந்த ரத்தம் மெதுவாக தன் காதுகளை அடைந்ததால் ஏற்பட்ட உணர்வில் கண் விழித்தார் பரசுராமர். கண் விழித்தவர் தன்மீது ரத்தம் சொட்டுவதை கண்டார். "யாருடைய ரத்தம் இது?" என்று கேட்டார்."என்னுடையது" என்று மறுமொழி தந்தான் கர்ணன்.

கர்ணனின் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்த்த பரசுராமர், ரத்தம் குடிக்கும் பூச்சி ஆழமாக காயப்படுத்தியிருந்த போதும் அசைவின்றி அப்படியே அமர்ந்திருந்த தன் சீடனை பார்த்தார், "நீ நிச்சயமாக பிராமணனாக இருக்க முடியாது - இருந்திருந்தால் கதறியிருப்பாய். இந்த வலியை தாங்கிக் கொண்டு சிறு முணகலோ, அசைவோ இல்லாமல் இருக்கவேண்டும் என்றால் நீ ஷத்ரியனாகத்தான் இருக்கமுடியும்" என்றார். கர்ணன், "உண்மை, நான் பிராமணன் இல்லை, தயவுசெய்து என் மீது கோபம் கொள்ளாதீர்கள்" என்று வேண்டினான்.

சினம் கொண்ட பரசுராமர், "முட்டாளே, ஒரு நூலை அணிந்து கொண்டு வந்து என்னை ஏமாற்றி அப்படியே என்னிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தாயா? உன்னை சபிக்க போகிறேன்."

கர்ணன் இறைஞ்சினான், "தயவு செய்து இதை கேளுங்கள் - நான் பிராமணன் இல்லைதான், ஆனால் நான் ஷத்ரியன் இல்லை, நான் தேர்ப்பாகனின் மகன். எனவே நான் சொன்னதில் பாதிதான் பொய்" என்றான்.

புகழுக்கு ஏக்கம்

கர்ணன் சொல்வதை காதிலேயே வாங்கவில்லை பரசுராமர். அந்த சூழ்நிலையை பார்த்ததுமே கர்ணன் ஒரு ஷத்ரியன் என்பதை சரியாக அனுமானித்து விட்டார். "நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நான் கற்றுக்கொடுத்த வித்தைகளை நீ அனுபவிக்கலாம், ஆனால் தக்க சமயத்தில், உண்மையிலேயே உனக்கு தேவைப்படும்போது இதை பயன்படுத்த தேவையான மந்திரத்தை நீ மறந்துவிடுவாய், அதுவே உனக்கு முடிவை தரும்" என்றார். காலில் விழுந்து கதறினான் கர்ணன், "தயவு செய்து அப்படிச் செய்துவிடாதீர்கள். நான் ஷத்ரியன் இல்லை. உங்களை ஏமாற்றும் நோக்கமே எனக்கு இல்லை. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பில் இருந்த எனக்கு யாருமே கற்றுத்தர விரும்பவில்லை. ஷத்ரியன் அல்லாத ஒருவனை கற்றுக்கொள்ள அனுமதிப்பவர் நீங்கள் ஒருவர்தான்"

சற்றே கோபம் குறைந்த பரசுராமர், "ஆனாலும் நீ பொய் பேசிவிட்டாய். உன் சூழ்நிலையை நீ என்னிடம் விளக்கியிருக்க வேண்டும். என்னுடன் வாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் நீ என்னிடம் பொய் பேசியிருக்கக்கூடாது. என்னால் சாபத்தை திரும்பப் பெற முடியாது, ஆனால் உனது ஏக்கம் வில்வித்தையிலோ, இராஜ்ஜியத்திலோ, அதிகாரத்திற்கோ இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது - உனது ஏக்கம் புகழுக்காக மட்டுமே, அதை நீ அடைவாய். மக்கள் உன்னை எப்போதுமே புகழ்பெற்ற வீரனாக நினைவில் வைத்திருப்பார்கள், ஆனால் உனக்கென அதிகாரமோ, இராஜ்ஜியமோ இருக்காது, மாபெரும் வில்லாளியாகவும் நீ அறியப்பட மாட்டாய். ஆனால் உனது புகழ் எப்போதுமே நிலைத்திருக்கும், இதற்காகத்தானே நீ ஏங்குகிறாய்" என்றார்.

சாபம் பெற்ற கர்ணன் கால்போன போக்கில் திரிந்தான். தான் விரும்பிய பயிற்சி கிடைத்ததே என்ற உவகை இருந்தாலும், தனது திறமை நிறைவை தந்தாலும் - அதை எங்கே வெளிக்காட்டுவது? போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் ஷத்ரியனாக இருந்தால்தானே கலந்துகொள்ளவே முடியும்? கண்ணைக் கட்டிக்கொண்டு இலக்கை துல்லியமாக அம்பெய்து வீழ்த்தும் திறமை இருந்தாலும், அதை வெளிக்காட்ட முடியாமல் தவித்தான். புகழுக்கு ஏங்கிய கர்ணனுக்கு அது மறுக்கப்பட்டது. மனம் சோர்ந்து தென்கிழக்கு திசையாக நடந்த கர்ணன், இன்றைய ஒடிசா மாநிலத்தின் கொனார்க் அருகிலுள்ள கடற்கரையை அடைந்து ஓரிடத்தில் அமர்ந்தான். சூரியனின் அருளை சிறப்பாக உள்வாங்கிக்கொள்ள ஏதுவானது அந்தப் பகுதி.

இரட்டை சாபம்

தனது தவத்தை துவங்கிய கர்ணன், நாட்கணக்கில் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்திருந்தான். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை, ஆனாலும் தொடர்ந்து தியானம் செய்தான். பசி அதிகமாகும்போது கடற்கரையில் ஊர்ந்த சில நண்டுகளை பிடித்து உண்ணத் துவங்கினான். இது உடலுக்கு ஊட்டமளித்தாலும், கூடவே பசியையும் அதிகரித்தது. அப்படியும் தனது சாதனாவை தொடர்ந்தான் கர்ணன். சில வாரங்களுக்குப் பிறகு, மற்ற அனைத்தையும் விட பசியே பிரதானமாக இருந்தது. அந்த சமயத்தில், புதருக்குள் ஏதோ ஒரு விலங்கு அசைவது தெரிந்தது. அது மானாக இருக்கும் என நினைத்தக் கணத்தில் வில்லை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அம்பை எய்தான். அம்பு விலங்கை வீழ்த்திய ஒலியை கேட்டு தனது பசியை மான்கறி தீர்க்கப்போகிறது என்ற கற்பனையுடன் புதரை அடைந்த கர்ணன் அதிர்ந்தான். அங்கே விழுந்து கிடந்தது ஒரு பசு. ஒரு ஆரியன் செய்யக்கூடிய பெருங்கொடுமையாக பசுவதை கருதப்பட்டது. வேதனையுடன் பசுவை பார்த்த கர்ணனின் கண்களை தனது கனிவு ததும்பும் மென்மையான கண்களால் பார்த்த பசு தன் கண்களை மூடியது.

கலங்கிப்போனான் கர்ணன் - என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அப்போது அங்கே வந்த ஒரு பிராமணன் இறந்து கிடந்த பசுவை பார்த்ததும் புலம்பத் துவங்கினான். "எனது பசுவை நீ கொன்று விட்டாயே, இதற்கான சாபம் உனக்கு ஏற்படட்டும். நீ ஒரு போர்வீரனைப் போல இருக்கிறாய், எனவே போர்க்களத்தில் உனக்கு அவசியம் ஏற்படும்போது, தக்க சமயத்தில் உனது ரதம் ஆழமாக புதையுண்டு போகும். ரதத்தை மீட்கவும் முடியாமல், உதவியும் இன்றி தவிக்கும் நிலையில், இந்த உதவியற்ற பசுவுக்கு ஏற்பட்ட அதே முடிவு உனக்கும் ஏற்படும்." பிராமணனின் வார்த்தைகளை கேட்ட கர்ணன் காலில் விழுந்து கெஞ்சினான், "தயவு காட்டுங்கள் - கடும் பசியில் இருந்தேன். அது பசு என்பதும் தெரியவில்லை. உங்களுக்கு வேண்டுமானால் இந்த பசுவிற்கு பதிலாக நூறு பசுக்களை வழங்கிவிடுகிறேன்." பிராமணன், "என்னைப் பொறுத்தவரை இந்தப் பசு ஒரு விலங்கு அல்ல. மற்ற எல்லாவற்றையும்விட என் அன்புக்குரியவளாக இருந்தாள். தனித்துவமான ஒன்றிற்கு பதிலாக வேறு ஒன்றை தருகிறேன் என்று பேசுவதே, என்னை உனக்கு மேலும் சாபமிட வைக்கிறது" என்றான்.

இப்படி இரட்டை சாபங்களை பெற்ற கர்ணன் எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தான். தூசியிலும் சிறு தூசியைக்கூட அம்பால் துளைக்கும் அளவு ஆற்றல் அவனிடம் இருந்தது, ஆனால் என்ன பயன்? ஷத்ரியனாக இல்லையே - போர்க்களம் ஒருபுறம் இருக்கட்டும், எந்த போட்டியிலும் கலந்துகொள்வதற்கே யாரும் அனுமதிக்கவில்லையே. எந்த இலக்குமின்றி மனம் போனபடி தொடர்ந்து நடந்தான் கர்ணன்.

தொடரும்...