அர்த்தநாரீஸ்வரர் - சிவன் பாதி பெண்ணாக மாறியது ஏன்?
சிவனின் எண்ணற்ற வடிவங்களில் அர்த்தநாரீஸ்வரரே மிகவும் தனித்துவமானவர். அர்த்தநாரீஸ்வரரின் அடையாளத்திற்குப் பின்னால் உள்ள புராணம், அறிவியல் மற்றும் யதார்த்தத்தைப் பார்த்து, சிவன் ஏன் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறார் என்பதை சத்குரு விளக்குகிறார்.
சத்குரு: பொதுவாக சிவன் இணையில்லாத (நிகரற்ற) ஆண் என்று குறிப்பிடப்படுகிறார், அவர் இணையில்லாத ஆண்மையின் அடையாளமாக இருக்கிறார், ஆனால் சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில், ஒரு பாதி முழு வளர்ச்சியடைந்த பெண். அதன் கதை என்னவென்றால், சிவபெருமான் பரவச நிலையில் இருந்ததால், பார்வதி அவர்பால் ஈர்க்கப்பட்டார். பார்வதி அவரைக் கவர பல காரியங்களைச் செய்து, எல்லாவிதமான உதவிகளையும் நாடிய பிறகு, அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் திருமணமானவுடன், இயற்கையாகவே, சிவன் அவரது அனுபவத்தைப் பார்வதியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.அர்த்தநாரீஸ்வரர் கதை (Arthanareeswarar Story in Tamil)
பார்வதி அவரிடம், “உங்களுக்குள் நீங்கள் அனுபவிக்கும் இந்த நிலையை நானும் அனுபவிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? கூறுங்கள், எந்த விதமான கடினமான செயலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார். சிவன் சிரித்துக்கொண்டே, “நீ பெரிய சாதனா எதுவும் செய்யத் தேவையில்லை. நீ இங்கு வந்து என் மடியில் உட்கார்” என்றார். பார்வதி அதை ஏற்று, அவரின் இடது மடியில் அமர்ந்தாள். அவள் முழு விருப்பத்துடன் இருந்ததால், தன்னை முழுவதுமாக அவரின் கைகளில் ஒப்படைத்தாள், அவர் அப்படியே அவளை உள்ளே இழுத்தவுடன் அவரில் பாதியாக மாறினாள்.
அர்த்தநாரீஸ்வரர் கதையின் உள் அர்த்தம்
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அவர் தனது சொந்த உடலில் அவளுக்கு இடமளிக்க வேண்டும் என்றால், அவர் தன் பாதியை இழக்க வேண்டும். அதனால் தன் பாதியை உதறிவிட்டு அவளையும் சேர்த்துக்கொண்டார். இது தான் அர்த்தநாரீஸ்வரரின் கதை. இது அடிப்படையில் உங்களுக்குள் ஆண்பால் மற்றும் பெண்பால் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறது. அவளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதும் அவர் பரவசமடைந்தார். சொல்லப்படுவது என்னவெனில், உள்நிலையில் ஆண்மையும் பெண்மையும் சந்தித்தால், நீங்கள் நிரந்தரமான பரவச நிலையில் இருக்க முடியும். நீங்கள் அதை வெளியில் செய்ய முயற்சித்தால், அது ஒருபோதும் நீடிக்காது, அதனால் வரும் அனைத்து பிரச்சனைகளும் ஒரு முடிவில்லா நாடகம்.
முழுமையான (பூரண முழுமை அடைந்த) ஆணும் பெண்ணும்
அடிப்படையில், இது இரண்டு பேர் சந்திக்க ஏங்குவது அல்ல, சந்திக்க விரும்புவது வாழ்க்கையின் இரு பரிமாணங்கள் - வெளியிலும் உள்ளேயும். அது உள்ளே அடைந்தால், வெளியே நூறு சதவீதம் விருப்பப்படி நடக்கும். உள்ளுக்குள் சாதிக்காவிட்டால், வெளியில் பயங்கரமான நிர்ப்பந்தம் ஏற்படும். இதுதான் வாழ்க்கை முறை. சிவன் அவளைத் தன் பாகமாக சேர்த்துக்கொண்டு பாதிப் பெண்ணாகவும் பாதி ஆணாகவும் ஆனார்.
உச்சபட்ச நிலையில் நீங்கள் பரிணாம வளர்ச்சியடைந்தால், நீங்கள் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருப்பீர்கள் - ஒரு திருநங்கை அல்ல - ஒரு முழு அளவிலான ஆணாகவும், ஒரு முழுமையான பெண்ணாகவும் இருப்பீர்கள் என்பதைக் காட்ட இது ஒரு அடையாளமாகும். அப்போதுதான் நீங்கள் முழுமையான மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் முழுமையடையாத வளர்ச்சியல்ல, நீங்கள் ஆண்பால் அல்லது பெண்பால் மட்டுமல்ல, இந்த இரண்டையும் வளர அனுமதித்திருக்கிறீர்கள். ஆண் அல்லது பெண் என்று அர்த்தமல்ல. "பெண்பால்" மற்றும் "ஆண்பால்" என்பது சில குணங்கள். இந்த இரண்டு குணங்களும் உள்ளுக்குள் சமநிலையில் நிகழும்போதுதான், ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கையை வாழமுடியும்.
புருஷா மற்றும் ப்ரக்ருதி
படைப்பின் அடையாளமாக அர்த்தநாரீஸ்வரரின் கதையை நீங்கள் பார்த்தால், இந்த இரண்டு பரிமாணங்களும் - சிவன் மற்றும் பார்வதி அல்லது சிவன் மற்றும் சக்தி - புருஷன் மற்றும் ப்ரக்ருதி என்று அறியப்படுகின்றன. "புருஷ்" என்ற வார்த்தை இன்று பொதுவாக "மனிதன்" என்று புரிந்துகொள்ளப்படுகிறது, ஆனால் அதன் அர்த்தம் அதுவல்ல. ப்ரக்ருதி என்றால் "இயற்கை" அல்லது "படைப்பு". புருஷ் என்பது படைப்பின் ஆதாரம். படைப்பின் ஆதாரம் இருந்தது, படைப்பு நடந்தது, அது படைப்பின் மூலத்துடன் சரியாக பொருந்தியது. இருப்பு தொடக்க நிலையில், சிருஷ்டி நிலையில் இல்லாதபோது, அது ஒடிந்து திடீரென்று சிருஷ்டியாக மாறியது. அது புருஷன் என்று குறிப்பிடப்படுகிறது. மனிதன் பிறந்தாலும், எறும்பு பிறந்தாலும், பிரபஞ்சம் பிறந்தாலும் அது ஒரே விதமாகதான் நடக்கிறது. மனித புரிதலின் அடிப்படையில், இது ஆண் அல்லது ஆண்பால் என்று குறிப்பிடப்படுகிறது.
மொத்த மக்கள்தொகையும் ஒரு மனிதனின் ஒரே செயலால், உடலுறவு காரணமாக நடந்தது, இல்லையா? அது பெரிய செயல் அல்ல. இது எந்த வகையிலும் நடக்கலாம். இது பொறுப்பற்ற முறையில், அலட்சியமாக, வலுக்கட்டாயமாக, கோபத்தில், வெறுப்பில் நிகழலாம் - அது அழகாக நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. எப்படி செய்தாலும் மக்கள்தொகை வளரும். ஆனால் கருவறையில் நடப்பது ஏதோ ஒரு வகையில் நடக்கக்கூடாது. இது மிகவும் ஒழுங்காகவும் அழகாகவும் நடக்க வேண்டும், இல்லையெனில் அது வேலை செய்யாது. தவறாக நடந்தாலோ அல்லது வன்முறையாக நடந்தாலோ வாழ்க்கை நடக்காது.
எனவே, இந்த அடிப்படை செயல்முறையைப் பார்க்கும்போது, உருவாக்கம் என்பது ஏதோ ஒரு செயல் போல உள்ளது. அது புருஷா என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இதை ஏற்றுக்கொண்டு மெதுவாக வாழ்க்கையாக பரிணாமம் அடைவது ப்ரக்ருதி அல்லது இயற்கை என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இயற்கையானது பெண்ணாகக் குறிப்பிடப்படுகிறது.
சமூகத்தில் பெண்மை
இன்று சமூகமும் பெண்களும் கூட பெண்ணின் இயல்பை பலவீனம் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பொருளாதாரம் உலகின் முக்கிய சக்தியாக மாறியதால் பெண்கள் ஆண்களைப் போல இருக்க முயற்சிக்கின்றனர். எல்லாம் காடுகளின் சட்டத்திற்கு திரும்பியுள்ளது - தகுதியானவர்கள் மட்டுமே பிழைப்பார்கள். அதைச் செய்தவுடன் ஆண்மை ஆதிக்கம் செலுத்தும். அன்பு, இரக்கம் மற்றும் வாழ்க்கையுடன் பிணைந்து இருப்பதைக் காட்டிலும் எல்லாவற்றிலும் வெற்றியடைய வேண்டும் என்ற சக்தியை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.
நீங்கள் பார்க்கலாம், உங்களிடம் ஆண்மை இருந்தால், உங்களிடம் எல்லாம் இருக்கும், ஆனாலும் உங்களிடம் எதுவும் இருக்காது. ஒரு சமூகத்தில் பெண்மையை உணர்வுபூர்வமாக வளர்ப்பதும் கொண்டாடுவதும் மிகவும் அவசியம். இது பள்ளியில் இருந்தே நடக்க வேண்டும். குழந்தைகள் இசை, கலை, தத்துவம், இலக்கியம் போன்றவற்றிலும், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஈடுபட வேண்டும். இது நடக்கவில்லை என்றால் உலகில் பெண்மைக்கு இடமே இருக்காது.
நம் வாழ்க்கை அமைப்பில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் எவ்வாறு சமமான பாத்திரங்களை வகிக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கவில்லை என்றால், நாம் மிகவும் முழுமையற்ற, சமமற்ற வாழ்க்கையை வாழ்வோம்.
கேள்வி: கோவலன் கண்ணகி கதையில் காவேரிப்பூம்பட்டினத்தில் இரண்டு பெரிய குளங்கள் - சோமகுண்டம் சூரியகுண்டம் இருந்தது என்று 1800 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் உள்ளது என்று இளங்கோ அடிகள் அவரது நூலில் சொல்லியிருப்பார். கண்ணகி கணவரை பிரிந்து இருந்த நேரத்தில் அவளின் தோழி சொன்னது அந்த இரண்டு குண்டங்களில் நீராடி மன்மதனை வழிபட்டால் பிரிந்த கணவனை அடைந்துவிடலாம் என்று. ஆனால் அதற்கு கண்ணகி ஒத்துக்கொள்ளவில்லை. அந்த குளங்கள் இப்போது நாகப்பட்டினம் கடற்கரை அருகில் உள்ள திருவெண்காட்டில் உள்ளது. சந்திர குண்டம் சூரிய குண்டம் அக்னி குண்டம் எல்லாமே அங்கு உள்ளது. இங்கேயும் நான் பார்த்தேன் ஒரு சூரியகுண்டம் சந்திரகுண்டம் மற்றும் நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதன் தத்துவம் என்ன?
சத்குரு: அடிப்படையாக யோகத்தில் உடல் என்பது மூன்று தன்மைகள் கொண்டு ஏற்பட்டுள்ளதாக சொல்வதுண்டு – சூரியன், சந்திரன், பூமி என்ற இந்த மூன்று தன்மையினால் தான் இந்த உடல் நடக்கிறது. சூரியனுடைய சுழற்சி தோராயமாக 12¼ வருடத்திற்கு ஒருமுறை சுற்றை நிறைவு செய்கிறது. அது நமது உடலில் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் அதை கவனிப்பதில்லை, அவ்வளவுதான்.
கொஞ்சம் கவனித்து பார்த்தால் 12¼ வருடத்திற்கு ஒருமுறை ஒரு சுழற்சியின் போது ஒரு மாற்றம் நடக்கிறது. யோகப் பயிற்சியில் இருப்பவர்கள் கட்டாயமாக இந்த மாற்றங்களை உணர்வார்கள். சந்திரனின் சுழற்சி நம் தாயின் உடலில் நடந்ததால் தான் நாம் பிறந்தோம், இது நடக்கவில்லை என்றால், நாம் பிறந்திருக்கவே மாட்டோம். இப்படி இரண்டு சுழற்சிகள் நடப்பதால்தான், இதற்கு ஒரு பக்கம் ஈடா, மற்றொரு பக்கம் பிங்களா என்று சொல்கிறோம்.
அர்த்தநாரி என்றும் சொல்வதுண்டு - இது ஒரு பக்கம் ஆண் தன்மை ஒரு பக்கம் பெண் தன்மை. இது ஆண் பெண் இல்லை. இந்த ரெண்டு தன்மையும் சேர்ந்துதான் நம் உடல் இப்படி நடக்கிறது. எதற்கு இந்த அர்த்தநாரி என்ற ஒரு கோடு? கொஞ்சம் கவனமாக இந்த கோட்டினை போட்டுக்கொள்ளவில்லை என்றால், அது ஒரு குழப்பத்தைக் கொண்டு வரும். நம் மனதில் ஒரு 6 மாதம், நான் பெண் தன்மை, நான் பெண் தன்மை என்று நினைக்க ஆரம்பித்தால், பெண்ணாக ஆகிவிடுவீர்கள். இப்போது உலகம் முழுவதிலும் இந்த பிரச்சனை நடக்கிறது.
ஆண் தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. அதை நீங்கள் அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ தள்ளப் பார்த்தீர்கள் என்றால், ஒன்று அந்தப் பக்கம் போய்விடலாம், இல்லை அங்கிருந்து இந்தப் பக்கம் வந்துவிடலாம். அதனால்தான் இந்த இரண்டையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்த அர்த்தநாரி சிவன் என்ன சொல்கிறது என்றால், ஆண் தன்மையை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும், பெண் தன்மையை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்தால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு எது எதுவென்று தெரியாமல் போய்விடும். இது இன்றைய நவீன சமூகத்தில் பெரிதாக வளருகிறது. இது மேலோட்டமான விஞ்ஞானம். விஞ்ஞானபூர்வமா சொல்கிறோம் என்று யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு 6 மாதம் உட்கார்ந்து அப்படியே கற்பனை செய்தால், நான் பெண் நான் பெண் என்று துணி மணியை அப்படி இப்படி கொஞ்சம் மாற்றிக்கொண்டால், அப்படியே ஆகிவிடும்.
நாம் ஒரு உறுதியான கோட்டை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கவில்லை என்றால், இரண்டும் கலந்து போய்விடும். இதனால் பலவிதமான பாதிப்புகள் உருவாகும். இப்போது உடலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். மனதை மாற்றிக்கொள்வது சுலபமா? உடலை மாற்றிக்கொள்வது சுலபமா? மனத்தில் எண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
யாரும் ஒரு முழுமையான ஆண் இல்லை, யாரும் ஒரு முழுமையான பெண் இல்லை. அந்த இடைவெளியை அப்படி நாம் வைத்தால் தான் - தள்ளி பார்த்தீர்கள் என்றால், எது, எது என்று கொஞ்ச நாளைக்கு புரியாது. இதைதான் அர்த்தநாரி என்று சொல்கிறோம்.
அதற்கு தான் தியானலிங்கம், லிங்கபைரவி. அதை உணர வேண்டும். உள்ளேயே உணரவேண்டும். இதற்காக சூரியகுண்டம் சந்திரகுண்டம். பெண்கள் சந்திரகுண்டத்திலும், ஆண்கள் சூரியகுண்டத்திலும் செல்வார்கள். அது அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தத்துவம் இல்லை, சக்தி - அது பெண் தன்மை, இது ஆண் தன்மை.
ஆசிரியர் குறிப்பு: ‘சிவன் – இயற்கை விதிகளில் அடங்காதவன்’ - இந்த மின்புத்தகமானது சிறந்த கிராபிக்ஸ் மற்றும் சத்குருவின் ஞான முத்துக்களால் நிரப்பப்பட்டுள்ளது. சிவன் என்று அழைக்கப்படும் அம்சத்தைப் பற்றி அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. சிவனை முன் எப்போதும் இல்லாத வகையில் ஆதியோகியாகவும், முதல் யோகியாகவும், யோகத்தின் மூலமாகவும், மேலும் பல நிலைகளிலும் அறிந்துகொள்ள உதவுகிறது. இலவசமாக டவுன்லோடு செய்யுங்கள்.
வைராக்யா உச்சாடனைகள் – இதில் ஐந்து ஆன்மீக உச்சாடனங்கள் அடங்கியுள்ளன. இவை சத்குருவால் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட செயல்முறையுடன் இணைந்து வருகின்றன. ஒவ்வொரு உச்சாடனையும் ஒரு தனித்துவமான தன்மை கொண்டுள்ளது, மேலும் ஒருவரது ஆழ்நிலையை தொடும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ‘சத்குரு App’ ன் ஒரு பகுதியாகவும் கிடைக்கிறது. இலவசமாக டவுன்லோடு செய்யுங்கள்.
Subscribe