பொருளடக்கம்

1. தீபாவளி என்றால் என்ன, அது ஏன் தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது?
2. தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?
3. தீபாவளியின் முக்கியத்துவம்
4. வாழ்வே ஒரு கொண்டாட்டமாக
5. கவலையில்லாமல் ஆனால் முழு ஈடுபாட்டுடன்

தீபாவளி என்றால் என்ன, அது ஏன் தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது?

சத்குரு: தீபாவளி என்றால், ‘ஒளிகளின் திருவிழா’ என்று அர்த்தம். ஒளி என்பது ஏன் மனித வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் ஒரு காரணம் நம் கண்கள் அமைந்துள்ள விதம் தான். மற்ற உயிரினங்களுக்கு, ஒளி என்றால் உயிர் வாழ தேவையான ஒன்று. ஆனால் மனிதனுக்கு, ஒளி என்பது, நாம் என்ன பார்க்கிறோம், பார்க்கவில்லை என்பதைப் பற்றியதாய் மட்டும் இல்லை, நம் வாழ்வில் வெளிச்சம் உதிக்கிறது என்று நாம் சொல்லும்போது, புதுத் தொடக்கத்தைக் குறிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேல், தெளிவு பிறக்கிறது என்று அதற்கு அர்த்தம். பல உயிரினங்களும் தன் இச்சையாய் வாழ்கின்றன அதனால், அவைகளுக்கு எந்தவித குழப்பமும் இல்லை, என்ன செய்ய வேண்டும், அல்லது செய்யக் கூடாதென்று. ஒரு இளம் புலி உட்கார்ந்து கொண்டு தன்னைத்தானே கேட்டுக்கொள்வதில்லை, "நான் ஒரு நல்ல புலி ஆவேனா, அல்லது ஒரு பூனை ஆகிவிடுவேனா" என்று. அது நன்றாக உண்டால், அது ஒரு நல்ல புலியாகிவிடும்.

தீபாவளி, மந்தத்தன்மையை வீழ்த்தும் ஒருநாள். மந்தத்தன்மைதான் நரகத்தின் மூலம். நமக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால் நீங்கள் நரகத்திற்குச் செல்லமாட்டீர்கள், நீங்களே நரகமாவீர்கள்.

நீங்கள் ஒரு மனிதனாகப் பிறந்திருக்கலாம், ஆனால் ஒரு நல்ல மனிதனாக, நீங்கள் பலவற்றை செய்ய வேண்டும். அப்போதும் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரிவதில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால், வேறொருவரைவிட நீங்கள் மேலென நினைக்கலாம். ஆனால் தனிமையில் நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என்று தெரியாது. மனித அறிவானது, அதை சரியாக சீரமைக்கவில்லை என்றால், அது பெருத்த குழப்பத்தையும் துன்பத்தையும் விளைவிக்கும், உங்களை விட மில்லியனில் ஒரு பகுதி மூளையுடைய பிராணிகளை விட - அவை தெள்ளத்தெளிவாக இருக்கின்றன. ஒரு மண் புழுவோ, பூச்சியோ என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று தானாகத் தெரிந்துகொள்கின்றன, ஒரு மனிதனுக்கு இது தெரியாது. குழப்பம் அடைவதற்கும் ஓரளவு அறிவு தேவை. மனிதனின் போராட்டத்திற்கு நமது மூளையின் பேராற்றலே காரணம்.

பெரும் சாத்தியமாக இருப்பதற்குப் பதிலாக, அறிவுத்திறன் நம்மில் பலருக்கு பிரச்சனை ஆகிவிட்டது. தாங்கள் படும் அல்லல்களுக்கு மனஅழுத்தம், பதற்றம், கிறுக்குத்தனம், வேதனை எனப் பல பெயர்கள் கொடுத்தாலும், அடிப்படையில் பார்த்தால், அவர்களுடைய அறிவே அவர்களுக்கு எதிராய் திரும்பிவிடுகிறது. நீங்கள் தனிமையில் எவரும் உங்களை சீண்டாமல் வேதனை அடைந்தால், உங்களின் அறிவுத்திறன் உங்களுக்கு எதிராக வேலை செய்கிறது என்று பொருள். இது மனித இருப்பின் இயல்பு என்பதால், தெளிவு மிக முக்கியமானது. அதனால்தான் ஒளி முக்கியமானதாகிறது. ஒளி என்றால் தெளிவு. நம்மில் உள்ள கலக்கத்தை தெளிவிப்பதனாலும், இந்த பண்டிகை தெளிவுக்கே அர்ப்பணிக்கப்பட்டதாலும் தீபாவளி முக்கியமானதாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?

தீ பா வளி கொ ண்டா ட்டம், Deepavali in Tamil

‘கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்’ என்று வரலாறு இதனைச் சொல்கிறது. நரகாசுரன் என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல, ஆனால், அவன் அனைவருக்கும் நரகத்தை அனுபவமாய் வழங்கியதால் நரகாசுரன் என்று அழைக்கப்பட்டான். நரக அனுபவத்தை கிருஷ்ணன் முடிவுக்குக் கொண்டு வந்ததால், மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றிக் கொண்டாடினர். 

நரகாசுரன் சம்பவம் புதிதுதான் என்கிறார்கள். ஆனால், வருடத்தின் இப்பகுதியில் விளக்கேற்றும் கலாச்சாரம் 12, 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வருடத்தின் இந்தச் சமயத்தில் வாழ்வில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படுவதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். நீங்களே ஒரு பட்டாசு போல வெடிப்பாய், துடிப்பாய் வாழாவிட்டால், குறைந்தது உங்களைச் சுற்றி வெடிக்கும் பட்டாசுகளாவது உங்களைச் சற்று விழிக்கச் செய்யட்டும். இந்த வழக்கத்திற்குப் பின்னுள்ள நோக்கம் இதுதான். இந்தியாவில், நரக சதுர்தசி வரும் காலத்தில், காலை 4 மணியில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கத் துவங்கும். அனைவரும் எழுகின்றனர், உயிர்ப்புடன் உள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையின் இயல்பு இது. ஆனால், இதன் முக்கிய அம்சம், மந்தத்தன்மையை விரட்டுவதுதான். வாழ்வென்பது நேரம் மற்றும் சக்தியின் விளையாட்டுதான். உங்களிடம் குறிப்பிட்ட அளவு நேரமும் குறிப்பிட்ட அளவு சக்தியும் இருக்கிறது. நேரத்தைப் பொருத்தவரை, நீங்கள் பிஸியாக இருந்தால் அது கடந்தோடிவிடும். நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அது கடந்தோடிவிடும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது கடந்தோடிவிடும். நீங்கள் நோயுற்று இருந்தால் அது கடந்தோடிவிடும். நம் அனைவருக்கும் நேரம் ஒரே வேகத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. யாரும் அதன் வேகத்தை மட்டுப்படுத்த முடியாது, யாரும் அதனை வேகப்படுத்த முடியாது. நீங்கள் பேரானந்தமாய் இருந்தால், 24 மணிநேரம் ஒரு கணம்போல் கடந்துபோகும். நீங்கள் மனச்சோர்வில் இருந்தால், 24 மணிநேரம் ஒரு யுகம்போல் கடக்கும்.

சந்தோஷமாய் இருந்தால் வாழ்க்கை சுருக்கமாய் இருக்கும். மனிதனுக்குள் இருக்கும் ஆற்றலைத் திறமையாய் செயல்படுத்தினால், அவன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் அது கணப்பொழுதில் ஓடிவிடும். ஆனால், உங்களுக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால், நீங்கள் நொந்துபோன மனிதராய் இருந்தால், நேரம் மெல்லவே நகரும். வேதனையான மனிதர்கள் வாழும் சமூகத்தில், கேளிக்கைகளுக்கான தேவை பல்கிப் பெருகும். சந்தோஷமாய் வாழும் மக்கள் இருந்தால், பொழுதுபோக்குகளுக்கான தேவை இருக்காது. உங்களுடைய எல்லா நேரத்தையும் சந்தோஷம் எடுத்துக்கொள்ளும். நீங்கள் சந்தோஷமாய் இருந்தால், உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள். எதையும் தவிர்க்க மாட்டீர்கள். நீங்கள் சோகமாய் இருந்தால், அனைத்தையும் தவிர்ப்பது எப்படி என்பதிலேயே உங்கள் கவனம் இருக்கும்.

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டதா! நன்றி கடவுளே” என வேண்டும் கலாச்சாரம் வேகமாய் வளர்ந்து வருகிறது. அதற்கு என்ன அர்த்தம்? 5 நாட்கள் வேதனை. இரண்டு நாட்கள் சந்தோஷம் அல்ல, போதைப் பொருட்கள். ஆடிப்பாடி, சிரித்து, சந்தோஷமாய் ஏதோ ஒன்றைச் செய்ய மக்களை போதையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம், ஒரு டம்ளர் மதுபானம் தேவையிருக்கிறது. பல்வேறு விதங்களில் நமக்குள் மந்தத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டதால்தான் இப்படி ஆகிவிட்டது. நமக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால், நேரம் கடந்து செல்லாது. வாழ்க்கை நீளும். தீபாவளி, மந்தத்தன்மையை வீழ்த்தும் ஒருநாள். மந்தத்தன்மைதான் நரகத்தின் மூலம். நமக்குள் மந்தத்தன்மை புகுந்துவிட்டால் நீங்கள் நரகத்திற்குச் செல்லமாட்டீர்கள், நீங்களே நரகமாவீர்கள். கோபத்திலும், பொறாமையிலும், வெறுப்பிலும், பயத்திலும் நீங்கள் இந்த நரகத்தை உருவாக்கி நரகாசுரனாகிறீர்கள். இவைகளை எடுத்துவிட்டால், ஒரு புதிய ஒளி ஒளிரும்.

தீபாவளியின் முக்கியத்துவம்

தீ பா வளி கொ ண்டா ட்டம், Deepavali Celebration

தீபாவளி அன்று, ஒவ்வொரு நகரமும், கிராமமும், ஊரும் எல்லா இடங்களும், ஆயிரக்கணக்கான தீபங்களால் ஒளிர்கின்றன. ஆனால் இந்த கொண்டாட்டம் வெளியில் தீபங்கள் ஏற்றுவது மட்டும் அல்ல, உள்நிலையிலும் வெளிச்சம் வரவேண்டும். வெளிச்சம் என்றால் தெளிவு. தெளிவு இல்லாமல் உங்களின் எல்லா குணாதிசயங்களும் உங்களுக்கு பாதகமாக முடியும், வரம் அல்ல, ஏனென்றால் தெளிவு இல்லாத தன்னம்பிக்கை ஓர் பேராபத்து. இன்றைய காலகட்டத்தில் அதிகமான செயல்கள் தெளிவின்றியே செயல்படுத்தப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு புதிய போலீஸ்காரர் தனது அனுபவமிக்க துணையுடன் ஒரு நகரத்தின் வழியாக முதல்முறையாக வாகனம் ஓட்டினார். அவர்களுக்கு வானொலியில் ஒரு செய்தி வந்தது, அதில் ஒரு குறிப்பிட்ட தெருவில் ஒரு கும்பல் நடமாடுவதாகவும், அவர்களை கலைக்கும்படி கேட்கப்பட்டது. அவர்கள் தெருவுக்குச் சென்று, ஒரு மூலையில் ஒரு குழு நிற்பதைக் கண்டார்கள். கார் அருகில் வந்ததும், புதிய போலீஸ்காரர் மிகுந்த உற்சாகத்துடன் தனது ஜன்னலை கீழே இறக்கிவிட்டு, “ஏய், நீங்கள் அனைவரும், அந்த மூலையில் இருந்து கலைந்துபோங்கள்!” குழு குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது. பிறகு சத்தமாக கத்தினார், “நான் சொன்னது கேட்கவில்லையா? அந்த மூலையில் இருந்து போக சொன்னேன்!” அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பிறகு, தனது முதல் உத்தியோகபூர்வ பணியைச் செய்யும்போது மக்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் மகிழ்ச்சியடைந்த அவர், தனது அனுபவமிக்க துணையைப் பார்த்து, "நான் நன்றாகச் செய்தேனா?" என்று கேட்டார். அவரது கூட்டாளி, "அது ஒரு பஸ் ஸ்டாப் என்பதால் மோசமாக இல்லை" என்றார்.

தேவையான தெளிவு இல்லாமல், நீங்கள் எதைச் செய்ய முயன்றாலும் அது பேரழிவாகவே இருக்கும். ஒளி உங்கள் பார்வைக்கு தெளிவைக் கொண்டுவருகிறது - உடல் உணர்வில் மட்டுமல்ல. நீங்கள் வாழ்க்கையை எவ்வளவு தெளிவாகப் பார்க்கிறீர்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உணர்கிறீர்கள் என்பது உங்கள் வாழ்க்கையை எவ்வளவு புத்திசாலித்தனமாக நடத்துகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. இருண்ட சக்திகள் அழிக்கப்பட்டு வெளிச்சம் ஏற்பட்ட நாள் தீபாவளி. மனித வாழ்வின் இக்கட்டான நிலையும் இதுதான். இருண்ட வளிமண்டலத்தில் அடைகாக்கும் கருமேகங்களைப் போல, சூரியனைத் தடுப்பதை உணராமல், ஒரு மனிதன் எங்கிருந்தும் எந்த ஒளியையும் கொண்டுவர வேண்டியதில்லை. தனக்குள்ளேயே திரள அனுமதித்த கருமேகங்களை அவர் கலைத்துவிட்டால் வெளிச்சம் ஏற்படும். தீபத் திருவிழா அதை நினைவூட்டுவதுதான்.

வாழ்வே ஒரு கொண்டாட்டமாக

தீ பா வளி கொ ண்டா ட்டம், Deepavali Celebration

இந்திய கலாச்சாரத்தில், ஒரு காலத்தில் வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாக இருந்தது - 365 பண்டிகை ஒரு வருடத்தில். இதன்பின் இருந்த நோக்கம் என்னவென்றால், வாழ்க்கை முழுவதையுமே ஒரு கொண்டாட்டமாக ஆக்குவதுதான். இன்று முப்பது, நாற்பது பண்டிகைகள் எஞ்சி இருக்கின்றன. அதைக்கூட நம்மால் கொண்டாட முடிவதில்லை, நாம் தினம் வேலைக்குச் செல்வதனால், அல்லது ஏதோ ஒன்று தினம் செய்வதனால். அதனால் மக்கள் வருடத்திற்கு எட்டு அல்லது பத்து பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள். நாம் இதை இப்படியே விட்டால், அடுத்த தலைமுறையினர் கொண்டாடுவதற்கு எதுவும் இருக்காது. பண்டிகை என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சம்பாதிப்பார்கள், சாப்பிடுவார்கள், சம்பாதிப்பார்கள், சாப்பிடுவார்கள் - அவர்கள் இதை மட்டும் செய்து போய்க்கொண்டே இருப்பார்கள். இது ஏற்கனவே பலருக்கு இவ்வாறு ஆகிவிட்டது.

பண்டிகை என்றால் உங்களுக்கு விடுமுறை கொடுக்கிறார்கள், நீங்கள் எழுவதே மதியம் தான். பின் நீங்கள் மேலும் சாப்பிட்டுவிட்டு, ஏதாவது திரைப்படத்துக்கு செல்கிறீர்கள், அல்லது வீட்டில் தொலைக்காட்சி பார்க்கிறீர்கள். மேலும் சில வெளிப்புற ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால்தான் இவர்கள் கொஞ்சம் ஆடுவார்கள். இல்லையென்றால் இவர்கள் ஆடவோ, பாடவோ மாட்டார்கள். இது முன்பு இவ்வாறாக இல்லை. ஒரு பண்டிகை என்றால், ஊரே ஓரிடத்தில் ஒன்று கூடி பெரிய விதத்தில் கொண்டாடியது. பண்டிகை என்றால் நாம் அதிகாலை நான்கு மணிக்கு எழுவோம், வீடெங்கிலும் அதி ஆர்வமாக நிறைய விஷயங்கள் நடக்கும். இந்த கலாச்சாரத்தை மீண்டும் கொண்டுவர, ஈஷா நான்கு முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறது: பொங்கல் அல்லது மகர சங்கராந்தி, மஹாசிவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி.

கவலையில்லாமல் ஆனால் முழு ஈடுபாட்டுடன்

தீபாவளி கொண்டாட்டம், Deepavali Celebration, தீபாவளி பட்டாசு, Deepavali Crackers

நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாட்டமாக அணுகினால், வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல், ஆனால் முழு ஈடுபாட்டுடன் இருக்க கற்றுக்கொள்கிறீர்கள். இப்போது பலரின் பிரச்சனை என்னவென்றால், ஏதாவது முக்கியமானதாக உணர்ந்தால், அவர்கள் அது குறித்து வெகு விறைப்பாக ஆகின்றனர். அவர்கள் அது அவ்வளவு முக்கியமில்லை என்று கருதினால், உடனே தளர்வாகிவிடுவார்கள் - தேவையான ஈடுபாட்டுடன் இருக்கமாட்டார்கள். 

யாரோ ஒருவர் "அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்" என்றால் அவருடைய அடுத்த படி எங்கே என்று உங்களுக்குத் தெரியும். மக்களில் பலர் இந்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒன்றுதான் நடக்கும். மற்றவை கடந்துபோகும், ஏனென்றால் அவர்கள் முக்கியம் என்று நினைக்காதவற்றுடன் ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் இருக்க முடிவதில்லை. அதுதான் முழு பிரச்சனையும். வாழ்க்கையின் ரகசியம் இதுதான் - எல்லாவற்றையும் ஒரு கவலையற்ற கண்ணோடு, ஆனால் முழு ஈடுபாட்டுடன் - ஒரு விளையாட்டைப் போல பார்ப்பதுதான். இக்காரணத்தால் தான், வாழ்வின் மிக ஆழமான அம்சங்கள் ஒரு கொண்டாட்டமாக அணுகப்படுகின்றன, நீங்கள் புரிதலை தவறவிட்டுவிடாமல் இருக்க. தீபாவளியின் நோக்கம் இந்த கொண்டாட்டத்தை உங்கள் வாழ்விற்குள் கொண்டுவருவது தான்.