கொல்லைப்புற இரகசியம் தொடர்

"இத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த ஒரு எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுது?!" என நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் வசனம் இன்ஸ்டா ரீல்ஸாக பக்கத்தில் கேட்க, உமையாள் பாட்டி செய்யும் எலுமிச்சை ஊறுகாய் என் மனத்திரையில் விரிந்தது. ஊறுகாயை நினைத்ததும் தன்னிச்சையாக நாவூற, பாட்டியின் வீட்டிற்கு வண்டியை முடுக்கினேன்.

வீட்டிற்குள் பாட்டி மும்முரமாக ஏதோ ஒரு பானகம் தயார் செய்வதுபோல் தோன்றியது. நானும் பாட்டிக்கு ஒத்தாசை செய்ய அனுமதி வாங்கி, அப்படியே ஊறுகாய் இருந்தால் அதையும் வாங்கிச் செல்ல வேண்டும் என முடிவுசெய்தேன்.

எலுமிச்சையில இருக்கிற வைட்டமின் C, இரும்புச் சத்தை உட்கிரகிக்கும் தன்மையை மேம்படுத்தி, ரத்தத்தில ஹீமோகுளோபின் அளவப் பராமரிச்சு, இரத்த சோகை வராமல் தடுக்க உதவுது.

"பாட்டி என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்!" பாட்டியின் அருகில் சென்று பவ்யமாக அமர்ந்தேன்.

'நீ ஒத்தாசை எல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம்ப்பா. இத டேஸ்ட் பண்ணிப் பாரு, எப்படி இருக்குனு சொல்லு."

எலுமிச்சை சாறு, Lemon Juice

பாட்டி, தான் செய்த பானகத்தை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். உமையாள் பாட்டி எது செய்தாலும் அது ருசியாகவும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதாகவும்தான் இருக்கும் என்பது ஊருக்கே தெரியுமே! உடனே ஆர்வத்துடன் வாங்கி பானகத்தைச் சுவைத்தேன்.

எலுமிச்சையின் புளிப்பும், நாட்டுச்சக்கரையின் இனிப்பும் கலந்து நாவில் சுவை கூட்டிய அந்த பானகத்தைக் குடித்ததும் உடனடி எனர்ஜி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

"பாட்டி இந்த ஜூஸ் சூப்பர்! என்ன பானகம் பாட்டி இது?"

பாட்டியிடம் கேள்வி கேட்பது என்பது, ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ போன்றது. கேள்வி கேட்க கேட்க அவளிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டே இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்!

"இதுதாம்ப்பா கனிகளின் அரசனான எலுமிச்சையின் சாறும் நாட்டுச்சக்கரையும் சேர்ந்த பானகம். இது, எலுமிச்சைய தோலோட அரைச்சு, வடிகட்டி, சாறெடுத்து, நாட்டு சக்கரை கலந்த பானகம்ப்பா. பொதுவா நாம எலுமிச்சைய பிழிஞ்சிட்டு தோல தூக்கி போட்டிடுறோம். ஆனா எலுமிச்சை தோல்ல அவ்வளவு சத்துகளும் நன்மைகளும் இருக்குதுன்னு நிறைய பேருக்கு தெரியல. எலுமிச்சையை தோலோட அரைச்சு சாறெடுத்து குடிக்கிறதுனால, அதில இருக்கிற அமிலத்தன்மை, நாம வெறும் வயித்துல குடிச்சா கூட பாதிக்கிறதில்ல."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாட்டி எலுமிச்சை பற்றி விவரிக்க ஆரம்பிக்க, மீதமிருந்த பானகத்தை டம்ளரில் ஊற்றிக் குடித்துக்கொண்டே கேட்டேன்.

"சிட்ரஸ் வகை பழமான எலுமிச்சையில சிட்ரிக் அமிலம் நிறைஞ்சிருக்கு. இதுதான் இதோட புளிப்பு சுவைக்கும் புத்துணர்ச்சிக்கும் வாசனைக்கும் காரணம்.”

எலுமிச்சை, Lemon

எலுமிச்சை, Lemon

எலுமிச்சையின் பயன்கள் (Lemon Benefits in Tamil)

மாரடைப்பு வராமல் தடுக்க...

“தினமும் எலுமிச்சம் பழத்தை நாம எடுத்துக்கறது மூலமா மாரடைப்பு வராம பாதுகாத்துக்க முடியும்.

எலுமிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேரவிடாம தடுத்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குது.”

வைட்டமின் C கிடைப்பதால்...

“வைட்டமின் C நிறைஞ்சிருக்கிற எலுமிச்சம் பழத்த தினமும் எடுத்துக்கிட்டா நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகுது; பல் ஈறுகள்ல ஏற்படுற இரத்த கசிவு பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வா இருக்குது.”

புற்றுநோய் வராமல் தடுக்க...

“எலுமிச்சை சாற தினமும் பருகிவரும்போது புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில இருக்கிற லிமோனின் மற்றும் நாரிஜெனின் அப்படிங்கிற வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்கள் வளர்றதுக்கு தூண்டுதலா இருக்குற ஃப்ரீ ரேடிக்கல்ஸ் செல்கள எதிர்த்து போராடுது. இதனால புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை காரணமாக இருக்குது.

இரத்த அழுத்தம் சீராக...

எலுமிச்சையில நிறைஞ்சிருக்கிற பொட்டாசியம் சத்துகள் செரிமானத்த சீராக்குறதோட, ரத்த அழுத்தத்த சீரா வைக்க உதவுது. கூடவே தசை, நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துது.

உடல் எடையைப் பராமரிக்க...

உடல்ல இருக்குற தேவையற்ற கழிவுகள நீக்கி, உடல் எடைய சீரா வைக்கிறதுக்கு, தினமும் எலுமிச்சை சாறு எடுத்துக்கறது உதவுது.

இரத்தசோகை வராமல் தடுக்க...

எலுமிச்சையில இருக்கிற வைட்டமின் C, இரும்புச் சத்தை உட்கிரகிக்கும் தன்மையை மேம்படுத்தி, ரத்தத்தில ஹீமோகுளோபின் அளவப் பராமரிச்சு, இரத்த சோகை வராமல் தடுக்க உதவுது.

எலுமிச்சையின் நன்மைகளை பாட்டி அடுக்கிக் கொண்டே போக, என் மனதில் வந்த ஒரு கேள்வி, பாட்டியை இடைமறித்துக் கேட்கத் தோன்றியது.

"ஆமா பாட்டி, இவ்வளவு நன்மைகள் இருக்கிற இந்த எலுமிச்சம் பழத்தில அழகுக் குறிப்புகள் ஏதாவது இருக்கா?"

அழகுக் குறிப்பு...

"அதானே பார்த்தேன், இன்னும் நீ இந்தக் கேள்விய கேட்காம இருக்குறியேன்னு. உன்னோட அழகுக்கு அழகு சேர்க்கிற விதமா எலுமிச்சையில நிறைய நன்மைகள் இருக்குப்பா!" பாட்டி என்னை கலாய்த்த படியே குறிப்புகளைச் சொன்னாள்.

"எலுமிச்சை சாற தொடர்ந்து குடிச்சிட்டு வர்றதுனால முகத்தில் இருக்கிற கரும்புள்ளிகள் சரியாகி, முகம் பொலிவடையறது மட்டுமில்லாம, முகப்பருக்கள் வராமத் தடுக்குது.

எலுமிச்சை சாற கற்றாழைச் சோறுடன் சேர்த்து குழைச்சு தலைமுடி வேர்க்கால்கள்ல தடவி அரை மணி நேரம் கழிச்சு குளிச்சு வந்தா, தலைமுடி நல்ல உறுதியாகி அடர்த்தி ஆகுறதுக்கும் உதவுது."

பாட்டி எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகளை சொல்லி முடிக்க, எனக்கு இன்னும் சில கேள்விகள் பாக்கி இருந்தன.

"ஆமாம் பாட்டி, இந்த எலுமிச்சம் பழத்த என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் லவ் சக்ஸஸ் ஆகுறதுக்காக மந்திரிச்சு வச்சான் பாட்டி. இதுக்கெல்லாம் இது உதவுதா பாட்டி!"

"உன்னோட லவ் உண்மையா இருந்தா அதுவே சக்ஸஸ் தாம்ப்பா. அதுக்கெல்லாம் எதுக்கு மந்திரிச்சு வைக்கணும். வேணும்னா நாம தேவிக்கு எலுமிச்சை அர்ப்பணிக்கலாம். உலக அமைதிக்காக வேண்டிக்கலாம்ப்பா." பாட்டி சொல்லிக்கொண்டே அடுக்கறை நோக்கி சென்றாள்.

"உலக அமைதிய எல்லாம் நம்ம ட்ரம்ப் அமெரிக்காவில இருந்து பாத்துப்பாரு பாட்டி. எல்லா போரையும் அவர்தான் நிறுத்துறாராம்." நான் சொன்னதும்,

தலையில் செல்லமாகக் குட்டு வைத்து, "இப்போ நீ உலக அரசியலெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா?!" என்று சிரித்துக்கொண்டே பாட்டி சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.

எலுமிச்சை மரம், Lemon Tree

எலுமிச்சையைத் தவிர்க்க வேண்டியவர்கள்:

ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் சிட்ரஸ் வகை பழங்களுக்கு அலர்ஜி உள்ளவர்கள் எலுமிச்சையை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

மருத்துவக் குறிப்புகள்:

Dr.S. சுஜாதா MD(S).,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.