பகுதி 1

ஜோதிர்லிங்கம் - அருளின் ஊற்று

ஜோதிர்லிங்கம் என்று கூறுகிறார்களே, அதுவும் மேற்கூறியவற்றுள் ஒருவகை லிங்கமா? அதன் தனித்துவம் என்ன?

சத்குரு :  ஒருமுறை பிரம்மா, விஷ்ணு, சிவா அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அப்போது சிவா ஒரு வெளிச்சத் தூணாக மாறினார். பிரம்மா ஒரு பறவையாக மாறி, அதன் மேல் பகுதியைக் காண பறந்து சென்றார். விஷ்ணு ஒரு பன்றியாக மாறி, அதன் கீழ்பகுதியைக் காண ஆழமாகத் தோண்டினார். ஆனால், அந்த வெளிச்சத்தின் தூண் எல்லையில்லாமல் சென்றுக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில்தான் ஜோதிர்லிங்கம் பற்றிய விளக்கங்கள் கூறப்படுகின்றன.

இந்த வெளிச்சம் சூரியனில் இருந்தோ அல்லது மின்விளக்குகளில் இருந்தோ வரும் ஒளியை குறிக்கவில்லை. எனக்குள்ளே ஒரு ஒளி ஏற்பட்டுள்ளது என்று யாராவது கூறினால், அது அவருக்குள் மின்விளக்குகள் எரிந்தது என்று பொருளல்ல. அவருக்குள் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது என்பதை அது குறிக்கிறது. ஒளி என்ற சொல் பொதுவாக அருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தியானலிங்கமும் ஒரு ஜோதிர்லிங்கம்தான். அது மிக ஆழ்ந்த நிலையிலுள்ள அருளின் வெளிச்சத் தூணாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அருளின் நிலையான வெளிப்பாடாக சில வடிவங்கள், லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட லிங்கங்களை ஜோதிர்லிங்கம் என்று அழைத்தனர். ஜோதிர்லிங்கம் என்பது படைப்பின் மூலத்துடன் தொடர்புடைய அருளின் வெளிச்சத் தூணாகும்.

பரவலாகவே பொதுமக்களும் இதனை புரிந்திருந்ததால், ஜோதிர்லிங்கம் என்று சொன்னாலே, அந்த கோவிலில் கூட்டம் அதிகரிக்கும். இதனால், அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே இப்போது பல கோவில்களை ஜோதிர்லிங்கம் என்று அழைக்கின்றனர். உண்மையாகவே ஜோதிர்லிங்கமாக இருந்தால், அது மிகவும் அற்புதமான சக்திவாய்ந்ததொரு தலமாக இருக்கும்.

நாம் ஒருபோதும் அவ்வாறு அழைக்கமாட்டோம். ஆனால், தியானலிங்கமும் ஒரு ஜோதிர்லிங்கம்தான். அது மிக ஆழ்ந்த நிலையிலுள்ள அருளின் வெளிச்சத் தூணாகும். இதனை சூட்சுமமாக உணர்த்தவே, கோவிலுக்கு அருகே காணப்படும் கீழ்நோக்கி செல்லும் பாம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தெய்வீகத்தின் ஊற்றாக அருள் கீழ்நோக்கி வழிகிறது. இதற்கு கீழ்நோக்கிய பாம்புகள் ஒரு அறிகுறியாகும்.

வழக்கமாக, ஜோதிர்லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களில், அதன் சிற்பி எங்கோ ஒரு மூலையிலாவது ஒரு கீழ்நோக்கிய பாம்பினை வடிவமைத்திருப்பார். இது ஒரு குறியீடாகும். பொதுவாக எல்லா இடங்களிலும் கீழ்நோக்கிய பாம்புகள் அமங்கலமானதாக கருதப்படுகிறது. எப்பொழுதும் பாம்பு மேல்நோக்கியே காணப்படும். ஆனால், இங்கு இது ஓர் அருள் ஊற்றாக, நீர்வீழ்ச்சிப்போல பொழிவதைக் குறிக்கிறது. இப்போது அவற்றை விளம்பரத்திற்காக வேறெதாவது செய்திருக்கலாம். எனினும், எங்காவது நீங்கள் கீழ்நோக்கி வரும் பாம்பை பார்த்திருந்தால் அது ஜோதிர்லிங்கமாகத்தான் இருக்கும்.

ஜோதிர்லிங்கங்களில் பலவகை உண்டு. எல்லா ஜோதிர்லிங்கங்களும் ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பல்வேறு நோக்கங்களுக்காக அவை உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

கேதாரில் உள்ளது ஒருவகை, நீங்கள் உஜ்ஜெயினில் காண்பது இன்னொரு வகை.அவை வெவ்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிவனின் முதல் வடிவம் ஒரு வெளிச்சத் தூணாக இருந்ததால், ஜோதிர்லிங்கம் என்ற சொல் வழக்கத்தில் வந்தது. ஒரு சில சக்திவாய்ந்த பிற லிங்கங்களும், அதே தன்மையுடையதாக அறியப்பட்டதால், அதையும் ஜோதிர்லிங்கம் என்று அழைத்தார்கள்.

பல்வேறு காரணங்களுக்காக 12 ஜோதிர்லிங்கங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று, சூரிய மண்டலத்துடனான அவற்றின் தொடர்பு. தென்னிந்தியாவில், எப்படி பஞ்ச பூதங்களுக்கு கோவில்கள், அந்த பகுதியின் நலனுக்காக உருவாக்கப்பட்டனவோ அதுபோல, வடஇந்தியாவில் இந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோவில்கள் ஒருங்கிணைந்த அமைப்பாக உருவாக்கப்பட்டன. இந்த அடிப்படையில்தான் கும்பமேளா நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும், ஒரு கோவிலில் கும்பமேளா நிகழ்கிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று நதிகள் சங்கமிக்கும் ஓரிடத்தில், ஒரு முக்கிய கும்பமேளா நடக்கிறது. இவ்வாறு இந்த கோவில்கள் அந்த பகுதி முழுவதும் பயன்பெறும் விதம் அமைக்கப்பட்டுள்ளன.

பிற லிங்கங்கள் சரி, தியானலிங்கம் எத்தகையது?

உங்களுக்குள் முக்திக்கான விதை விதைக்கப்படுகிறது. இது உங்கள் சூட்சும உடலளவில் நடைபெறுகிறது. இதனை வாழ்வின் எந்த சூழ்நிலையாலும், எந்த செயலாலும், ஏன் பிறப்பு இறப்பு போன்ற அடிப்படைத் தன்மையாலும் அழிக்க முடியாது.

ஏழு சக்கரங்களும் உச்சநிலையில் இருக்கும் தியானலிங்கம் மிகவும் தனித்துவமான ஒரு லிங்கமாகும். ஒருவிதத்தில், அது உயிருள்ள ஒரு மனிதர் இருப்பது போன்ற நிலை. மிகவும் உயிரோட்டமுள்ள மனிதர். ஏழு சக்கரமும் உச்சநிலையில் செயல்படும் மிகச்சிறந்த உன்னதமான மனிதர். இவரை சிவனென்றே அழைக்கலாம். சிவன் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியப்படும், மிக உயர்ந்த மனிதத் தன்மையாகும்.

தியானலிங்கம், இந்த மிகச்சிறந்த மனிதத்தன்மையின் சக்தி வடிவமாகும். இது ஒருவரின் உடல், மனம், சக்திநிலை ஆகிய அனைத்து நிலையிலும் செயல்படுகிறது. நீங்கள் திறந்த நிலையில் இருப்பீர்களானால், எந்த முயற்சியும் இன்றி, அங்கு தியானம் இயற்கையாகவே நிகழும். இது எந்தவித குறிப்புகளுமின்றி மக்கள் அனைவருக்கும் தியானத்திற்கு தீட்சைக் கொடுக்கும் தன்மை. இங்கு உங்களுக்குள் முக்திக்கான விதை விதைக்கப்படுகிறது. இது உங்கள் சூட்சும உடலளவில் நடைபெறுகிறது. இதனை வாழ்வின் எந்த சூழ்நிலையாலும், எந்த செயலாலும், ஏன் பிறப்பு இறப்பு போன்ற அடிப்படைத் தன்மையாலும் அழிக்க முடியாது. அதற்கென உகந்த சூழ்நிலை அமைந்தால், இந்த விதை வேகமாக வளர்ந்துவிடும். அதுவரை அது காத்துக் கொண்டிருக்கும்.

தான் இருக்கும் நிலையிலிருந்து வளரவேண்டும், தன்னை உணரவேண்டும் என்ற ஏக்கம் மனிதனுக்குள் அதிகமாகும்போது, ஆன்மீக தாகம் பெருக்கெடுக்கும்போது, இருக்கும் இடத்தையும், நேரத்தையும் தாண்டி, தியானலிங்கம் அவர்களுக்கு ஒரு ஆன்மீக உந்துதலாக, வழிகாட்டுதலாக அமையும். அவர்கள் இந்த கோவிலுக்கு வந்து உட்காரவேண்டும் என்றில்லை. ஒருவரின் ஆன்மீக ஏக்கம் அதிகமாகுமேயானால், தியானலிங்கத்தின் சக்தி அவர்களைத் தானாகவே சென்றடையும்.

முன்னெப்போதையும் விட, உலகில் ஆன்மீக தாகம் அதிகமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், தியானலிங்கத்தின் பங்கு, அதன் முக்கியத்துவம் மேன்மேலும் அதிகரிக்கும்.

தியானலிங்கத்தின் இருப்பில் இருப்பதே, வாழ்வின் அனைத்து பரிமாணங்களுக்கும் நன்மை பயக்கும். ஆன்மீகப் பயனல்லாமல், தியானலிங்கம் உடல் மற்றும் மன அளவிலும் பல மகத்தான பலன்களை அளிக்கிறது. பல்வேறு உடல், மன உபாதைகள், மனதிலுள்ள பயங்கள், எதிர்மறை சக்தியின் தாக்கம் ஆகியவற்றுடன் வரும் மக்களுக்கு பரிபூரணமான நிவர்த்தி தருகிறது.

tamil-app

Priyanthara sukhla