சத்குரு:

ஒரு குழந்தையிடம் திருத்த வேண்டியது என்று எதுவுமே இல்லை. குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் தான் நிச்சயமாக சரி செய்யப்பட வேண்டியவர்கள். படைத்தவர் ஏதோ தப்பு செய்துவிட்டதாகவும், அதை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்றும் ஏனோ நினைக்கிறீர்கள். இப்போது இருக்கும் குழந்தைகள் உங்களைப் போலவே எல்லாவற்றையும் செய்யவில்லை என்றால் இந்த உலகம் மாறப்போகிறது என்று அர்த்தம். அப்படி மாறுவது அற்புதமாக இருக்கும்.

அவர்கள் மிகவும் இயல்பாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள், குதித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். எப்படி நம்பர்-1 ஆக இருப்பது என்று சொல்லி நீங்கள் தான் அவர்களை கெடுக்க முயற்சி செய்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தைகள் மீது எந்த தவறும் இல்லை

தண்டனை கொடுத்து குழந்தைளை மாற்றிவிடலாம் என்று உங்களிடம் யார் சொல்லியிருந்தாலும் - அவர்களுக்கு குழந்தைகளுடன் போதுமான அனுபவம் இல்லை என்றே அர்த்தம். ஒரு குழந்தையைப் பற்றி நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவனிடம் எந்தத் தவறும் இல்லை. ஒருவேளை உங்களின் சிந்தனைதான் சற்று சிக்கலானதாகி இருக்கலாம். உண்மையில் குழந்தைகளிடம் எந்த தவறும் இல்லை.

ஒரு உயிர் அப்படித்தான் இருக்கும். உங்களை நீங்களே நெளித்துக்கொண்டு சமுதாயத்தோடு பொருந்திப்போகிறீர்கள். குழந்தை அப்படி தன்னை நெளித்துக் கொள்ளவில்லை. ஒரு உயிர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது. அது உங்களுக்கு பிடிக்கவில்லை. நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் - உங்களின் குட்டி 'வெர்ஷனை' உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால், அதன் ஒரிஜினலை உலகத்தால் மட்டும் எப்படி சகித்துக்கொள்ள‌ முடியும்?

நீங்கள் அவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்வது சரிதான், ஆனால் அவர்கள் திருத்தப்பட வேண்டிய நிலையில் இல்லை. கல்விக்கூடங்கள் குழந்தைகளை திருத்துவதற்கான மையங்கள் அல்ல. இந்த உலகத்தில் வாழ தேவைப்படுகிறதே என்பதற்காக நாம் மேற்கொள்ளும் முட்டாள்தனம் கல்வி. நீங்கள் அவர்களை காட்டில் விட்டால், உயிர் வாழ அவர்களே எப்படியும் கற்றுக்கொள்வார்கள். ஆனால் நாம் போதுமான அளவு காடுகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் நகரத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அவர்களுக்கு அதற்கான வழிகளை சொல்லித் தருகிறோம். எல்லோருமே இயல்பாக வாழ்ந்தால், சொல்லித் தருவதற்கு எதுவுமே இருக்காது. அவர்கள் எப்படியும் கற்றுக்கொள்வார்கள். பெரியவர்கள் நீங்கள் உருவாக்கியுள்ள செயற்கையான சூழலில் குழந்தைகள் வாழவேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதற்காக அவர்களை கொஞ்சம் கலப்படம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே நாம் அதை முடிந்தளவு மென்மையாகவும் குறைவாகவும் செய்யலாமே. நம்மால் அதை செய்யாமலும் இருக்க முடியாது. அவர்களை பள்ளிக்குள் பொருத்த வேண்டும். யுனிவெர்சிட்டிக்குள் பொருத்த வேண்டும். கார்ப்பரேட் உலகிற்குள் பொருத்த வேண்டும். அது வேறு மாதிரியான உலகம்‌ தெரியுமா? அது சாதாரண உலகமே கிடையாது, அது ஒரு தனி உலகம்.

பொருந்தாத உலகத்தில் குழந்தைகள்

எனவே அவர்களை இந்த உலகத்தைத் தாண்டி வேறொரு உலகத்தில் பொருத்த வேண்டியிருக்கிறது என்பதால் தான் இந்த பிரச்சனை. அவர்கள் இந்த உலகத்தை சேர்ந்தவர்கள்தான். நீங்கள்தான் வேறெங்கிருந்தோ இறக்குமதி ஆனவர், அல்லது அப்படி இறக்குமதியானது போல நடிக்கிறீர்கள். இதனால் தான் பிரச்சனையே. இந்த உயிரைப் பற்றி உங்களிடமிருந்து குழந்தை கற்றுக்கொள்வதை விட குழந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதுதான் நிறைய இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்துவிட்டால், அவர்களுக்கு உங்களால் என்ன சொல்லித் தந்துவிட முடியும்? வேண்டுமானால், பாடப்புத்தகத்தில் இருக்கும் இயற்பியலை, வேதியலை, உயிரியலை சொல்லிக் கொடுப்பீர்கள். இந்த பிரபஞ்சத்தில் இயல்பாக இருக்கும் சக்திகளில் உங்களுக்கு எந்த நேரடி அனுபவமும் இல்லை. புத்தகத்தில் நீங்கள் படித்த ஏதோ முட்டாள்தனம் தான் உங்களுக்கு தெரியும், அது பரீட்சையில் பாஸ் ஆக தேவை. ஏதோ ஒரு வேலையில் சேர்வதற்கும் அது தேவை. ஆனால் குழந்தைகளை திருத்தும் வேலையை உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். "நான் அவர்களை எப்படி திருத்துவது?" அவர்கள் தவறாக இருப்பதாக யார் சொன்னது?

சமுதாயத்தில் எப்படி பொருந்திக் கொள்வது என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு உயிர் இருக்கவேண்டியதை போல கட்டற்று இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் அவர்களை திருத்த வேண்டும் என்று நினைத்தால், படைத்தவர் ஏதோ தவறு செய்திருப்பதாகவும், நீங்கள் போய் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் நம்புகிறீர்கள். இது மோசமான அகங்காரத்தின் வெளிப்பாடு. துரதிருஷ்டவசமாக உலகில் பல ஆசிரியர்கள் இப்படிப்பட்ட அகங்காரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். படைத்தவர் தவறு செய்துவிட்டார், அதை அவர்கள் தான் திருத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் எதையும் திருத்தப் போவதில்லை. அவர்களை கெடுக்க தான் முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் அவர்களை கெடுக்க முயற்சி செய்கிறீர்கள். அது உங்களுக்கு புரிகிறதா? அவர்கள் மிகவும் இயல்பாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள், குதித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். எப்படி நம்பர்-1 ஆக இருப்பது என்று சொல்லி நீங்கள் தான் அவர்களை கெடுக்க முயற்சி செய்கிறீர்கள்.

நம்பர் 1-ஆக இருக்க வேண்டுமா?

நம்பர் 1-ஆக இருப்பது என்றால் என்ன? நம்பர் 1-ஆக இருப்பது என்றால் உங்கள் மனம் நோய்வாய்பட்டிருக்கிறது என்று அர்த்தம். நம்பர் 1-ஆக இருப்பதற்கு அதுதான் அர்த்தம். ஏனென்றால் நீங்கள் நம்பர் 1 -ஆக இருக்க வேண்டுமென்றால் மீதமுள்ள உலகம் முழுவதும் உங்கள் காலடியில் இருக்க வேண்டும். ஒரேயொரு நம்பர் 1 தான் இருக்கிறது! நீங்கள் நம்பர் 1-ஆக இருப்பதென்றால் மற்ற அனைவரும் உங்களுக்கு கீழ் தான் இருக்க வேண்டும். இது வெற்றி அல்ல. இது ஒரு நோய். நீங்கள் உங்கள் குழந்தைக்கு, "நீ நம்பர் 1-ஆக இரு, மற்றவர்கள் உனக்கு கீழ் தான் இருக்க வேண்டும்" என்ற நோயை சொல்லிக் கொடுக்கிறீர்கள்.

எனவே உங்கள் குழந்தையை திருத்த வேண்டும் என்று நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். குழந்தையிடம் திருத்துவதற்கு ஒன்றுமே இல்லை. குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது. சமுதாயத்தில் எப்படி பொருந்திக் கொள்வது என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு உயிர் இருக்கவேண்டியதை போல கட்டற்று இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், அவர் சமுதாயத்தில் வாழ வேண்டியிருக்கிறது. காட்டாறு போன்ற குணங்களோடு ஒரு மனிதனைப் பார்த்தால், சமுதாயத்தில் இருப்பவர்கள் அவரைப் பிடித்து எங்காவது கொண்டுபோய் அடைத்து வைத்துவிடுவார்கள். ஒரு குழந்தைக்கு அப்படி நடப்பதை நாம் விரும்பவில்லை. எனவே நமக்கே விருப்பமில்லாத, நாம் உருவாக்கிய சமுதாயத்திற்குள் குழந்தை பொருந்திப்போக முயற்சி செய்கிறோம். நீங்கள் வாழும் சமுதாயத்தில் நீங்கள் நூறு சதவீதம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இல்லையே! ஆனால் உங்கள் குழந்தையை அதில் பொருந்த வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள். சமுதாயத்தோடு பொருந்தி சேவை செய்வதற்கேற்ற ஒரு கச்சிதமான பல்சக்கரமாக அவர்களை மாற்ற நினைக்கிறீர்கள்.

எனவே குறைந்தபட்சம் நீங்களாவது இது கனகச்சிதமாக விளையாட வேண்டிய விளையாட்டு இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அவர்களை சரிசெய்ய தெரியும், அவர்களை கையாள தெரியும் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் உங்களுக்கு எதுவுமே தெரியாது. பிழைப்புக்கான தந்திரங்களை கற்றுத்தருகிறீர்கள், அவ்வளவுதான். எனவே தயவுசெய்து அவர்கள் முன் சென்று, "எனக்கும்கூட எப்படி வாழவேண்டும் என்று தெரியாது" என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். உண்மையாகத்தான்! நாம் இருவரும் சேர்ந்து a, b, c என்று ஏதோ ஒன்றை செய்வோம். z வரை போனால் சரி. போக முடியவில்லை என்றாலும் a, b, c-யுடன் இருந்துகொள்ளலாம்.

தன் புத்திசாலித்தனத்திற்கு ஏற்றாற்போல் சிந்திக்கவும், கவனித்து பார்க்கவும், செயல்களை செய்யவும், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவர்கள் வேறு ஏதோ ஒன்றை செய்வார்கள். நீங்கள் செய்வதைப் போலவே அவர்கள் செய்யாமல் இருக்கலாம். அப்படி நடந்தால் தான் அற்புதமாக இருக்கும், உலகமே மாறிவிடும். இப்போதுள்ள குழந்தைகள் உங்களைப்போலவே எல்லாவற்றையும் செய்யவில்லை என்றால் இந்த உலகம் மாறப்போகிறது என்று அர்த்தம். அப்படி நடப்பது அற்புதமாக இருக்கும்.

எனவே மிஷனரி ஆசிரியர் போல போதனை செய்ய துவங்கிவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளை திருத்துவதற்கு ஒன்றும் இல்லை. ஆசிரியர்களுக்கு தான் நிச்சயமாக திருத்தங்கள் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு தேவை ஊக்கம் தான். அவர்களுக்கு எந்த திருத்தமும் தேவையில்லை. ஆசிரியர்களுக்கு நிச்சயம் திருத்தங்கள் தேவைப்படுகிறது.

நாமும் இங்கு பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் இப்படி சொல்கிறேன். இங்கும் குழந்தைகளுடன் பிரச்சனைகள் என பல சர்க்கஸ் நடக்கத்தான் செய்கிறது, அது பரவாயில்லை. பிரச்சனைகளுக்கு காரணம் குழந்தையிடம் பிரச்சனை இருக்கிறது என்பதால் அல்ல. பிரச்சனை ஏன் வருகிறது என்றால், ஏற்கனவே இருக்கும் சுமாரான ஒரு கட்டமைப்புக்குள் அவர்களை பொருத்த நினைக்கிறோம், இல்லையென்றால் அவர்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்க வேண்டியிருக்கும். நம்மிடம் எப்படிப்பட்ட உலகம் இருக்கிறதோ அதற்குள் அவர்கள் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே தான் நாம் அந்த முயற்சியை செய்கிறோம். மற்றபடி அவர்களிடம் எந்த தவறும் இல்லை.