கலாச்சாரம் மற்றும் ஞானம்

கும்பமேளா: புனித சங்கமத்தின் மாற்றமளிக்கும் சக்தி

மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில், வானியல் இயக்கமும் புவி அமைப்பியலும் இயைந்து அமையும் வேளையில், உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான 2025 மஹாகும்பமேளாவிற்காக லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகின்றனர். - பூமியிலேயே மிக பெரிய சபை. இந்த பழம்பெரும் திருவிழாவின் பின்னணியில் உள்ள நுட்பமான அறிவியலை சத்குரு விளக்குகிறார் - நீர்நிலைகளின் சங்கமத்தை உருமாற்றத்தின் ஊற்றாக மாற்றும் ஒரு விழா.

கேள்வி: சத்குரு, உண்மையில் கும்பமேளா என்பது எதைப் பற்றியது? இது வெறும் பாரம்பரியமா, அல்லது இதன் பின்னணியில் ஆழமான அறிவியலும் முக்கியத்துவமும் உள்ளதா?

உலகின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றுகூடும் கூட்டம்

சத்குரு: கும்பம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "கும்பம்" என்ற சொல் நேரடியாக ஒரு பானை அல்லது குடத்தைக் குறிக்கிறது. இது இந்த கிரகத்தில் உள்ள மிக அற்புதமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று. 2012-ல் நடைபெற்ற கடைசி மஹாகும்பமேளாவின் போது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் என ஒரே நாளில், 40 கோடி (400 மில்லியன்) மக்கள் ஒரே இடத்தில் கூடினர் - எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக நடந்தது. இது நம்பமுடியாத அளவிற்கு, அனேகமாக தானாகவே நிர்வகிக்கப்பட்டது.

கும்பமேளா யோகாவின் அடிப்படை பரிமாணமான பூதசுத்தியில் இருந்து வருகிறது, இதன் பொருள் நமது உடல் அமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை தூய்மைப்படுத்துவதாகும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் - இந்த உடல், கிரகம், சூரிய குடும்பம் மற்றும் அண்டம் என அனைத்தும் பஞ்சபூதங்களின் விளையாட்டுதான். இது படைத்தலின் பின்னுள்ள அசாத்திய அறிவாற்றலைக் காட்டுகிறது. உயிர் பல டிரில்லியன் வடிவங்களை எடுத்துள்ளது - அனைத்தும் வெறும் ஐந்து மூலப்பொருட்களில் இருந்து மட்டுமே.

பஞ்சபூதங்கள் மற்றும் நீரின் முக்கியத்துவம்

இந்த உடலின் பஞ்சபூதங்களின் கலவையானது சுமார் 60% நீர், 12% மண், 6% காற்று, 4% நெருப்பு, மற்றும் மீதமுள்ளவை ஆகாயம். இங்கு ஒருவர் நன்றாக வாழ, நீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இந்த உடல் 60% நீரால் ஆனது, மேலும் பூமியில் 72% நீர் உள்ளது.

நவீன அறிவியல் நீருக்குள் மிகப்பெரிய நினைவாற்றல் இருப்பதை நிரூபித்துள்ளது. நீர் என்பது ஒரு விலைபொருள் அல்ல; அது உயிரை உருவாக்கும் மூலப்பொருள். நீங்கள் குடிக்கும் நீர் மனித உருவத்தை எடுக்கிறது. அதற்கு நினைவாற்றலும் அறிவாற்றலும் உண்டு - நீங்கள் அதை நன்றாக நடத்தினால், அது நன்றாக நடந்துகொள்ளும்; நீங்கள் அதை மோசமாக நடத்தினால், அது மோசமாக நடந்துகொள்ளும்.

புனித இடங்களின் அறிவியல் அடிப்படை

கும்பம், அல்லது குறிப்பிட்ட அட்சரேகைகளில் உள்ள நதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்தும் இந்த விஞ்ஞானம், நம்பிக்கை அல்லது குருட்டு நம்பிக்கையிலிருந்து உருவாகவில்லை. உயிரும் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சக்திகளும் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் நாம் அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை கூர்ந்து கவனித்ததன் விளைவாக இது உருவானது. இதன் அடிப்படையில், பூமத்தியரேகையில் பூஜ்ஜிய டிகிரி அட்சரேகை முதல் 33 டிகிரி அட்சரேகை வரை, கிரகம் தனது சுழற்சியால் உருவாக்கும் மையவிலக்கு விசை பெரும்பாலும் செங்குத்தாக செயல்படுகிறது.

இந்த காரணத்தால், பூஜ்ஜியம் முதல் 33 டிகிரி வரையிலான பகுதி கிரகத்தின் புனித நிலமாக அறியப்பட்டது, ஏனெனில் ஆன்மீக சாதனா இங்கு அதிகபட்ச பலன்களைத் தந்தது. இரண்டு நீர்நிலைகள் குறிப்பிட்ட சக்தியுடன் சங்கமிக்கும் இடங்களில் எல்லாம், நீர் கடைதல் உருவாகிறது. மனித உடல் 60 சதவீதத்திற்கும் மேல் நீரால் ஆனது என்பதால், சூரிய சுழற்சியில் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் போது குறிப்பிட்ட நேரத்தில் இத்தகைய இடத்தில் இருப்பது உடலுக்கு அதிகபட்ச நன்மைகளை அளிக்கிறது.

கும்பமேளாவின் புராண தோற்றம்

யாரோ அமிர்தத்தைப் பெறுவதற்காக கடலைக் கடைந்ததாக கதை இருக்கிறது. ஆரம்பத்தில் விஷம் மேலெழுந்தது, அதை சிவன் குடித்தார், அதனால்தான் அவர் நீல நிறமானார். அந்த விஷம் உடலுக்குள் சென்றிருந்தால், அது அவரைப் பாதித்திருக்கும்; எனவே, அவரது மனைவி விஷத்தை கழுத்திலேயே தடுத்ததால், அவரது கழுத்து நீல நிறமாக மாறியது.

பின்னர் கடைந்ததில் அமிர்தம் கிடைத்தது, அது அழியாமை, அசாதாரண சக்திகள் அல்லது ஞானோதயத்தைத் தரும் என்பதால் அனைவரும் அதைப் பெற முயன்றனர். இந்த கைகலப்பில், அமிர்தம் நான்கு வெவ்வேறு இடங்களில் சிந்தியது. இவைதான் கும்பமேளா நடைபெறும் இடங்களாக - ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக் மற்றும் உஜ்ஜயினி ஆகியவை ஆயின.

பண்டைய காலத்தில், ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கும்பத்தில் தங்கி, தினமும் நீராடி, தகுந்த சாதனாவைச் செய்தால், உங்கள் உடல், உளவியல் கட்டமைப்பு, சக்தி அமைப்பு ஆகியவற்றை மாற்றியமைக்க முடியும் என்றும், முக்கியமாக உங்களுக்குள் பெரும் ஆன்மீக வளர்ச்சியை காணமுடியும் என்றும் மக்கள் புரிந்துகொண்டனர்.

சரியான அணுகுமுறையும் தயார்ப்படுத்துதலும்

இன்று, இது ஒரு விரைவான, அரை நாள் பார்வையிடலாக மாறிவிட்டது, அங்கு நீங்கள் ஒரே ஒரு முறை நீராடுகிறீர்கள். நீங்கள் கும்பமேளாவிற்கு செல்வதானால், 21 நாட்கள் தயார்ப்படுத்தல் சாதனாவுடன் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அங்கு சென்று தங்க வேண்டும் என்று நான் சொல்வேன். காலையில் சூரியன் 30 டிகிரி கோணத்திற்கு மேலே செல்லும் முன் ஒரு முறையும் (காலை 9:00 மணிக்கு முன்) மாலையில் சூரியன் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து 30 டிகிரிக்குக் கீழே சென்ற பிறகு ஒரு முறையும் தினமும் இருமுறை 21 நிமிடங்கள் கால்களை சம்மணம் இட்டு அமரவும்.

விரும்பினால் நீங்கள் கைகளில் முத்திரையை வைத்துக்கொள்ளலாம், ஆனால் அது அவசியமில்லை. ஆஉம் நம ஷிவாய என்ற மஹாமந்திரத்தை சரியாக, முழு ஈடுபாட்டுடன், 21 நிமிடங்கள் உச்சாடனம் செய்ய வேண்டும்.

மனிதர்களின் உள் இயக்கவியல் விஷயத்தில், இந்த கலாச்சாரம் பார்த்ததைப் போல் வேறு எந்த கலாச்சாரமும் இவ்வளவு ஆழமாகப் பார்த்ததில்லை - இதை நான் கலாச்சார பாரபட்சமின்றி கூறுகிறேன்.

கும்பமேளா வெறும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடும் மற்றொரு சடங்காக மாறிவிடக்கூடாது, மாறாக ஒரு உருமாற்ற செயல்முறையாக இருக்க வேண்டும். கும்பமேளா இந்த சாத்தியக்கூறுக்கு உலகை விழிப்படையச் செய்வதில் ஒரு பெரிய படியாக மாறவேண்டும் என்பது எனது விருப்பமும் ஆசீர்வாதமும்.