மஹாபாரதம் பகுதி 29: பீமனும் ஜராசந்தனும் மோதுகிறார்கள்
பாண்டவர்கள் சக்கரவர்த்தி பட்டத்திற்கு உயர்வதை தடுப்பதற்காக, நூறு ஷத்ரிய அரசர்களை பலி கொடுக்கும் யாகத்தை திட்டமிடுகிறான் ஜராசந்தன். ஜராசந்தனை தடுக்கும் ஒரே வழி அவனை கொல்வது மட்டுமே. கிருஷ்ணரின் திட்டப்படி, அவருடன் பீமனும், அர்ஜுனனும் பிராமண வேடத்தில் ஜராசந்தனின் மகத தேசம் செல்கிறார்கள்.
கூர்ந்து கவனித்த ஜராசந்தன், அவர்களை எடை போட்டான். அர்ஜுனனின் கரங்களில் ஒரு வில்லாளிக்கு உண்டாகக்கூடிய விதத்தில் காய்ப்பு ஏற்பட்டிருப்பதை பார்த்ததும், "ஒரு வில்லாளியாக உன்னை உன் அங்க அடையாளங்கள் காட்டுகிறது, நீ பிராமணனாக இருக்க முடியாது, சரியா?" என்றவன் அர்ஜுனனின் இரு கரங்களிலும் இதே விதமான காய்ப்பு தழும்புகள் ஏற்பட்டிருந்ததை கவனித்தான்.
அர்ஜுனன் தன் இரு கரங்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி துல்லியமாக அம்பெய்யும் வல்லமையோடு திகழ்ந்தான். இத்தகைய ஆற்றல் வாய்ந்தவன் என்பதை குறிக்கும் விதமாக அர்ஜுனனுக்கு சவ்யசச்சி என்ற பெயர் ஏற்பட்டது. தனது இடது மற்றும் வலது கரங்களை சம ஆற்றலோடு ஒருவரால் பயன்படுத்த முடியும் என்பது போர்க்களத்தில் பெரும் அனுகூலமாக இருந்தது. ஜராசந்தன் அர்ஜுனனை நோக்கி, "நீ இரு கரங்களாலும் அம்பெய்யக் கூடியவனாக இருக்கிறாய். யார் நீ? இப்படிப்பட்ட திறனோடு இன்னொருவன் இருக்கிறான் என்று அர்ஜுனனைத்தான் குறிப்பிடுவார்கள். இதுவரை நான் அவனை சந்தித்ததில்லை, அவனும் நிச்சயமாக இப்படி பிராமணனாக மாறுவேடத்தில் வரமாட்டான். எப்படியோ நீங்கள் என் விருந்தினராக வந்துவிட்டீர்கள்" என்றபடியே முறையான வரவேற்பளித்து தன் அரண்மனையில் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பிறகு, "என்னோடு மல்யுத்தம் செய்ய முடியும் என்று நிச்சயமாக நினைக்கிறீர்களா?" என கேட்டான். ஏனென்றால் ஒரு மல்யுத்த வீரனாக ஈடு இணை இல்லாதவனாக ஜராசந்தன் அறியப்பட்டிருந்தான்.
முடியும் வரை மோதல்
அப்போதைய காலகட்டத்தில் இரு விதமான மல்யுத்த போட்டிகள் வழக்கத்தில் இருந்தன. ஒன்று, விளையாட்டு நோக்கில் நீங்கள் எதிராளியை தரையில் சாய்த்ததுமே போட்டி முடிந்துவிடும். மற்றொரு போட்டியானது, வாழ்வா - மரணமா என்று இருவரும் இறுதி வரை மோதிப் பார்த்து விடுவதாக இருந்தது. இதில் நீங்கள் போட்டி வளையத்திற்குள் எதிராளியை கொன்று வீழ்த்தியிருக்க வேண்டும். எதிராளிக்கு காயமேற்படுத்தி உயிர் பிழைத்திருக்க விடுவது என்பது மிக மோசமாக அவமானப்படுத்தும் செயலாக கருதப்பட்டது. அவனை நீங்கள் கொன்றே ஆகவேண்டும். அவர்கள் இரண்டாவது வித மல்யுத்த போட்டியை கேட்டார்கள் - வாழ்வா சாவா என்று ஜராசந்தனுடன் மோதிப் பார்த்துவிட நினைத்தான் பீமன். இப்போதும் ஜராசந்தன் அவர்களை தன் விருந்தினர்களாக கருதி பெரும் மரியாதையுடனும், சகல வசதிகளுடனும் சிறப்பாக கவனித்தான். சில நாட்களில் இருவருக்கும் இடையேயான மல்யுத்தப் போட்டி துவங்கியது.
Subscribe
ஒவ்வொரு நாளும், பின் மதியப்பொழுதில் இரண்டரை மணிநேரம் அல்லது மூன்று மணி நேரம் பீமனும் ஜராசந்தனும் மோதுவார்கள். இருவரும் சோர்வடைந்து வீழும் வரை போட்டி நடக்கும். பிறகு, இருவரும் அரண்மனைக்கு திரும்பி, உணவு உண்பது, பானங்கள் அருந்துவது என எல்லாமே ஒன்றாக நடக்கும். மீண்டும் அடுத்த நாள் இருவரும் களத்தில் சந்திப்பார்கள். கிருஷ்ணர் பீமனிடம், "இங்கே கவனிப்பு நன்றாகவே இருக்கிறது. நீ ஏன் போட்டியை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கக்கூடாது? நாங்கள் இந்த இடத்தை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். மல்யுத்தப் போட்டி தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. ஒரு நாள் கிருஷ்ணர், "நாம் நம் தேசம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றபடி பீமனை முழு பலத்துடன் போட்டியில் இறங்குமாறு சொன்னார். ஆனால், பீமன் முழு பலத்துடன் மோதினாலும் ஜராசந்தனும் சாதாரணமான ஆளில்லை, அவனும் தனது முழு பலத்தையும் களத்தில் காட்டினான். இருவருக்குமிடையே மோதல் மிகக் கடுமையாக நடந்தது. என்ன செய்தாலும் பீமனால் ஜராசந்தனை கொல்ல முடியவில்லை.
பீமன் வயதில் மிக இளையவனாகவும், வலிமையானாகவும் இருந்தபோதிலும், அவனால் ஜராசந்தனின் உயிரை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து இருபத்தியாறு நாட்களுக்கு அவர்கள் இருவரும் தினமும் மூன்று மணி நேரம் மோதியிருந்தார்கள். அப்போது கிருஷ்ணர், "போதும், நாம் இதோடு இதை முடித்துவிட வேண்டும்" என்றார். மல்யுத்தம் செய்து ஜராசந்தனை கொல்ல முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே தண்டாயுதம் கொண்டு மோதலாம் என்று கேட்டார்கள். பீமன் எப்படித் தாக்கினாலும், ஜராசந்தன் இறக்கவில்லை. அப்படியே மீண்டும் மீண்டும் எழுந்து அமர்ந்தபடி இருந்தான். சற்று வயது மூத்தவனாக இருந்ததால் பீமனை விட சற்று களைப்படைந்திருந்தானே தவிர, ஜராசந்தனால் எப்படிப்பட்ட தாக்குதலையும் தாங்க முடிந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் பீமனிடம், "நாளைய தினம் அமாவாசை. அமாவாசை இரவில் ஜராசந்தன் அதிசய சக்திகளைப் பெறப்போகிறான். அதன் பிறகு அவன் உன்னைக் கொன்றுவிடுவான். அவன் நம்மை நன்றாக கவனித்துக் கொள்வது சும்மா ஒன்றுமில்லை. அவன் தேர்ந்தெடுத்துள்ள அமாவாசை நாள் வரும் வரை நாம் இங்கே இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்போது அவன் நம்மை மிக நன்றாக கவனிக்கிறான். அமாவாசை வந்தால் அவன் வீழ்த்த முடியாதவனாகி விடுவான். அந்த நாளில் அவன் உன்னைக் கொல்வான். நாளைதான் அந்த நாள். இன்று அவனை நீ கொல்லாவிட்டால் நாளை அவன் உன்னைக் கொன்றுவிடுவான்" என்றார்.
இரு கூறாக பிளந்து
பீமன் முழுமையாக தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தினான். ஆனாலும் என்ன செய்தும் ஜராசந்தனை கொல்ல முடியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. பிறகு கிருஷ்ணரைப் பார்த்து, "இவனை என்னதான் செய்வது?" என கேட்டான். கிருஷ்ணர் ஒரு இலையை எடுத்து இரண்டாக கிழித்தார். ஜராசந்தனின் பிறப்பு பற்றி, இரு சதை துண்டுகளாக பிறந்து, பிறகு ஒன்றாக இணைந்த கதையை ஏற்கனவே அறிந்திருந்த பீமனுக்கு, இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பது உடனே தெளிந்தது.
ஜராசந்தனின் இடது காலின் மீது தன் ஒரு காலை ஊன்றி நின்று, அவனை இரண்டாக பிளந்து வீசியெறிந்தான் பீமன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அயர்ந்து போகும் விதமாக, இரு துண்டுகளும் உருண்டு வந்து இணைய, மீண்டும் எழுந்து அமர்ந்தான் ஜராசந்தன். தன் மரணத்தை இனி தவிர்க்க முடியாது என்று நினைத்தான் பீமன். பயம் நிறைந்த கண்களுடன் எதுவும் செய்யத் தெரியாமல் மீண்டும் கிருஷ்ணர் பக்கம் திரும்பினான். கிருஷ்ணர் இன்னொரு இலையை எடுத்தார், கிழித்தார், இரு துண்டுகளையும் எதிரெதிர் திசையில் வீசினார்.
மீண்டும் அடுத்த மோதல் துவங்கியது. இப்போதும் பீமன் என்ன செய்தாலும் ஜராசந்தன் இறக்கவில்லை. பிறகு பீமன் மீண்டும் ஜராசந்தனை இரண்டாக பிளந்து, இந்த முறை இரு பாகங்களையும் எதிரெதிர் திசையில் வீசினான். இப்போதும் இரண்டு பாகங்களும் மீண்டும் உருண்டு வந்து இணைந்து எழுந்து அமர்ந்துவிடுமோ என்று மக்கள் எதிர்பார்ப்புடன் பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. இறுதியில் ஜராசந்தன் இறந்தவனானான்.
ஜராசந்தனின் மகனை அரசனாக மகுடம் சூட்டி, ராஜசுய யாகத்தில் பங்கேற்க அழைத்தார் கிருஷ்ணர். ஜராசந்தன் கைது செய்து சிறையில் அடைத்திருந்த தொன்னூற்றி ஒன்பது அரசர்களையும் அவர்கள் விடுவித்தார்கள். பிறகு அனைவரும் மீண்டும் இந்திரபிரஸ்தம் நோக்கி பயணமானார்கள். தங்களுடன், ஜராசந்தன் வசமிருந்த பெரும் யானைப் படையில் பாதியளவை எடுத்துக்கொண்டு, அதில் ஜராசந்தனின் பாதியளவு தங்கத்தையும், செல்வத்தையும் நிரப்பிக் கொண்டார்கள்.
தொன்னூற்றி ஒன்பது அரசர்கள் மற்றும் பெரும் செல்வத்துடன் அவர்கள் மீண்டும் இந்திரபிரஸ்தத்தை அடைந்தார்கள். இந்திரபிரஸ்த கருவூலத்தில் இவ்வளவு செல்வங்களையும் வைக்க போதுமான இடமில்லாமல் போனது - எனவே ஆங்காங்கே அப்படியே சும்மா குவித்து வைத்தார்கள்.
இப்போது ராஜசுய யாகத்தை துவங்க முடியும்.
தொடரும்...