கேள்வியாளர்: தொன்றுதொட்டு இந்தியாவில், சுப தினங்களில் விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று பல இந்தியர்கள் இதை அறிவியலுக்குப் புறம்பானது என்றும், காரண அறிவுக்கு உட்படாதது என்றும் நம்புகின்றனர். இப்போது, விரதத்தின்போது, உடலானது தன்னைத்தானே உணவாக்கிக்கொள்ளத் தூண்டப்படுவதைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் விரதம் அனுஷ்டிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு: நான் இது குறித்து நாற்பது வருடங்களாகப் பேசிவருகிறேன். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் ஆரோக்கியத்தோடும், நலமாகவும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே நிரம்பி வழியும் வயிற்றில், எப்போதும் உணவைத் திணித்துக்கொண்டே இருப்பதில்லை. ஈஷா யோக மையத்தில் அனைவரும் காலை பத்து மணிக்கும், பின்னர் இரவு ஏழு மணிக்கும் உணவருந்துகின்றனர். எங்களது வாழ்வியலில், உடல் அதிக செயல்பாட்டில் இருக்கிறது. ஆசிரமத்திற்குள்ளே வாகனங்கள் கிடையாது என்பதுடன், அது பெரும் பரப்பளவில் இருப்பதால், ஒவ்வொருவரும் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்கின்றனர் அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் உணவுக் கூடத்துக்கு செல்ல வேண்டுமென்றால் கூட ஒரு கிலோமீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். வேலை பார்க்கும் இடத்துக்குச் செல்ல விரும்பினால் அரை கிலோமீட்டரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்லவேண்டும். எனவே இங்கு அனைவரும் எல்லா நேரங்களிலும் உடல்ரீதியாக செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். மாலை 3:30 - 4:00 மணிக்கெல்லாம் அனைவருக்கும் பசிக்கத் தொடங்கிவிடும். ஆனால் அதோடு நாங்கள் வாழப் பழகியுள்ளோம். ஏனெனில், காலி வயிற்றுடன் இருப்பது நல்ல விஷயம்.

குறிப்பிட்ட இடைவெளியில் விரதம் இருப்பதின் நன்மைகள் (Benefits of Intermittent Fasting in Tamil)

சிறிது கால இடைவெளிகளில் விரதம் என்பது ஒரு புதிய சொற்றொடர். யோக விஞ்ஞானத்தில் அனுபவப்பூர்வமாக நாம் அறிந்திருந்தவைகளின் வழியில்தான் இன்றைய நவீன விஞ்ஞானமும் வந்துகொண்டு இருக்கிறது. உங்கள் வயிறு காலியாய் இருக்கும் போதுதான் உடலும் மூளையும் அதன் முழுத் திறனுக்கு செயல்படுகிறது. நாம் எப்போது உணவு உண்டாலும் அடுத்த இரண்டு அல்லது இரண்டரை மணிநேரத்துக்குள் வயிறு காலியாகி விடுவதை உறுதிப்படுத்துமாறு உண்கிறோம். உடலுக்கு ஏதாவது சீர்திருத்தமோ அல்லது சுத்தப்படுத்துதலோ நிகழத் தேவைப்பட்டால் உங்கள் வயிறு காலியாக இருப்பது அவசியம். இது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், உயிரணுவின் நிலையில் நிகழும் சுத்திகரிப்பு நிகழாது. இதேவிதமாக, நீங்கள் பல விஷயங்களை சேர்த்துக்கொண்டே சென்றால், பிறகு எல்லாவிதமான பிரச்சனைகளும் உங்களுக்கு உருவாகும். இதன் முதல் படியாக, உங்களது உடலில் மந்தத்தன்மை அதிகரிக்கும். மந்தத்தன்மையில் பல நிலைகள் உள்ளன. ஆனால் தூக்கம் அதிகரிப்பதை நீங்கள் கவனிக்க முடியும். உங்களுக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவுதான் மந்தத்தன்மை என்பது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்கள் வயிறு காலியாய் இருக்கும் போதுதான் உடலும் மூளையும் அதன் முழுத் திறனுக்கு செயல்படுகிறது.

எல்லா அமெரிக்க மருத்துவர்களும், நீங்கள் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படியென்றால், உங்கள் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை நீங்கள் தூங்கியே கழித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். மற்றும் காலைக் கடன்கள், சாப்பிடுவது போன்ற பல விஷயங்களுக்கும் மூன்று முதல் நான்கு மணிநேரம் செலவழிக்கப்படுவதில், உள்ளபடியே உங்களது வாழ்நாளின் ஐம்பது சதவிகிதத்தை பராமரிப்புக்கே செலவிடுகிறீர்கள். உங்களிடம் ஒரு கார் அல்லது இரு சக்கர மோட்டார் வாகனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது மாதத்தில் ஒருநாள் பழுது நீக்குவதற்குச் சென்றால் அதை வைத்திருப்பது உபயோகமானது. ஆனால் மாதத்தில் பதினைந்து நாட்கள் அது பழுது நீக்குவதற்குச் சென்றால், இது தொந்தரவுதானே? பெரும்பாலான மக்களும் அவர்களது உடலை ஒரு தொந்தரவாகத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அவர்களது உடலே அவர்களுடைய வாழ்வில் பெரிய தடையாக இருக்கிறது. அவர்கள் செய்ய விரும்பும் செயல்களைச் செய்வதற்கு, அவர்களுடைய உடம்பு அனுமதிக்காது.

இதற்குப் பல அம்சங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், மக்கள் தாங்கள் சாப்பிட வேண்டிய அளவைக் காட்டிலும் மிக மிக அதிகமாக உண்கின்றனர். ஏனெனில், "நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும், இல்லையெனில் உடல் பலவீனமாகிவிடும்," என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் குறைந்த எரிபொருளில் அதிகத் திறன் கொண்ட காரை உற்பத்தி செய்வதை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனுடைய பொருள் என்னவென்றால், ஒரு இயந்திரமானது உராய்வில்லாமல் சுலபமாக செயல்பட்டால், அது குறைவான எரிபொருளை எடுத்துக்கொள்ளும். நீங்கள் இங்கே அமர்ந்துகொண்டு, மிகவும் இலகுவான தன்மையில் இருக்கிறீர்கள் என்றால், இப்போது உங்களுடைய உடல் குறைந்த அளவு எரிபொருளையே எடுத்துக்கொள்ளும். நீங்கள் இலகுவாக இல்லையென்றால், அப்போது உங்கள் உடல் அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும். நீங்கள் சாப்பிட வேண்டும் என்று அது விரும்புவதுடன், சாப்பிடும் செயலானது நிர்ப்பந்தமாக மாறிவிடும்.

விரதத்தின் செயல்முறை

நீங்கள் முப்பது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என்று ஒரு நாளில் இரண்டு சரிவிகித உணவு போதுமானது. நீங்கள் மாலை உணவருந்திய பின் மூன்று மணிநேரம் கழித்துதான் தூங்கச் செல்லவேண்டும். இதனுடன் குறைந்தபட்சம் 20-30 நிமிடங்களுக்கு எளிமையான நடைப் பயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சி மேற்கொண்டால் உங்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் ஆரோக்கியத்தை உருவாக்கும் விதத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த உயிரணுக்கள் அனைத்தும் ஆரோக்கியத்துக்காக, கடினமாக உழைக்கின்றன, உங்களைத் தவிர.

யோக முறையில் ஒரு உணவிற்கும் அடுத்த உணவிற்கும் குறைந்தது எட்டு மணிநேர இடைவெளி இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதைப் பின்பற்றினால், உங்களுக்கு இருக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும், ஆறு வார காலத்தில், குறைந்தது ஐம்பது சதவிகித அளவுக்கு மறைந்துவிடும். நீங்கள் சிறிது யோகப் பயிற்சி செய்பவராகவும், உள்நிலையில் சிறிதளவு தியானத்தன்மையும் கொண்டவராக இருந்தால் உங்களின் தொண்ணூறு சதவிகித பிரச்சனைகள் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள். பத்து சதவிகிதம் குணமடையாமல் இருந்தால், அதற்கு நம்மால் சிகிச்சை செய்துகொள்ள முடியும்.

அமெரிக்காவில் நமது நிகழ்ச்சிகளுக்கு மக்கள் எவ்வாறு வருகின்றார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டும். நமது நிகழ்ச்சிகள் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரம் நடக்கும். எனவே அவர்கள் ரொட்டி மற்றும் பிறபொருட்களைக் கொண்டுவருவார்கள். "எனக்கு சர்க்கரை நோய் உண்டு, எனவே நான் சாப்பிட வேண்டும்" என்று கூறுவார்கள். நான் அவர்களுக்கு சொல்வேன், "நீங்கள் இங்கே வெறுமனே அமர்ந்திருங்கள், நீங்கள் ஒன்றும் இறந்துவிடப் போவதில்லை” நான் அதை நிச்சயமாக உறுதி அளிப்பேன், ஏனெனில் என் கரங்களில் எவரும் இறந்துபோவதில் எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் முதல் நாளில், "இல்லை இல்லை நான் உண்ண வேண்டும்" என்று கூறுவார்கள். மூன்றாவது நாளில் அவை அனைத்தையும் விட்டுவிட்டு பன்னிரண்டு மணிநேரம் கூட உணவு இல்லாமல் அமர்ந்திருப்பார்கள். மேலும் நல்ல உடல் நிலையுடன் இருப்பார்கள்.

ஆரோக்கியம் என்பது வெளியிலிருந்து நீங்கள் செய்யக்கூடிய ஒன்று அல்ல. ஆரோக்கியம் உங்களுக்குள் இருந்து, நீங்கள் செயல்படுத்த வேண்டிய ஒன்று. ஏதாவது தவறாகப் போகும்போது வெளிச்சூழலில் இருந்து நீங்கள் உதவி தேடிக்கொள்ள முடியும். ஆனால் உங்களுக்கு எப்போதும் ஏதாவது தவறாகிக்கொண்டே இருந்தால், நீங்கள் பழுதான ஒரு கருவி என்பதுதான் பொருள். இப்போது மருத்துவ முறைகள் இப்படித்தான் ஆகிவிட்டன. குறிப்பாக பெரும்காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கும் இடங்களில் – மக்கள் எல்லாவிதமான குப்பைகளையும் சாப்பிட்டு, அருந்திவிட்டு, பிறகு மருத்துவரிடம் சென்று, "என்னைச் சரிசெய்யுங்கள்!" என்று கூறுகின்றனர். இது அவ்வாறு செயல்படாது. உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் ஆரோக்கியத்தை உருவாக்கும் விதத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த உயிரணுக்கள் அனைத்தும் ஆரோக்கியத்துக்காக, கடினமாக உழைக்கின்றன, உங்களைத் தவிர.

 

ஆசிரியர் குறிப்பு: விரதம் இருக்கும்போது நெல்லிக்காயின் உபயோகம் குறித்து படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.