மனித சக்தி உடலின் சிறந்த வடிவம் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சத்குருவின் கூற்றுப்படி, இது நீள்வட்ட வடிவத்தில் இருக்கும்போது சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், நமது பல பிறவிகளின் பயணத்தில் கர்மவினை தாக்கத்தால், இது சிதைவடைகிறது, மேலும் அதன் விளைவுகள் நமது இருப்பில் அலை அலையாக பரவுகின்றன.
பிரம்மச்சாரிகளுடனான சத்சங்கத்தில், "கர்மப் பிடி" என்று அவர் குறிப்பிடுவதை தளர்த்துவது பற்றிய பார்வைகளை சத்குரு பகிர்ந்துகொண்டார். இன்னும் எளிதான வாழ்க்கை முறையை நோக்கிய இந்த மாற்றமளிக்கும் செயல்முறை குறித்த ஆய்வு இதனை தொடர்கிறது.
கேள்வி: நமஸ்காரம் சத்குரு. ஒருவரின் சக்தி உடல் நீள்வட்ட வடிவில் இருந்தால், அவர் இந்த வாழ்க்கையையும் அதற்கு அப்பாலும் எளிதாக கடந்து செல்வார் என்று நீங்கள் ஒருமுறை கூறினீர்கள். அத்தகைய நிலையை அடைய ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
சத்குரு: பொருள் உடல் நல்ல வடிவத்தை பெறுவதற்கே நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. சிலர் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்கள் அல்லது என்ன சாப்பிடுகிறார்கள், எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்துபவர்கள் அடுக்கடுக்கான தசைகளால் நிரம்பி இருக்கலாம். எனவே, சரியான மனித வடிவத்தை அடைவதற்கே ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
சக்தி உடலானது பல பிறவிகளாக வடிவம் எடுத்ததால் ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பை சந்திக்கிறது. கடந்த பத்து பிறவிகளாக நீங்கள் மனிதனாக இருந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்...
ஒரு எளிமையான, இயல்பான மனிதராக இருப்பதற்கே ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தெரிந்துவைத்துள்ள, ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமான பத்து பேரை நினைத்துப் பாருங்கள். ஒருவர் நல்லமுறையில் வாழும் மிக நல்ல மனிதராகவும், மற்றொருவர் குடிகாரராகவும், இன்னொருவர் திருடனாகவும், மற்றவர்கள் வேறு எதுவாகவோ இருக்கலாம். நீங்கள் பத்து ஜென்மங்களில் இந்த பத்து விதமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் - உங்கள் சக்தி எவ்வளவு அடிவாங்கியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
உடல் எவ்வளவு அடி வாங்கினாலும், அதற்கு ஒரு வாய்ப்பு உண்டு; அது தொடர விரும்பாதபோது, அது இறந்து விழுந்துவிடும். இது உடலுக்கு அனுகூலமானது. நீங்கள் அதை சரியாக நடத்தாவிட்டால், அது சீரழிந்து ஒரு நாள் இறந்து விழுந்துவிடும்.
பொருள் உடலுக்கு பயணத்தை முடித்துக்கொள்ளும் வாய்ப்புண்டு, ஆனால் சக்தி உடலால் முடியாது. அது ஒரு "முட்டாள்" இடமிருந்து மற்றொரு "முட்டாளுக்கு" மட்டுமே நகர முடியும். இந்த செயல்முறையில், நீங்கள் உங்கள் கடந்த பிறவியில் இருந்ததைப் போலவே இருப்பீர்கள் என்று கருத வேண்டாம். அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தால் தவிர, நீங்கள் மிக மிக வித்தியாசமாக இருக்கலாம். எந்த பண்புகளும் ஒத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இப்போது நாம் யாரையாவது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அறிந்திருந்தால், அவர்கள் அடுத்த பிறவியிலும் அப்படியே இருப்பார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கலாம். அவர்களின் அடுத்த பிறவியில், இன்று அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கலாம்.
உங்கள் சக்திகள் தகவல்களின் குவியல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், அவை எளிதாக நீள்வட்ட வடிவத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆகவே, சக்தி உடலானது மிகப் பெரிய அளவிலான தாக்குதல்களை சந்தித்து, அதனை குறிப்பிட்ட வழியில் சிதைக்கும் தகவல்களை சேகரிப்பதன் மூலம், அதன் சொந்த போக்குகளை உருவாக்கிக் கொள்கிறது. அது கட்டுப்பாடாக இல்லாதவாறு அதை கட்டவிழ்க்காவிட்டால், நாம் எதிர்பார்க்கும் நீள்வட்ட வடிவத்தை உங்கள் சக்தி உடல் அடைய முடியாது. உங்கள் சக்திகள் தகவல்களின் குவியல்களால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை எளிதாக நீள்வட்ட வடிவத்தை எடுத்துக் கொள்ளும்.
ஏதாவது ஒன்றைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் விழிப்புணர்வுடனான தகவல்கள் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு மைக்ரோஃபோன் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு சில தகவல்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இப்போது, நீங்கள் ஒரு மைக்ரோஃபோனை அணுகும்போது, அந்த தகவல்களின் கட்டுப்பாடுகளை நினைவில் கொண்டுதான் அணுகுவீர்கள்.
எனக்கு ஒரு தெய்வீக மைக்ரோஃபோன் இருக்கிறது, அல்லது உங்களுக்குத் தெரிந்த மாதிரி வேலை செய்யாத ஒரு புதிய மாதிரி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; உங்களிடம் உள்ள தகவல்கள் அந்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே உங்களை செயல்பட வைக்கும்.
உங்களிடம் தகவல் இல்லாதபோது, அதைச் சேர்த்துக்கொள்வது விடுதலையாக உணரலாம், ஆனால் அது உண்மையில் ஒரு கட்டுப்பாடு. நான் கல்வி அறிவில்லாதவன் என்று சொல்லும்போது, மக்கள் பெரும்பாலும் நான் என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்பதை தவறாக புரிந்துகொள்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், எனக்கு எந்த தகவலும் இல்லாத ஒன்றை நான் பார்க்கும்போது - அது மனிதர்களாகவோ பொருட்களாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் - எல்லாவற்றிற்கும் எனது தீர்வுகள் மிக எளிமையானவை, ஏனெனில் நான் ஏதேனும் ஒன்றை பார்க்கும்போது, எந்த தகவலும் இல்லாமல் பார்க்கிறேன். தகவல்களை மீண்டும் பெற எனக்கு நேரம் எடுக்கிறது.
எவ்வளவு அதிகமாக தகவல்களை சுமக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்கள் உடல் மற்றும் மனதை மட்டுமல்லாமல், உங்கள் கர்ம உடல் மற்றும் சக்தி உடலையும் சிதைக்கக்கூடும். சில தகவல்கள் உங்கள் மனதை குறிப்பிட்ட காலகட்டங்களுக்காவது சிதைத்துள்ளதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். சிலர் ஒரு முழு வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படலாம்.
எவ்வளவு அதிகமாக தகவல்களை சுமக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்கள் உடல் மற்றும் மனதை மட்டுமல்லாமல், உங்கள் கர்ம உடல் மற்றும் சக்தி உடலையும் சிதைக்கக்கூடும்.
இரண்டு பேர் தொடர்ந்து உங்களிடம் வேறொருவரைப் பற்றி எதிர்மறையான விதத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில நாட்களுக்குப் பிறகு, நீங்கள் அந்த நபரைப் பார்க்கும்போது, அவர்களை வித்தியாசமாகப் பார்க்கலாம்; அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை கோணலானதாக இருக்கலாம்.
இப்படி சிலர் உங்கள் மீது அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது. மக்கள் யாரைப் பற்றியாவது உங்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால், நீங்கள் அந்த நபரைப் பார்க்கும்போது, அவர்கள் இருக்கிற விதமாக அவர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் உங்களுக்குக் கொடுத்த தகவல் ஒரு கட்டுப்பாடாக மாறிவிட்டது. அந்த நபர் எப்படி இருக்கிறாரோ அப்படி அவர்களைப் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் மனதில் உள்ள தகவலின் வடிவத்தில்தான் அவர்களைப் பார்ப்பீர்கள்.
உங்கள் உளவியல் கட்டமைப்பு, உங்கள் காரண உடலை அல்லது கர்ம உடலை வடிவமைக்கும் தகவல்களை சிதைக்கிறது. அதற்கேற்ப, உங்கள் உடல் வடிவமைக்கப்படுகிறது. காலப்போக்கில், சக்தி உடல் கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள் கர்மா பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்யும் எதுவும் உங்களைப் பற்றியதாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இது உங்களைப் பற்றியதாக இல்லாதபோது, செயல்பாடு ஒரு சுமையாக உங்களிடம் ஒட்டிக்கொள்வதில்லை. நீங்கள் இன்று இறக்கப்போவது போல் நாள் முழுவதும் வேலை செய்கிறீர்கள். நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, நீங்கள் இறந்துவிட்டது போல் உணர்கிறீர்கள். காலையில் எழும்போது, அது மற்றொரு நாள் - இது உங்களைப் பற்றியது அல்லாததால், தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்.
இது உங்களைப் பற்றியதாக இல்லாதபோது, செயல்பாடு ஒரு சுமையாக உங்களிடம் ஒட்டிக்கொள்வதில்லை.
நீங்கள் செய்வது உங்களைப் பற்றியதாக இருந்து, நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கிறது என்றால், நீங்கள் அதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும், அது தொடர்ந்து உங்கள் மனதில் இருக்கிறது. உங்கள் தூக்கத்திலும் கூட அதைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த முடியாது. மக்கள் தாங்கள் கனவு காண்பதாகச் சொல்லலாம், ஆனால் உண்மையில், அவர்கள் விழிப்பின்றி, முடிவில்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செயல்பாடு இனி உங்களைப் பற்றியதாக இல்லாதபோது, கர்மாவில் ஒரு தளர்வு ஏற்படுகிறது. எல்லாவற்றையும் இறுக்கமாக பிடித்திருந்தது தளர்ந்துவிடுகிறது. சக்தி உடலின் மீதான கர்ம விஷயங்களை நீங்கள் தளர்த்தி, அதற்கு போதுமான நேரம் கொடுத்தால், அது இருக்க வேண்டிய வடிவத்தை மீண்டும் பெறும்.
நீங்கள் எல்லாவற்றையும் இது தான் உங்களின் கடைசி நாள் என்பதைப் போல செய்தால் - தூங்கும்போது இறந்துவிடுகிறீர்கள்; காலையில் விழிக்கும்போது, மற்றொரு நாள் தொடங்குகிறது, அப்போது என்ன செய்வது? ஆனால் இது உங்களைப் பற்றியது அல்ல. இந்த செயல்பாடு உங்களை மேம்படுத்தப் போவதில்லை, அல்லது குறைக்கவும் போவதில்லை. நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் செயல்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், அது நீங்கள் யார் என்பதில் எதையும் சேர்க்காது.
நீங்கள் செய்வது எதுவும் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்காவிட்டால், மற்றும் தேவையானதை செய்தால், கர்மப்பிடி தளர்கிறது.
இன்று, நீங்கள் ஆதியோகியை வடிவமைப்பதில் மும்முரமாக இருக்கலாம்; நாளை, நீங்கள் கழிவறையை சுத்தம் செய்யலாம். இரண்டையும் ஒரே மாதிரியாக செய்கிறீர்கள், ஏனெனில் இது எப்படியும் உங்களைப் பற்றியது அல்ல. நீங்கள் ஆதியோகியை வடிவமைத்தால், நாங்கள் உங்களுக்கு விருது கொடுக்கப் போவதில்லை. நீங்கள் கழிவறையை சுத்தம் செய்தால், நாங்கள் உங்களை விலக்கி வைக்கப் போவதில்லை. இரண்டும் ஒன்றுதான்.
நீங்கள் செய்வது எதுவும் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்காவிட்டால், மற்றும் தேவையானதை செய்தால், கர்மப்பிடி தளர்கிறது. ஒருமுறை தளர்ந்தவுடன், சக்தி உடல் அது இருக்க வேண்டிய வடிவத்திற்கு திரும்புகிறது.