நீங்கள் கப்பல் விபத்தில் சிக்கி, தனித் தீவில் அல்ல, உங்கள் சொந்த தேடலின் பெரும் கடலில் சிக்கியிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ராபின்சன் க்ரூசோ, காலத்தை கணக்கிட குறிகளை போட்டது போல, நாம் பெரும்பாலும் குறிப்பாக ஆன்மீக பயணத்தில் நமது யோகப் பயிற்சிகளை நீண்ட காலம் தொடர்ந்து செய்வதற்கு போராடுகிறோம். ஆனால் முன்னேறுவதற்கான வழி வாழ்நாள் முழுவதும் நீளும் பயணம் இல்லை என்றும் நிகழ்காலத்தில் எடுக்கும் விழிப்புணர்வு கொண்ட ஒரு அடி மட்டுமே என்றால் என்ன ?
இந்த கட்டுரையில், சத்குரு எதிர்காலத்தைப் பற்றிய நமது பற்றை உடைத்து, சாதனாவின் எதிர்பாராத எளிமையை வெளிப்படுத்துகிறார். ஒரு வாழ்நாளின் சுமையை மறந்துவிடுங்கள்; இங்கேயும் இப்போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
கேள்வி: நமஸ்காரம், சத்குரு. ஈஷா யோகாவால் நான் மிகவும் பயனடைந்தேன், ஆனால் எனது பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதிலும், வேலைக்கும் சாதனாவுக்கும் இடையே சமநிலையை கடைபிடிப்பதிலும் போராடி வருகிறேன். என் வாழ்நாள் முழுவதும் எனது பயிற்சிகளை செய்வதை எப்படி உறுதி செய்ய முடியும்?
சத்குரு: நீங்கள் ராபின்சன் குரூசோவைப் போல சிந்திக்கிறீர்கள். ஒரு ஆங்கிலேயரின் கப்பல் விபத்துக்குள்ளாகி, தொலைதூர தீவில் ஏறக்குறைய எதுவுமின்றி தனித்து விடப்பட்ட கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ உங்கள் வாழ்க்கையின் கடைசி நாளிலோ மீட்கப்படுவீர்களா அல்லது ஒருபோதும் மீட்கப்படாமலேயே போவீர்களா என்பது உங்களுக்குத் தெரியாது.
அவர் எவ்வளவு நாட்களாக அங்கே இருந்தார் என்பதை அறிய, வாரங்களை எண்ணத் தொடங்கினார், ஒரு மர துண்டில் கீறல்களை போட்டு குறித்துக்கொண்டார். இப்படி உங்கள் நாட்களை எண்ணாதீர்கள். "நான் என் வாழ்நாள் முழுவதும் சாதனாவை எப்படிச் செய்வது?" சாதனாவை உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டாம் - இன்றைக்கு மட்டும் செய்யுங்கள். இல்லாத விஷயங்களால், உங்களால் ஒருபோதும் கையாள முடியாத விஷயங்களால் ஏன் உங்களை சுமையாக்கிக் கொள்கிறீர்கள்?
நாளையை உங்களால் ஒருபோதும் கையாள முடியுமா? நாளைய உணவை இன்று உண்ண முடியுமா? நாளைய காற்றை இன்று சுவாசிக்க முடியுமா? நாளைய எதையும் இன்று செய்ய முடியுமா? முடியாது. அப்படியானால் ஒருபோதும் செய்ய முடியாத விஷயங்களுக்காக ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? நாளைய சாதனாவை இன்று உங்களால் செய்ய முடியாது - இன்றைய சாதனாவை மட்டுமே செய்ய முடியும்.
அதிர்ஷ்டவசமாக, படைப்பு மிகவும் இரக்க மனப்பான்மையுடையது: நம் வாழ்க்கையில், கையாள இன்று மட்டுமே உள்ளது. ஒரே நேரத்தில் பல நாட்களை நாம் கையாள வேண்டியதில்லை. நாம் திட்டமிடலாம், ஆனால் ஒரு நேரத்தில் ஒரு நாளை மட்டுமே கையாள வேண்டும்.
அப்படியிருக்க, "என் வாழ்நாள் முழுவதும் இதை எப்படி செய்வேன்?" என்று ஏன் கேட்கிறீர்கள்? உங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? இந்த சிந்தனை பல அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் யதார்த்தத்துடன் தொடர்பில்லாதது. நீங்களும் நானும் உட்பட யாருக்கும் நாளை என்பது உறுதி செய்யப்படவில்லை.
இன்றைய சாதனாவை மட்டும் கையாளுங்கள். நாளை நீங்கள் விழித்தெழுந்தால், அதுவும் இன்றுதான்.
ஆப்பிரிக்க பழங்குடியில் ஒரு மருத்துவர் பற்றிய கதை உள்ளது. அவர் முணுமுணுப்பார், குழப்புவார், அப்போது மக்களின் தலைவலி மறைந்துவிடும். ஒருநாள், அவர், "யாருக்காவது மருத்துவம் தேவையா?" என்று கேட்டார்
ஒரு மனிதர், "என் hearing-ற்கு உதவி தேவை" என்றார்
மருத்துவர் அவரை அருகில் வரச்சொன்னார், தனது வலது கையை அவர் தலையில் வைத்து, சிறு விரலை அவர் காதில் வைத்து, பலவிதமான செயல்களைச் செய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, விரலை எடுத்துவிட்டு, "உங்கள் கேட்கும் திறன் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "அடுத்த வியாழக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில்தான் hearing” என்று சொன்னார். அடுத்த வியாழக்கிழமையை இப்போது கையாள முயற்சிக்க வேண்டாம். அடுத்த வியாழக்கிழமைக்கு திட்டமிடலாம், ஆனால் இப்போது அதை கையாள முடியாது. அதேபோல், நேற்றைய நாளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம், ஏனெனில் உங்களால் முடியாது. நீங்கள் அதை கவனித்து கற்றுக்கொள்ளலாம், ஆனால் நேற்றை சரிசெய்ய முடியாது.
கவனித்த பிறகு, உங்களிடம் என்ன தவறு உள்ளது என்பதை கண்டறிந்து, இன்று அதை சரிசெய்யலாம். நீங்கள் நேற்றையோ அல்லது நாளையோ சரிசெய்ய முடியாது. வாழ்க்கை எளிமையானது: அது இன்று இந்த க்ஷணத்தில் மட்டுமே. அதை குழப்பமாக்க வேண்டாம்; இதுதான் உங்கள் சாதனா. மிக முக்கியமான சாதனா நிஜத்தில் வாழ்வதுதான்.
நாம் எல்லாவற்றையும் "அசதோமா சத்கமய" என்பதுடன் தொடங்குகிறோம். இது வெறும் மந்திரம் மட்டுமல்ல. அசதோமா சத்கமய என்பது நீங்கள் தொடர்ந்து பொய்மையிலிருந்து மெய்மையை நோக்கி நகர உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் உறுதிமொழி. நேற்றையோ அல்லது நாளையோ பற்றி நீங்கள் துன்பப்படலாம் என்பதே அந்த பொய்மை. இது உங்கள் மனதில் உருவாக்கப்பட்டது, மேலும் அது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
வாழ்க்கை இங்கும் அங்கும் சிறிது ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அசதோமா சத்கமய என்பது உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் யதார்த்தம் என தவறாக புரிந்துகொள்வதன் மூலம் உங்கள் மனதில் பொய்மையை நோக்கி செல்லும்போது அதை உணர்வதற்கான நினைவூட்டல். உண்மையில் அவை யதார்த்தம் அல்ல. யதார்த்தம் இங்கேதான் இருக்கிறது.
நாளைக்காக நாம் திட்டமிடுகிறோம், தயார்படுத்துகிறோம், மற்றும் செய்ய வேண்டியதை செய்கிறோம். சில விஷயங்களை நாம் கையாளுவோம்; சில விஷயங்களை நம்மால் கையாள முடியாமல் போகலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு அதிகமாக விஷயங்களை செய்ய எடுத்துக்கொள்கிறீர்களோ, அதற்கு ஏற்றபடி அதிகமாக கையாளப்படாமல் போகும் விஷயங்களும் இருக்கும். நான் உங்களில் பலரை ஏற்றுக்கொண்டேன்; பல விஷயங்கள் கையாளப்படாமலேயே உள்ளன. ஆனால் நாம் பலவற்றை ஏற்க முடிகிறது என்பது நல்லதுதான்; நாங்கள் அனைத்தையும் கையாள முயற்சிப்பதற்கு பதிலாக, விஷயங்களை எப்படி கையாள்வது என்பதை அவர்களுக்கு காட்டுகிறோம்.
எனவே, இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்: அசத்தோம சத்கமய. நீங்கள் நிஜத்தில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை எப்படி அறிவது? ஒரு எளிய சோதனை இதுதான்: நீங்கள் எரிச்சல், பதற்றம், இனிமையற்ற நிலை, அல்லது துன்பம் போன்ற எந்த நிலையிலும் இருந்தால், நீங்கள் உண்மையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள் என்று பொருள். உங்கள் அனுபவத்தில், நீங்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக, இனிமையாக இருந்தால், நீங்கள் நிஜத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்க்கையுடனும், படைப்புடனும், படைத்தலுடனும் சமநிலையில் இருப்பதே மெய்மை. இன்றிரவே நாம் அனைவரும் இறந்துவிடக்கூடும். நாம் இதை விரும்பவில்லை, இது வருவது தெரிந்தால் தவிர்க்க முயற்சிப்போம், ஆனால் இது ஒரு சாத்தியக்கூறாகவே உள்ளது.
இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்: மரணம் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம். ஒரு பைத்தியக்காரன் லாரியை உங்கள் மீது ஓட்டினாலும், மரம் உங்கள் மீது விழுந்தாலும், மின்னல் உங்களைத் தாக்கினாலும், அல்லது வேறு எது நடந்தாலும், வாழ்க்கை நிச்சயமற்றது, நாம் குறுகிய காலத்திற்கு மட்டுமே இங்கு இருக்கிறோம். வாழ்க்கையை மிகவும் விலைமதிப்பற்றதாக கருதுவதே மிக முக்கியமானது.
வாழ்க்கையின் நீளம் முக்கியம், ஆனால் இறுதியில் அதன் தரமே கணக்கில் கொள்ளப்படுகிறது. நீளம் உங்கள் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்தாது; தரம்தான் மேம்படுத்தும். தரத்தை மேம்படுத்த, நீங்கள் எப்போதும் அசத்தோம சத்கமயாவில் இருக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையை இந்த வழியில் பார்த்தால், ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால் நீங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டால், நீங்கள் புகார்களால் நிறைந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கும் மற்றவர்களின் வாழ்க்கைக்கும் ஒரு தீர்வாக இருப்பீர்கள். நீங்கள் பிரச்சனையாக இல்லாமல், அனைவருக்கும் தீர்வாக இருக்க வேண்டும்.