இதன் தொடர் கட்டுரையான "ஆன்மீக உள்கட்டமைப்பு எதற்காக? பகுதி 2" வாசியுங்கள். இதில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களுக்கான தேவைகள் குறித்து பேசுப்படுகிறது

உலகத்தின் வேறெந்த இடத்திலிருந்தும், இந்த பாரத மண்ணை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு விஷயம் உண்டென்றால், அது அதனுடைய ஆழமான, நீடித்த ஆன்மீக வளம்தான். ஒரு புராதனமான நிலப்பரப்பாகவும், நாகரீகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்களுள் ஒன்றாகவும் இருக்கின்ற இந்தியா, எப்போதும் ஆன்மீகத்தின் ஒரு வாசலாகவே இருந்து வந்துள்ளது. ஒரு மனிதரின் உள்நிலை சாத்தியங்களுக்கு வேறெந்த தேசமும் இந்த அளவுக்கு அதிக கவனம் செலுத்தியிருக்கவில்லை. இதன் காரணமாகவே, உலகெங்கிலுமிருந்தும் ஆன்மீகத் தேடுதல் உடையவர்கள் தங்களின் உச்சபட்ச இயல்பை அடைவதற்கான வழிகளைத் தேடும் நோக்கத்துடன் இங்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

இது ஏன் இப்படி இருக்கிறது? இந்தியாவின் கலாச்சாரப் பண்பில் ஆன்மீகம் ஏன் இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது? கல்வி போன்ற ஒரு அம்சத்தை நீங்கள் பார்த்தாலும்கூட, இருனூறு வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் எண்பத்தியெட்டு சதவிகித மக்கள் தொகையினர் படிப்பறிவில்லாதவர்கள். இப்போது, உலகளாவிய படிப்பறிவற்ற விகிதம் பதினைந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதாக, யுனெஸ்கோ கூறுகிறது. இடையில் என்ன நிகழ்ந்தது? மக்களுக்குப் படிப்பறிவு வழங்குவதற்குத் தேவையான கட்டுமானங்களையும் மனித உள்கட்டமைப்புகளையும் நாம் உருவாக்கினோம்.

அது போலவே, ஆன்மீகத்திற்காக, மக்கள் இந்த மண்ணுக்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக வந்துகொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இங்கு உள்நிலை நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள் மிகப் பெரிய அளவில் ஆராய்ந்தறியப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டன. காலங்காலமாக, எண்ணிலடங்கா முனிவர்களும், துறவிகளும், யோகிகளும், ஞானமடைந்தவர்களும் இங்கு தோன்றியுள்ளனர்.

பிட்சையின் அழகு

ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்களுக்கு உண்டான ஊட்டச்சத்தினை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கலாச்சாரம் புரிந்து வைத்திருக்கிறது. அவர்களுக்குச் சேவை செய்வது ஒரு புனிதமான விஷயம் என்று கருதப்பட்டது. அதுவே ஒரு ஆன்மீகப் பாதையாக இருக்குமளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இறைக் கவிஞர் கபீர் தன் வரிகளால் இதனை எடுத்துக்காட்டுகிறார்:

ஆண்டவா, என் குடும்பம் பசியாறப் போதுமாதை மட்டும் கொடு
எனக்கும் சாதுக்களுக்கும் உணவளிக்கப் போதுமானதை மட்டும் வழங்கிடு!

ஒரு காலகட்டத்தில், ஒரு சாதகருக்கு சமானா பாதையில் செல்வது கடுமையான ஆன்மீக சாதனைகளுள் ஒன்றாக இருந்தது. ஒரு சமானாவாக இருப்பதென்றால், உண்ணா நோன்பிருந்து, நடந்துகொண்டே இருப்பதுதான் முக்கியமான சாதனா. ஒரு சமானா உணவுக்காகக் கையேந்தாமல், நடந்துகொண்டேயிருந்து, யாராவது உணவளித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும். பாரம்பரியம் எப்படி இருந்தது என்றால், கிராமத்தினர் யாரேனும் ஒரு சமானா வருவதை அறிந்தால், துரிதமாக உணவு சமைத்து, சமானாவின் பின்னே ஓடிச் சென்று, அவருக்கு உணவு படைப்பார்கள். இல்லையென்றால், அவர் உணவு கேட்காமல், இறுதிமூச்சு வரை நடந்துகொண்டிருப்பார். கௌதம புத்தர், அவர் ஞானமடைவதற்கு முன், நான்கு வருடங்கள் இந்த சாதனாவில் மனப்பூர்வமாக ஈடுபட்டிருந்தார்.

அரசர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவு

பல காலங்களாக, அரசர்களும், ஆட்சியாளர்களும் பல்வேறு வழிகளில் ஆன்மீக சாதகர்களுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளித்து வந்துள்ளனர். பிரம்மாண்டமான கோவில்கள் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களையும் உருவாக்குவதற்கு நிதி வழங்கியது மட்டுமின்றி, சாதுக்கள் மற்றும் யாத்திரீக வழிப்போக்கர்களுக்கு மடங்கள், சத்திரங்கள், சாவடிகள், தர்மசாலைகள், உணவுச்சாலைகளையும் கூட அவர்கள் கட்டினார்கள். இந்த மண்ணின் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பயணப் பாதையிலும், புனித யாத்திரீகர்களுக்காக உணவு மற்றும் தங்குமிடங்கள் காணப்படுவது வழக்கம். ஆனால் இப்போது, இது பெருமளவு குறைந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக, பிச்சாடனர்கள், வருடந்தோறும் இமயத்திலிருந்து, தெற்குக்கோடியில் இருக்கும் ராமேஸ்வரத்திற்குப் பயணித்துள்ளனர். குளிர்காலம் துவங்கும்போது, அவர்கள் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குவார்கள்: வழியெங்கும் உணவும், தங்குமிடமும் கிடைக்கக்கூடிய ஒரு 3,200 கிலோமீட்டர் நடைப்பயணம். ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தபோதுகூட, காசில்லாத சன்னியாசிகள் ராமேஸ்வரத்திற்கு பயணம் செல்வதற்கு கட்டணமின்றி இரயிலில் அனுமதிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, ஆன்மீக சாதகர்களுக்கு இரயில்வே அதிகாரிகள் பயணச்சீட்டில்லா பயணத்தைத் தடை செய்துவிட்டனர். யாத்திரைக் கலாச்சாரம் ஒருவிதத்தில் உடைந்து போய்விட்டது எனலாம், இது வருத்தற்குரியது.

இருப்பினும், சில பகுதிகளில், கலாச்சாரம் இன்னமும் வலிமையாக இருக்கிறது இமாலயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படும் ஹரித்வாரில் தேசாந்திரி சாதகர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கக்கூடிய ஆசிரமங்கள் இருக்கின்றன. கோவில் நகரங்கள் மற்றும் இமயமலைப் பகுதியின் முக்கியமான இடங்களும்கூட சாதகர்களுக்கு பல சேவைகளையும், உதவிகளையும் வழங்குகின்றன.

சாதகர்களுக்கு அடைக்கலம்

உள்தன்மையின் மலர்ச்சிக்காக, உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டமைத்த ஆன்மீக குருமார்கள் நமது வரலாறு முழுவதிலும் நம்மிடையே வாழ்ந்திருந்தனர். சத்குரு நமக்குக் கூறுகிறார், ”கிருஷ்ணனைப் பற்றி நாம் பேசும் கணமே, அவரது விளையாட்டுத்தனம், அவரது காதல், அவரது குறும்புகள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் அது அவரது வாழ்வின் 16 வயதுவரை மட்டும்தான் இருந்தது. பிற்பாடு கிருஷ்ணர் வடக்குப் பகுதி எங்கும் 1000திற்கும் அதிகமான ஆசிரமங்களை நிறுவியது பலரும் அறியாதது. அந்தக் காலகட்டத்தில் பல துறவிகளை உருவாக்கிய அவரது குரு சாந்திப்பனியின் விருப்பத்திற்கிணங்க இந்த ஆசிரமங்கள் எழுந்தன. கிருஷ்ணனுக்கு அரசர்களிடம் இருந்த செல்வாக்கினால், எந்த அரசரும் அவரை மறுக்கமாட்டார். எனவே சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு கிருஷ்ணர் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். இவைகள் பெரிய கட்டிடங்களாகவோ அல்லது நினைவுச் சின்னங்களாகவோ இல்லை. ஆனால் சாதகராக இருக்கும் யாரோ ஒருவருக்கு ஒரு இடம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான அமைப்புகளாக இருந்தன. ஒருவர் தேடுதலில் இருக்கும்போது, அவர்கள் தாகத்துடன் இருப்பது கூடாது; அவர்கள் செல்வதற்கென்று எப்போதும் ஒரு இடம் இருக்கவேண்டும்.”

கிருஷ்ணரைப் போலவே, கௌதம புத்தரும்கூட ஆன்மீக மலர்ச்சி நிகழ்வதற்காக, உள்கட்டுமானங்களை எழுப்பியவாறு இருந்தார். பல மன்னர்களும், பேரரசர்களும் அவரிடம் சென்றனர், அவர் பல நகரங்களுக்கு அழைக்கப்பட்டார். அவர், ”நான் வருவதை நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு தியானக் கூடமும், ஒரு தோட்டமும் அமைக்கவேண்டும்,” என்றார். இதுவே ஒரு நடைமுறையானதுடன், இந்தியா எங்கிலும் இவைகள் கட்டப்பட்டன. தவிர, பௌத்தம் சீனாவுக்குச் செல்வதற்கு மிகவும் முன்னதாகவே, போதனை வரவேண்டுமென்ற காத்திருப்பில், அவர்கள் ஆயிரக்கணக்கான தியானக் கூடங்களையும், தோட்டங்களையும் அமைத்தனர்.

அதேபோல, ஆதி சங்கராச்சாரியர் கூட, இந்தத் துணைக் கண்டத்தின் நான்கு முக்கியமான திசைகளிலும், நான்கு மடாலயங்களின் கீழ் பல்வேறு மடத்துக்குரிய வழிமுறைகளை நிறுவினார். பல நூற்றாண்டுகளாக, துவாரகா, பூரி, ஸ்ரீங்கேரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் இருக்கும் இவைகள், தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பண்பாட்டினை குறிப்பிடத்தக்க வழியில் ஒன்றாக இணைத்து, பிணைத்து வைத்திருந்தன.

பகுதி இரண்டில், இந்தியாவின் பிரம்மாண்டமான ஆன்மீகப் பாரம்பரியம் குறித்தும் அதற்கு தேவையான கட்டமைப்புகள் குறித்தும், இக்கட்டமைப்புகள் கட்டிடங்களை விட எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பேசப்படுகிறது.